இஸ்லாமிய மன்னரும் இந்து கடவுள் நாணயங்களும்

முகமது ஆதில் ஷா எனும்  மன்னர் ஆதில் ஷாகி அரச பரம்பரையை சேர்ந்த ஏழாவது மன்னராவார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் எனும் பகுதியை ஆட்சி செய்தார்.

இம்மன்னர் கிபி 1627 ஆம் ஆண்டு முதல் கிபி 1656 ஆம் ஆண்டு வரை பீஜப்பூரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சிகாலத்தில் பீஜப்பூர்  பல துறைகளில் வளர்ச்சிப் பெற்றது.

முகமது ஆதில் ஷா மிகுந்த தெய்வ பக்தி உடையவர் என்றும் மக்களின் எண்ணத்தை அறிந்து சீரிய முறையில் ஆட்சி செய்து வந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது.

இவர் தான் ஒர் இஸ்லாமிய மன்னராக இருந்த போதிலும் தனது நாட்டில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்களின் எண்ணங்களை மதித்து நடந்து வந்துள்ளார். இந்து மத கோயில்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார்.

ஆதில் ஷா நாணயங்களில் இந்து கடவுளர்கள்

சமத்துவமான ஆட்சியை அளித்து வந்த ஆதில் ஷா தான் வெளியிட்ட நாணயங்களில் இந்து மத கடவுள்களின் படத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

இவர் வெளியிட்ட காசுகளின் ஒரு பக்கத்தில் ஒன்பது புள்ளிகள் கொண்ட இலை வடிவம் பொறிக்கப்பட்டு அதற்கு மேலாக ஆதில் ஷா என பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது.

காசின் மற்றொரு பக்கத்தில் வலது பக்கம் நோக்கி நிற்கும் அனுமர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே போல் இவர் வெளியிட்ட மற்றொரு காசில் சிவன் மற்றும் பார்வதி அமர்ந்த நிலையில் உள்ள உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் வெளியிட்ட மற்றொரு காசில் நரசிம்மர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மன்னர்கள் தங்களது மதத்தின் மீது மிக உயர்ந்த பற்றை கொண்டிருந்தனர். ஆனாலும் தனது நாட்டு மக்களின் எண்ணங்களையும் மதிக்கும் வகையில் இந்து கடவுள்களின் உருவங்களை தனது நாட்டின் நாணயங்களில் அச்சடித்து வெளியிட்ட மன்னர் ஆதில் ஷாவின் சமயப் பொறுமையும் பெருந்தன்மையும் போற்றுதலுக்கு உரியதாகும். எம்மதமும் சம்மதம் என்பதை 350 ஆண்டுகளுக்கு முன்பே ஆதில் ஷா மக்களுக்கு உணர்த்தி விட்டு சென்றுள்ளார் என்றால் மிகையல்ல.

(நாணயங்கள் பற்றிய தகவல்: தமிழக காசுகள் : ஆறுமுக சீதாராமன்)

ARTICLE BY: WWW.SAMBATTIYAR.COM

Total views 1,731 , Views today 2 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *