சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் நாட்டின் முக்கிய புள்ளிகளில் படைப் பற்றுகள் அமைக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. படைப்பற்று என்பது போர்வீரர்கள் நிரந்தரமாக வாழும் குடியிருப்புகள் உள்ள பகுதியாகும். அவ்வகையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் 15 க்கும் மேற்பட்ட படைபற்றுகள் இருந்ததை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. சோழர்களின் படைபற்றுகளில் முக்கிய படைபற்றாக பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள அத்திவெட்டியும் விளங்கியதை அத்திவெட்டி சௌந்தரேஸ்வரர் கோயிலில் கிடைத்த கல்வெட்டு உணர்த்துகிறது.
சோழங்கதேவன் படைப்பற்று

கிபி 1061 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் ராஜேந்திரன் கால கல்வெட்டு அத்திவெட்டியில் உள்ள சௌந்தரேஸ்வரர் கோயிலில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
” பையூர் பெரிய அழகியன் பெருமாளான சோழ கங்கன் படைப்பற்றான அகம்படி பற்றுக்கும் நாட்டு பற்றுக்கும்” எனும் கல்வெட்டு வரிகள் அத்திவெட்டியில் சோழகங்கன் தலைமையில் ஓர் படைபற்று இயங்கி வந்ததையும், படைப்பற்றில் இருந்த அகம்படி எனும் அரண்மனை அதிகாரிகள் பற்றுக்கும் நாட்டு பற்றுக்கும் நிச்சயித்த வரிகள் பற்றி குறிப்பிடுகிறது. நிச்சயிக்கப்பட்ட வரிகள் தவிர வேறு வரிகளை பெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு வரிகளை பெறுபவர்கள் தன்னுடைய வம்சத்தில் பிறந்தவனல்ல என சோழங்கத்தேவன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த படைப்பற்றில் நிர்வாகத்தில் இருந்தவர்கள் அனைவரும் “சோழங்கதேவன்” வம்சத்தினராக இருந்துள்ளதை ” இந்த வம்சத்திலே பிறந்தானல்ல கடவன் சோழ கங்கன் எழுத்து” எனும் வரிகள் உணர்த்துகின்றது.







இன்றும் சோழகங்கதேவர் பட்டம் கொண்ட கள்ளர்கள் தஞ்சை , திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழ்ந்து வருவதாக தஞ்சை மற்றும் திருச்சி மாவட்ட வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழங்கதேவன் படைப்பற்று
அத்திவெட்டி எனும் ஊர் பட்டுக்கோட்டை தாலுக்காவில் மதுக்கூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். கிபி 1684 ஆம் ஆண்டை சேர்ந்த தஞ்சை மராத்தியர் கல்வெட்டு ” பட்டுக்கோட்டை சீமை கள்ளப்பற்று” என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி கள்ளர்களால் ஆளுமை செய்யப்பட்டு வந்துள்ளதை இது குறிப்பிடுகிறது.

பட்டுக்கோட்டையானது கள்ளர்கள் மிகுந்து வாழும் பகுதி என்றும், இங்கு கிபி பதினேழாம் நூற்றாண்டில் பட்டு மழவராயன் எனும் கள்ளர் குல வீரன் கோட்டை கட்டி வாழ்ந்ததாகவும், அதனால் இவ்வூர் பட்டுக்கோட்டை என பெயர் பெற்றதாக தஞ்சை கெசட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மராத்திய மோடி ஆவணங்களில் கிபி 1799 ஆம் ஆண்டை சேர்ந்த அறிக்கை ” பட்டுக்கோட்டை சுபா கள்ளப்பற்று” என குறிப்பிடுகிறது. கள்ளர்பற்று என்பது கள்ளர்களின் ஆளுமையில் உள்ள ஒர் பகுதியை குறிக்கும்.

கிபி 1830 ஆம் ஆண்டை சேர்ந்த மோடி ஆவணம் ” தஞ்சையில் உள்ள அனைத்து பாளையங்களும் கள்ளர்களால் ஆளப்பட்டதாக குறிப்பிடுகிறது. தஞ்சையில் இருந்த கள்ளர் பாளையங்களில் ” அத்திவெட்டியும்” ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1883 ஆம் ஆண்டை சேர்ந்த Manual of tanjore எனும் நூலில் தஞ்சை கள்ளர் பாளையங்கள் கள்ளர்களால் ஆளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிபி 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ” கள்ளர் சரித்திரம்” எனும் நூலில் தஞ்சையில் இருந்த 13 கள்ளர் பாளையங்களில் 11 கள்ளர்களால் ஆளப்படுவதாகவும், கோனூரும் , அத்திவெட்டியும் முற்காலத்தில் கள்ளர்கள் வசம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அத்திவெட்டி ஜமீன் தற்காலத்தில் கள்ளர்களின் உறவினரான மறவர் வசம் உள்ளது. ஆக ஆதியில் கள்ளர் வசம் இருந்த அத்திவெட்டி ஜமீன் 20 ஆம் நூற்றாண்டில் மறவர் வசம் சென்றுள்ளதை இது விளக்குகிறது.

அத்திவெட்டியில் இன்றும் முக்குலத்தோரே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அத்திவெட்டியில் மொத்தம் ஒன்பது கரைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஆறு கரைகளில் கள்ளர்களும், 2 கரைகள் மறவர் மற்றும் ஒரு கரையில் அகமுடையாரிலும் உள்ளனர்.
பெரிய வாணதிரையர்
சின்ன வாணதிரையர்
பெரிய மழவராயர்
சின்ன மழவராயர்
ஆர்சுத்தியார்
சேண்டபிரியார்
மறவர் 2 கரைகள்
அகமுடையார் 1கரை


அத்திவெட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கரை முதல் மரியாதை மற்றும் முதல் மண்டகப்படி நடத்தும் உரிமையை பெறுகின்றனர்.

சோழர்களின் முக்கிய படைபற்றாக விளங்கிய அத்திவெட்டி பிற்காலத்தில் தஞ்சை சீமையில் இருந்த முக்கிய பாளையங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது. சோழர் கால கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட சோழங்கதேவர் பட்டம் கொண்ட கள்ளர்கள் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். பழங்காலம் முதலே புகழ்பெற்று விளங்கிய அத்திவெட்டி எனும் மிலிட்டரி கேம்ப் தற்போது ஒர் சிற்றூராக தன்னடக்கத்துடன் திகழ்கிறது.
தொகுப்பு : www.sambattiyar.com
Total views 2,346 , Views today 2