கடைசி சோழ மன்னன் தன் மகன் பெயரில் ஏற்படுத்திய வழிபாடு


சோழப் பேரரசின் கடைசி மன்னரான மூன்றாம் ராசேந்திரன் கிபி 1246 முதல் 1279 வரை ஆட்சி செய்தார்.  கிபி 1279 ஆம் ஆண்டுக்கு பிறகு இவரது கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.

சோழப் பேரரசின் கடைசி மன்னருக்கு பிறகு சோழ இளவரசர்கள் யாரும் இல்லையா? அவர்கள் எங்கே சென்றனர்?  என பல்வேறு கேள்விகளுக்கு நமக்கு முழுமையான விடை கிடைத்தபாடில்லை.

ஆயினும் மூன்றாம் ராசேந்திர சோழன் வெளியிட்ட நாகை – கண்ணபுரம் கிடைத்த கல்வெட்டு சோழப்பேரரசின் கடைசி இளவரசன் பற்றிய முக்கிய தகவலை தருகின்றது.

இந்திய தொல்லியல் துறை 1922 ஆம் ஆண்டு வெளியிட்ட Annual report of south indian epigraphy எனும் கல்வெட்டு தொகுப்பில் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளது:-

நாகை மாவட்டம்  திருக்கண்ணபுரத்தில் சிறு சிதைவுகளுடன் கிடைத்த மூன்றாம் ராசேந்திர சோழனின் கல்வெட்டில் அவரது புகழ்மொழிகள் சமஸ்கிருதத்ததில் தரப்பட்டுள்ளது.  மூன்றாம் ராசேந்திரன் ” வட இலங்கையின் ராமனைப் போன்றவன்” என்றும்,  கருநாடரின் பேரெதிரி என்றும் ,  சிதம்பரம் நடராஜரின் பால் அன்பு கொண்டவர் ” என்றும் குறிப்பிடப்படுகிறார்.

கல்வெட்டின் தமிழ் பகுதியில் ” நரபதி ராஜேந்திர சோழன்” எனவும் ” இரு பாண்டிய மன்னர்களின் முடியை கொண்டவன்” என்றும் போற்றப்படுகிறார்.

மேலும் ஆழ்வார் சவுரிராஜ பெருமாள் கோயிலில் ” நம் மகனான செமப்பிள்ளையார் பெயரில் அரசகண்டராமன் சந்தி” எனும் வழிபாட்டை ஏற்படுத்தி அதற்கான கொடைகளை மன்னர் மூன்றாம் ராசேந்திர சோழன் அளித்துள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சோழ இளவரசன் செமப்பிள்ளையார்,  வீரப்பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததாக புதுக்கோட்டை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. செமப்பிள்ளை என்றும் அரசகண்டராமன் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்த இளவரசனே,  மூன்றாம் ராசேந்திரனின் மகனும், சோழப் பேரரசின் கடைசி பிரநிதியும் ஆவார் என இந்திய தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளது.

இக்கல்வெட்டு பற்றிய ஆய்வு முடிவை 1937 ல் வெளியிட்ட  Annamalai University வரலாற்றுத் துறை , கண்ணபுரம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் செமப்பிள்ளையாரே சோழப் பேரரசின் கடைசி பிரநிதி என விளக்கம் அளித்துள்ளது. (  Journal of Annamalai university vol 7)

மூன்றாம் ராசேந்திரன் ” இலங்கையின் ராமன்” என தன்னை அழைத்துக் கொண்டதைப்போல் அவரது மகன் செம்பிள்ளையாரும் தன்னை ” அரசகண்டராமன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் இவர் ” திருவம்பலப்பெருமாள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் அரசகண்டராமன் கல்வெட்டுகள்

கடைசி சோழ இளவரசன் செமப்பிள்ளையார் அவர்களின் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் அதிக அளவில் கிடைத்துள்ளன. இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட Annual report of epigraphy (1930-1937) எனும் நூலில் செமப்பிள்ளையார் அவர்கள் புதுக்கோட்டையில் பாண்டிய மன்னர்களின் கீழ் சிற்றரசாக ஆட்சிபுரிந்து வெளியிட்ட கல்வெட்டுகள் தரப்பட்டுள்ளது. இதே கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தினாலும் வெளியிடப்பட்டுள்ளது.

கிபி 1257 ஆம் ஆண்டு சடையவர்மன் சுந்தரப் பாண்டியன் காலத்தில் புதுக்கோட்டை  வல்லநாட்டு திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு செமப்பிள்ளை தானம் அளித்துள்ளார். கல்வெட்டில் ” செமப்பிள்ளையார் சிவநாமத்தால் அரசகண்டராமன் திருநந்தா விளக்கிற்கும்” என குறிப்பிடப்படுவதால் செமப்பிள்ளையார் ” அரசகண்டராமன்” என்றும் அழைக்கப்பட்டுள்ளதை அறிகிறோம்( IPS 427).

இதே ஆண்டில் செமப்பிள்ளையார் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை  தென்கவிர் நாடான கள்ளர் நாட்டு மக்கள் செமப்பிள்ளையார் பெயரில் அவரது திருநாமத்தால் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு குளத்தூர் எனும் ஊரை தானமாக அளித்துள்ளனர். தங்களது பகுதியின் ஆட்சியாளர் மேல் கொண்ட அன்பை இக்கல்வெட்டு விளக்குகிறது. இவரது பிறந்த நாள் ” அரசகண்டராமன் திருநாள்” என்றும் இவரது பெயரால் அளிக்கப்பட்ட கொடை ” அரசகண்டராமன் சந்தி” என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.(IPS 428)

கிபி 1257 ல் சேமப்பிள்ளையாரின் திருத்தோப்புக்கு வல்லநாட்டு கள்ளர்கள் அளித்த கொடை அளித்துள்ளதை புதுக்கோட்டை கல்வெட்டு (IPS 429) குறிப்பிடுகிறது.  தோப்பானது கல்வெட்டில் ” அரசகண்டராமன் தோப்பு ” என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் இப்பகுதியில் அரண்மனையை கொண்டிருந்ததை ” திருமாளிகைப் பிள்ளை” என்பவரின் கையொப்பம் எடுத்துரைக்கிறது.

1277 ஆம் ஆண்டை சேர்ந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் , ஆலங்குடி தாலுகா திருவிடையப்பட்டியில் உள்ள ஸ்ரீமூலநாதர் கோயிலுக்கு சேமப்பிள்ளையார் ” அரசிமிகாமன்” எனும் சந்தியை ஏற்படுத்தி நிலங்களை தானமாக அளித்துள்ளார்.  கோயிலுக்கு தேவையான நிலம் வல்ல நாட்டு அரையர்களிடமே இருந்து வாங்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சோழ இளவரசர் “நாயனார் சேமப்பிள்ளையார் சாமந்தனார்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவரது மற்ற அடைமொழிகளாக “ அரசகண்டராமன் திருவம்பலப்பெருமாள் அருள்பெரிய செண்டேரசுன் ” முதலியவை இவ்வரசனின் திருமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் அவர்களின் கோட்டை பற்றிய கல்வெட்டு புதுக்கோட்டை தெம்மாவூரில் கிடைத்துள்ளது. ” ஸ்வதிஸ்ரீ தென்வாய்யூரானான அரசகண்டராமன் கோட்டை ”  எனும் அரசர்களுக்கு உரிய மங்கலச் சொல்லோடு அரச கண்ட ராமன் சேமப்பிள்ளை அவர்களின் கோட்டை இருந்தது குறிப்பிடப்படுகிறது.( IPS 1119)

புதுக்கோட்டை பகுதிகளை ஆட்சி சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் தன்னை கல்வெட்டுகளில் “அரசகண்டராமன்” எனவும் குறிப்பிட்டு உள்ளதாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது.(Manual of pudukkottai state vol 2 part 1 pg 629)

இக்கல்வெட்டுகள் மூலம் சோழ அரசின் வீழ்ச்சிக்கு பிறகு கடைசி சோழ இளவரசனான செமப்பிள்ளையார் பாண்டியர்களின் மேலாண்மையை ஏற்று ஆட்சி புரிந்து வந்ததை தொல்லியல் துறையின் அறிக்கையும்,  கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. இவரைப் பற்றிய கடைசி கல்வெட்டு புதுக்கோட்டையில் கிடைக்கிறது.

Article by: www.sambattiyar.com

Total views 3,997 , Views today 2 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *