பதினெட்டாம் நூற்றாண்டில் ஆர்காடு நவாப் மற்றும் வெள்ளையர் கூட்டணி தமிழகத்தில் வரி வசூல் வேட்டை நடத்தி வந்தது. தென் தமிழக போர்க்குடிகள் நவாபுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து கிபி 1771 ஆம் ஆண்டு ஆர்காடு நவாப் முகமது அலி கானின் மகன் உம்தத்துல் உம்ரா மற்றும் ஆங்கிலேயரின் படை தஞ்சையை தாக்கியது. தஞ்சை மன்னர் துல்லாஜி ஆங்கிலேயர் கூட்டணியிடம் சரணடைந்தார்.
இதையடுத்து நவாப் மற்றும் ஆங்கிலேயர் படை கிபி 1772 ஆம் ஆண்டு ராமநாதபுர மன்னரிடம் வரி செலுத்துமாறு நிர்பந்தம் செய்தது. வீரமிக்க தேவரின மறவர் குடியில் உதித்த சேதுபதி மன்னர்கள் நவாபுக்கு வரிசெலுத்த மறுத்தனர். இதையடுத்து ஆங்கிலேயன் ஜெனரல் ஸ்மித் தலைமையிலான படையும் நவாப் உம்ராவின் படையும் தாக்குதலை தொடங்கியது. ஓன்பது வயதே நிரம்பிருந்த ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து சிவகங்கை நோக்கி ஆங்கிலேயர் கூட்டுப்படை நகர்ந்தது. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாத தேவரிடம் வரிபாக்கியை செலுத்துமாறு தூது அனுப்பினர். ஆனால் வரி செலுத்த மறுத்த சிவகங்கை மன்னர் வீரமறவர் முத்துவடுகநாத பெரிய உடையத் தேவர் போருக்கு தயாரானார். காளையார் கோயிலில் நடந்த தாக்குதலில் மன்னர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டார். சிவகங்கையில் ஆர்காடு நவாபின் ஆட்சி ஏற்பட்டது.

இதையடுத்து ஆங்கிலேயர் கூட்டுப்படை கள்ளர் நாடுகளை நோக்கி படையெடுத்தது. கிபி 1772 ஆம் ஆண்டு நடைபெற்ற இப்படையெடுப்பு குறித்து ” கர்நாடக ராஜாக்கள் சரித்திரம்” எனும் பழமையான ஒலைச்சுவடிகள் தொகுப்பு பின்வரும் தகவலை தருகிறது.
” அப்பால் சாயிபு சாகா இங்கரேசு தண்டும் மேல் நாடு தன்னரசு நாடு அந்தப் பக்கம் போயி கள்ளர் பேரில் சண்டை பண்ணினார்கள். கள்ளரான படியினாலே தண்டிலே சில……………ண்ணிக் கொண்டு வருவார்கள். சமயம் பார்த்துச் சண்டை பண்ணுவார்கள், அந்த நடு காட்டு சீமையான படியினாலேயும், நாட்டிலே வாசம் பண்ணுகிற……… களும் அவர்களான படியினாலே சர்க்கார் தண்டிலே ஜெனங்களும் அப்படி இரண்டு மாஸ வரைக்கும் சண்டை பண்ணிக் கொண்டு யிருந்து மரித்து உட்புகுந்து நாடுகளை வாங்கி அநேக கள்ளரை சேதம் பண்ணி ரெண்டாயிரம் கள்ளர் வரைக்கும் பிடித்து வீட்டிலே போட்டு சுட்டுப் போட்டு சிறிது காரியஸ்தனா யிருக்கிற சோலைமலை அம்பலக்காரன் , கருப்பண்ண அம்பலக்காரன் வகையராவைப் பிடித்து அவர்களை கைவசப்படுத்தி அவர்கள் கையில் சர்க்கார் செனத்தில் ஒரு தலைக்கு ஆயிரம் கலையும் பன்னிரெண்டாயிரம் விராகன் குனேகாரியும் குடுக்கிறதாய் முச்சிலிகா வாங்கிக் கொண்டு முப்பத்திரெண்டு கிராமமும் சப்தி பண்ணி சல்லியங்களை தீர்த்து அவ்விடத்தில் கோட்டை கட்டி, மேலும் அவர்கள் மிஞ்சாமல் ரமளி துருப்பை வைத்தும்“
இதன் விளக்கமாவது, கிபி 1772ல் சிவகங்கையில் இருந்து மேல் நாடு தன்னரசு நாடு ஆகிய கள்ளர் நாடுகளை நோக்கி ஆங்கிலேய கூட்டுப்படை விரைந்தது. அப்பகுதியில் இருந்த கள்ளர்களிடம் வரி கேட்டு போர் தொடுத்துள்ளனர். வரி கட்ட மறுத்த கள்ளர்கள் எதிர் தாக்குதலை நடத்தியுள்ளனர். கள்ளர் நாட்டு கிராமங்களில் இரண்டு மாதம் வரை சண்டை நடந்துள்ளது. இப்போரில் இரண்டாயிரம் கள்ளர்கள் வரை ஆங்கிலேய கூட்டுப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து ஊர் காரியஸ்தரில் சிலரான சோலைமலை அம்பலக்காரன் மற்றும் கருப்பண்ணன் அம்பலக்காரன் முதலியோரிடம் தற்காலிக ஒப்பந்தம் செய்து விட்டு அப்பகுதியில் கோட்டை கட்டி நவாபின் தற்காலிக படையை அங்கேயே நிறுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு முன்பு நடந்த இப்போரில் ஈராயிரம் கள்ளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆர்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர் கூட்டணியை எதிர்த்து போரிட்ட முக்குலத்து மன்னர்களும் , தன்னரசு நாட்டு கள்ளர்களும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர். வீரமரணம் அடைந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையத்தேவர், சிறுவயதிலேயே சிறை சென்ற இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மற்றும் முகமறியா தன்னரசு நாட்டுக் கள்ளர்களுக்கும் நமது மரியாதையை செலுத்திக் கொள்வோம்.
ஆதாரம்: கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்(1952), பக்கம் 112
தொகுப்பு: www.sambattiyar.com
Total views 2,127 , Views today 1