சோழ ராசா மரபில் உதித்த ” தொண்டைமான்கள்”

புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளை கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 20 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி தொண்டைமான்கள் தாங்கள் வெளியிட்ட வரலாற்று ஆவணங்களில் சோழ வேந்தர்கள் குறித்தும், சோழர்களுடனான தங்களது தொடர்புகளையும் குறிப்பிட்டுள்ளனர். பிற்கால சோழ வேந்தர்களின்  அரசியலில் மிக முக்கிய பங்காற்றிய பல்லவராயர்கள் மற்றும் தொண்டைமான்கள் சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு தஞ்சை மற்றும் புதுக்கோட்டை வட்டாரங்களில் குடியமர்ந்தனர். இவர்களில் புதுக்கோட்டை தொண்டைமான்கள் மற்றும் புதுக்கோட்டை- அறந்தாங்கி தொண்டைமான்களின் வரலாற்று ஆவணங்கள் நமக்கு பல அரிய தகவல்களை தருகின்றன.

சோழர் வழிவந்த தொண்டைமான்கள்

சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் தொண்டைமான் மன்னர்களின் தோற்றம் குறித்து விளக்குகிறார்.

“நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தே நாகலோகத்தே சென்று நாக கன்னியைப் புணர்ந்த காலத்து, அவள், யான் பெற்ற புதல்வனை என்செய்வேன் என்ற பொழுது தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வர விடத் திரைதருதலின் திரைய னென்று பெயர் பெற்ற கதை கூறினார்”என ஓர் வரலாறும் குறித்துள்ளார்.

சோழ மன்னருக்கும் நாக இளவரசியான பீலிவளைக்கும் பிறந்தவனே திரையன் என்று அழைக்கப்பட்ட இளந்திரையன் தொண்டைமான். இவரது காஞ்சிபுரத்தை தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்தார். இவரது வழிவந்தவர்களே பிற்கால தொண்டைமான்கள். தொண்டைமான் மன்னர்கள் அனைவரும் சோழர் குடியினரே.  பிற்கால தொண்டைமான் சாசனங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

புதுக்கோட்டை தொண்டைமான்கள்

புதுக்கோட்டையை கிபி பதினேழாம் நூற்றாண்டு முதல் கிபி 1948 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த புதுக்கோட்டை தொண்டைமான்களின் முன்னோர் திருப்பதியில் இருந்து குடியேறிய கள்ளர் மரபினராவர்.  இவர்களில் தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவர் வெங்கடாசல பல்லவராயர் எனும் தளபதியுடன் புதுக்கோட்டையில் அம்புக்கோயில் எனும் பகுதியில் குடியமர்ந்தார் என வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள்- தமிழக அரசு வெளியீடு


சோழ வேந்தர்கள் தங்களை காசியபர் வழிவந்தர்கள் என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.  கலிங்கத்துப்பரணியில்  காசியபரில் இருந்து சூரியன் உருவாகியதாகவும் அதனால் சோழர்கள் தங்களை சூரிய குலத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.( கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி நூல் பக் 58)

சோழர்களைப் போல புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் தங்களை காசியபர் வழிவந்தவர்கள் என்று செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.  ( கீரனூர் செப்பேடு,  கிபி 1732)

சோழ மன்னர்கள் தங்களை சோழ இந்திரர்கள் என பல ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.  இரண்டாம் ராசராச சோழன் சோழேந்திர சிங்கன் என ஒட்டக்கூத்தரால் போற்றப்பட்டுள்ளார். ( சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஒவியங்களும்/ பக் 162/ குடவாயில் பாலசுப்ரமணியன்)

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் தங்களை இந்திர குலத்தவர் என்றும் இந்திரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  கிபி 1732 ஆம் ஆண்டை சேர்ந்த கீரனூர் செப்பேட்டில் ” காசியபர் கோத்திரம் இந்திர வம்சம் ” என தொண்டைமான் மன்னர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சோழர்களின் சின்னமாக புலிக்கொடி புகழ்பெற்று விளங்கியது. சோழர்களின் வழிவந்த தொண்டைமான்களும் புலிக்கொடிக்கு ஆதீத முக்கியத்துவம் அளித்துள்ளனர். கிபி பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த புதுக்கோட்டை தொண்டைமான் பற்றிய குன்றக்குடி குமரன் நொண்டி சிந்து எனும் நூலில் ”  வென்ற கீர்த்தியுள்ளோன் நெடியோன் புலிக்கொடியுமுள்ளோன் ” என விசயரகுநாதராய தொண்டைமான்  என புகழப்பட்டுள்ளார். புதுக்கோட்டை தொண்டைமான்கள் தங்களது சோழர் வழி தொடர்பை குறிக்க புலிக்கொடியையும் பயன்படுத்தியுள்ளதை இங்கு அறிய முடிகிறது.

அறந்தாங்கி தொண்டைமான்கள்

கிபி 15 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 18 ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையில் அறந்தாங்கி வட்ட பகுதிகளை ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள் என குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் தங்களது செப்பேடுகளில் தங்களை சோழ மன்னர்களின் வாரிசாகவே குறிப்பிட்டுள்ளனர்.  அறந்தாங்கி தொண்டைமான்கள் வழியினர் கள்ளர் மரபினர் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறந்தாங்கி தொண்டைமான்கள்( பக் 4)  எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்கள் தங்களது செப்பேடுகளில் தங்களை சோழ மன்னர்களின் வம்சத்தினர் என நேரடியாகவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அருணாச்சல வணங்காமுடி தொண்டைமானாரின்  ஏம்பல்வயல் செப்பேட்டில் ( கிபி 1726)

சோழகுலாதிபன்”
“சூரிய குலத்திலுதித்த தொண்டைமான் பெருமான்”
” புலிக்கொடி யுடையோன்”

என சோழர்களுடனான தொடர்புகள் குறிப்பிடப்படுகின்றன.

விஜய அருணாச்சல வணங்காமுடி தொண்டைமானின்  பண்ணைவயல் செப்பேட்டில்(கிபி 1759)

“புலிக்கொடி மேருவில் பொறித்தருள் புகழோன்”
” நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்”
” சூரிய குலத்தில் தோன்றிய சுமுகன்”
” புறாவினுக்காக தலைபுகு பிரபலன்”

என தங்களை சோழ மன்னர்களின் மரபினர் என்று தெளிவுபட குறிப்பிட்டுள்ளனர்.

சோழ வேந்தர்கள் தங்களை காசியபர் வழிவந்தர்கள் என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.  கலிங்கத்துப்பரணியில்  காசியபரில் இருந்து சூரியன் உருவாகியதாகவும் அதனால் சோழர்கள் தங்களை சூரிய குலத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.( கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி நூல் பக் 58)

சோழர்களைப் போல அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களும் தங்களை காசியபர் வழிவந்தவர்கள் என்று செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.  ( ஏம்பல்வயல் செப்பேடு,  கிபி 1726)

அறந்தாங்கி தொண்டைமான்களின் செப்பேடுகளை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தார் பின்வரும் கருத்தினை தெரிவித்துள்ளார்

” நாகப்பட்டினத்து சோழனுக்கும் நாகநாட்டு இளவரசிக்கும் பிறந்த சோழ வம்சத்தவன் தொண்டைமான் இளந்திரையன்.  இவனது வழிவந்தவர்களான அறந்தாங்கி தொண்டைமான் வம்சத்தவர்கள் இன்றும் பட்டுகோட்டை பகுதியில் வசிக்கின்றனர்”  என குறிப்பிட்டுள்ளார்.( சதாசிவ பண்டாரத்தார் கட்டுரைகள் பக் 63)

மேற்கூறிய சான்றுகள் மூலம் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளை ஆட்சி செய்து வந்த தொண்டைமான் மன்னர்களே சோழர்களின் கிளை மரபினர் என உறுதிப்படுகிறது. மேலும் சங்க காலத்தில் தொடங்கிய தொண்டைமான் இளந்திரையனின் மரபு இரண்டாயிரம் ஆண்டுகளை தாண்டி புதுக்கோட்டையில் முடிவடைந்ததை ஆவணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சோழர் வழிவந்த தொண்டைமான் மன்னர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

Article by: www.sambattiyar.com

Total views 2,211 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *