கள்ளர் நாடுகள் என்பது கள்ளர்களால் ஆளப்படும் கள்ளர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். கள்ளர்கள் தொன்றுதொட்டு நாடு அமைத்து வாழும் பழக்கம் கொண்டவர்கள். மூவேந்தர் ஆட்சி வலுவிழந்த பின் கள்ளர் நாடுகள் பெரும்பாலும் தாங்கள் வாழும் பகுதிகளை யாருக்கும் கட்டுப்படாமல் தாங்களே ஆட்சி செய்ய தொடங்கினர். பாண்டியர் ஆட்சி வீழ்ந்தபின் தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்றிய விஜயநகர அரசர்களுக்கு கட்டுப்படாமல் கள்ளர்கள் கலகங்கள் செய்துள்ளனர். இவற்றை குறித்த தகவல்கள் பாளையப்பட்டுகளின் வம்சாவளி எனும் நூலில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்படும் சம்பவங்கள் அனைத்தும் நடைபெற்ற காலம் விஜயநகர ஆட்சி தமிழகத்தில் பரவியிருந்த நேரமாகும்.
தென்காசி பாண்டியர் காலத்தில் தன்னரசு கள்ளநாடு- மேல்னாடு ( கிபி 1430)-

நடுவுக்குறிச்சி பாளைய வம்சாவளி கைபீது ஒலைச்சுவடி ( D.3886) குறிப்புகளில் மேலனாட்டு கள்ளர் பற்றிய தகவல்கள் :- ” மருதப்ப தேவரும் கீளுவை குண்டையங் கோட்டையில் யிருக்குறபோது மேல்னாடு திறச்சூளிகை பழனிமடஞ்சீர்மை கள்ளர் குண்டையங்கோட்டை னாட்டுக்கு வந்து ,சவ்விறியஞ் செய்தார்கள், யெங்கள் முன்னோர், குத்தால தேவரும், மருதப்ப தேவரும் மேல்னாட்டு கள்ளரை அதம்பண்ணி ” ” இது செய்தி கேட்டு அப்போதிருந்த பாண்டியராசா இருவரையும் அழைத்து, உம்முடைய சிறுத செனம் சேதமாய் போனபடியாலே, நீங்களிலிருவரும் திருச்சுளிகை பழனி மட சீர்மையை பாளையபட்டாக பகுத்து கொள்ள உத்திரவாயி ” : கிபி 1430 களில் மேல்நாட்டு திருச்சுளிகை தன்னரசு கள்ளர் குண்டையங்கோட்டையில் புகுந்து கலகங்கள் செய்ததாகவும் , அச்சமயம் குத்தால தேவரும் மருதப்ப தேவரும் பாண்டிய மன்னர் ஆணைக்கு ஏற்ப கள்ளர்களுடன் போரிட்டு கள்ளர் கலகத்தை ஒடுக்கியதால், திருச்சுழிகை, பழனிமடம் பகுதியை இருவருக்கும் அளித்து ஆண்டுக்கொள்ள அனுமதித்ததாகவும் நடுவுக்குறிச்சி பாளைய வம்சாவளி குறிப்பு கூறுகிறது. கள்ளர்கள் தன்னரசாக அப்பகுதிகளை பாண்டியரின் மேலாண்மையை ஏற்காமல் ஆட்சி செய்து வந்துள்ளனர்.
தன்னரசு கொடகைநாட்டு கள்ளர்( கிபி 1430) –

நடுவுக்குறிச்சி பாளைய வம்சாவளி கைபீது ஒலைச்சுவடி ( D.3886) குறிப்புகளில் கொடகை நாட்டு கள்ளர் பற்றிய தகவல்கள் :- ” கொடகைனாட்டு கள்ளர்கள் ஒன்றுக்கொண்டு சவரியங்கள் செய்து சுந்தரபாண்டிய புரத்திலும் வந்து சவரியஞ்செய்தார்கள்” ” பிறதாபமருதப்ப தேவரையும் பாண்டிய ராசா அழைத்து கொடகை நாட்டு கள்ளரை ஒடுக்குனீர்கள் என்று ” : பாண்டியர் காலத்தில் சுந்தரபாண்டியபுரத்தில் கள்ளர் படை வந்து தொந்தரவு செய்ததாகவும் , அச்சமயம் மருதப்பதேவர் கள்ளர்களுடன் போரிட்டு ஒடுக்கியதாகவும் , இதனால் மகிழ்வுற்ற பாண்டிய மன்னர் மருதப்ப தேவருக்கு வெகுமதியும் பாளையத்திற்கு சில இடங்களையும் அளித்துள்ளார். பிற்கால பாண்டியர் ஆட்சியில் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே கள்ளர்கள் தன்னரசாக ஆள தொடங்கி,பாண்டியர் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
தென்காசி பாண்டியர் காலத்தில் தன்னரசு கள்ளர் வீரசிங்கநாடு ( கிபி 1450)-

-நடுவுக்குறிச்சி பாளைய வம்சாவளி கைபீது ஒலைச்சுவடி ( D.3886) குறிப்புகளில் வீரசிங்க நாட்டு கள்ளர் பற்றிய தகவல்கள் :- ” சுந்தரராசபுரம் விட்டு புறப்பட்டு ஸ்ரீவல்லபராய குத்தாலத்தேவரும் கிருஷ்ணராய மருதப்ப தேவரும் தெட்சணம் சீமைக்கி வருகிறபோது வீரசிங்கநாட்டு கள்ளர் மறித்தார்கள், அதில் அனேக சேதம் வந்து, கள்ளரையும் அதம்பண்ணிபோட்டு” “தென்காசியிலிருந்து வீரசிங்கனாட்டை ஒடுக்கின, சமாசாரங்கேட்டு காசி கண்டப்ப பராக்கரம பாண்டிய ராசா, குத்தால தேவரை அழைத்து, பாண்டிய ராசா உத்தரவின் பேரில் கல்லக்கேட்டுகள்ளர் சவரியஞ் செய்கிற அவர்களை ஒடுக்கினான்” ” தனது ஜெனங்கள் அனேகம் சேதப்பட்டு கள்ளர்களை ஒடுக்கி ” ” அனேக மரியாதை செய்து கள்ளநாட்டில் நடுவக்குறிச்சியும்” : மருதப்ப தேவரும், குத்தாலத்தேவரும் பயணம் செய்யும் போது, வீரசிங்கனாட்டு கள்ளர்கள் அவர்களை தாக்கியதாகவும், பிறகு கள்ளர்களை யிவர்கள் அடக்கியதாகவும், இது கேட்டு தென்காசி பாண்டிய மன்னர் காசி கண்டப்ப விக்கிரம ராசா குத்தால தேவரை அழைத்து மற்ற பகுதி கள்ளரையும் அடக்க கேட்டுக்கொண்டதாகவும், அதற்கேற்ப கள்ளர்களுடன் போரிட்ட குத்தாலத்தேவருக்கு மரியாதையும் சன்மானங்களும் பாண்டிய மன்னர் அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சீமையில் தன்னரசு கள்ளர்கள்(கிபி 1435) –

பல்லியப்ப நாயக்கனூர் ஜமீன் வம்சாவளி ஒலைச்சுவடி (D. 3844) குறிப்புகளில் ” திண்டுக்கல் சீர்மையை சேர்ந்த அல்லினகரம், வெல்ம்பட்டி,நத்தம்பட்டி,கூத்தம்பாரை,வக்காப்பட்டி, உசிலம்பட்டி உட்பட பட்டிகளும் அதற்கு சேர்ந்த பூமியும் விட்டு பரிபாலனஞ் செய்து கொண்டிருக்கச் சொல்லி உத்தரவு செய்தார்கள், அப்போது இந்த சீமையில் வேடரையும் கள்ளரையும் வதம் செய்து ” : இரண்டாம் கிருஷ்ண தேவராயர் உத்தரவுப்படி கிபி 1435 ல் திண்டுக்கல் சீமை நோக்கி வந்த வல்லாள மாக்கி நாயக்கன் அப்பகுதியில் இருந்த கள்ளர்களுடன் போரிட்டு அடக்கியதாக கூறப்பட்டுள்ளது. பாண்டியர் அரசு தன்னரசை இழந்த அக்கால கட்டத்தில் கள்ளர்கள் தன்னரசுடன் திகழ்ந்ததால் புதிதாக குடியேறிய வடுகர்கள் அவர்களோடு போரிட வேண்டியதாயிற்று.
தென்காசி உக்கிர பாண்டியன் கால தன்னரசு கள்ளர் நாடு( கிபி 1460)-

நடுவுக்குறிச்சி பாளைய வம்சாவளி கைபீது ஒலைச்சுவடி ( D.3886) குறிப்புகளில் நெச்சூற் குறுமரை நாட்டு கள்ளர் பற்றிய தகவல்கள் ” கிருஷ்ணராய மருதப்ப தேவரை உக்கிறபாண்டியராசா வரவழைத்து நெச்சூற் குறுமரைநாட்டு கள்ளரை ஒடுக்க சொல்லி ” : தென்காசி பாண்டிய மன்னர் உக்கிரப்பாண்டியர் மருதப்ப தேவரை அழைத்து குறுமரை நாட்டு கள்ளரை அடக்க சொல்லி, அந்த பகுதியையும் மருதப்ப தேவருக்கு அளித்தார் .
அழகப்பெருமாள் பாண்டியன் காலத்தில் மதுரை தன்னரசு கள்ளநாடு( கிபி 1470-1506) –

அழகாபுரி ஜமீன்தார் பாளைய வம்சாவளி ஒலைச்சுவடியில்(D.2849) மதுரை கள்ள நாடு பற்றிய குறிப்பு:- ” அப்பால் அழகப் பெருமாள் ராசாவுடனே, மதுரைக்கி போயிருந்ததில் கள்ள நாட்டு சல்லியத்தில் இவர் முகனித்து அந்த கள்ள நாட்டுக்கெல்லாம் தலைவன் காளாக்களநாயன் மேலாளக்கன் என்று பேருடைய கள்ளனுடே வெகு சாகசம் பண்ணி அந்த கள்ளனை இவர் பிடித்து ராசாவிடம்” : அழகாபுரி ஜமீன் முன்னோர் இரட்டைக்குடை வன்னியனார், தென்காசி அழகப்பெருமாள் பாண்டியருடன் மதுரை செல்லும்போது, அங்குள்ள மதுரை கள்ளர் நாட்டு மக்கள் மதுரையில் படை கொண்டு வந்து கலகங்கள் செய்ததால், இரட்டைகுடை வன்னியனார், கள்ளர் நாட்டு மக்களிடம் போரிட்டு, கள்ளர் தலைவன் காளாக்களநாயன் என்பவரை அடக்கியதாக குறிப்பிடப்படுகிறது. மதுரை கள்ளர் நாடுகள் 15 ஆம் நூற்றாண்டு முதலே, தன்னரசு நாடாக விளங்கி வருவதை இந்த செய்தி விளக்குகிறது.
கள்ளர் பூமியான திண்டுக்கல் வத்தலக்குண்டு ( கிபி 1520) –

தொண்டைங்கோட்டை ஜமீன் வம்சாவளி ஒலைச்சுவடி(D.3842) குறிப்புகளில் ” 2 ஆவது பட்டம் பெத்தழு நாயக்கர் சிறுது காடுவெட்டி பூமியுண்டாக்கினார்கள், பெத்தழு நாயக்கர் சிறுபிள்ளையானதிலே யிவிடம் கள்ளர் பூமியானதினாலே இவருக்கு வசவிற்தி வாறாமல் படிக்கி இருக்கிற தருணத்தில், இந்தப் பாண்டிய தேசத்திற்கு அதிபதி சந்திர சேகர பாண்டியன்” : தொண்டயங்கோட்டை ஜமீனின் முன்னோர் கிபி 1500 கால கட்டத்தில் திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியில் விஜய நகர அரசர் ராயர் அளித்த நிலப்பகுதியில் குடியேறி பாளையத்தை அமைக்க முயன்றபோது இப்பகுதி பாண்டிய நாட்டை சந்திர சேகர பாண்டியன் என்பவர் விஜய நகர பேரரசுக்கு கட்டுப்பட்டு ஆட்சியை நடத்தியதாகவும், அச்சமயத்தில் இவ்விடம் கள்ளர் பூமியாக இருந்ததால் பெத்தழு நாயக்கரால் கள்ளர்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலவில்லை எனவும் வம்சாவளி குறிப்பு கூறுகிறது. சந்திர சேகர பாண்டியன் காலத்தில் 15 ஆம் நூற்றாண்டு இறுதியிலேயே, கள்ளர்கள் விசய நகர அரசின் மேலாண்மையை ஏற்காமல் தன்னராக நாடு அமைத்து வாழ்ந்தனர் . பாண்டியர் ஆட்சி வலுவிழந்து விசயநகர அரசர் மேலாண்மையை ஏற்று ஆள தொடங்கிய பின் பாண்டிய பேரரசின் கள்ளர் படைபற்றுகள் தன்னரசாக தங்களை பகுதிகளை ஆளத்தொடங்கினர். பிற்காலத்தில் வெள்ளையர் ஆட்சியை நிருவும் வரை தன்னரசாக தொடர்ந்து பல போர்களில் உயிர் தியாகம் செய்து அந்நிய ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடினர்.
நாயக்கரை எதிர்த்த விசங்கி நாட்டு கள்ளர்கள்
கிபி 1529 ல் மதுரையின் அரசராக பொறுப்பேற்ற விசவநாத நாயக்கரை எதிர்த்து விசங்கி நாட்டு கள்ளர்கள் கலகங்கள் செய்துள்ளனர். இதையடுத்து படை ஒன்றை அனுப்பி விசங்கி நாட்டு கள்ளர்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தி உள்ளனர். இதுபற்றி பழமையான ஒலைச்சுவடிகள் பின்வருமாறு விவரிக்கின்றன.

” காவேரி தீரமுழுதும் கிராமங்கள் கட்டி அக்கரகாரங்கள் கோயிலும் கட்டி வைத்து வீசங்கிநாட்டு கள்ளரையும் பாளையக்காரரையும் அடக்கி வச்சி சீமையை பிரபலப்படுத்தி” என ஒலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சையில் இருந்த விசங்கி நாட்டு கள்ளர்களும் மற்ற தலைவர்களும் விசுவ நாத நாயக்கனின் மேலாண்மையை ஏற்காமல் சண்டையிட்டு வந்ததை இவ்வரிகள் நமக்கு உரைக்கின்றன.( Oriental historical manuscripts – Taylor – vol -02- பக் 16)
இங்கனம் மூவேந்தர்களின் சுதந்திர ஆட்சி மறைந்தபின் அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து கள்ளர் பழங்குடிகள் தொடர்ந்து போரிட்டு வந்துள்ளதை வரலாற்று ஆவணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
தொகுப்பு -www.sambattiyar.com
Total views 1,973 , Views today 1