” வன்னியர்” பட்டம் கொண்ட பாண்டியர் கால கள்ளர் வில்லிகள்

வில் வீரர்கள் எனும் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் கல்வெட்டுகளில் வில்லிகள் என குறிப்பிடப்படுகின்றனர். முதலாம் ராஜேந்திர சோழர் கால கல்வெட்டு ஒன்றில் இவர்கள் ” வலங்கை வேளைக்காரப் படைகளில் பண்டித சோழ தெரிந்த வில்லிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளனர்.  தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டு அகராதியில்,  வில்லிகள் என்பதற்கு வில் வீரர்கள் என விளக்கம் அளித்துள்ளனர்.  வில்லிகள் எனும் விற்படையில் முக்குலத்தோர் கள்ளர் மற்றும் மறவர்கள் பெருமளவில் இருந்ததை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன.  இத்தகைய வில் விரர்கள் படையில் இருந்த கள்ளர் வீரர்கள் வன்னியர்கள் எனும் பண்பு பெயரில் குறிப்பிடப் பட்டுள்ளனர்.  வீரர்கள் எனும் பொருள் படும் வன்னியர் எனும் சொல் கன்னடர் , தெலுங்கர், ஆரியர் மற்றும் கள்ளர் வில்லிகளை குறிப்பிட்டுள்ளதை கல்வெட்டு உணர்த்துகிறது.

சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கள்ளவில்லிகள்

பிற்கால பாண்டியர் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றவராக திகழ்பவர் பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரப்பாண்டியன். ” எம்மண்டலமுங் கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர் “எல்லாந் தலையான பெருமாள் ” என பல புகழ் மொழிகளை கொண்ட  வேந்தர் பாண்டியர் அரசினை ஒரு பேரரசாக மாற்றினார். இவ்வேந்தரது ஆட்சி காலத்தில் பாண்டிய அரசின் ஆதிக்கம் சோழ நாட்டைக் கடந்து  கொங்கு நாடு, ஆந்திரம், சேர நாடு என தென்னகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. இவரது ஆட்சி காலம் முழுவதையும் போர்க்களங்களில் கழித்த சடையவர்மன் சுந்தரப்பாண்டியன் சேரர், சோழர், போசளர், கன்னட நாட்டு சோமன், சிங்களர், கோப்பெருஞ்சிங்கன், வாணர்கள், தெலுங்கு பல்லவர்கள் முதலானவர்களை வெற்றிக் கொண்டு வாகை சூடினான்.

இத்தகைய பெருமைகளைப் பெற்ற சடையவர்மன் சுந்தரப்பாண்டிய தேவரின் பெரும்படை பற்றி கூறும் கல்வெட்டு கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் கிடைத்துள்ளது.  சோபன மண்டபத்தின் தலை வாசலுக்கு வடக்கே உள்ள இக்கல்வெட்டு சடையவர்மன் சுந்தர பாண்டியனின் ஆறாவது ஆட்சி காலத்தை சேர்ந்தது.

1256 ஆம் ஆண்டை சேர்ந்த இக்கல்வெட்டு கரூரில் இருந்த பாண்டிய மன்னரின் பெரும்படை சார்பாக இக்கோயிலுக்கு  அளிக்கப்பட்ட கொடை பற்றி கூறுகிறது.

கார்த்திகை மாதம், இருபத்தி ஏழாம் நாள் கூடிய பெரும்படையினர்,  பின்வரும் முடிவுகளை எடுத்து அறிவித்துள்ளனர்:-

” கோயிலின் உயர்ந்த கோபுரத்திற்கும் திருமதிலுக்கும் திருப்பணி செய்ய தேவையான செல்வத்தை அளிக்க பெரும்படையை சேர்ந்த வன்னிய(  போர் வீரர்) வட்டத்தினர் உறுதி ஏற்கின்றனர். அதன்படி பெரும்படை வன்னிய(படை வீரர்) வட்டத்தை சேர்ந்த கன்னடியர், தெலுங்கர், ஆரியர் மற்றும் கள்ளர் வில்லிகள் ஆகிய நான்கு இனத்தவரும் ஆண்டு தோறும் பொன் ஒன்றுக்கு ஒரு பணம் வீதம் திருப்பணிக்காக கொடுக்க பெரும்படை முடிவு செய்யப்பட்டது.
இதற்கு கட்டுப்படாதவர்கள் பெரும்படைக்கு புறம்பானவர்கள் என்றும் பாவத்திற்கு உரியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

இப்படிக்கு “பெரும்படை தொண்டைமான் எழுத்து”  இப்படிக்கு “பெரும்படை களப்பாளன் எழுத்து” என பெரும்படை சார்பாக கள்ளர் இன தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இங்கு குறிப்பிடப்படும் பெரும்படை தொண்டைமான் மற்றும் பெரும்படை களப்பாளன் ஆகியோர் கள்ளர் வில்லிகள் எனும் விற்படையை சார்ந்தவர்கள் என்பது தெளிவு.  ஏனெனில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட நான்கு இனத்தவர்களில் கள்ளர் வில்லிகள் மட்டுமே தொண்டைமான், களப்பாளர் போன்ற பட்டங்களை இன்றளவும் சுமந்து வாழ்கின்றனர். வன்னிய வட்டம் என தெலுங்கர், ஆரியர், கன்னடியர் மற்றும் கள்ளர் வில்லிகளும் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அக்காலத்தில் வன்னியர் என்பது படைவீரர்களை குறிக்கும் பொதுவான பெயராக இருந்துள்ளதை அறிகிறோம்.

இக்காலத்திலும் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் பெருமளவில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். 1883ல் எழுதப்பட்ட Manual of tanjore in madras presidency எனும் நூலில் தஞ்சையில் கள்ளர்களே வன்னியர் என பட்டம் கொண்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு : www.sambattiyar.com

Total views 2,553 , Views today 2 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *