புதுக்கோட்டை மாவட்டம், கவிநாட்டுக் கண்மாயின் கிழக்கு கலிங்கின் சுவரில் உள்ள கிபி 13 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டு இப்பகுதியில் இருந்த சமணப்பள்ளி பற்றி குறிப்பிடுகிறது.( ஆவணம் 2004, தமிழக தொல்லியல் கழகம்)

” கவிநாட்டு பெருநற் கிள்ளி சோழ பெரும்பள்ளியான அரசகண்டராமன் பெரும்பள்ளி இத்தன்மம்”
என கல்வெட்டு வாசகம் குறிப்பிடுகிறது. இது புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள சடையப்பாறை எனும் பகுதியில் உள்ள சமணப்பள்ளியை குறிப்பிடுகிறது. பாண்டிய மன்னன் கோனேரி மேல்கொண்டான் காலத்தை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு(IPS 530) ஒன்றில், கவிநாட்டு மக்கள் தங்கள் நாட்டு பெருநற்கிள்ளி சோழ பெரும்பள்ளி ஆழ்வாருக்கு அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது. பெருநற்கிள்ளி சோழ பெரும்பள்ளி என குறிப்பிடப்பட்ட சமணக்கோயில் கவிநாட்டுக் கல்வெட்டில் அரசகண்டராமன் பெரும்பள்ளி என்றும் குறிப்பிடப்படுகிறது.
யார் இந்த அரசகண்டராமன்?
தெற்காசியாவின் புகழ் வாய்ந்த பேரரசாக விளங்கிய சோழ தேசம் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. சோழ பேரரசின் கடைசி மன்னரான மூன்றாம் ராஜேந்திரன் ஆட்சி காலத்தில், சோழப் பேரரசின் எல்லைகள் மத்திய தமிழகத்துக்குள் சுருங்கியது. பாண்டியப் பேரரசின் எழுச்சி சோழ அரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. கிபி 1257ஆம் ஆண்டு, சடையவர்மன் சுந்தரப்பாண்டியன், சோழ தேசத்தின் மேல் படையெடுத்து மூன்றாம் இராசேந்திர சோழனை வென்று தனக்கு திறை செலுத்தும் குறுநில மன்னராக்கினார். இக்காலத்தில் பாண்டியப் பேரரசின் எல்லைகள் கன்னியாகுமரி முதல் கிருஷ்ண நதி வரை பரவி இருந்தது. கிபி 1279 ஆம் ஆண்டு மூன்றாம் ராசேந்திர சோழன் பற்றிய கடைசி கல்வெட்டு கிடைத்தது இதற்கு பிறகு ஒரு சோழப் பேரரசர் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.
மூன்றாம் ராசேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் திருக்கண்ணபுரத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில்(515 of 1912) , சேமப்பிள்ளை என்பவரை மூன்றாம் ராசேந்தர சோழன் ” நம் மகன் ” என குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் கே கே பிள்ளை அவர்கள் மூன்றாம் ராசேந்திரன் காலத்தில் புதுக்கோட்டையில் ஆட்சி செய்த அழகிய சேமன் என்பவரே சோழனின் மகனாக குறிக்கப்பட்ட சேமப்பிள்ளை ஆவார் என குறிப்பிட்டுள்ளார்.
1257ல் சோழப் பேரரசு குறுநில மன்னர்கள் நிலைக்கு சுருங்கிய பிறகு , மூன்றாம் ராசேந்திரனின் மகனான சேமப்பிள்ளை புதுக்கோட்டையில் மாறவர்மன் குலசேகரன் மற்றும் மாறவர்மன் வீரப்பாண்டியன் ஆகியோருக்கு திறை செலுத்திய சிற்றரசாக ஆட்சி புரிந்து வந்தார்.
(சோழர் வரலாறு / டாக்டர் கே கே பிள்ளை / பக் 682: தமிழக அரசு வெளியீடு)
மைசூர் தொல்லியல் கழகம் 1930 ல் வெளியிட்ட ” Mysore gazetter”ல் சோழ மன்னர்களின் பட்டியலில் கடைசி மன்னராக ” செமப்பிள்ளையார்” குறிப்பிடப்பட்டுள்ளார்.
மூன்றாம் ராசேந்திரனுக்கு சோழகுல மாதேவியார் என்ற மனைவியும், சேமப்பிள்ளை எனும் மகனும் இருந்ததாக திருக்கண்ணபுரத்து கல்வெட்டு கூறுகிறது.( சோழர்கள்- வரலாற்று அறிஞர் ம.ராசாமாணிக்கனார் பக் 351)
பழம்பெரும் இந்திய தொல்லியல் அறிஞரான கே ஏ நீலகண்ட சாஸ்திரிகள் தன்னுடைய புத்தகமான ” The pandyan kingdom” எனும் புத்தகத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியருக்கு அடங்கிய சிற்றரசராக சோழ வம்சத்தின் கடைசி இளவரசர் புதுக்கோட்டையில் இருந்து ஆட்சி புரிந்ததாக குறிப்பிட்டுள்ளார். ( The pandyan kingdom- From Earliest time to sixteenth century : பக் 214 : Central Archaeological library)
சேமப்பிள்ளையார் மூன்றாம் ராஜேந்திரனின் மகன் என்றும், அவர் கடைசியில் வாழ்ந்த இடம் புதுக்கோட்டை என்றும் Manual of pudukkottai state vol 1 ல் கூறப்பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டு எழுதப்பட்ட History and culture of the indian people vol iv, பக்கம் 232 ல் மூன்றாம் ராசேந்திர சோழனின் மகனான சேமப்பிள்ளை என்பவர் வீரப்பாண்டியன் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டையில் இருந்து அரசு செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிபி 1257 ஆம் ஆண்டு சடையவர்மன் சுந்தரப் பாண்டியன் காலத்தில் புதுக்கோட்டை வல்லநாட்டு திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு செமப்பிள்ளை தானம் அளித்துள்ளார். கல்வெட்டில் ” செமப்பிள்ளையார் சிவநாமத்தால் அரசகண்டராமன் திருநந்தா விளக்கிற்கும்” என குறிப்பிடப்படுவதால் செமப்பிள்ளையார் ” அரசகண்டராமன்” என்றும் அழைக்கப்பட்டுள்ளதை அறிகிறோம்( IPS 427). வல்லநாடானது கள்ளர்களின் நாட்டு கட்டமைப்பில் ஒன்று என புதுக்கோட்டை கவெ எண் 38 தெரிவிக்கிறது. இதே தகவல் புதுக்கோட்டை மேனுவலிலும் கூறப்பட்டுள்ளது.
இதே ஆண்டில் செமப்பிள்ளையார் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை தென்கவிர் நாடான கள்ளர் நாட்டு மக்கள் செமப்பிள்ளையார் பெயரில் அவரது திருநாமத்தால் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு குளத்தூர் எனும் ஊரை தானமாக அளித்துள்ளனர். தங்களது பகுதியின் ஆட்சியாளர் மேல் கொண்ட அன்பை இக்கல்வெட்டு விளக்குகிறது. இவரது பிறந்த நாள் ” அரசகண்டராமன் திருநாள்” என்றும் இவரது பெயரால் அளிக்கப்பட்ட கொடை ” அரசகண்டராமன் சந்தி” என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.(IPS 428)
கிபி 1257 ல் சேமப்பிள்ளையாரின் திருத்தோப்புக்கு வல்லநாட்டு கள்ளர்கள் அளித்த கொடை அளித்துள்ளதை புதுக்கோட்டை கல்வெட்டு (IPS 429) குறிப்பிடுகிறது. தோப்பானது கல்வெட்டில் ” அரசகண்டராமன் தோப்பு “ என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் இப்பகுதியில் அரண்மனையை கொண்டிருந்ததை ” திருமாளிகைப் பிள்ளை” என்பவரின் கையொப்பம் எடுத்துரைக்கிறது.
1277 ஆம் ஆண்டை சேர்ந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் , ஆலங்குடி தாலுகா திருவிடையப்பட்டியில் உள்ள ஸ்ரீமூலநாதர் கோயிலுக்கு சேமப்பிள்ளையார் ” அரசிமிகாமன்” எனும் சந்தியை ஏற்படுத்தி நிலங்களை தானமாக அளித்துள்ளார். கோயிலுக்கு தேவையான நிலம் வல்ல நாட்டு அரையர்களிடமே இருந்து வாங்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சோழ இளவரசர் “நாயனார் சேமப்பிள்ளையார் சாமந்தனார்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவரது மற்ற அடைமொழிகளாக ” அரசகண்டராமன் திருவம்பலப்பெருமாள் அருள்பெரிய செண்டேரசுன் ” முதலியவை இவ்வரசனின் திருமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் அவர்களின் கோட்டை பற்றிய கல்வெட்டு புதுக்கோட்டை தெம்மாவூரில் கிடைத்துள்ளது. ” ஸ்வதிஸ்ரீ தென்வாய்யூரானான அரசகண்டராமன் கோட்டை ” எனும் அரசர்களுக்கு உரிய மங்கலச் சொல்லோடு அரச கண்ட ராமன் சேமப்பிள்ளை அவர்களின் கோட்டை இருந்தது குறிப்பிடப்படுகிறது.( IPS 1119)
புதுக்கோட்டை பகுதிகளை ஆட்சி சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் தன்னை கல்வெட்டுகளில் “அரசகண்டராமன்” எனவும் குறிப்பிட்டு உள்ளதாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது.(Manual of pudukkottai state vol 2 part 1 pg 629)
இக்கல்வெட்டுகள் மூலம் கடைசி சோழ இளவரசனான செமப்பிள்ளையார் புதுக்கோட்டை பகுதிகளில் ஆட்சி செய்ததையும், அவரது பல சிறப்பு பெயர்களில் அரசகண்டராமனும் ஒன்று என்பது தெளிவாகிறது.
சோழ மன்னர்கள் தாங்கள் உருவாக்கிய சமணக் கோயில்களை தங்களது பெயரோடு சேர்த்தே அழைத்து வந்துள்ளனர். இதுபோன்ற சமணக்கோயில்கள் ராஜேந்திர சோழப் பெரும்பள்ளி, சுந்தரசோழப் பெரும்பள்ளி என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.
சுந்தர சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பள்ளி சுந்தரசோழ பெரும்பள்ளி என பெயர் பெற்றது.( பிற்கால சோழர் வரலாறு : சதாசிவ பண்டாரத்தார்: பக் 88)
முதலாம் ராசேந்திர சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பள்ளி ராசேந்திர சோழ பெரும்பள்ளி என பெயர் பெற்றது.( நெஞ்சையள்ளும் தஞ்சை: பக்கம் 213)
இவ்வகையில் கடைசி சோழ இளவரசரான அரசகண்டராமன் செமப்பிள்ளையார், புதுக்கோட்டையில் தான் அமைத்த பெரும்பள்ளி எனும் சமணக் கோயிலுக்கு சோழப் பெரும்பள்ளி யான அரசகண்ட ராமன் பெரும்பள்ளி என பெயரிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: www.sambattiyar.com
Total views 2,455 , Views today 1