நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சாதனைத் துளிகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் பீஷ்மராக திகழ்ந்தார்.  சிம்மக்குரலோன், நடிகர் திலகம் என்றெல்லாம் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் அவர்களின் சாதனைகள் தற்கால சந்ததியினர் முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.  திரைத்துறையில் உச்சம் தொட்ட சிவாஜி  கணேசன் செய்த சாதனைகளையும், அவருக்கு வெளிநாடுகள் அளித்த அங்கீகாரங்கள் சிலவற்றையும் காண்போம்…

👉 சிவாஜி கணேசன் ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது கொல்லங்கோட்டில் நடந்த மனோகரா நாடகத்தில் நடித்த சிவாஜி கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்த கொல்லங்கோடு மகாராஜா சிவாஜிக்கு ‘ வெள்ளித் தட்டை ‘ பரிசளித்தார்.

👉வெளிநாட்டில் வெள்ளி விழாவை கடந்து ஒடிய முதல் தமிழ் திரைப்படம்,  சிவாஜி கணேசன் நடித்த ‘ பராசக்தி’ ஆகும்.  ( இலங்கை- கொழும்பு- 294 நாட்கள்)

👉 இலங்கையில் 1000 நாட்களை கடந்து ஒடி சாதனை படைத்த ஒரே தமிழ் படம் சிவாஜி நடித்த ‘ பைலட் பிரேம்நாத் ‘.

👉 1956 ல் வெளிவந்த ‘ ராஜா ராணி’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சேரன் செங்கூட்டுவனாக நடித்து ஒரே டேக்கில் பேசிய 16 பக்கங்கள் கொண்ட வசனமே தமிழ் சினிமாவின் மிக நீளமான வசனமாகும்.

👉1959 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே கட்டபொம்மன் திரைப்படம், லண்டன் தமிழ் சங்கத்தால், லண்டனில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஆங்கிலேயர்கள் முன்னிலையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

👉1960ல் மைசூர் மன்னர் ஜெயச்சாமராஜேந்திரர் சிவாஜி கணேசனை தனது அரண்மனைக்கு அழைத்து விருந்தளித்தார். அங்கு காட்டு யானைகளைக் கொண்டு நடத்தப்படும் விழாவிலும் சிவாஜி கணேசன் பங்கேற்று சிறப்பித்தார்.

👉1960 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள், எகிப்து தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய- ஆப்ரிக்க திரைப்பட விழாவில், கட்டபொம்மன் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார் சிவாஜி கணேசன். இதன் மூலம் சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதுபெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் எனும் சாதனையை படைத்தார்.

எகிப்தில் சிவாஜி

👉1961 ஆம் ஆண்டு , இங்கிலாத்து ராணி எலிசபத் மற்றும் அவரது கணவன் டியூக் சென்னை வந்தனர். அவர்கள் சந்திக்க விரும்பிய முக்கிய நபர்கள் பட்டியலில் சிவாஜி கணேசனும் இடம்பெற்றிருந்தார். சிவாஜி கணேசனும் அவர்களை சந்தித்து சிறப்பித்தார்.

👉1961ல் வெளிவந்த பாவமன்னிப்பு திரைப்படமே, தமிழில் டூரிங் டாக்கீசில் 100 நாட்களை கடந்து ஒடிய முதல் திரைப்படமாகும்.

👉1961 , ஆகஸ்ட் ஐந்தாம் நாள் , இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிவாஜி கணேசன் நடித்த பாவ மன்னிப்பு திரைப்படம் திரையிடப்பட்டு வெகுவான பாராட்டை பெற்றது.

👉1962 ல் அமெரிக்க அதிபர் John.F. kennedy அழைப்பினை ஏற்று, கலாச்சார தூதுவராக சிவாஜி கணேசன் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். அமெரிக்கா செல்லும் வழியில் , பாரிஸ் நகரத்தில் இந்திய அசோசியேசன் சார்பாக சிவாஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

👉1962ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘ Hollywood’ ல் வரவேற்பை பெற்றார் சிவாஜி கணேசன். அங்கு ‘ Actor’s guild’ எனும் ஆங்கீகாரத்தை பெற்றார்.

👉1962ல் ஹாலிவுட் நடிகர் சார்லஸ் ஹஸ்டன் , சிவாஜி கணேசனுக்கு ” டைமண்ட் லஞ்ச்” எனும் உயர்தர விருந்தளித்தார். அந்த விருந்தில் ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மன், ஜார்ஜ் சேண்ட்லர்,வால்டர் பிட்ஜியன் முதலிய ஹாலிவுட் நடிகர்கள் பங்கேற்று சிவாஜி கணேசனை பெருமை படுத்தினர்.

👉அதன்பிறகு ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ” மார்லின் பிராண்டோ ” சிவாஜி கணேசனுக்கு விருந்தளித்து சிறப்பித்தார். சிவாஜி என்னைப்போல நடிக்கலாம் ஆனால் நான் சிவாஜி போல நடிக்கமுடியாது என வியந்து பாராட்டினார் ஹலிவுட்டின் சூப்பர்ஸ்டார் மர்லின் பிராண்டோ.

ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவோடு..

👉அமெரிக்காவின் நயாகரா நகரை சென்றடைந்த சிவாஜி கணேசன் நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். நயாகரா நகரத்தின் தங்க சாவி அவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நேருவுக்கு பிறகு இந்த மரியாதையை பெற்ற ஒரே இந்தியர் சிவாஜி கணேசன் மட்டுமே.

அமெரிக்காவில்

👉இந்தியா வந்த எகிப்து அதிபர் நாசர், தன்னுடைய இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக சிவாஜி கணேசனை சந்தித்து அவர் அளித்த விருந்தில் மூன்றரை மணி நேரம் பங்கேற்றார்.

எகிப்து அதிபருடன் நடிகர் திலகம்

👉1964 ல் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘ நவராத்திரி’ படத்தில் ஒன்பது வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்து புதிய சாதனை படைத்தார்.

👉இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் 1969 ல் வெளிவந்த சிவாஜி கணேசன் நடித்த ‘ தெய்வ மகன்’ ஆகும்.

👉1975ல் மொரீசியஸ் நாட்டு அதிபர் விடுத்த அழைப்பினை ஏற்று, அங்கு நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். மொரீசியஸ் அதிபர் சிவாஜி கணேசனை விமான நிலையம் வரை வந்து வரவேற்று கவுரவித்தார்.

👉1975ஆம் ஆண்டு இலங்கை அரசு சார்பாக சிவாஜி கணேசனுக்கு ” Colombo mid town honorary membership” அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

👉1995ல் அமெரிக்காவின் கொலம்பஸ் நகரத்தின் மேயர் Lashukta என்பவர் சிவாஜி கணேசனை அழைத்து விழா நடத்தி, அந்நாட்டின் கௌரவ குடிமகனாக சிவாஜி கணேசனை அறிவித்தார். அதே நிகழ்ச்சியில் மௌண்ட் வெர்னன் எனும் நகரத்தின் மேயர் சிவாஜி கணேசனுக்கான வரவேற்பு பத்திரத்தை வாசித்தார்.கொலம்பஸ் தமிழ் சங்கம் சிவாஜி கணேசன் தங்களது கௌரவ தலைவராக அறிவித்தது.

👉அமெரிக்காவின் டொலேடோ நகரின் தமிழ்நாடு பவுண்டேசன் நிர்வாகிகள், சிவாஜி கணேசனுக்கு விழா எடுத்தனர். டொலேடோ நகரம் சார்பாக ” ஒரு நாள் குடிமகன் ” எனும் கௌரவத்தை அளித்து சிறப்பித்து.

👉1992ல் வெளிவந்த ‘ தேவர் மகன்’ இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு முதன்முறையாக தேசிய விருது கிடைத்தது. ஆனால் சிவாஜி கணேசன் இந்த விருதை பெற மறுத்துவிட்டார்.

👉1994 ஆம் ஆண்டு ப்ரெஞ்சு அரசாங்கம், சிவாஜி கணேசனுக்கு, ப்ரெஞ்சு அரசின் உயரிய விருதான ” செவாலியர்” விருதை அறிவித்தது. 1995 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த விழாவில் சிவாஜி கணேசனுக்கு ப்ரெஞ்சு தூதர் ‘ செவாலியர்’ விருதை அளித்தார்.

👉1997 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு கலைத்துறையில் இந்தியாவின் உயரிய விருதான ” தாதா சாகேப் பால்கே” விருதினை அளித்து கவுரவித்தது.

👉1997 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு ” தாதா சாப் பால்கே” விருது அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பல பாராட்டு விழா நடத்தப்பட்டது.

👉1998 ஆம் ஆண்டு இந்தியாவின் ஐம்பதாவது குடியரசு தினத்தன்று, குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று சிவாஜி கணேசன் குவைத் நாட்டுக்கு சென்றார். அங்கு குவைத் நாட்டு மன்னர் அல் சகாப் சிவாஜி கணேசனுக்கு விருந்தளித்து சிறப்பித்தார்.

👉ஒரு ஆண்டில் பத்து படங்களை நடித்து வெளியிட்ட ஒரே கதாநாயகன் சிவாஜி கணேசன் மட்டுமே.

👉1990ல் சிங்கப்பூர் ” India movie news” பத்திரிக்கை, சிவாஜி கணேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை அளித்து கவுரவித்தது.

👉 இலங்கை வானொலி நிலையம் சிவாஜி கணேசனுக்கு கலைக்குரிசில் எனும் பட்டத்தை அளித்து சிறப்பித்தது.

👉சிவாஜி கணேசன் மறைவையடுத்து, அமெரிக்காவின் Los angeles times பத்திரிக்கை, ” தென் இந்தியாவின் மார்லன் ப்ராண்டா” சிவாஜி கணேசன் மறைந்தார் என செய்தி வெளியிட்டது.(July 23,2001)

👉சிவாஜி கணேசன் மறைவுக்கு இலங்கை மற்றும் மலேசிய அரசுகள் இரங்கல் தெரிவித்தது.

👉மத்திய / மாநில அரசுகள் இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி, டாக்டர் பட்டம் முதலியவற்றை அளித்து சிறப்பித்தன.

👉இது தவிர நான்கு பிலிம் பேர் விருதுகள் , மூன்று தமிழக அரசு விருதுகள், ஆந்திர அரசின் NTR விருது முதலியவற்றை சிவாஜி கணேசன் பெற்றுள்ளார்.

தனது நடிப்பின் மூலம் இந்திய திரைத்துறையை உலக அரங்கில் நிமிர செய்தவர் சிவாஜி கணேசன். தேச பற்று காவியங்கள், புராண கதைகள், வரலாற்று கதாபாத்திரங்கள் என பல தமிழ் சான்றோர்களுக்கு உயிரூட்டி மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சிவாஜி கணேசன். இவரது திரையுலக சாதனைகள் தமிழர் என்ற முறையில் நாம் அனைவரும் பெருமை கொள்ள செய்கிறது. பல அரசியல் காரணங்களால் சிவாஜி கணேசனுக்கு தேசிய விருதுகள் நீண்ட நாளாக மறுக்கப்பட்டாலும், சர்வதேச விருதுகளைப் பெற்று, விசமிகளுக்கு பதிலடி கொடுத்தார்.திரைத்துறையில் அளப்பரிய சாதனைகளை படைத்த சிவாஜி கணேசனுக்கு ‘ பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்

Article by : www.sambattiyar.com

Total views 2,508 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *