தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றான சிதம்பரம் நடராசர் கோயில் சோழர்களின் மிக முக்கிய விருப்ப தலங்களுள் ஒன்றாக இருந்தது. சோழ மன்னர்கள் அனைவரும் தில்லை நடராசரின் மேல் பேரன்பு கொண்டு வழிபட்டு வந்தனர். சோழர்கள் முடிசூட்டும் நான்கு பதி எனும் கோயில்களில் தில்லை பெருங்கோயிலும் ஒன்றாகும்.
இத்தகைய பழமையான கோயில் அமைந்துள்ள சிதம்பரத்தின் பாடி காவல் உரிமை பற்றிய தகவல்களை சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள் தருகின்றது.
பாடிகாவல் என்பது ஊர்க்காவலையும், ஊர்காவலுக்காக பெறுகின்ற வரியையும் குறிக்கும்.முதல் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் காலத்திலிருந்து தான் பாடிகாவல், கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஒரு சிலர் தமக்கு வர வேண்டிய பாடிகாவல் வருமானத்தை கோவிலுக்கு கொடையாக அளித்துள்ளனர். சிறிய நிலையான பாடிகாவல், சோழர் காலத்தில் பெரிய நிலைக்கு உயர்கிறது. இன்றைக்கு எப்படி காவல் நிலையங்கள் உள்ளதோ அது போல அன்றைய காலகட்டத்தில் பாடிகாவல் முறை இருந்துள்ளது.

சிதம்பரம் நடராசர் கோயில் முதல் பிரகாரத்தில் வடக்கு சுவரில் கிடைத்த சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த சேர்ந்த கிபி 1262 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு பின்வரும் தகவலை தருகிறது.
” திருமுனைப்பாடி நாட்டை சேர்ந்த சூரியதேவன் கொங்கரையர் என்பவர் தில்லையில் கடவாச்சேரி எனும் தில்லை நாயகநல்லூரில் கோயிலுக்கான நந்தவனத்தை ஏற்படுத்தி அதற்கு சில சில நிலங்களையும் அளித்துள்ளார். நந்தவனத்திற்கு அளிக்கப்படும் இந்த நிலத்திற்கான கடமை குடிமை, பணிக்கொத்து, கள்ளபிடி முதலிய வரிகள் நீக்கப்படுகிறது.
இங்கு கள்ளபிடி எனும் வரியும் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கள்ளப்பிடி என்பது பாடிக்காவல் புரியும் கள்ளர்களுக்கு அளிக்க வேண்டிய வரிப்பணம் ஆகும். இதே கோயிலில் கிடைத்த மற்றொரு கல்வெட்டு இந்த தகவலை உறுதி செய்கிறது.
தில்லை நடராசர் கோயில் முதல் பிரகாரம் தெற்கு சுவரில் கிடைத்த சடைவர்மன் சுந்தபாண்டியன் காலத்து கிபி 1266 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு பின்வரும் தகவலை தருகிறது.

” சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சிதம்பரத்தில் விக்கிரம பாண்டிய சதுர்வேதி மங்கலம் எனும் பிராமணர் குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் நடுவே விக்கிரம பாண்டிய உடைய நாயனார் எனும் கோயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிராமணர்களை அங்கு குடியேற்றி அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான நிலம் சிதம்பரத்தில் உள்ள புளியங்குடி எனும் ஊரில் அமைந்திருந்த நிலப்பகுதிகள் வரி நீக்கி தரப்பட்டுள்ளது.
” இன்னிலத்தால் வரும் கடமை குடிமை புறவுடல் பொன்வரி பெரும் பாடிகாவல் அளவுவற்கம் கள்ளர் பிடிவிட்டு ” எனும் கல்வெட்டு வரிகள் மூலம் இப்பகுதியில் பாடிகாவல் உரிமை கள்ளர்கள் வசம் இருந்ததையும், நிலம் கைமாறி பிராமணர்களுக்கு அளிக்கப்படும் போது பாடிகாவல் புரிந்த கள்ளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வரி நீக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
சிதம்பரத்தின் பாடிகாவல் உரிமையானது ஆதிகாலம் தொட்டே கள்ளர்கள் வசம் இருந்துள்ளதை 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரு கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன.
தொகுப்பு: www.sambattiyar.com
Total views 1,803 , Views today 1