பாண்டிய மன்னரின் ” அழகிய பாண்டியன்” கூடம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் கோட்டையூர் சிவன் கோயிலில் கிடைத்த கிபி 1091 ஆம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் திரிபுவனசக்கரவர்த்தி சீவல்லப தேவரின் கல்வெட்டு பல அரிய தகவல்களை தருகிறது.

சடையவர்மன் சீவல்லப பாண்டியன் மதுரையில் உள்ள பாண்டியன் அரண்மனையில் ” அழகிய பாண்டியன்” எனும் மண்டபத்தில் ” பாண்டிய ராசன்” எனும் வீர சிம்மாசனத்தில் தனது அரசியான புவனமுழுதுடையாளுடன் வீற்றிருந்தபோது புரவரித்திணை களத்தார் எனும் அதிகாரிகளிடம் கோட்டையூர் சிவன் கோயிலுக்கு கொடைகள் அளித்து ஆணையிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஸ்ரீவல்லபதேவர் மதுரை கோயில் உள்ளாலை மழகிய பாண்டியன் கூடத்துப் பள்ளிக்கட்டிலில் பாண்டியராஜனில் எழுந்தருளிவித்து” என கல்வெட்டு குறிப்பிடுகிறது( பு.க 243)

பாண்டிய மன்னரின் அரண்மனையில் மன்னர் வீற்றிருக்கும் அரசவை அழகிய பாண்டியன் மண்டபம் என்றும், அவரது சிம்மாசனம் பாண்டிய ராஜன் எனவும் பெயரிடப்பட்டு இருந்தது என கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.

நாங்குனேரி தளபதிசமுத்திரம் திருநாகேசுவரர் கோயிலில் கிடைத்த மற்றொரு கல்வெட்டு ” ஸ்ரீவல்லபதேவர் மாடக்குளக்கீழ் மதுரைக்கோயி லுன்னாலை அழகியபாண்டிய கூடத்து பள்ளிக்கட்டில் பாண்டியராஜனில்” என குறிப்பிடுகிறது.

பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லப பாண்டியனின் நான்காம் ஆட்சியாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு மதுரையில் அழகிய பாண்டியன் கூடத்தில் பாண்டிய மன்னர் வீற்றிருந்ததை குறிப்பிடுகிறது.( கல்வெட்டு எண்: 06 of 1929)

மதுரை மாவட்டம் குருவித்துரை பெருமாள் கோயிலில் கிடைத்த பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லப தேவரின் 16 ஆம் ஆண்டு கல்வெட்டில் ” ஸ்ரீவல்லப தேவர் மாடக்குழக்கில் மதுரைக் கோயிலில் உள்ளாலை அழகிய பாண்டியன் கூடத்து பள்ளிபீடம் காலிங்கரையனில்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில் பாண்டிய மன்னர் மதுரையில் உள்ள அரண்மனையில் அழகிய பாண்டியன் மண்டபத்தில் காலிங்கராயன் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. ( கல்வெட்டு எண்: 324 of 1908)

பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன் வீற்றிருந்த மண்டபம் ” அழகிய பாண்டியன்” மண்டபம் என அழைக்கப்பட்டுள்ளதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இந்த பாண்டிய மன்னர் வீற்றிருந்த இருக்கைகள் பாண்டிய ராஜன் மற்றும் காலிங்கராயன் முதலிய பெயர்களில் அழைக்கப்பட்டதை அறிகிறோம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அழகிய பாண்டியன் எனும் பெயர் கொண்டையங்கோட்டை மறவரில் ஒரு கிளையாக இருந்து வருகிறது. இது பற்றி குறிப்பிடும் ஆங்கிலேயர் காலத்து மானுடவியல் ஆராய்ச்சியாளர் எட்கர் தர்ஸ்டன் ” அழகிய பாண்டியன் ” எனும் கிளை மறவர்களிடம் வழக்கத்தில் உள்ளதாகவும், இது மதுரையை ஆண்ட பண்டைய பாண்டியரில் ஒருவராதல் வேண்டும் என குறிப்பிடுகிறார். ( Caste and tribes of southern indian 1906- vol 5)



பண்டைய பாண்டியரின் ஒரு வழியினர் தற்காலத்தில் அழகிய பாண்டியன் எனும் கிளைப்பெயரொடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை இதன்மூலம் நாம் அறிகிறோம்.

தொகுப்பு: www.sambattiyar.com

Total views 1,839 , Views today 1 

Author: admin

1 thought on “பாண்டிய மன்னரின் ” அழகிய பாண்டியன்” கூடம்

  1. அருமையான பதிவு.
    வாணியர் கிளை இல்லை.
    வன்னியர் கிளை.

    நடை வேந்தர் கிளை இல்லை நாட்டை வென்றார் கிளை.

    ஜம்புவர் கிளை இல்லை ஜாம்பவான்/ஜாம்பவா் கிளை.

    சேமந்தர் சேமண்ட கிளை என்பது எனது கிளையான செயங்கொண்டார் ஜெயங்கொண்டார் கிளை யின் கிராம சொல் வழக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *