ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டாகும். சங்க இலக்கியங்கள் பல ஏறு தழுவுதலின் பெருமையை உணர்த்துகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் ஒர் அங்கமாக ஏறுதழுவுதல் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

சங்க இலக்கியமான கலித்தொகையில் முல்லை நில மக்கள் ஏறுதழுவுதல் விளையாட்டில் ஈடுபட்டதை பல பாடல்கள் மூலம் வர்ணிக்கின்றன. இதில் குறிப்பிடப்பட்ட ஒரு நிகழ்வு சென்ற நூற்றாண்டு வரை தமிழர்களால் பின்பற்றப்பட்டதை ஆங்கிலேயர் கால வரலாற்றுக் குறிப்புகள் உறுதி செய்கின்றன.
சங்க காலத்தில் ஆண்மகனை தேர்ந்தெடுக்க முல்லை நில மகளிர் ஜல்லிக்கட்டினையே ஒர் வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளனர். ஏறுதழுவுதலில் ஈடுபட்டு குறிப்பிட்ட காளையை அடக்கி வெற்றி பெறுபவனையே முல்லை நில மகளிர் விரும்பி மணந்துள்ளனர்.
காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள் எனும் கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கலித்தொகையில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(கலித்தொகை- 103 : 63-64)
கலித்தொகையை மெய்ப்பிக்கும் பிரிட்டீசாரின் குறிப்புகள்

கிபி 1906 ஆம் ஆண்டு எட்கர் தர்ஸ்டன் எனும் ஆங்கிலேயர் தென்னிந்திய குடிகளை பற்றி ஆய்வு செய்து Castes and tribes of southern india எனும் தலைப்பில் 7 பாகங்களாக நூல்களை எழுதியுள்ளார். இதில் மூன்றாம் பாகத்தில் பக்கம் 100 ல் தமிழ் போர்குடி முக்குலத்தோர் கள்ளர் மரபினரை பற்றிய ஆய்வு குறிப்புகளை கூறியுள்ளார்.
அதன்படி “ பொங்கல் அன்று கற்றாழை நார் கயிற்றிலும் துணியிலும் காசுகள் கட்டப்பட்டு காளைகளின் கொம்புகளில் முடியப்படும். மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களை சார்ந்த கள்ளர் வாழும் ஊர்களில், கன்னியர் எத்தகைய தீங்கும் ஏற்படாதவாறு காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டுள்ள துணியை அவிழ்த்து தங்களிடம் கொண்டுவந்து தரும் வீரமிக்க ஆண்களையே மணப்பர்.பரபரப்பான இசை முழகத்திலும், தாரை தப்பட்டை ஒலியிலும் கள்ள இளைஞன் ஒரு காளையை காட்டி அதனை அடக்கி அதன் கொம்பில் உள்ள பணமுடிப்பை கொண்டு வரப்போவதாக கூறுவான். சில நேரங்களில் இந்த முயற்சி ஆபத்திலும் முடிவதுண்டு. ஒரு காளையினை துரத்தி அடக்கும்போது காயம் ஏற்படுவதை கள்ளர்கள் தங்களின் வீரத்திற்கு இழுக்காக எண்ணுவர்”.
சங்க கால முதல் சமீபத்திய காலம் வரை தமிழர்களின் வாழ்வில் ஒர் அங்கமாக ஜல்லிக்கட்டு திகழ்ந்துள்ளதை நாம் அறிகிறோம். சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட கருத்துகள் கற்பனையானவை என சிலர் எழுதி வரும் வேளையில் சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட ஒர் நிகழ்வு அண்மை காலமான பிரிட்டீசார் காலத்திலும் பின்பற்றப்பட்டு இருப்பது சங்க இலக்கியங்களின் நம்பகத்தன்மையையும், தமிழர்களின் வீரத்தையும் உணர்த்துவதாக அமைகிறது.
தொகுப்பு: www.sambattiyar.com
Total views 113 , Views today 1