பல்லவ வேந்தர்கள் காஞ்சியை தலைமையாகக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில் மிகச் சிறப்புடன் ஆட்சி புரிந்து வந்தனர். பல்லவ வேந்தர்கள் தங்களை தொண்டையர் என்றும் காடவர் என்றும் பல்வேறு புனைப் பெயர்களில் குறிப்பிட்டு வந்துள்ளனர். பிற்கால பல்லவ வேந்தர்கள் சிவபெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களில் இருவர் காடவர் குலத்தினர் என்பதே இதற்கு சான்றாகும்.
முடி துறந்து துறவு பூண்ட ஐயடிகள் காடவர்கோன்
கிபி எட்டாம் நூற்றாண்டு கால கட்டத்தை சேர்ந்த பல்லவ வேந்தன் முதலாம் பரமேஸ்வரன் பரந்துபட்ட நிலப்பகுதியை ஆட்சி செய்து வந்தார். இவர் ஐயடிகள் காடவர்கோன் என்றும் அழைக்கப்பட்டார்.
” வையம் நிகழ் பல்லவர்தம்
குலமரபின் வழிதோன்றி“
உலகில் புகழ் பெற்ற பழமையான பல்லவர் குலத்தை சேர்ந்தவர் என ஐயடிகள் காடவர்கோன் போற்றப்படுகிறார்.
” சடையவர் சைவத் திருநெறியால் அரசளிப்பார்“
இவர் சிவபெருமானை முதற் கடவுளாகக் கொண்டு சைவத் திருநெறியில் செங்கோல் செலுத்தி வந்தததை பெரிய புராண பாடல்கள் குறிப்பிடிகின்றன.
” தாரணிமேல் சைவமுடன் அருமறையின்
துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்“
ஐயடிகள் காடவர்கோன் பிற நாடுகளை கைப்பற்றி சைவமுடன் வேதநெறியும் இனிது விளங்குமாறு அரசாட்சி புரிந்து வந்துள்ளார்.
” மன்னவரும் பணிசெய்ய
வடநூல் தென்தமிழ் முதலாம்
பன்னுகலைப் பணிசெய்யப்
பார் அளிப்பார் அரசாட்சி
இன்னல் என இகழ்ந்து அதனை
எழில் குமரன் மேல் இழிச்சி“
வடநூல் புலமையும் தமிழ் முதலிய பல சாத்திர நூல்களின் புலமையும் பெற்று விளங்கிய ஐயடிகள் காடவர்கோன் தனது மகனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு சைவ நெறித்தொண்டினை மேற்கொள்ள தொடங்கினார்.
“கடன் ஏற்ற பணிசெய்த
வண் தமிழின் மொழிவெண்பா
ஒர்ஒன்றா வழுத்துவார்“
சைவத் திருத்தொண்டினை மேற்கொண்ட ஐயடிகள் காடவர்கோன் பல சிவ தலங்களுக்கு சென்று வண்மை விளங்கும் தமிழில் பல வெண்பாப் பாடல்களை ஒவ்வொன்றாக அருளிச் செய்தார்.
“திருச்சிற்றம் பலத்து ஆடல்
புரிந்தருளும் செய்யசடை
நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பினுடன் செந்தமிழின்
வெண்பாமென் மலர் புனைந்தார்“
ஐயடிகள் காடவர்கோன் சிதம்பர நடராசரை தரிசித்து அவரது திருக்கூத்தினை கண்டு உருகி செந்தமிழில் வெண்பாக்களை பாடி வாழ்த்தினார்.
” மன்னு சிவ லோகத்து வழியன்பர்
மருங் கணைந்தார் கன்னிமதில்
சூழ் காஞ்சிக் காடவர் ஐ அடிகளார்“
ஐயடிகள் காடவர்கோன் பல்வேறு சிவதலங்களுக்கும் சென்று சிவ பெருமானின் புகழ்களை பாடினார். அழியாத மதில்களைக் கொண்ட காஞ்சி நகரில் சிவனடியார்களுக்கு பல தொண்டுகளை செய்து வந்த காடவர்கோன் இறுதியில் உலக வாழ்வை நீத்து சிவலோக பதவி அடைந்தார்.
சிவத் தொண்டினை மேற்கொள்ள தன் முடியையும் துறந்த பல்லவ வேந்தன் ஐயடிகள் காடவர் கோன் அறுபத்து மூவரில் ஒருவராக இன்றும் மக்களால் வணங்கப்படுகிறார்.
துணைவியின் மூக்கை அரிந்த காடவன் கழற்சிங்க நாயனார்
கிபி எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவன் இராசசிம்மன் கழற்சிங்கன் என குறிப்பிடப்படுகிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவரும் ஒருவராக திகழ்கிறார்.
“படிமிசை நிகழ்ந்த தொல்லைப்
பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற
கோக் கழற் சிங்கர் என்பர்”
உலகில் புகழ்க் கொண்ட தொன்மையான பல்லவர் குலத்தில் உதித்த கழற்சிங்கன் கொடியும் படையும் உடைய மன்னராக சிவபெருமானின் மேல் பேரன்பு கொண்டவராக திகழ்ந்தார்.
“காடவர் குரிசி லாராம்
கழற்பெருஞ் சிங்க னார் தம்
ஆடக மேரு வில்லார்”
காடவர் குலத்தில் உதித்த கழற்சிங்கன் சிவபெருமான் திருவருளால் படை நடத்தி சென்று வடபுல மன்னர்களை வென்றுள்ளார். அறநெறியின்படி தனது பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.
“சிவபுரி என்ன மன்னும்
தென்திரு வாரூர் எய்திப்
பவம் அறுத்து ஆட்கொள்
வார்தம் கோயிலில் பணியப் புக்கார்”
சிவதொண்டுகள் புரிவதையே தன் வாழ்நாள் பெருமையாக எண்ணிய கழற்சிங்கன் சிவபுரி என அழைக்கப்பட்ட திருவாரூர் தியாகேசப் பெருமான் திருக்கோயிலில் வழிபடச் சென்றார்.
“தொடுக்கும்மண் டபத்தின் பாங்கர்
மேயது ஒர் புதுப்பூ அங்கு
விழுந்தது எடுத்து மோந்தாள்”
காடவன் கழற்சிங்கனின் மனைவியார் கோயிலை வலம் வரும்பொழுது பூத்தொடுக்கும் மண்டபத்தின் பக்கம் ஒரு புதுப்பூ விழ அதனை எடுத்து நுகர்ந்தாள்.
” கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருஒப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்”
அரசியார் பூவினை நுகர்வதைக் கண்ட செருத்துணையார் எனும் சிவ தொண்டர், இவள் சிவபெருமானுக்கு சாத்துதற்குரிய புதுமலரை எடுத்து நுகர்ந்தாள் என எண்ணி அவளது மூக்கை வெட்டி விட்டார்.
“பயில் பெருந்தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையோடும் துணித்தார் அன்றே”
பூ தொடுக்கும் மண்டபத்தின் அருகே வந்த காடவன் தன் மனைவியின் மூக்கு வெட்டப் பட்டதன் காரணத்தை செருத்துணையாரிடம் கேட்டு அறிந்தார். இறைவனுக்கு படைக்க வைக்கப் பட்டுருத்த மலர்களை எடுத்து நுகர்ந்த ராணியின் கைகளையும் வெட்ட வேண்டும் என்று கூறி தனது துணைவியின் வளையல் அணிந்த கையை மன்னர் துண்டித்தார்.
இந்த சமயத்தில் சிவபெருமானின் திருத்தொண்டர்கள் எழுப்பிய “அர” நாம ஒலி விண்ணை முட்டியது. விண்ணில் இருந்து தேவர்கள் மலர்களை பொழிந்தனர். காடவன் கழற்சிங்கனின் பக்தியை எண்ணி மெச்சிய சிவபெருமான் அவனை தன் பாத மலர்களில் பள்ளி கொள்ளும் பெரும் பேரினையும் அளித்தார் என கழற்சிங்க நாயனார் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மாபெரும் பேரரசன் கடவுள் மீது கொண்ட பக்தியினால் தன் மனைவியின் கையையும் துண்டிக்கத் துணிந்தார். இறைவனின் ஆசியால் இன்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக காடவர் கழற்சிங்கன் போற்றப்படுகிறார்.
காடவர் வழியினரான காடவராயர்கள்
கிபி 1202 ஆம் ஆண்டை சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்து புதுக்கோட்டை திருவப்பூர் சிவன் கோயில் கல்வெட்டில் ” தென்கவிர் நாட்டை சேர்ந்த நாட்டார்கள் அரசரின் ஆணைப்படி இராஜராஜேஸ்வரம் நாயனாருக்கு கவிநாட்டின் சார்பாக நிலதானம் கொடுத்துள்ளதை உரைக்கிறது. ( IPS no 155)

இந்த தானம் வழங்கப்பட்டதன் சார்பாக கையெழுத்து இட்ட நாட்டார்களில் “ கங்கை கொண்ட சோழ காடவரையன்” என்பவரும் ஒருவராவார்.
கிபி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கல்வெட்டில் ” திருக்கோகர்ணம் சிவன் கோயிலுக்கு தென்கவிர் நாட்டை சேர்ந்தவர்கள் நில தானம் அளித்துள்ளனர். இதற்கு சாட்சியாக சோழக் காடவதரையன் என்பவர் கையொப்பம் இட்டுள்ளார். (IPS no 691)

கிபி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலூர் கல்வெட்டில், “கள்ளப்பால் கற்குறிச்சி கவிநாட்டு படைப்பற்று ” என கள்ளர்களின் ஆளுமையில் இருந்த கவிநாடு குறிப்பிடப்பட்டுள்ளது. ( IPS no 683)


இதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ” கங்கை கொண்ட சோழ காடவரையர்” கள்ளர் மரபினர் என்பது தெளிவாகும்.
தென் கவிர் நாடானது தற்போது கவிநாடு என்று கள்ளர்களின் நாட்டமைப்பாக உள்ளது. புதுக்கோட்டையில் காடவராயர்கள் கள்ளர் மரபின் ஒரு பிரிவினராக வாழ்ந்து வருவதாக புதுக்கோட்டை மேனுவல் vol 2 part 1 பக்கம் 732 ல் தரப்பட்டுள்ளது.

1883ல் வெளியிடப்பட்ட Manual of tanjore in madras presidency எனும் நூலில் காடவராயர்கள் கள்ளர் மரபினராக தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

காடவராயர்களின் பெயரில் தற்போது அமைந்துள்ள ஊர்கள்
காடவராயர் குளம் :- தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் மாரியம்மன் கோயில் ஊராட்சியில் அமைந்துள்ள காடவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.
காடவராயன்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், புனல்குளம் ஊராட்சியில் காடவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
இவை தவிர நெடுவாக்கோட்டை, தென்னமநாடு, சேதுராயன்குடிகாடு, சோழபுரம், மருங்குளம், ஈச்சங்கோட்டை, ஏழுப்பட்டி, நடுவூர், நாயக்கர்ப்பட்டி, ஏனாதி, அம்மாப்பேட்டை, வத்தனாக்கோட்டை ( தென்மலை நாட்டு அம்பலக்காரர்கள்) முதலிய பல ஊர்களில் கள்ளர் குல காடவராயர்கள் வாழ்ந்து வருகின்றனர்.




Total views 2,364 , Views today 1
super