சோழர்கள் வேளான் குடியினரா?

சமீப காலத்தில் மிகவும் புகழ்பெற்ற வேளான் குடிகள் சில தங்களை போர்க்குடி குலத்தில் உதித்த சோழர்களோடு தொடர்பு படுத்த முயன்று வருகின்றனர். தற்காலத்தில் அரசியல் காரணங்களால் சோழர்களை தங்களோடு தொடர்பு படுத்த முயலும் வேளாண் குடிகள் போர்குடியினருக்கு நிகரான புகழ் பெற்று விளங்கினர் என்பது உண்மையே. ஆயினும் இவர்களது குலத்தொழில் என்பது உழுது பயிரிடுதவதே என்பதை வரலாற்று சான்றுகள் உணர்த்துகின்றன.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் அரசர்க்கு உரியவனாக தொல்காப்பியர் ஒன்பது அடையாளங்களை கூறுகிறார். அதாவது படை, கொடி, குடி, முரசு,குதிரை, களிறு, தேர் , தார் , முடி ஆகியவை அரசர்க்கு உரியனவாம்.

அதோடு வேளான் மரபினருக்கு உழுது பயிரிடும் வாழ்க்கை அல்லது பிற வாழ்க்கை அல்ல என குறிப்பிடுகிறார்.” வேளான் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி எனும் பாடல் மூலம் வேளான் மரபினரின் உழுது பயிரிடும் தொழில் விளக்கப்படுகிறது. அதாவது வேளாளர்களுக்கு உழுது பயிரிடுவதே தங்களது பிரதான தொழிலாக கூறப்பட்டுள்ளது.
அரசரின் முக்கிய அடையாளமாக படையானது குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காலத்திலேயே வேளான் மரபினரின் குலதொழிலாக உழுது பயிரிடும் செயல் மட்டுமே இருந்துள்ளது.

சோழர் கால இலக்கியத்தில்…………….

கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த கம்பரால் எழுதப்பட்ட ஏரெழுபது எனும் நூல் சோழநாட்டு வேளாளர்களின் சிறப்பை கூறுகிறது. இந்நூலில் கம்பரே வேந்தர்களுக்கும் வேளாளர்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியுள்ளார்.

ஏரெழுபது நூலின் பாயிரம் 8வது பாடலில் “ தொழும்குலமான அந்தணர் குலம், சுடர் மன்னவர் தோன்றிய போர்குடி குலம் மற்றும் வணிகர் குலம் முதலிய குலங்களைவிட உழும் குலமான வேளாளர் குலமே சிறப்பு வாய்ந்தது என கம்பர் பாராட்டுகிறார். அதாவது மன்னர்கள் தோன்றிய போர்குடியையும், வேளாளர்கள் தோன்றிய உழுங்குடியும் வேறு வேறு என கம்பர் உரைக்கிறார்.

ஏரெழுபதின் பத்தாவது பாயிரம் பாடலில் “ வேதியர் குலம், வேந்தர் குலம், வணிகர் குலம் முதலியவை காராளர்களின் வேளாண்மையையே நம்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வேளாளர் குலமும், வேந்தர்களின் குலமும் வேறு வேறென கம்பரே ஒப்புமை அளிக்கிறார்.

ஏரெழுபதிopன் “ உழவுச்சிறப்பு” எனும் தலைப்பில் அமைந்துள்ள இரண்டாவது பாடலில் “ அரசரின் நால்வகைப்படையும் வேளாளர்களின் உழவுச்சிறப்பு இல்லாவிடில் வலு குன்றி விடும்” என கூறப்பட்டுள்ளது. அரசனின் நால்வகை படைக்கும் வேளாளர்களின் உழுச்சிறப்பே முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதை கம்பர் பாடுகிறார். படைத்தொழில் புரிவோர் வேறு, வேளாண்மை புரியும் வேளாளர் வேறு என இங்கு குறிப்பிடுகிறார்.
ஏரெழுபதின் மூன்றாவது பாடலில்” வேந்தர்கள் எத்தனை படையை உடையவராயினும் வேளான் மரபினரின் ஆயுதங்களான ஏர் கலப்பை இன்றி மற்றவை வலுப்பெறாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசனின் ஆயுதங்களும், வேளாளரின் ஆயுதங்களும் வேறு வேறு என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏரெழுபதின் “ மேழிச்சிறப்பு” எனும் பகுதியில் அரசனின் செல்வங்களும், அந்தணரின் வேள்வியும் சிறக்க வேளாளரது மேழிக்கொடியே முக்கியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசன் வேறு வேளாளர் வேறு என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏரெழுபதின் 11வது பாடலான கொழுச்சிறப்பில் “ வேதவேள்விகள் செய்யும் அந்தணர்களுக்கும், போர்த்தொழில் புரியும் வேல் தாங்கிய மன்னர்களின் செல்வங்களுக்கும், உழுதொழில் புரியும் வேளாளர்களே மூலமாக அமைந்திருப்பதாக கம்பர் பாடுகிறார்.

ஏரெழுபதின் 14வது பாடலான “ உழவெருதுச்சிறப்பு” எனும் பகுதியில் போர்களத்தில் மன்னரின் மதங்கொண்ட யானைகள் வலுவோட போரிட, வேளாளர்களின் ஏர் உழும் எருதுகளே ஆதாரமாக அமைந்துள்ளதாக கம்பர் பாராட்டுகிறார். போர்க்காலங்களிலும் வேளாளர்கள் தங்களது வேளாண்மையில் முழு மூச்சாக ஈடுபட்டு வந்துள்ளதை இப்பாடல் குறிப்பிடுகிறது.

ஏரெழுபதின் 16வது பாடலில் பகடுபூட்டற் சிறப்பு எனும் பகுதியில் “ அரசனது வெற்றிகளிக்கு வேளாளர்களின் பயிர்த்தொழிலே காரணமாக அமைகிறது, இப்படி இருக்கும்போது அரசர்களின் குலத்தைவிட வேளாளர் குலம் உயர்ந்ததே என கம்பர் குறிப்பிடுகிறார். அதாவது வேந்தர்களின் குலம் வேறு, வேளாண்மை செய்யும் வேளாளர்களின் குலம் வேறு என குறிப்பிடுகிறார்

எரெழுபதின் 31வது பாடலில்” அரசர்களின் மணிமுடியைவிட வேளாளர்களின் நாற்று முடி சிறந்தது என வகையில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. அரசர்களின் வெற்றிகளுக்கு காரணமாக அமைவது வேளாளர்களின் வயலில் நடப்படும் நாற்றுமுடியே என கூறப்பட்டுள்ளது.

ஏரெழுபதின் 35வது பாடலில் “ உயிர்கள் அழியும் படைகொண்டு போரிடும் மன்னர்களின் போர்முனையைக் காட்டிலும், உலகத்து உயிர்களை வாழ்விக்கும் வேளாளர்களின் வயலின் நடவுமுனையே சிறந்தது என கம்பர் குறிப்பிட்டுள்ளார். அதாவது போர்தொழிலைவிட வேளான் தொழிலே சிறந்தது என குறிப்பிடுகிறார்.

ஏரெழுபதின் 51வது பாடலில் “ காடுவெட்டி கரை அமைத்து வேளாளர்கள் விவசாயம் செய்யவில்லை என்றால் வேலை ஏந்தி எதிரிகளை அழிக்கும் தொழிலை உடைய வேந்தர்கள் மக்களின் வறுமையை போக்க இயலாது என குறிப்பிடுகிறார். வேந்தர்களைவிட வேளாண் செய்யும் வேளாளர்கள் உயர்ந்தவர் என கம்பர் குறிப்பிடுகிறார்.
ஏரெழுபதின் 53வது பாடலில், வேளாளர்கள் நெற்களத்தில் வேளாண்மை செய்யவில்லை என்றால், வேந்தர்களின் பகைவர் மீதான படையெடுப்பும், மனுநெறிபடியான ஆட்சியும் நிகழாது என கம்பர் பாடுகிறார். அரச மரபினரின் போர்த்தொழிலைவிட வேளாளர்களின் உழுதொழில் உயர்ந்தது என இங்கு குறிப்பிடுகிறார்.

ஏரெழுபதின் 56 வது பாடலில், பாராளும் மன்னர்கள் செய்யும் போருக்கு பேருதவியாக அமைவது காராளரின் வேளான் திறனால் உருவாக்கப்பட்ட நெற்போர் என கம்பர் பாடுகிறார். போர்க்காலங்களிலும் வேளாளர்கள் தங்களது குலத்தொழிலான வேளாண்மையை சீரும் சிறப்புமாக கொண்டிருந்ததை இப்பாடல் விளக்குகிறது.

ஏரெழுபதின் 57 வது பாடலில், இப்பூவுலகில் மன்னர்களின் போர்களத்தை புகழ்ந்து புலவர்கள் பாடும் பாடல்களைவிட, வேளாளர்களின் நெற்போரை புகழ்ந்து பாடப்படுவதே சிறப்பு வாய்ந்தது என கம்பர் பாடுகிறார்.

ஏரெழுபதின் 58 வது பாடலில், பார்வேந்தகளாகிய மன்னர்களின் போர்களத்தில் ஒருவர் தோற்பர் மற்றொருவர் வெல்வார், ஆனால் ஏர்வேந்தர்களாகிய வேளாளர்களின் நெற்போர் களத்தில் அனைவரும் வெற்றி பெற்றவராகிறார்.

ஏரெழுபதின் பாடல் 66ல் சோழநாட்டு வேளாளர்களின் விதைக்கோட்டையைக் கொண்டே மன்னர்களின் கற்கோட்டைகள் எழுந்துள்ளதாக வேளாளர்களின் பயிர்தொழில் பற்றி குறிப்பிடப்படுகிறது.

ஏரெழுபதின் பாடல் 68ல் அரசர்களின் செல்வப்பேறைவிட வேளாளர்களின் வேளான் செல்வம் உயர்ந்தது என கம்பர் குறிப்பிடுகிறார்.

இதே போல சோழ மண்டல சதகம் நூலின் பத்தாவது பாடலில், நீதியில் சிறந்தவர்களான சோழர்கள் ஆளும் காவிரி நாட்டில் வாழும் உழுகுடிகளான வேளாளர்கள் சிறந்த பண்புடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.

இதே நூலின் 41வது பாடலில் கரிகாலனின் ஆணையை ஏற்று கல்லணையை கட்டியவர்கள் சோழிய வேளாளர்கள் என்றும், இவர்கள் தங்களது குலக்கொடியான மேழிக்கொடியை சோழர்களின் புலிக்கொடிக்கு இணையாக வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழனின் புதல்வர்களில் ஒருவரான வீரராஜேந்திர சோழத்தேவர் தனது மெய்க்கீர்த்தியில் “ வீரத் தனிக்கொடி தியாக கொடியோடு மேற்பவர் வருகென்று நிற்ப போர்த்தொழில் உரிமையில் எய்தி அரசு வீற்றிருந்த வீரராஜேந்திர சோழத்தேவர்க்கு” எனும் கல்வெட்டு வரிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

வீரக்கொடியும் தியாக்கொடியும் கொண்டு போர்த்தொழிலை குலத்தொழிலாக கொண்ட உரிமையில் அரசணையில் ஏறி ஆட்சி செய்து வரும் வீர ராஜேந்திர தேவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர்கள் போரையே தொழிலாக கொண்டிருந்த மரபினர் என இக்கல்வெட்டு வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

மேற்கூறிய சான்றுகள் மூலம் நாம் அறிவது, தொல்காப்பிய காலத்தில் இருந்து வேளாளர்களின் குலத்தொழிலாக வேளாண்மையே இருந்துள்ளதை அறிய முடிகிறது. சோழர் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கியமான ஏரெழுபதில் வேந்தர்கள் பிறக்கும் போர் குடியைவிட வேளாளர்களின் குடியான உழுகுடியே பல வகையில் சிறந்ததாக பாடப்பட்டுள்ளது. சோழர் கால புலவரே வேளான் குடியினர் வேறு, போர்குடியில் உதித்த மன்னர்களின் குலம் வேறு என உறுதிபட கூறியுள்ளார்.

வேளான் மரபினர் நிச்சயமாக உயரிய பெருமைகள் கொண்டிருந்தவர்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஆனால் இவர்கள் போர்குடியில் உதித்த மன்னர்களில் இருந்து தங்களை வேறுபடுத்தியும் உயர்த்தியுமே காட்டியுள்ளனர் என்பது விளங்கும். சோழர்களின் அவையில் சரி நிகரான உரிமையை பெற்றிருந்த வேளான் மரபினர் என்றும் தங்களை உழுகுடியினராகவே பெருமையுடன் அடையாளப்படுத்தியுள்ளனர்.

சோழர்கள் போர்தொழிலை கொண்ட மரபினர் என்றும் உழுதொழிலை கொண்ட வேளான் குடியினர் சோழர்களில் இருந்து வேறுபட்ட குடியினர் என சோழர் கால இலக்கியமே நமக்கு உணர்த்துகின்றது.

Article by : www.sambattiyar.com

Total views 1,723 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *