கிபி 1642ல் விஜய நகர பேரரசர் இரண்டாம் வேங்கடர் மரணமடைந்தார். இவருக்கு பின் மூன்றாம் ஸ்ரீரங்கன் விஜய நகர அரசின் மன்னராக பதவியேற்றார்.இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்த நாயக்க அரசுகள் விஜய நகர அரசின் மேலாண்மையை மறுத்து ஆட்சி செய்து வந்தனர். தங்களது மேலாண்மையை ஏற்க மறுத்த நாயக்கர் அரசுகளையும், பாளையங்களையும் அடக்க திட்டமிட்டார் மூன்றாம் ஸ்ரீரங்கன்.
தெற்கை நோக்கி மிகப்பெரிய படை ஒன்றினை அனுப்பினார் ஸ்ரீரங்கன். மூன்றாம் ஸ்ரீரங்கனை எதிர்க்க திட்டமிட்ட செஞ்சி, தஞ்சை மற்றும் மதுரை நாயக்க அரசுகள் திருமலை நாயக்கர் தலைமையில் தங்களுக்குள் ஒர் கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.
விஜய நகர படைகள் நாயக்கர் தலைநகரங்களில் ஒன்றான திருச்சியை முதலில் தாக்கினர். திருச்சியை தாக்கிய விஜய நகர படைகளுக்கு எதிராக தஞ்சை, மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர் படைகள் போரிட்டன.
இந்த சமயத்தில் ஏற்கனவே பகையாளியாக இருந்த திருமலை நாயக்கரை பழிதீர்க்க எண்ணிய தஞ்சை நாயக்கர் விஜய நகர படைகளுடன் கூட்டு சேர்ந்து மதுரையை தாக்க முடிவெடுத்தார். இதை அறிந்த திருமலை நாயக்கர், கோல்கொண்டா சுல்தான்களுக்கு ஒரு தூது அனுப்பினார். அதன்படி விஜயநகர அரசின் தலை நகரங்களில் ஒன்றான வேலூரை கோல்கொண்டா சுல்தான்களின் படைகள் தாக்கினால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மதுரைப் படை செய்யும் என உறுதி அளித்தார்.
தெற்கில் தங்களது ஆதிக்கத்தை நிறுவ காலத்தை எதிர் நோக்கி இருந்த சுல்தான்கள் வேலூரை தாக்கினர். தங்களது தலைநகரம் தாக்கப்படுவதை அறிந்த விசயநகர அரசன் மூன்றாம் ஸ்ரீரங்கன் மதுரை தாக்குதலை கைவிட்டு வேலூர் நோக்கி சென்றார். வேலூரில் நடந்த போரில் விசயநகர படைகள் தோல்வி அடைந்தன. கோல்கொண்டா சுல்தான்கள் வேலூரை கைப்பற்றினர். விஜய நகர அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் அங்கிருந்து தப்பி மைசூரை சென்றடைந்தார்.
மதுரையைக் காத்த கள்ளர்கள்

வேலூரை கைப்பற்றிய சுல்தான்கள் செஞ்சி நாயக்கரை தோற்கடித்து, செஞ்சியையும் கைப்பற்றினர். தஞ்சை நாயக்கரும் சுல்தான்களிடம் சரணடைந்தார். செஞ்சியை கைப்பற்றி கோல்கொண்டா சுல்தான்களை விரட்ட எண்ணிய திருமலை நாயக்கர் பீஜப்பூரை ஆட்சி செய்த சுல்தான்களின் உதவியைப் பெற்று செஞ்சியை நோக்கி சென்றார்.
எனினும் கோல்கொண்டா சுல்தான்களும் பீஜப்பூர் சுல்தான்களும் தங்களுக்குள் ஒர் உடன்படிக்கையை செய்துக் கொண்டு கிபி 1642ல் மதுரையை நோக்கி படையெடுத்தனர். எதிர்பாராத இந்த தாக்குதலைக் கண்ட திருமலை நாயக்கர் நிலைக் குலைந்தார். உடனடியான படை உதவி எங்கு கிடைக்கும் என சிந்தித்தார். மதுரையை சுற்றி தன்னரசு ஆட்சி புரிந்த கள்ளர்களின் உதவியை நாடி திருமலை நாயக்கர் தூது அனுப்பினார்.
சுல்தான்களால் மதுரைக்கு வரும் ஆபத்தை உணர்ந்த கள்ளர் படை மதுரையைக் காக்க புறப்பட்டது. கோல்கொண்டா மற்றும் பீஜப்பூர் என இரு பெரும் அரசுகளின் படைகளை எதிர்த்து திருமலை நாயக்கர் மற்றும் கள்ளர்களின் படை போரிட்டது. இறுதியில் சுல்தான்களின் படை தோற்கடிக்கப்பட்டு மதுரை காக்கப்பட்டது. மதுரை நாயக்கர் மற்றும் கள்ளர்களின் படை மற்றுமொரு சுல்தானை படையெடுப்பில் இருந்து மதுரையக் காத்தது
போரில் வீரமரணம் அடைந்த கள்ளர்கள்

கிபி 1642 ல் நடைபெற்ற இப்போரில் பங்கேற்ற கள்ளர்களில் பலர் வீர மரணம் அடைந்தனர். வீர மரணம் அடைந்த கள்ளர்களின் நினைவாக திருமலை நாயக்கர் அளித்த மானியங்கள் குறித்த செப்பேடு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டது.
போரில் பங்கேற்று வீரமரணம் அடைந்த பதினெட்டு கள்ளர்களுக்காக குமளத்தேவன் மற்றும் வீரத்தேவன் முதலியவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வண்டியூரில் காவல் உரிமை மற்றும் பிற உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதே போல வல்லடி கள்ளருக்கும் நிலம் அளிக்கப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த செப்பேட்டை எழுதியவர் மீனாட்சியம்மன் கோயில் மிராசுக்கார பூசாரி என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மக்களின் உயிரையும் உடைமைகளையும் காக்க போரிட்டு தன் உயிர் மாய்த்துக் கொண்ட முகம் தெரியாத கள்ளர்களின் வீரம் என்றும் போற்றுதலுக்கு உரியது.
( History of tamil nadu from 1529 to 1801 AD pg 10 / திருமலை நாயக்கர் செப்பேடுகள்-51- தமிழக தொல்லியல் துறை)
தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்
Total views 1,892 , Views today 1