
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை மையமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர்கள் அறந்தாங்கி அரசு என தங்களை குறித்துள்ளனர். கிபி 1482ல் ஏகப் பெருமாள் தொண்டைமான் ஆட்சி காலத்தில் அறந்தாங்கி மக்கள் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள் பற்றிய தொகுப்பை கல்வெட்டாக வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் சட்ட திட்டங்களை பின்பற்றுவதில், ஏதேனும் இடர் வரின் கள்ளர் பற்றில் நின்று நான்கு பேரை அழைத்து பிரச்சனையை கூறி தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் கள்ளர்பற்றில் உள்ள கள்ளர்கள் மூலமே நாட்டின் நிர்வாகம், பாதுகாப்பு முதலியவை கண்காணிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு தரும் செய்தி:-
கிபி 1482 ஆம் ஆண்டு கடவுளின் சாட்சியாக அறந்தாங்கிப்பற்று, விளய்மாணிக்கப்பற்று, அரையர்குளப்பற்று ஆகிய ஊர்களை சேர்ந்த நாட்டவரும் , பிள்ளை பேர் எனும் அரச குடும்பத்தினர் இசைந்து கொடுத்தது யாதெனில்:-
முன்னாளில் ஆட்சி செய்த தேவராயத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் நடந்தது போலவே, ஒருவன் குற்றம் செய்தால் அவனை சிறையில் தள்ளி, அவரது நிலத்தின் உற்பத்தியில் பாதியை பண்டாரத்தில்( அரசு கஜானா) வில் சேர்க்க வேண்டும்.
குற்றம் செய்தவன் அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டிய அபராதத்தை அளிக்காமல் ஒடிப்போனால் அவருக்கு பிணையாக உறுதி அளித்தவர் பதில் கூற வேண்டும்.
முன்னாளில் நடந்தபடியே இறைமுறையை( வரி செலுத்தும் முறை), மண்மதிள்( வீட்டு வரி), ஊழியம்( சம்பளம் பெறாமல் செய்யவேண்டிய பணிகள்), காணிக்கை( அரசருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் செலுத்தவேண்டிய விருப்பவரி) முதலியவற்றை நடத்திக்கொள்ளவும்.
அரசிடம் காணியாட்சி(நிலத்தை அனுபவிக்கும் உரிமை) பெற்றவர்கள் அதற்கு உண்டான வரியை தவறாமல் செலுத்தவும், சட்டதிட்டப்படி பிள்ளை பேர்கள்( அரச குடும்பத்தினர்), தங்களது காணியாட்சியை அனுபவித்து கொள்ளவும்.
ஒரு சாதியார் அதே சாதியரிடம் நிலம் விற்பனை மற்றும் அடமானம் முதலியவை செய்யும் வேளையில் முன்பு செலுத்தப்பட்ட முறையில் வரி செலுத்தவேண்டும்.
இத்தகைய சட்டங்களை பின்பற்றுவதில் நாட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும் போது, அவர்கள் கள்ளர் பற்றில், நான்கு பேரை அழைத்து , கள்ளர்களிடம் சரணடைந்து பயத்தை போக்கி, தங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டதிட்டங்களை மதிக்காமல் மன்னருக்கு எதிராக அயலாரிடம் போய் சேர்ந்தால் அவர்களின் நிலம் மற்றும் உடைமைகள் பறிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்படும்.
மேற்கூறிய நடைமுறைகளை பின்பற்ற நாட்டவர் , கடவுள் சத்தியமாக உறுதி அளித்தப்பின், இவை கல்வெட்டில் வெட்டப்பட்டது.
கல்வெட்டுக்கு ஒப்புதல் அளித்தவர், ஏகப்பெருமாள் தொண்டைமானார் அதிகாரியாக திருவங்கலமுடையார் காலிங்கராயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி அரசர்களின் ஆட்சியில் கள்ளர்பற்றே நீதி பரிபாலனம் செய்யும் இடமாகவும், அதிகார மையமாகவும் திகழ்ந்தது இக்கல்வெட்டு மூலம் உறுதியாகிறது. நாட்டுக்கான சட்டதிட்டங்களை கல்வெட்டிலேயே வெளியிட்ட தமிழ் மன்னர்களான அறந்தாங்கி தொண்டைமான்களின் நிர்வாகமுறை வியப்பிற்குரியது.

www.sambattiyar.com
Total views 2,431 , Views today 2
super