கிபி பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தஞ்சையில் மராத்தியர்களின் ஆட்சி உதித்தது. கிபி 1684ல் தஞ்சை தஞ்சையில் பட்டுக்கோட்டை கள்ளர் சீமை மீது படையெடுத்து திருபுவனம் வரை அறந்தாங்கி உள்ளிட்ட கள்ளர் சீமையை மராத்தியர் கைப்பற்றியதாக பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தஞ்சையில் பட்டுக்கோட்டை சீமையில் கள்ளர்கள் வரி கொடுக்க மறுத்து கலகங்கள் செய்ததாகவும் கள்ளர்களை அடக்க பட்டுக்கோட்டையில் படை ஒன்றை நிரந்தரமாக நிறுத்தியும் பலன் அளிக்கவில்லை என தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதன் பிறகு தஞ்சையில் பட்டுக்கோட்டை சீமையில் இருந்த கள்ளர் அரையர்களுக்கு பதிமூன்று பாளையங்களை ஏற்படுத்தி கொடுத்ததாகவும், அப்பகுதி கள்ளர்கள் அனைவரும் ” கத்தி வேலை”( போர் தொழில்- வாள் வீச்சு) அறிந்தவர்கள் என்றும் இதே மராத்திய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வகையில் தஞ்சையில் இருந்த பதிமூன்று ஜமீன்தார்களும் கள்ளர் மரபினர் என மராத்திய மோடி ஆவணம் குறிப்பிடுகிறது. தஞ்சையில் இருந்த வளமான விவசாய நிலங்கள் கள்ளர்களின் வசமே இருந்துள்ளதை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக சிங்கவனம் ஜமீன்தார்களான மெய்க்கண் கோபாலர்கள் வசம் 32 கிராமங்கள் இருந்ததாக பதினெட்டாம் நூற்றாண்டு செப்பேடு குறிப்பிடுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு மோடி ஆவணம் தஞ்சை சமஸ்தானம் வாங்கிய கடன் பற்றிய தகவலை தருகிறது. அதாவது அரண்மனைக்கு கடன் கொடுத்தவர்களாக கோதண்டராமய்யங்கார், ஆனந்தய்யா, கோபால ராவ், சின்னையாமுதலி, பச்சையாமுதலி, முத்துமுதலி, வெங்கடாசலமுதலி, ரங்கசாமி நாயக், ரகுமத்கான், மேஸ்தர் கேபர் டானர் முதலோனோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் வாங்கிய கடனுக்கு கொடுக்க வேண்டிய தொகை சீர்காழி கள்ளர்பற்று மகசூல் ஐவேஜி ” என மோடி ஆவணம் குறிப்பிடுகிறது.(தஞ்சை மராட்டிய மன்னர் வாழ்க்கையும் வரலாறும்)

தஞ்சை சமஸ்தானம் வாங்கிய கடனை அடைப்பதற்கு சீர்காழியில் இருந்த கள்ளர்களின் விவசாய நிலங்களின் மகசூல் மூலம் வரும் தொகையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டதை இது குறிப்பிடுகிறது.
இதன் மூலம் கள்ளர்கள் வசம் பெருமளவான விவசாய நிலங்கள் இருந்ததையும் , அதன் மூலம் அரசுக்கு பெருமளவிலான வருமானம் வந்ததையும், அந்த வருமானம் சமஸ்தானத்தின் கடனை அடைக்கும் அளவுக்கு இருந்ததையும் ஆவணங்கள் உணர்த்துகின்றன.

கிபி 20 ஆம் நூற்றாண்டில் உக்கடை தேவர், பூண்டி வாண்டையார், சாவடி நாயக்கர் முதலானோர் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களை கொண்டு இருந்ததையும், குறிப்பாக பூண்டி அப்பாசாமி வாண்டையார் வசம் மட்டும் 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் இருந்ததையும் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
Total views 1,508 , Views today 1