புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியை மையமாக கொண்டு பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள்.
தொண்டை மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டையில் குடியேறிய தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரில் ஒரு பிரிவினர் அறந்தாங்கியில் இருந்தும் மற்றொரு பிரிவினர் புதுக்கோட்டையில் இருந்தும் ஆட்சி செய்தனர். ( புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, ராஜா முகமது, பக் 60)/ அறந்தாங்கி தொண்டைமான்கள், புலவர் இராசு, பக் 04)


பனங்காடு முதல் பாலையூர் வரை
புதுக்கோட்டையில் தொண்டைமான்களை பற்றி குறிப்பிடும் முதல் கல்வெட்டு நார்த்தாமலையில் கிடைக்கிறது. கிபி 1056 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்து இக்கல்வெட்டில் ” திருப்பனங்காட்டு தொண்டைமானார்” என்பவர் அதிகாரியாக குறிப்பிடப்படுகிறார். திருப்பனங்காடு என்பது பனங்காட்டு நாடை குறிப்பதாகும். விசங்கி நாட்டின் ஒரு பகுதியாக பனங்காட்டு நாட்டு இருந்துள்ளதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. விசங்கி நாடு கள்ளர் நாடுகளில் ஒன்றாகும். ( Manual of pudukkottai state vol 1 பக் 120)



மூன்றாம் குலோத்துங்கன் காலத்தை(கிபி 1200-1201) சேர்ந்த திருவப்பூர் கல்வெட்டில் தென்கவிர் நாட்டு திருவப்பூரை சேர்ந்த தொண்டைமானார் கட்டளையிட்டப்படி நிலங்கள் கோயிலுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கவிர்நாடானது மற்றொரு கல்வெட்டில் ” வல்லநாட்டு கவிற்பா கள்ளப்பால் நாடாய் இசைந்த” என கவிர்நாடு கள்ளர் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொண்டைமானார் எனும் கள்ளர் குல அதிகாரி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் அறிகிறோம். இவர் தவிர பல்லவராயர், வில்லவராயர் முதலிய கள்ளர் குலத்தவர்களும் அதிகாரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


கிபி 1201 ஆம் ஆண்டு விசங்கி நாட்டின் குன்றாண்டார் கோயிலுக்கு வளர்த்து வாழ்வித்த பெருமாள் தொண்டைமானார் தனது பெயரிலேயே வளர்த்து வாழ்வித்தான் சந்தி எனும் வழிபாட்டை ஏற்படுத்தி நிலக்கொடை அளித்துள்ளார். விசங்கி நாடானது கள்ளர் நாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.


பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் புவனவீர தொண்டைமானார் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு பொன் தகட்டை தானமாக அளித்துள்ளார்.
கிபி 1351 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை அம்புக்கோயில் கல்வெட்டில் ” இராசராசவளநாட்டு பன்றியூர் நாட்டு அழும்பில் ஆனை தொண்டைமானார்” குறிப்பிடப்படுகிறார். புதுக்கோட்டை தொண்டைமான்கள் தங்களை அழும்பில் அரசு மக்கள் என செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.


கிபி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாறவர்மன் வீரப்பாண்டியன் காலத்து( 29 ஆம் ஆட்சியாண்டு) திருவரங்குளம் கல்வெட்டில் ” இராசராசவளநாட்டு வல்லநாட்டு பூவரசகுழி அரைய மக்களில் சூரியன் தொண்டைமானார்” என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். வல்லநாடானது புதுக்கோட்டை திருக்கட்டளை கல்வெட்டில் ” வல்லநாட்டு கவிற்பா கள்ளர்பால் நாடு” என குறிப்பிடப்பட்டுள்ளது. வல்லநாடானது கள்ளர் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் கள்ளர்களின் நாட்டமைப்பில் ஒன்றாக வல்லநாடு திகழ்கிறது. வல்லநாட்டு பூவரசங்குடியை பூர்வீகமாக கொண்டவர்களே இலங்கை அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டைமான் வம்சத்தினர் ஆவர்.


இக்கல்வெட்டில் பூவரசகுடி ” அரைய மக்களில்” ஒருவராக சூரியன் தொண்டைமானார் குறிப்பிடப்படுகிறார். அரைய மக்கள் என்பதற்கு அரசு மக்கள் என்று பொருள்படும்.தொண்டைமான்கள் கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் வீரப்பாண்டியன் ஆட்சி காலத்தில் அரசு நிலைக்கு உயர்ந்து விட்டதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.
கிபி பதினான்காம் நூற்றாண்டில் மாறவர்மன் வீரப்பாண்டியனின் 58 ஆம் ஆட்சியாண்டில் ” அறந்தாங்கி அரசு சூரியதேவர் தொண்டைமானார்” என சூரிய தொண்டைமானார் குறிப்பிடப்படுகிறார். (பிள்ளைவயல் செப்பேடு)
மாறவர்மன் வீரப்பாண்டியன் 29 ஆம் ஆட்சியாண்டில் ” பூவரசக்குழி அரைய( அரசு) மக்கள் என குறிப்பிடப்பட்ட சூரிய தொண்டைமான் மாறவர்மன் வீரப்பாண்டியனின் 58 ஆம் ஆட்சியாண்டில் ” அறந்தாங்கி அரசு சூரியதேவர் தொண்டைமான்” என குறிப்பிடப்படுகிறார்.
தொண்டையர்கள்- சோழ வழியினர்
அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை திரையன் தொண்டைமான் வழியினர் என்றும் பல்லவ மரபினர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
18 ஆம் நூற்றாண்டில் விஜய அருணாச்சல தொண்டைமான் வெளியிட்ட பண்ணைவயல் செப்பேடு பல்வேறு அரிய தகவல்களை தருகின்றது.

“இந்திரன் ஏழடி எதிர்கொளப் பெற்றோன்” என இவர்கள் தங்களை குறிப்பிட்டுள்ளனர். புதுக்கோட்டை தொண்டைமான்களும் தங்களை இந்திர வம்சம் என குறிப்பிட்டுள்ளனர்.

“மழவனை வென்றோன்” எனும் பட்டமும் இச்செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்தில் வேங்கடத்தை ஆண்ட கள்வர் கோமான் புல்லி மழவரை வென்றதாக அகநானூறு பாடல் 61 குறிப்பிடுகிறது.
“தண்டக நாடெனும் தொண்டைவள நாடன்” ” காஞ்சிபுராதீஸ்வரன்” எனும் வரிகள் மூலம் தங்களது பூர்வீகமாக தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்ததை குறிப்பிட்டுள்ளனர். புதுக்கோட்டை மன்னர் ராய தொண்டைமானை பற்றி பாடும் ராய தொண்டைமான் அணுராகமாலை இவரை” ராய தொண்டை மன்னன்” என குறிப்பிடுகிறது.

“மல்லை மயிலை வண்டை நகராதிபன்” எனும் வரிகள் மூலம் இவர்கள் வண்டையர்களின் தலைவனான கருணாகர தொண்டைமான் வழியினன் என குறிப்பிட்டுள்ளனர். இன்றும் கள்ளர் குல வாண்டையார்கள் தஞ்சை – திருவாரூர்-திருச்சி- புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

“ஒட்டக்கூத்தன் உயர்தமிழ் புனைந்தோன், கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்” எனும் வரிகள் மூலம் ஒட்டகூத்தராலும் கம்பராலும் பாடப்பட்டவர்கள் தொண்டைமான்களின் முன்னோர் என குறிப்பிடுகிறார். இவர்களைப் போல சிங்கவனம் ஜமீன்தார்களான மெய்க்கண் கோபாலர்களும் ” கம்பன் ஒட்டக்கூத்தரின் கவிக்கொண்டருள்வோன்” என குறிப்பிட்டுள்ளனர். சிங்கவனம் ஜமீன்களான மெய்க்கண் கோபாலர்கள் பல்லவ மரபினராவர். இவர்கள் கள்ளர் இனத்தை சேர்ந்தவர்கள். ( செயங்கொண்டநாதர் கோயில் செப்பேடு கிபி 1758)

“புலிக்கொடி மேருவில் பொறத்தவன்” ” நலம்பெறு சோழ ராசா மரபினன்” “புறாவினுக்காக துலைபுகு பிரபலன்” ” சூரிய குலத்தில் தோன்றிய சுமுகன்” ” நேரிமலை காவலன்” ” சோழகுழாதிபன்” முதலிய செப்பேட்டு தொடர்கள் தொண்டைமான்களை சோழர் வந்தவர்கள் என உரைக்கிறது. புதுக்கோட்டை தொண்டைமான்களும் தங்களை” புலிக்கொடியும் உள்ளோன்” என குறிப்பிட்டுள்ளனர்.

” கிபி 1530 ஆம் ஆண்டு வணங்காமுடி ஆதொண்டைமானார் வெளியிட்ட காணியாட்சி செப்பேட்டில் ” சிங்கக்கொடியான்” என குறிப்பிடப்பட்டுள்ளார். அறந்தாங்கி தொண்டைமான்கள் ” சிங்க கொடியை” பயன்படுத்தியதை இதன் மூலம் அறிகிறோம். புதுக்கோட்டை தொண்டைமான்களும் சிங்க கொடியை பயன்படுத்தி வந்துள்ளனர்.


” விளங்கிடு காளத்தி வெற்பினுக்கு அரசன்” எனும் வரிகள் மூலம் அறந்தாங்கி தொண்டைமான்கள் வேங்கடத்தில் அமைந்திருந்த காளத்தி மலையின் அரசன் என தங்களை குறிப்பிட்டுள்ளனர். புதுக்கோட்டை தொண்டைமான்களும் தங்களை பூர்வீகமாக திருப்பதியில் உள்ள தொண்டைமான் கோட்டை என குறிப்பிட்டுள்ளனர். இன்றும் திருப்பதி- காலஹஸ்தி செல்லும் வழியில் தொண்டைமானாடு எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1716 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஏனாதி செப்பேட்டில் ” அருணாச்சல வணங்காமுடி தொண்டைமானார் திருவேங்கடவர் கையில் திருச்சக்கரம் பெற்றோன்” என குறிப்பிடப்பட்டுள்ளார். திருப்பதி பெருமாளின் அருளால் உயர்ந்தவர் என இங்கு குறிப்பிடப்படுகிறார். புதுக்கோட்டை தொண்டைமான்களும் தங்களது பூர்வூகமாக திருப்பதியை குறிப்பிட்டுள்ளனர். தங்களது பெயர்களில் “திருமலை” எனும் சொல்லை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களது ஆட்சி பகுதியில் ” காஞ்சிபுரம்” எனும் ஊரை ஏற்படுத்தி அங்கு ஏகாம்பர நாதருக்கு கோயில் கட்டி பல கொடைகளை அளித்துள்ளனர். இது பற்றி குறிப்பிடும் கல்வெட்டு ” சுந்தரபாண்டிய வளநாட்டு இளங்கோனாட்டு காஞ்சி மாநகர்” என குறிப்பிடுகிறது. கிபி 1743 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமான் வெளியிட்ட ” காஞ்சிபுரம் செப்பேட்டில்” புதுக்கோட்டை மன்னர் காஞ்சிபுரத்து பிராமணர்களுக்கு கொடை அளித்துள்ளார்.

கிபி 1726ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஏம்பல்வயல் செப்பேட்டில் அருணாச்சல வணங்காமுடி தொண்டைமானார் தன்னை ” காசிப கோத்திரத்தில் ” உதித்தவர் என குறிப்பிட்டுள்ளார். கிபி 1732 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கீரனூர் செப்பேட்டில் புதுக்கோட்டை தொண்டைமான் ” காசிப கோத்திரம் இந்திர வம்சம் ரகுநாதராய தொண்டைமானார்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி தொண்டைமான்களும் புதுக்கோட்டை தொண்டைமான்களும் ஒரே வம்சத்தினர் என பின்வரும் நூல்கள் குறிப்பிடுகின்றன;-
அறந்தாங்கி தொண்டைமான்கள்: புலவர் இராசு: தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு

Epigraphica indica vol 21: இந்திய தொல்லியல் துறை

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு : தமிழக அரசு வெளியீடு

கிபி 1168-1170 காலகட்டத்தில் சோழ மன்னன் இரண்டாம் இராதிராசன் காலத்தில் பாண்டிய வேந்தர்களுக்குள் ஏற்பட்ட வாரிசுரிமை போரை பயன்படுத்தி இலங்கை சிங்களப்படை தமிழகத்தில் படையெடுத்தனர். அக்காலகட்டத்தில் புதுக்கோட்டை தொண்டைமான்களும் பல்லவராயர்களும் சோழர் படையை தலைமையேற்று நடத்தி வெற்றி பெற்றனர். இதன் நினைவாக அறந்தாங்கி தொண்டைமான்கள் “வழுதியிடு கழலான்” , ” ஏழு நாளில் ஈழந்திறை கொண்டவர்கள்” என தங்களது செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். புதுக்கோட்டை தொண்டைமான்களும் தங்களை “சந்திர குல நேயன்” என குறிப்பிட்டுள்ளனர். புதுக்கோட்டை பல்லவராயர்கள் தங்களது கல்வெட்டுகளில் பாண்டியன் முடிகாத்தானை என குறிப்பிட்டுள்ளனர்.

அறந்தாங்கி தொண்டைமான்களின் ஆட்சியும் சிறப்புகளும்
அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை “மிழலை நாட்டு அதிபர்கள்” என குறிப்பிடுகின்றனர். பாலையூர் நாட்டை ” நம்முடைய சீமை” என குறிப்பிடுகின்றனர். இதனால் மிழலை பகுதியில் உள்ள பாலையூர் நாடு தொண்டைமான்களின் தலைமை பகுதியாக இருந்ததை அறிகிறோம்.
கிபி 1453ஆம் ஆண்டை சேர்ந்த பழங்கரை கல்வெட்டில்” நம்முடைய மகன் இலக்கண தெண்ணாயக்கத் தொண்டைமானாருக்கு நமது ஊரான பாலையூர் நாட்டு ” என குறிப்பிடப்பட்டுள்ளது. பாலையூர் நாட்டை அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களது தலைமை பகுதியாக குறிப்பிட்டுள்ளனர்.
பாலையூர் நாடு கள்ளர் நாடுகளில் ஒன்று என புதுக்கோட்டை மேனுவல் குறிப்பிடுகிறது. ( Manual of pudukkottai state vol 1 பக் 109). பாலையூர் நாட்டை சேர்ந்த வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் பழங்கரை சிவன் கோயிலில் முதல் மரியாதை பெறுகின்றனர்.


பாலையூர் நாடானது இன்று ராஜராஜ பாலைய வெண்ணாவல்குடி நாடு எனும் பெயரில் கள்ளர் நாடாக அமைந்துள்ளது.
அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களது நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்களை கல்வெட்டாகவே வெட்டி வைத்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த கல்வெட்டு பல சுவையான தகவல்களை தருகின்றது.
கிபி 1482ல் ஏகப் பெருமாள் தொண்டைமான் ஆட்சி காலத்தில் அறந்தாங்கி மக்கள் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள் பற்றிய தொகுப்பை கல்வெட்டாக வெளியிட்டுள்ளார்.



கிபி 1482 ஆம் ஆண்டு கடவுளின் சாட்சியாக அறந்தாங்கிப்பற்று, விளய்மாணிக்கப்பற்று, அரையர்குளப்பற்று ஆகிய ஊர்களை சேர்ந்த நாட்டவரும் , பிள்ளை பேர் எனும் அரச குடும்பத்தினர் இசைந்து கொடுத்தது யாதெனில்:-
முன்னாளில் ஆட்சி செய்த தேவராயத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் நடந்தது போலவே, ஒருவன் குற்றம் செய்தால் அவனை சிறையில் தள்ளி, அவரது நிலத்தின் உற்பத்தியில் பாதியை பண்டாரத்தில்( அரசு கஜானா) வில் சேர்க்க வேண்டும்.
குற்றம் செய்தவன் அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டிய அபராதத்தை அளிக்காமல் ஒடிப்போனால் அவருக்கு பிணையாக உறுதி அளித்தவர் பதில் கூற வேண்டும்.
முன்னாளில் நடந்தபடியே இறைமுறையை( வரி செலுத்தும் முறை), மண்மதிள்( வீட்டு வரி), ஊழியம்( சம்பளம் பெறாமல் செய்யவேண்டிய பணிகள்), காணிக்கை( அரசருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் செலுத்தவேண்டிய விருப்பவரி) முதலியவற்றை நடத்திக்கொள்ளவும்.
அரசிடம் காணியாட்சி(நிலத்தை அனுபவிக்கும் உரிமை) பெற்றவர்கள் அதற்கு உண்டான வரியை தவறாமல் செலுத்தவும், சட்டதிட்டப்படி பிள்ளை பேர்கள்( அரச குடும்பத்தினர்), தங்களது காணியாட்சியை அனுபவித்து கொள்ளவும்.
ஒரு சாதியார் அதே சாதியரிடம் நிலம் விற்பனை மற்றும் அடமானம் முதலியவை செய்யும் வேளையில் முன்பு செலுத்தப்பட்ட முறையில் வரி செலுத்தவேண்டும்.
இத்தகைய சட்டங்களை பின்பற்றுவதில் நாட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும் போது, அவர்கள் கள்ளர் பற்றில், கள்ளர்களிடம் சரணடைந்து பயத்தை போக்கி, நான்கு பேரை அழைத்து தங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டதிட்டங்களை மதிக்காமல் மன்னருக்கு எதிராக அயலாரிடம் போய் சேர்ந்தால் அவர்களின் நிலம் மற்றும் உடைமைகள் பறிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்படும்.
மேற்கூறிய நடைமுறைகளை பின்பற்ற நாட்டவர் , கடவுள் சத்தியமாக உறுதி அளித்தப்பின், இவை கல்வெட்டில் வெட்டப்பட்டது.
கல்வெட்டுக்கு ஒப்புதல் அளித்தவர், ஏகப்பெருமாள் தொண்டைமானார் அதிகாரியாக திருவங்கலமுடையார் காலிங்கராயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி அரசர்களின் ஆட்சியில் கள்ளர்பற்றே நீதி பரிபாலனம் செய்யும் இடமாகவும், அதிகார மையமாகவும் திகழ்ந்தது இக்கல்வெட்டு மூலம் உறுதியாகிறது. நாட்டுக்கான சட்டதிட்டங்களை கல்வெட்டிலேயே வெளியிட்ட தமிழ் மன்னர்களான அறந்தாங்கி தொண்டைமான்களின் நிர்வாகமுறை வியப்பிற்குரியது.
அறந்தாங்கி தொண்டைமான்களின் ஆட்சியில் உயர் அதிகாரிகளாக காலிங்கராயர், தென்னதிரையர், மங்கலராயர், நாட்டார் முதலியோர் இருந்துள்ளனர். இப்பட்டங்கள் கொண்ட கள்ளர் மரபினர் இன்றும் அறந்தாங்கி வட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை “ஆவுடைநாதர் அனுக்கிரகம் பெற்றோர்” ” ஆவுடை தம்பிரானார் ஸ்ரீபாத பக்தர்” என குறிப்பிட்டுள்ளனர். புதுக்கோட்டை வழி தொண்டைமான்களின் முதல் மன்னரின் ஆவுடைராய தொண்டைமானார் எனும் பெயரை கொண்டிருந்தார். அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை” தொண்டைமானார்” என இர் விகுதி சேர்த்து அழைத்துக் கொண்டனர். இதே போல் புதுக்கோட்டை தொண்டைமான்களும் தங்களை ” தொண்டைமானார்” என்றே அழைத்துக்கொண்டனர்.

அறந்தாங்கி தொண்டைமான்களில் ஒரு பிரிவினர் தங்களை பெருமாள் தொண்டைமானார்கள் என அழைத்துக்கொண்டனர். புதுக்கோட்டை தொண்டைமான்களின் முதல் மன்னர் ஆவுடை தொண்டைமானாரின் சிற்றப்பாவின் பெயர் பெருமாள் தொண்டைமான் என புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் குறிப்பிடுகிறது.

வாண்டாயருக்கு மரியாதை
கிபி 1453 ஆம் ஆண்டை சேர்ந்த பழங்கரை சிவன் கோயில் கல்வெட்டில் அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானார் தனது மகனுக்கு காணியாட்சி எனும் நில உரிமை அளித்துள்ள தகவல் உள்ளது. இதில் அறந்தாங்கி அரசர் தனது மகனுக்கு கொடுத்த நிலத்தின் எல்லைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த எல்லைகளுக்குள் அமைந்திருந்த தேவதானம் என கோயில் நிலங்களையும் வாண்டையாரின் நிலங்களையும் தவிர்த்து பிற பகுதிகள் தெண்ணநாயக்க தொண்டைமானுக்கு காணியாட்சியாக அளிக்கப்படுவதாக அறந்தாங்கி அரசர் குறிப்பிட்டுள்ளார். கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலங்களுடன் வாண்டையாரின் நிலமும் விலக்கு பெற்றுள்ளதன் மூலம் வாண்டையார் பெரும் அதிகாரம் படைத்த மன்னரின் உறவினராக இருந்திருக்கலாம் என அறிகிறோம். கள்ளர் குல வாண்டையார்கள் இன்றும் இப்பகுதியில் புகழோடு விளங்குகின்றனர். (கல்வெட்டு IPS 794)

கள்ள சூரியன் தடி
குறும்பூர் சிவன் கோயிலில் கிடைத்த கிபி 1476 ஆம் ஆண்டை சேர்ந்த இன்பவன பெருமாள் தொண்டைமான் கால கல்வெட்டில் இக்கோயிலுக்கு கொடை அளிக்கப்பட்ட நிலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் ” கள்ள சூரியன்” தடி எனும் நில அளவுகோல் முறை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் அறந்தாங்கி பகுதியில் சூரியதேவர் தொண்டைமான் எனும் மன்னர் ஆட்சி செய்தார். இவரின் பெயரால் கள்ள சூரியன் தடி எனும் அளவுகோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கள்ளர் சூரியன் சுருக்கமாக கள்ள சூரியன் என குறிப்பிடப்பட்டுள்ளது.( Ins 226 of 1942)

திருப்பணிகள்:

கிபி 1319 ஆம் ஆண்டு உய்யவந்தான் திருநோக்கியழகியான் தொண்டைமான் திருப்பெருந்துறை கோயிலில் திரு அந்தி காப்பு, திருவிளக்கு, அமுதுபிடி, கறியமுது முதலியவைகளை நாள்தோறும் அளிக்கவும், இவரது பிறந்த நாளன்று மாணிக்க வாசகரை எழுந்தருளிவித்து திருவாசகம் ஒதவும் ஏயூர் மங்கலம் என்ற ஊரை தொண்டைமான் கொடையாக அளித்துள்ளார்.
கிபி 1383ல் சூர்யதேவர் தொண்டைமானார் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு நிலக்கொடை அளித்துள்ளார். கிபி 1399 ஆம் ஆண்டு சூர்யதேவர் தொண்டைமானார் திருப்பெருந்துறையில் பத்து நாட்கள் நடைபெறும் திருநாளுக்காக பிள்ளைவயல் எனும் ஊரை தானமாக அளித்துள்ளார். குறும்பூர் சிவன் கோயிலுக்கு அமெஞ்சூர் வயல் எனும் ஊரை சூரியதேவர் தொண்டைமானார் கொடையாக அளித்துள்ளார்.
எட்டியத்தளி சிவன் கோயிலுக்கு சுந்தரப்பாண்டிய தொண்டைமான் காலத்தில் நகரத்தாரும் கைக்கோளரும் அரைப்பணம் கொடுக்க வேண்டுமென வரி நிர்ணயம் செய்துள்ளார்.
கிபி 1443ல் குறும்பூர் சிவன் கோயிலுக்கு அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமான் புதுவயல் என்ற கிராமத்தை கொடையாக அளித்துள்ளார்.
கிபி 1469ல் குறும்பூர் சிவன் கோயிலுக்கு திருநெல்வேலி பெருமாள் தொண்டைமானார் தம்முடைய பெயரால் வழிபாடு நடத்த பரவைக்கோட்டை எனும் ஊரை அளித்தார். கிபி 1470 ல் எட்டியத்தளி சிவன் கோயிலுக்கு வயிராண்டிவயல் எனும் ஊரை இம்மன்னர் தானமாக அளித்துள்ளார்.
கிபி 1476ல் இன்பவன பெருமாள் தொண்டைமானார் குறும்பூர் சிவன் கோயிலுக்கு பன்னிரண்டு மா நிலத்தை கொடையாக அளித்தார்.
கிபி 1476ல் ஆவுடை நயினார் தொண்டைமானார் ஆளப்பிறந்தான் சிவன் கோயிலுக்கு 12 மா நிலம் தானமாக அளித்துள்ளார்.
15 ஆம் நூற்றாண்டில் ஏகப்பெருமாள் தொண்டைமானார் மிழலை கூற்றத்தில் காஞ்சிபுரம் எனும் ஊரை ஏற்படுத்தி அங்கு ஏகாம்பரநாதரை பிரதிஷ்டை செய்தார். இவர் எட்டியூர், கோயிலூர் ,பழங்கரை, மிலட்டூர், திருப்பெருந்துறை முதலிய ஊர்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு பல்வேறு கொடைகளை அளித்துள்ளார்.
கிபி 1516ல் பொன்னம்பல நாத தொண்டைமான் திருப்பெருந்துறை கோயிலுக்கு பொன்னம்பலநாதநல்லூர் எனும் ஊரை அளித்தார். திருப்பெருந்துறை கோயிலில் பொன்னம்பலநாத சந்தி எனும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தி கொடைகள் அளித்துள்ளார்.
கிபி பதினேழாம் – பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வணங்காமுடி தொண்டைமான்கள் திருவாடுதுறை ஆதீனத்திற்கு பல கொடைகள் அளித்துள்ளனர்.
கிபி 1739ல் அருணாச்சல வணங்காமுடி தொண்டைமானார் பெருவயல் முருகன் கோயிலுக்கு பல கொடைகளை அளித்துள்ளார்.
கிபி 1740ல் முத்து வணங்காமுடித் தொண்டைமான் திருவாரூர் தியாகராச பெருமாள் கோயிலுக்கு நாட்டாணி என்ற ஊரை ஙொடையாக அளித்தார்.
அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை ஆவுடையநாதர் ஸ்ரீபாத பக்தர் என அழைத்துக் கொள்ளும் அளவுக்கு திருப்பெருந்தூறை சிவன் மீது பக்தி கொண்டு விளங்கினர்.
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் திருப்பெருந்துறையில் அச்சுதப்ப தொண்டைமான் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட மண்டபம் இன்றும் அச்சுத பூபால மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.
அறந்தாங்கி தொண்டைமான்களின் வழியினர்
கிபி பதினான்காம் நூற்றாண்டு முதல் கிபி பதினெட்டாம் நூற்றாண்டு வரை கோலோச்சிய அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் பட்டியல்:-

பட்டுக்கோட்டை தாலுகா ஆபீசில் கிடைத்த கிபி 1684 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் தஞ்சை மன்னர் ஷாஜி என்பவர் கிபி 1684 ல் பட்டுக்கோட்டை முதல் தெற்கு பாம்பனாறு வரை உள்ள கள்ளப்பற்று சீமைகளான அறந்தாங்கி, திருபுவனம் உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றியதாகவும் , இந்த வெற்றியின் அடையாளமாக பட்டுக்கோட்டையில் ஒரு கல்கோட்டையை மராட்டிய தளபதி வானாஜி பண்டிதர் என்பவர் கட்டியதாகவும் கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் அறந்தாங்கியானது கள்ளர்பற்று சீமை என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் அறந்தாங்கியை கள்ளர் குல மன்னரான ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமானார் ஆட்சி செய்து வந்தார்.

அறந்தாங்கி தொண்டைமான்களின் குடும்பத்தினரான பண்டாரத்தார்கள் பற்றி அறந்தாங்கி தொண்டைமான்களின் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி 1696 ஆம் ஆண்டை சேர்ந்த சங்குப்பட்டணம் காணியாட்சி செப்பேட்டில் ” ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமானாரும் பெரியதம்பி காலிங்கராச பண்டாரத்தாரும் சங்குப்பட்டணம் வந்தபோது அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது


இச்செப்பேட்டில் ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமானார் ” பெரிய துரை” என குறிப்பிடப்பட்டுள்ளார். இதன் பொருள் இருவரில் தொண்டைமானாரை பெரிய துரை என்றும் பண்டாரத்தாரை சிறிய துரை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் ஒரே குடும்பத்தினராக இருந்ததை இங்கு அறியலாம்.
பண்டாரத்தார் குடும்பத்தினரே பிற்காலத்தில் அறந்தாங்கி தொண்டைமான்களின் வம்சாவளியாக அறந்தாங்கி- பாலையூர்வனம் ஜமீனை ஆட்சி செய்தனர்.
அறந்தாங்கி தொண்டைமான்களின் அடையாளங்களையே இவர்களும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.கிபி 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றலம்பலக் கவிராயர் எனும் கவிஞர் பாலையவனம் ஜமீன் முன்னோரான ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தார் மீது பாடல்கள் பாடியதாக குறிப்புகள் உள்ளன. அதற்கு பரிசாக யானையை பெற்றுள்ளார். ( மூவரையன் விரல் விடு தூது பக் 2)

ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமானார் வாழ்ந்த காலமும் ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தார் மீது பாடல் பாடப்பட்ட காலமும் ஒன்றே ஆகும். தொண்டைமான்களும் பண்டாரத்தார்களும் ஒரே குடும்பத்தினராக விளங்கியதை இது உணர்த்துகிறது.
எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மன்னருடன் மண உறவில் கலந்து இருந்த கல்லாக்கோட்டை ஜமீன்களான சிங்கபுலியார்கள் மற்றும் அம்புநாட்டு பல்லவராயர்கள் தங்களது தாய் வழி உரிமையாக புதுக்கோட்டை மன்னர்களின் பெயரை தங்களது பெயரோடு சேர்த்து விஜய ரகுநாத சிங்கம்புலியார், விஜய ரகுநாத பல்லவராயர் என அழைத்துக்கொண்டனர்.
கிபி 1739 மற்றும் 1740 ஆம் ஆண்டுகளில் அறந்தாங்கி தொண்டைமான்களால் வெளியிடப்பட்ட பெருவயல் செப்பேடு 1 மற்றும் 2 ல், வணங்காமுடி தொண்டைமான் மற்றும் முத்து தொண்டைமான் ,ஆகியோர் தஞ்சை நகராதிபதி மகாராஜா சாயிபு என தஞ்சை மன்னர் பிராதப சிம்ம ராஜாவை குறித்துள்ளனர். எனவே (கிபி 1739-1740) காலக்கட்டத்திலேயே அறந்தாங்கி தொண்டைமான்கள் தஞ்சை மராத்தியர் மேலாண்மையை ஏற்று விட்டனர் என விளங்குகிறது.
அறந்தாங்கி தொண்டைமான்களின் கடைசி செப்பேடு கிபி 1759 ஆம் ஆண்டை சேர்ந்ததாகும்.ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமானாரின் மகன் விஜய அருணாச்சல வணங்காமுடி தொண்டைமானார் இந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அறந்தாங்கி அரசு எனும் பெருமையை இழந்து தஞ்சை சமஸ்தானத்தின் கீழ் உள்ள சிறிய பாளையங்களில் ஒன்றாக அறந்தாங்கி மாறியது.
18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர் படை ராபர்ட் க்ளைவ் தலைமையில் தஞ்சாவூர் மற்றும் பாலைய- தொண்டைமான் எனும் ஊர்கள் வழியாக தேவிப்பட்டினம் சென்றதாக ஆர்காடு நவாப் வரலாற்று நூல் கூறுகிறது. அறந்தாங்கி தொண்டைமான்கள் பாலையவனத்தில் இருந்து ஆட்சி செய்ததால் பாலையவனத்தை- பாலைய தொண்டைமான் என குறிப்பிட்டுள்ளனர்.
தஞ்சை சமஸ்தானத்தில் உள்ள பாளையங்கள் பற்றிய குறிப்புகள் மராத்தியர்கள் வெளியிட்ட மோடி ஆவண தொகுப்பில் உள்ளது.
கிபி 1830ல் எழுதப்பட்ட மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் கள்ளர் பாளையங்கள் உருவானது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி ” தஞ்சை மன்னர் பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை சீமையில் கள்ளர்களின் கிளர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை நிறுத்தி வைத்திருந்தார். பட்டுக்கோட்டை சீமையை தாண்டி தஞ்சை சமஸ்தான எல்லை பரந்து இருந்ததால், கள்ளர்களை அழைத்து அவர்களோடு சுமூகமாக செல்ல பாளையங்களை ஏற்படுத்தினார். பாளையங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் ( கிபி 1780-1790) காலக்கட்டம் ஆகும். அப்பகுதியில் இருந்த கள்ளர்கள் கத்தி வேலை( வாள் வீச்சு) அறிந்த வீரர்களாக இருந்துள்ளனர். இதன்மூலம் தஞ்சையில் இருந்த 13 பாளையங்களும் ஆதியில் கள்ளர் பாளையங்கள் என அறியலாம். (தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் Vol 1 page 159)


இந்த பதிமூன்று பாளையங்களில் அறந்தாங்கி தொண்டைமானின் பாளையமும் ஒன்றாக இருந்துள்ளதை பற்றி மராத்திய மோடி ஆவணம் குறிப்பிடுகிறது.
கிபி 1827ல் எழுதப்பட்ட மோடி ஆவண குறிப்பில் ” தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சில ஊர்களுக்கு மெய்க்காவல் ஆயிருந்த தொண்டைமான் பாளையப்பட்டு காரருக்கு” என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்ட பாளையம் அறந்தாங்கி தொண்டைமானின் பாலையவனம் ஆகும். ( தஞ்சை மராத்தியர் மோடி ஆவணம் Vol 1 page 27)
மேற்கூறிய தகவல்கள் மூலம் நாம் அறிவது, அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்கள் தஞ்சை மன்னர்களின் மேலாண்மையை ஏற்று பாலையவனத்தில் இருந்து ஆட்சி செய்து வந்துள்ளனர். ஆர்காடு நவாப்புகளின் வரலாற்று நூலில் பாலையவனம் பாலைய தொண்டமான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு அறந்தாங்கி வட்டம் சுனையக்காடு எனும் பகுதியில் கிடைத்தது. இக்கல்வெட்டில் ” மகாராச ராமச்சந்திர விஜய அருணாச்சல வணங்காமுடி பண்டாரத்தார்” அளித்த கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பாலையவனம் ஜமீனை சேர்ந்த பண்டாரத்தார் இக்கல்வெட்டில் மகாராச என குறிப்பிடப்பட்டுள்ளார். பாலையவனத்தில் இருந்து ஆட்சி செய்த அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் வழிவந்ததால் இவர் தன்னை மகாராசா என குறிப்பிட்டுள்ளார்.

கிபி 1883 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Manual of tanjore in madras presidency எனும் நூலில் தஞ்சையில் இருந்த 13 ஜமீன்களும் கள்ளர் மற்றும் இவர்களின் கிளைக் குடியை சார்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நூலில் பாலையவனம் ஜமீனாக ராமச்சந்திர விஜய அருணாச்சல வணங்காமுடி பண்டாரத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.



கிபி 1884 ல் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட List of inscriptions and sketches of dynasties of southern india, robert sewell :1884) எனும் நூலில் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

” வணங்காமுடி எனும் பட்டத்தை அறந்தாங்கி தொண்டைமான்கள் பெற்ற விதம் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் தசரா விழாவுக்காக தஞ்சை மன்னரை அனைத்து குறுநில தலைவர்களும் நேரில் கண்டு வணங்கி வரும் வழக்கம் இருந்ததாகவும், ஆனால் அறந்தாங்கி தொண்டைமான் தஞ்சை மன்னரை சந்திக்க தான் செல்லாமல் தன்னுடைய பிரதிநிதியை அனுப்பி வைத்ததால், மன்னருக்கு தலைவணங்காதவர் எனும் குறிக்கும் விதமாக வணங்காமுடி என பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் பாலையவன ஜமீன்களால் வணங்காமுடி பட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது
பாலையவன ஜமீன் குடும்பத்தார் முற்காலத்தில் தொண்டைமான் பட்டத்தை பயன்படுத்தியதாகவும் தற்போது இந்த ஜமீன்தார்கள் வணங்காமுடி பண்டாரத்தார் எனும் பட்டத்தை மட்டும் பயன்படுத்துவதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாலையவனத்தில் இருந்து ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர்களின் வழிவந்த வணங்காமுடி பண்டாரத்தார்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில்
பாலையவனத்தின் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிகிறோம்.
கிபி 1923 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கள்ளர் சரித்திரம் நூலில் தஞ்சையில் இருந்த 13 ஜமீன்களில் 11 ஜமீன்கள் கள்ளர் மரபினர் என்றும், மற்றவர்களும் ஆதியில் கள்ளர் மரபினரே என குறிப்பிட்டுள்ளார்.

கிபி 1906 ஆம் வெளியிடப்பட்ட Tanjore gazetter எனும் நூலில் தஞ்சையில் இருந்த பதிமூன்று ஜமீன்களும் கள்ளர் மற்றும் மறவர் குலத்தை சார்ந்தவை என கூறப்பட்டுள்ளது.

கிபி 1916 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட General history of pudukkottai state எனும் நூலில் பாலையவனம் ஜமீன்தார்கள் தங்களை சூரிய குலத்தவர் என அழைத்துக் கொண்டதாகவும் அவர்களே அறந்தாங்கி தொண்டைமான்களின் கால்வழியினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1931 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய தொல்லியல் துறையின் epigraphica indica vol 21 எனும் நூலில் அறந்தாங்கி தொண்டைமான்களின் வழிவந்தவர்கள் பாலையவனம் ஜமீன்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1939 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட Sources of the history of nawabs of carnatic எனும் நூலில் பாலையவனம் ஜமீன்தாரி அறந்தாங்கி தொண்டைமான்களோடு தொடர்புடையது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Manual of pudukkottai state vol 2 part 1 எனும் நூலில் அறந்தாங்கி தொண்டைமான்களின் வழியினரே தற்போதைய பாலையவனம் ஜமீன்தார்கள் என கூறப்பட்டுள்ளது.

கிபி 1997 ஆம் ஆண்டு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட சதாசிவ பண்டாரத்தார் கட்டுரைகள் எனும் நூலில் அறந்தாங்கி தொண்டைமான்கள் வழிவந்தவர்கள் இன்றும் பட்டுக்கோட்டை தாலுகாவில் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கிபி 14 ஆம் நூற்றாண்டில் நாடாள தொடங்கிய அறந்தாங்கி தொண்டைமான்கள் கிபி 20 ஆம் நூற்றாண்டு வரையிலும் அரசுகளாக , பாளையக்காரர்களாக , ஜமீன்தார்களாக அதிகாரத்தில் இருந்துள்ளனர்.
பாலைவனம் ஜமீன்தார் திரு. துரையரசன் அவர்கள் அறந்தாங்கியின் MLA வாக இருமுறை இருந்துள்ளார். ஆவுடையார்கோயிலில் அறந்தாங்கியின் சார்பாக மண்டகப்படியை பாலையவனம் ஜமீன்தார்கள் நடத்துகின்றனர்.



அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் விழாக்களில் பாலையவனம் ஜமீன்தார்கள் தனி சிறப்பு பெறுகின்றனர்.
ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமான் மற்றும் ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தார் நினைவாக ஆண்டவராயர் பள்ளி ஒன்று அறந்தாங்கியில் உள்ளது. அறந்தாங்கி வட்டத்தில் ஆண்டவராய சமுத்திரம் எனும் ஊர் உள்ளது. பாலையவனத்தில் அறந்தாங்கி தொண்டைமான்கள் மற்றும் அவர்களின் வழியினரான பாலையவனம் ஜமீன்தார்கள் வாழ்ந்த அரண்மனை கைவிடப்பட்ட நிலையில் பழைய நினைவுகளை சுமந்துக் கொண்டு நிற்கிறது.


Article by: www.sambattiyar.com
Total views 2,829 , Views today 1
super
அருமையான பதிவு ❤️