தஞ்சை வளநாடாம் காவிரி டெல்டாவில் மராத்தியர்கள் காலத்தில் கிபி 1750 காலகட்டத்தில் 13 பாளையங்கள் பிரிக்கப்பட்டு பாளையப்பட்டு முறை ஏற்படுத்தப்பட்டது.
கிபி 1830ல் எழுதப்பட்ட மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் பாளையங்கள் உருவானது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி ” தஞ்சை மன்னர் பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை சீமையில் கள்ளர்களின் கிளிர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை நிறுத்தி வைத்திருந்தார். பட்டுக்கோட்டை சீமையை தாண்டி தஞ்சை சமஸ்தான எல்லை பரந்து இருந்ததால், கள்ளர்களை அழைத்து அவர்களோடு சுமூகமாக செல்ல பாளையங்களை ஏற்படுத்தினார். பாளையங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் பதினெட்டாம் நூற்றாண்டு ஆகும். அப்பகுதியில் இருந்த கள்ளர்கள் கத்தி வேலை( வாள் வீச்சு) அறிந்த வீரர்களாக இருந்துள்ளனர். இதன்மூலம் தஞ்சையில் இருந்த 13 பாளையங்களும் ஆதியில் கள்ளர் பாளையங்கள் என அறியலாம். (தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் Vol 1 page 159)

தஞ்சையில் உருவான 13 பாளையங்களில் மிகப் பெரிய நிலப்பரப்பை கொண்டு விளங்கியது கந்தர்வகோட்டை பாளையம் ஆகும்.
கிபி 1798 ஆம் ஆண்டை சேர்ந்த மோடி ஆவண குறிப்பில், கண்டர்கோட்டை பாளையக்காரர் அச்சுதப் பண்டாரத்தார் காலத்தில் தஞ்சை மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இரண்டு மூன்று உள்ளது. அனைத்தும் ஒரே தகவலை கொண்டுள்ளது. முற்காலத்தில் கோனூர் நாடு கண்டர்கோட்டை பாளையப்பட்டில் சேர்ந்திருந்ததாகவும், பிற்காலத்தில் அது தஞ்சையுடன் இணைந்ததாகவும், கோனூர் நாடு, சந்தை மற்றும் ஆயம் உள்பட அனைத்தையும் முன்பிருந்தவாறே கண்டர்கோட்டை பாளையத்துடன் இணைத்திடவும் அதற்கு உரிய உடன்படிக்கைக்கு தயார் எனவும் கண்டர்க்கோட்டை பாளைய தலைவர் அச்சுதப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். பட்டுக்கோட்டை சுபா கள்ளப்பற்றை சேர்ந்த கண்டர்கோட்டை பாளையம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்றைய கந்தர்வகோட்டை ஜமீன் மராத்தியர் காலத்தில் கண்டர் கோட்டை என அழைக்கப்பட்டதையும், இந்த ஜமீன் கள்ளர்பற்று ( கள்ளர் ஆளும் பகுதி) என குறிப்பிடப்பட்டு இருந்ததையும் அறிகிறோம்.
கிபி 1883 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Manual of tanjore in madras presidency எனும் நூலில் தஞ்சை வளநாட்டில் இருந்த பதிமூன்று ஜமீன்கள் குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளது. இதன்படி கந்தர்வகோட்டை ஜமீன் வசம் 53 கிராமங்கள் இருந்ததாகவும் இதன் மொத்த பரப்பு 54000 ஏக்கர் என்றும் கூறப்பட்டுள்ளது.

1906 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Tanjore gazetter எனும் நூலில் பக் 206 ல் தஞ்சை டெல்டாவில் உள்ள மிகப்பெரிய ஜமீன் கந்தர்வகோட்டை என்றும், இதன் உரிமையாளர் ஒரு கள்ளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழ வேந்தர்களின் பூமியான தஞ்சையின் மிகப்பெரிய ஜமீனாக கந்தர்வகோட்டை விளங்கியதை ஆவணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ” அருந்ததி” திரைப்படத்தில் கந்தர்வகோட்டை சமஸ்தானம் எனும் பெயர் பயன்படுத்தப்பட்டு இருந்ததே இதன் பெருமையை உணர்த்துகிறது.
தொகுப்பு: www.sambattiyar.com
Total views 1,558 , Views today 1