தமிழர்களின் போர் ஆயுதம் ” வளரித்தடி”

👉 தமிழர்களின் போர் ஆயுதமான வளரித்தடி குறித்து ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைக்கின்றன.

👉 வளரித்தடி பற்றி குறிப்பிட்டுள்ள ஆங்கிலேயர்கள் இதனை ” Collery stick” என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது Colleries எனும் கள்ளர்களின் பெயராலேயே இந்த ஆயுதமும் Collery stick என அழைக்கப்படுவதாக கிபி 1886 ல் எழுதப்பட்ட  Glossary of colloquial words and phrases பக் 182ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

👉 பழமையான இந்த ஆயுதம் வீசப்பட்டால் எதிரிகளை தாக்கிவிட்டு மீண்டும் வீசியவரை சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.

👉   புதுக்கோட்டை சமஸ்தான அருங்காட்சியகத்தில் பழங்கால வளரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வளரிப் படை சோழர் காலத்தில் எரிபடை என அழைக்கப்பட்டதாக  திரு. ராஜா முகமது  புதுக்கோட்டை மாவட்ட வரலாறு எனும் நூலில் பக்கம் 193ல் குறிப்பிட்டுள்ளார்.

👉 கிபி 1150 ஆம் ஆண்டு ஆனையூர் கோயில் கல்வெட்டு (503/1962-63)

“இராசராச மண்டலத்து தென்கல்லக நாட்டு….உலகன் மண்டகத்து எரிய படைத்தலைவன் காடன் ஊரனுக்கு ” என 
தென்கல்ல நாட்டை சேர்ந்த எரிபடை தலைவன் குறிக்கப்படுகிறார்.  இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் எரிபடை என்பது வளரிப்படையாக இருக்கலாம்.

👉 தற்போது பிரிட்டீஷ் அருகாட்சியகத்தில் உள்ள ஒர் வளரித்தடி கிபி 1879ல் Burnbull என்பவரால் அளிக்கப்பட்டது.  அந்த வளரித்தடியில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Collery stick “From the Marava Country (between Trichinopoly and the Sea. ‘Collery’ is from ‘Kallar’, the name of the people there”
அதாவது ” இந்த வளரித்தடி திருச்சிக்கும் – கடல் பகுதிக்கும் இடையே உள்ள மறவர் நாட்டில் இருந்து பெறப்பட்டது என்றும் ,  கள்ளர்களின் பெயரால் இந்த ஆயுதம் ஆங்கிலத்தில் ” collery stick” ( கள்ளர் தடி) என அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

👉  வளரித்தடி குறித்து சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை வீரன் அம்மானை எனும் நூல் குறிப்பிடுகிறது. கிபி 1650 ஆம் ஆண்டளவில் திருமலை நாயக்கரின் ஆணையின் பெயரில் மதுரை தன்னரசு நாட்டுக் கள்ளர்கள் மீது மதுரை வீரன் தலைமையிலான படை தாக்குதல் நடத்தியது. இந்தப்போரில் தன்னரசு நாட்டுக் கள்ளர்கள் வளரித்தடியை பயன்படுத்தி தாக்கியதாக மதுரை வீரன் அம்மானை ஒலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

” தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் கொக்கரித்துச் சேனை கொடிபடை யத்தனையும் வளைதடியும் சக்கரமும் வகையுடனே எறிந்தார்கள்”  எனும் அம்மானை வரிகள் தன்னரசு கள்ளர்கள் போர்களத்தில் வளரியை பயன்படுத்தியுள்ளதை நமக்கு எடுத்துரைக்கிறது.

👉 வளரி வீசுதலில் வல்லவர்களாக விளங்கிய மருது பாண்டியர்களின் புகழை பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிவகங்கை சரித்திர கும்மி எனும் நூல் பின்வருமாறு புகழ்கிறது :-

     ”  மருதேந்திரன் கையில் எடுக்கும் இரும்பு வளரியினால்
        மன்னர் மன்னர் சிரமுருளும்”

         ” பெரிய மருது பிரிவிட் டிறிங்கி பிடித்த வளரியையே     
          விடவே மருக்கொழுந்தை கிள்ளினாற் போலே
           மல்லாரிராயர் தலை துள்ளவிழ”

      ” ஏனாதிக் கோயில் இருந்த பனைமரத்தை இரும்பு     
         வளரியினால் எறிந்தீர் கழுத்தறவே விரும்பி எறிய
         வீழ்கலையோ காய் பழமும்”

மருது பாண்டியர் எறியும் வளரியினால்  எதிரி மன்னர்களின் தலைகள் பறந்ததாகவும், கிபி 1780 ஆம் ஆண்டு நவாபுடன் நடைபெற்ற போரில் பெரிய மருது வீசிய வளரி மல்லாரி ராவ் எனும் தளபதியின் தலையை மரிக்கொழுந்தை போல் கிள்ளி எறிந்ததாகவும் புகழப்படுகிறது.

பெரிய மருது தனது பரிவாரங்களுடன்  நயினார் கோயில் தேரோட்டத்திற்கு செல்லும் போது, ஏனாதியில் சிலர் பனை மரத்தில் ஏறிய நுங்கை பறிக்க முயன்றனர்.  பெரிய மருது அவர்களை நிறுத்தி விட்டு, தனது வளரியை எறிந்து நுங்குகளை வீழ்த்தியுள்ளார்.

👉 மதுரை சித்திரைத் திருவிழாவின் போது ” கள்ளர் திருக்கோலம்” ஏற்கும் கள்ளழகர் கள்ளர்களைப் போலவே வளரியை கொண்டிருப்பது சிறப்பிற்குரிய நிகழ்வாக உள்ளது.

👉 கள்ளர் ஜாதி விளக்கம் எனும் நூல் ” மேலநாட்டு கள்ளருடைய சங்கதி” எனும் தலைப்பில் ” அப்பால் மாப்பிள்ளையுடைய உடன் பிறந்தவள் பெண் வீட்டுக்குப் போய் பரிசங் கொடுத்து, ஒரு சீலையுங் கொடுத்து குதிரை மயிர் காணணி பெண்ணுக்குத் தாலிகட்டி வளைதடி மாற்றிக் கொண்டு பெண்ணையும் கூட்டிக்கொண்டு உறவுமுறையாருடனே வருகிறது” என குறிப்பிடுகிறது.  மேல நாட்டு கள்ளர்களில் திருமணத்தின் போது வளரித்தடியை பரிமாரிக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை இந்நூல் விளக்குகிறது.

👉 கிபி 18 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அண்டக்குளம் பெரிய மண்ணவேளார் தலைமையில் வளரி மற்றும் வலையம் முதலிய ஆயுதங்களை கையாளும் தனிப்படை இருந்ததாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.

👉 கிபி 1886ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் விருந்தினராக வந்தபோது,   அவர் கண்டுகழிக்க புதுக்கோட்டை அரண்மனையில் ” வளரி வீசும் திருவிழா” நடைபெற்றுள்ளது.

👉 பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Ethinographic notes of southern india எனும் நூலில் வளரி குறித்து பின்வரும் தகவல் தரப்பட்டுள்ளன:-

பூமராங் எனும் வளரிகள் கள்ளர் மற்றும் மறவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள ஒரு வகை ஆயுதமாகும்.

சென்னை அருங்காட்சியகத்தில் தஞ்சை படைக் களத்தில் இருந்து பெறப்பட்ட மூன்று வளரிகள் உள்ளன.

புதுக்கோட்டை தொண்டைமான் படையில் மரத்தாலான வளரிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தென்னிந்திய மானுடவியல் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய கிபி 1906ல் Castes and tribes of southern india எனும் நூலில் பின்வரும் தகவல்களை தெரிவிக்கிறார்

👉  கள்ளர்கள் பொதுவாக ஈட்டி எறிவதிலும், வளரி எனப்படும் வளைதடியினை எறிவதிலும் திறமை மிக்க அஞ்சா நெஞ்சர்கள். இந்த போர்க்கருவி இச்சாதியினரிடையே பெருமளவில் பயன்பட்டு வந்துள்ளது. சுமார் 30 அங்குலம் உள்ள வளைவுடையதான ஒரு கருவி இதுவாகும்.

👉 கள்ளர்கள் வளரித் தடியினையும் , மேற்குக் கடற்கரைப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் வைத்திருப்பதைப் போன்ற கத்தியினையும் வைத்திருப்பர்.

👉 கள்ளர்களும் மறவர்களும் பெருமளவில் வளரித் தடியினை பயன்படுத்துகின்றனர்.சென்னை அருங்காட்சியகத்தில்  மூன்று வளைதடிகள் உள்ளன. இவற்றுள் இரண்டு வளரிகள் யானை தந்தந்தால் செய்யப்பட்டது. 

👉 புதுக்கோட்டை அரசரின் படைக்கலங்களுள் மரத்தாலான வளைதடிகள் எப்போதும் இருப்பில் இருக்கும்.

👉 பல்வேறு போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட வளரிகள் இன்று கள்ளர் மற்றும் மறவர் சாதியை சேர்ந்த போர்வீரர்களின் இல்லங்களில் செயலற்று உறங்குகிறது. சென்ற நூற்றாண்டில் கண்டோர் அஞ்சும்படி கள்ளர் மற்றும் மறவர்களால் பயன்படுத்தப்பட்ட வளரிகள் இன்று இவர்களின் பூசை அறையில் மற்ற போர்க் கருவிகளுடன் பழம்பெரும் சின்னமாக போற்றி பாதுகாக்கப் படுகிறது. ஆண்டு தோறும் ஆயுத பூஜை நாட்களில் வளரிகளை வெளியே எடுத்து சுரண்டி சுத்தப்படுத்தி மீண்டும் அதற்குரிய இடத்தில் சேர்த்து விடுகின்றனர்.

👉 கள்ளர்களில் திருமணம் முடிந்தபின் மணமக்கள் மணமகன் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரு வீட்டாரும் தங்களுக்கிடையே வளரி தடியினை மாற்றிக் கொள்ளும் சடங்கு சிறப்புக்குரியதாக நடத்தப்படும். கள்ளர்களில்  ” வளரிதடியினை அனுப்பி மருமகளை அழைத்து வா” என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது.

👉  சிவகங்கையில் இருந்து கைப்பற்றப்பட்ட மறவர்களின் படைக்கருவிகள் சில சேகரிப்பில் உள்ளன. இவை ஆஸ்திரேலிய பழங்குடிகள் பயன்படுத்தும் பூமராங்கை ஒத்த வளைதடியாகும்

👉 காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் கைவேல், குறுந்தடி,  குண்டாந்தடி, வளரி ஆகியன ஏந்தி வேட்டை நாய்களோடு தெற்கு நோக்கி வந்து மேலூரில் குடியேறி பிறகு தன்னரசு நாடுகளை உருவாக்கினர்.

பழங்காலம் முதலே போர்க்களங்களில் எதிரிகளின் தலைகளை கொய்த வளரித்தடிகள் இன்று முக்குலத்தோர் போர்குடி வம்சாவளிகளின் வீடுகளில் நிரந்தர ஒய்வில் உள்ளன. தமிழர்களின் வீரத்திற்கும் பேராண்மைக்கும் சான்றாக விளங்கும் வளரித்தடிகள் இன்றும் புதுக்கோட்டை,  சிவகங்கை மற்றும் ராமநாதபுர சமஸ்தான அருங்காட்சியகங்களில் பொது மக்களுக்கு  காணக்கிடைக்கிறது.

ஆதார நூல்கள் castes and tribes of southern india 1906 by Edgor thurston vol 1,3,5)

Article by : www. Sambattiyar.com

Total views 2,102 , Views today 3 

Author: admin

1 thought on “தமிழர்களின் போர் ஆயுதம் ” வளரித்தடி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *