கிபி பதினேழாம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான்கள் தமிழ் நாடு மீது படையெடுத்தனர். செஞ்சியை கைப்பற்றிய பின் பீஜப்பூர் சுல்தான் மீரமருதிகான் 40,000 பேர் கொண்ட படையை சேர்கான் லூர்தி, இப்ராகிம்கான் லூர்தி மற்றும் சிக்கந்தர்கான் லூர்தி முதலியோர் தலைமையில் தென் தமிழகம் நோக்கி படையெடுத்து வந்தனர்.
முதலில் தஞ்சாவூர் சமஸ்தானத்தை தாக்கியது முஸ்லீம் படை.
தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர் சுல்தான்களிடம் சரணடைந்து உடன்படிக்கை செய்துக்கொண்டனர்.
பிறகு முஸ்லீம் படை திருச்சியை தாக்கியது. திருச்சி மன்னர் விஜயரங்கப்ப நாயக்கரும் சுல்தான்களிடம் சரணடைந்தார். சுல்தான் படை மதுரை நோக்கி படையெடுத்து தாக்குதலுக்கு முகாமிட்டனர். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் போருக்கு தயாரானார்.
திருமலை நாயக்கர் படை உதவிக்காக அவ்விடத்திய ராஜாக்கள், ராமநாதபுர மன்னர், சிவகங்கை பகுதியை சேர்ந்த ஒரு ஆட்சியாளர் மற்றும் பாளையக்காரர்களின் உதவியை நாடினார்.
இவர்கள் தவிர தன்னரசு நாடு, மேல நாடு, கீழ நாடு , வெள்ளூர் நாடு மற்றும் நாலுக்கோட்டை நாட்டு கள்ளர்களின் உதவியையும் நாடினார். இந்த கள்ளர்கள் மதுரை அரசிற்கு காவற்காரர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக 50,000 கள்ளர் வீரர்கள் இரவு நேரத்தில் சுல்தான்களின் முகாம்களில் புகுந்து போர் தளவாடங்கள் மற்றும் கருவிகளை அழித்தனர். கள்ளர்களின் திடீர் தாக்குதலில் சுல்தான் படைகள் நிலைக் குலைந்தது.
இதை தொடர்ந்து திருமலை நாயக்கரும் அவரது நேசப் படைகளும் சுல்தான்களை தாக்கினர். மற்றொரு புறமிருந்து கள்ளர்களின் தாக்குதல் தொடர்ந்தது. இந்த தாக்குதலில் சேர்கான் லூர்தி மற்றும் சிக்கந்தர்கான் லூர்தி முதலிய பீஜப்பூர் தளபதிகள் கொல்லப்பட்டனர். துலுக்கர் படை செஞ்சியை நோக்கி தோல்வியுடன் திரும்பியது.
இது பற்றி குறிப்பிடும் கர்நாடக ராஜாக்கள் சரித்திரம் எனும் ஒலைச்சுவடி பின்வருமாறு கூறுகிறது:-
“அந்தக் கள்ளர் மதுரை அரசுற்குக் காவக்காரர் என்று பெயர். அவர்கள் அம்பதாயிரம் சேர்ந்து ராத்திரி காலத்தில் துலுக்கர் தண்டிற்குள்ளே புகுந்து கூடாரங்களை அழித்தும், குதிரைகளை பிடித்துக் கொண்டும் கண்டிலே அகப்பட்டகையும் எடுத்துக் கொண்டு போகத்தலைப்பட்டார்கள். அப்படியிருக்க மதுரை ராஜாவும் தம்முடைய சேனை கூட வெளியே வந்த குமக்கு ராஜாக்களும் கள்ளர் ஒரு பக்கமும், துலுக்கர் பேரில் விழுந்து சண்டை கொடுக்க, துலுக்கரும் எதித்துச் சண்டை கொடுக்க, துலுக்கர் கண்டு பின்வாங்க, கள்ளர் துலுக்கர் கண்டைக் கொள்ளையிட்டார்கள். அதுலே கொஞ்சும் தப்பினவாள் துலுக்கர் ஓடி, செஞ்சி வந்து சேர்ந்தார்கள், ஷேர்க்கான் லூதி, சிக்கந்தர்கான் லூர்தி வகையரா சர்தார்கள் சண்டையில் சென்று(செத்து) போனார்கள், மதுரை சண்டை கள்ளர் அங்காமாவும் ஈகஷா பீஜாப்பூர் பாதுஷாவிற்கு கமருதின் கான் எழுதி அனுப்பினார்”
மதுரைக்கு சுல்தான்களால் வந்த பேராபத்து தன்னரசு நாட்டுக் கள்ளர்கள் மற்றும் மறவர் குலத்து மன்னர்களாலும் தவிர்க்கப்பட்டது. மதுரையின் காவலர்களாக பண்டைய காலம் முதல் அண்மைக் காலம் வரை தேவர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு இச்சம்பவம் ஒர் சான்றாகும்.
( ஆதாரம்: கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம் பக் 33)
Total views 1,492 , Views today 2