புதுக்கோட்டை – அறந்தாங்கி தொண்டைமான்கள் தோற்றமும் குலமும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் கள்ளர் குல தொண்டைமான்கள்.  கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 18 ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் அறந்தாங்கியை ஆட்சி செய்துள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டிற்கு பிறகு பாலையவனம் பகுதியின் ஜமீன்களாக இவர்கள் மாறினர்.

கிபி பதினேழாம் நூற்றாண்டு முதல் கிபி 1948 ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் ஆவர்.

இவ்விரு தொண்டைமான் வம்சத்தினரும் தொண்டை மண்டலத்தில் திருப்பதி பகுதியில் இருந்து குடியேறியவர்கள் ஆவர். சங்க காலத்தில் தொண்டையர் எனும் தொண்டைமான்களால் திருப்பதி ஆட்சி செய்யப்பட்டதை ” வினைநவில் யானை விறற்போர் தொண்டையர் ஒங்குவேள் அருளி வேங்கடம் ” என அகநானூறு பாடல் 213 உரைக்கிறது. வேங்கடமானது கள்வர் கோமான் புல்லி எனும் கள்ளர் இன மன்னரின் ஆட்சியில் இருந்ததை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.

கிபி 1256 ஆம் ஆண்டை சேர்ந்த சுந்தரப்பாண்டியன் கல்வெட்டில்  பாண்டியனின் பெரும்படையில் கள்ளர் வில்லிகளின்(விற்படை வீரர்) தலைவனாக ”  தொண்டைமான்” என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தொண்டை மண்டலம்

இராய தொண்டைமான் அணுராகமாலை எனும் நூல் ஆவுடைராய தொண்டைமான் மன்னரை ”  ராய தொண்டை மன்னன்” என புகழ்கிறது.  அதாவது தொண்டை மண்டலத்தின் மன்னன் என புகழ்கிறது.

சிவகங்கை சரித்திர கும்மி எனும் நூலில் கிபி 1730 ல் புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமானார் ” தொண்டை மண்டல துரை” என குறிப்பிடப்பட்டுள்ளார்.( சிவகங்கை சரித்திர கும்மி 1820 பக்-8)

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ” விசய ரகுநாத தொண்டைமானார்”  கிபி 1732ல் வெளியிட்ட துறுமாச் செப்பேட்டில் தன்னை ” வடகரை புலி” என குறிப்பிட்டுள்ளார்.
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக வடகரை முடிகொண்ட சோழ மண்டலம் சோழர் கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகரையான தொண்டை மண்டலத்தின் புலி போன்றவர் என புதுக்கோட்டை தொண்டைமானை செப்பேடுகள் குறிப்படுகின்றன.

கிபி 1743 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை மன்னர் விசயரகுநாத தொண்டைமானார் அவர்களின் ” காஞ்சிபுரம் செப்பேட்டில் ”  காஞ்சி உள்கடை பவனில் இருக்கும் வேங்கட கிருஷ்ண ஐய்யருக்கு பல கொடைகளை அளித்துள்ளதை குறிப்பிடுகிறது.  புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களுக்கும் அவர்களின் பூர்வீகமான தொண்டை மண்டலத்து காஞ்சிபுரத்துக்கும் உள்ள தொடர்பை இச்செப்பேடு விளக்குகிறது.( காஞ்சி காமகோடி பீடம் செப்பேடுகள்-1914- பக் 90)

கிபி 1716 ஆம் ஆண்டு அறந்தாங்கி தொண்டைமான் மன்னர் வெளியிட்ட ஏனாதி செப்பேட்டில் ” தொண்டை அரசர் ஆவுடை ரகுநாத வணங்காமுடி தொண்டைமானார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மன்னரும் ” தொண்டை மன்னன்” என குறிப்பிடப்பட்டுள்ளதை மேலே கண்டோம்.

திருப்பதி

புதுக்கோட்டை தொண்டைமான் தொண்டை மண்டலத்தில் திருப்பதியில் உள்ள தொண்டைமான் கோட்டை எனும் பகுதியில் இருந்து தென் தமிழக பகுதிகளில் குடியேறியவர்கள் ஆவர்.( General history of pudukkottai state)
இவர்கள் வேங்கடத்தில் ” தொண்டைமான் கோட்டை” எனும் பகுதியில் இருந்து தென்னாட்டில் குடியேறியதாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

தொண்டைமான் மன்னர்கள் வழி வழியாக ” திருமலை” எனும் பெயரை தங்களது பெயரோடு சேர்த்து வந்துள்ளனர்.

கிபி 1716 ஆம் ஆண்டை சேர்ந்த அறந்தாங்கி தொண்டைமான் செப்பேட்டில் ” திருவேங்கடவர் கையில் திருச்சக்கரம் பெற்றோன்” என தங்களது பூர்வீகமான திருப்பதியுடனான தொடர்பினை குறித்துள்ளனர்.

கிபி 1726 ஆம் ஆண்டை சேர்ந்த அறந்தாங்கி தொண்டைமான் மன்னரின் ஏம்பல் வயல் செப்பேட்டில் ” திருப்பதி மாயன் செங்கையிற் சக்கரம் ” என குறிப்பிட்டுள்ளார்.  திருப்பதி பெருமாளின் கையில் உள்ள சக்கரத்தை போன்றவன் என தன்னை குறிப்பிட்டுள்ளார். இதே செப்பேட்டில் காளத்தி நேரிமலை காவலன் என தன்னை குறிப்பிட்டுள்ளார். வேங்கடமலையில் உள்ள ஒரு பகுதியான காளத்தி மலையின் காவலன் என தன்னை தொண்டைமானார் குறிப்பிட்டு உள்ளதன் மூலம் தனது பூர்வீகமாக திருப்பதியை எடுத்துக்காட்டியுள்ளார்.

கிபி 1759 ஆம் ஆண்டை சேர்ந்த அறந்தாங்கி தொண்டைமானாரின் ” பண்ணை வயல்” செப்பேட்டில்  ” விளங்கிடு காளத்தி வேற்பினுக்கு அரசன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  வேங்கடமலையில் உள்ள காளத்தி மலையின் அரசன் என இவர் தன்னை குறிப்பிட்டுள்ளார்.

மழவரை வென்றொன்

கிபி 1741 ஆம் ஆண்டை சேர்ந்த அறந்தாங்கி அரசர் முத்து வணங்காமுடி தொண்டைமானின்  அழுஞ்சியேந்தல் செப்பேட்டில் ” மழவனை வென்றோன்” என தொண்டைமானின் முன்னோர் ஒருவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க இலக்கியமான அகநானூறு பாடல் 61ல் திருப்பதியை ஆட்சி செய்த கள்ளர் கோமான் புல்லி என்போன் மழவர் நாட்டை கைப்பற்றி மழவர்களை வணங்க செய்தான் என குறிப்பிடுகிறது. திருப்பதியை பூர்வீகமாக கொண்ட அறந்தாங்கி தொண்டைமான்கள் தன் முன்னோரான புல்லியின் வீரச்செயலை தங்களது செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

காசிப கோத்திரம்

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்கள் ” காசிப கோத்திரத்தில்” வந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.  (அடப்பங் கூத்தப்பன் சத்திர செப்பேடு)  

கிபி 1726 ஆம் ஆண்டை சேர்ந்த அறந்தாங்கி மன்னர் அருணாச்சல வணங்காமுடி தொண்டைமானார் அவர்களின் ஏம்பல் வயல் செப்பேட்டு ” காசிப கோத்திரத்தார்” என இவர்களை குறிப்பிடுகிறது.

சிங்கக்கொடி

பல்லவ மன்னர்களின் இலட்சினையாக சிங்கமே பயன்படுத்தப்பட்டுள்ளது.பல்லவர் வரலாறு பக் 73- மன்னர் மன்னன்)

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்களது குலக்கொடியாக சிங்கக்கொடியை பயன்படுத்தி வந்தனர்.
( General history of pudukkottai state:pg 190)

அறந்தாங்கி தொண்டைமானாரின் காணியாட்சி செப்பேட்டில் ” சிங்கக்கொடியான்” என தொண்டைமான் மன்னர் குறிப்பிடப்படுகிறார்.

கள்ளர் இனம்

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் திருப்பதியில் இருந்து குடியேறிய கள்ளர் மரபினர் என வரலாற்று ஆவணங்கள் உணர்த்துகின்றன.( General history of pudukkottai state)

கிபி 1728 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டில் ” கள்ளர் திருமங்கை ஆழ்வார் ” வழிவந்தோர் என புதுக்கோட்டை தொண்டைமான்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அறந்தாங்கி தொண்டைமான்களும் தங்களை கல்வெட்டுகளில் ” கள்ளர் இனம்” என்பதை பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆளவந்தான் கோயிலில் கிடைத்த கிபி 1435 ஆம் ஆண்டு கல்வெட்டில் ” அறந்தாங்கி அரசர் நல்ல பெருமாள் தொண்டைமானாரின் நிலம் ” கள்ளர் கொள்ளி நிலம் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  கள்ளர் கொண்டிருக்கும் நிலம் என்பதே கள்ளர் கொள்ளி நிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.   தன்னுடைய நிலத்தின் பெயரையே கள்ளர் அடையாளத்துடன் அறந்தை மன்னர் குறிப்பிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

அறந்தாங்கி தொண்டைமான் மன்னர் ஏகப்பெருமாள் தொண்டைமானாரின் கல்வெட்டில் அறந்தாங்கி மக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அறந்தாங்கி கள்ளர் படைப்பற்றில் நின்று பயத்தை தீர்த்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கிபி 1482 ஆம் ஆண்டை சேர்ந்த இக்கல்வெட்டில் அறந்தாங்கியின் போர்குடியாக,  காவல் அரணாக கள்ளர் மரபினர் விளங்கியதை அறிகிறோம். இது தங்கள் குலத்தினரான கள்ளர்களுக்கு தொண்டைமான் மன்னர்கள் அளித்த கௌரவமாக அமைகிறது.

கிபி 1476 ஆம் ஆண்டை சேர்ந்த இன்பவன பெருமாள் தொண்டைமானாரின் கல்வெட்டில் ”  கள்ளர் சூரியன் தடி” எனும் அளவுகோல் குறிப்பிடப்பட்டுள்ளது.  சூரிய தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான்களின் முதன்மையானவர். அவரின் பெயரால் கள்ளர் சூரியன் எனும் தடி அளவுகோல் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிகிறோம்.

அறந்தாங்கியானது  ” கள்ளர் பற்று” ( கள்ளர் ஆளும் பகுதி)  என தஞ்சை மராத்தியர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கிபி 1684 ஆம் ஆண்டை சேர்ந்த இக்கல்வெட்டில் பட்டுகோட்டை சீமை “கள்ளப்பற்று அறந்தாங்கி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் அறந்தாங்கி தொண்டைமான்களின் ஆட்சி அறந்தாங்கியில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

கிபி 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மராத்திய மோடி ஆவணங்களில் தஞ்சை பாளையங்கள் அனைத்தும் கள்ளர் மரபினர் என்றும் அவர்களில் ஒருவரே அறந்தாங்கி தொண்டைமான் பாளையப்பட்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலையவனம் ஜமீன்தார்கள் அறந்தாங்கியின் அரசர்களாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் அறந்தாங்கி தொண்டைமான் வழியினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.கிபி 1696 ஆம் ஆண்டை சேர்ந்த சங்குப்பட்டணம் செப்பேட்டில் ஆண்டவராய வணங்காமுடித் தொண்டைமானாரும் பாலையவனம் ஜமீன் காலிங்கராச பண்டாரத்தாரும் அளித்த கொடை பற்றி கூறுகிறது. தொண்டைமானார் பெரிய துரை என்றும் காலிங்கராச பண்டாரத்தார் சிறிய துரை என்றும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இவர்கள் உறவினர்கள் என அறிகிறோம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறந்தாங்கி தொண்டைமான்கள்( பக் 5 ல்) எனும் நூலில் ” வேங்கடமலையில் வாழ்ந்த கள்ளர் மரபு தொண்டைமான்கள் பிற்காலத்தில் புதுக்கோட்டையில் குடியேறி அறந்தாங்கி,  அழும்பில்,  சூரைக்குடி போன்ற பகுதிகளில் குடியேறி ஆட்சி செய்ய தொடங்கினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட ” புதுக்கோட்டை மாவட்ட வரலாறு ( பக் 60) எனும் நூலில் ” வேங்கடமலையில் இருந்து இப்பகுதியில் குடியேறிய தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரின் ஒரு கிளையே அறந்தாங்கி தொண்டைமான்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட epigraphica indica vol 21 ல் (பக் 120) புதுக்கோட்டை – அறந்தாங்கி வட்டங்களில் பல்வேறு கல்வெட்டுகள் தொண்டைமான்கள் பற்றி குறிப்பிடுகிறது. இவர்கள் அனைவரும் ஒரே மூதாதையர் வழியினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட சான்றுகள் மூலம் நாம் அறிவது,  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆளுமை செலுத்திய தொண்டைமானார்கள் அனைவருமே தொண்டை மண்டலத்தில் இருந்து குடியேறியவர்கள் மற்றும் இவர்கள் அனைவரும் கள்ளர் மரபில் உதித்த ஒரு கால்வழியினர் ஆவர்.  இன்றும் புதுக்கோட்டை – அறந்தாங்கி வட்டங்களில் கள்ளர் குல தொண்டைமான்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருவதே வாழ்வியல் சான்றாக உலகிற்கு அமைகிறது.

ARTICLE BY: www.sambattiyar.com

Total views 91 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *