பாண்டியனை காக்க போரிட்ட கள்ளர் மறவர் வீரர்கள்

சோழ மன்னன் இராசாதிராசன் கிபி 1163ல்  பட்டம் பெற்ற நான்கு ஐந்து ஆண்டுகளில், பாண்டிய நாட்டில் அரச மரபினர் இருவர்க்குள் பூசல் உண்டானது. ஒருவன் பராக்கிரம பாண்டியன் என்பவன்; மற்றவன் குலசேகர பாண்டியன் என்பவன். பராக்கிரம பாண்டியன் அப்பொழுது இலங்கையை ஆண்டு வந்த பராக்கிரம பாகு (கி.பி.1153-1186) என்பவனைத் துணை வேண்டினான். உடனே இலங்கைப் படைவீரர் இலங்காபுரன் என்பவன் தலைமையிற் சென்றனர். அவன் பாண்டிய நாட்டை அடைவதற்குள், குலசேகரன் பராக்கிரமனை ஒரு நகரத்தில் அகப்படுத்தி, அதனை முற்றுகை இட்டான்; அப்பொழுது நடந்த போரில் பராக்கிரமன் கொல்லப்பட்டான். அவன் மகனான வீரபாண்டியன் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தான். குலசேகரன் பாண்டிய மன்னன் ஆனான்.

இதனை உணர்ந்த இலங்காபுரன் கிபி 1170 ஆம் ஆண்டளவில் குலசேகரனை வென்று பாண்டிய நாட்டை இறந்தவன் உறவினர்க்கு உரிமையாக்கத் துணிந்து, நாட்டினுள் நுழைந்தான். லங்காபுரன் தென் தமிழகத்தில் மேற்கொண்ட படையெடுப்பு நிகழ்வுகளை இலங்கை நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது.  பாலி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல்  தென் தமிழ்நாட்டில் நடந்த போர் நிகழ்வுகளை தத்ரூபமாக விவரிக்கிறது. அவற்றைக் காண்போம்….

தமிழகத்தில் நுழைத்த லங்காபுரன் ராமேஸ்வரத்தை கைப்பற்றினான். பிறகு முன்டிக்கரை எனும் பகுதியை ஆட்சி செய்த கண்டதேவ மழவராயர் என்பவனை வீழ்த்தினான். பிறகு கீழமங்கலம் மற்றும் மேல மங்கலம் முதலிய பகுதிகளை கைப்பற்றினான்.

லங்காபுரன் இதன்பிறகு ஆலத்தூர் நாடாள்வார்,  காலிங்கராயர், கலிகாலராயர் முதலியோருடன் சண்டையிட்டான். இந்த சண்டையில் பல தமிழர்கள் மற்றும் கலிகாலராயர் முதலியோரை கொன்று மானாமதுரையை  கைப்பற்றினான்.

மூவரையர்,  கரும்புலத்துராயர், கண்கொண்டராயர் முதலிய பல தளபதிகளை வீழ்த்தி பல கிராமங்களை தீக்கிரையாக்கியது சிங்களப் படை. இதனால் குலசேகர பாண்டியன் சிங்களரை எதிர்த்து மண்ணையராயர், பரிதிக் குந்திராயர், தென்னவ பல்லவராயர், காலிங்கராயர், ஆளவந்த பெருமாள் முதலியோர் தலைமையில்  வலுவான படை ஒன்றை தயார் செய்து மீண்டும் தாக்குதலுக்கு அனுப்பினார். 

ஆனால் வலுவான சிங்களப்படை பாண்டிய தளபதிகள் தங்கியிருந்த கோட்டையின் மீது வலுவான தாக்குதலை நடத்தியது.  இரு தரப்புக்கும் நடந்த கடும் போரில்  தென்னவ பல்லவராயர் கொல்லப்பட்டார். மேலும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீயிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அஞ்சுக்கோட்டை நாடாள்வார், வழுதிராயர், சீலமேகராயர் முதலனோர் சிங்களப்படையை எதிர்த்து கடும்போரிட்டனர். அனைவரையும் வென்ற சிங்களப்படை அடுத்து செம்பொன்மாரி நோக்கி சென்றது.

ஏழு கிளை கள்ளர்கள் வாழும் நாடுகளில் ஒன்றான செம்பொன்மாரி நாட்டை மாளவ சக்கரவர்த்தி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். லங்காபுரன் மாளவ சக்கரவர்த்தியிடம் சரணடையும்படி தூது அனுப்பினான்.  ஆனால் செம்பொன்மாரி நாட்டை சேர்ந்த மாளவ சக்கரவர்த்தி  பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனுக்கு ஆதரவாக போரிட தயாரானார்.

செம்பொன்மாரி கோட்டையை பெரும்படைக் கொண்டு தாக்கியது சிங்களப்படை. பெருமளவிலான யானைப்படையைக் கொண்டு கோட்டை சுவர்கள் தகர்க்கப்பட்டது. குலசேகர பாண்டியனின் தமிழர் படை தாக்குதலுக்கு தயாரானது.

கள்ளர்கள் மற்றும் மறவர்கள் அடங்கிய 60,000 பேர் கொண்ட பாண்டியனின் சேனை சிங்களப்படை மீது பாய்ந்தது. இலங்கை தளபதிகளான சோர இலங்ககிரி, இலங்கபுரன் மற்றும் கேசதூது முதலியோர் கோட்டை சிங்கமென வந்த பாண்டியர்களின் கள்ளர் மறவர் படையை தாக்கியது.  ஆயினும் உள்நாட்டு கலகங்களால் வலுவிழந்து இருந்த பாண்டியர் படை பின்னடைவை சந்தித்தது.

செம்பொன்மாரியில் குருதி ஆறு ஒடியது.  போரில் பல தமிழர்களும்  சிங்களர்களும் கொல்லப்பட்டனர்.  கள்ளர்கள்,  மறவர்கள், தாழையூர் நாடாள்வார், காங்கேயர் முதலியோர் பெரும் சேதத்தை சந்தித்தனர்.  பாண்டிய நாட்டைக் காக்க ஆயிரக்கணக்கான கள்ளர்களும் மறவர்களும் உயிர் துறந்தனர். குலசேகர பாண்டியனை அரியணையில் இருந்து நீக்கிய ஈழ அரசன் வீரப்பாண்டியனை மீண்டும் அரியணையில் ஏற்றினான்.

இறுதியாக சோழ மன்னன் இராசாதிராசன் தஞ்சையில் இருந்து சோழ தளபதி திருச்சிற்றம்பலம் உடையானான பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவனை அனுப்பி சிங்களருடன் போரிட்டு வென்று மீண்டும் குலசேகர பாண்டியனை அரியணையில் அமர்த்தினார்.

பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்த சிங்களர்களே முக்குலத்தோர் போர் வீரர்களான கள்ளர் மற்றும் மறவர்களின் வீரத்தை தங்களது நாட்டு வரலாற்று நூலில் பதிவு செய்திருப்பது வேறு எந்த தமிழ் குடிகளுக்கும் கிடைத்திறாத பெருமை ஆகும்.  பாண்டிய நாட்டைக் காக்க போர்க்களத்தில் உயிர் துறந்த முகம் தெரியாத முக்குலத்தோர் வீரர்களுக்கு நமது மானசீக அஞ்சலியை செலுத்திக் கொள்வோம்.

ஆதாரம்(  இலங்கை வரலாற்று நூல்: The mahavansa part 2 : 1909 பக் 241)



Total views 2,136 , Views today 6 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *