கம்போடியாவில் காரைக்கால் அம்மையார் சிலை

பல்லவருக்கும் சோழருக்கும் கம்பூச்சியருக்கும் இடையேயான உறவானது பெயர்கள் மட்டுமின்றி கலைகள் வாயிலாகவும் வலிமைப்பட்ட ஒன்றாக உள்ளது. உதாரணமாக சோழர்கள் பெரிதும் போற்றிய சிவனடியாரான காரைக்கால் அம்மையாரை கம்பூச்சியர்களும் வழிபட்டு உள்ளனர்!.

நாயன்மார்களில் காலத்தால் மூத்தவரான காரைக்கால் அம்மையாருக்கு சோழ அரசில் மற்ற எந்த ஒரு நாயன்மாரை விடவும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. காரைக்கால் அம்மையாரின் சிற்பங்கள் சோழர்கால சிவன் கோவில்களில் காணப்படுகின்றது. இவற்றில் தாண்டவம் ஆடும் சிவனுக்குக் கீழே, சிவனது பாதத்திற்கு அருகில் அம்மையார் உட்கார்ந்த நிலையில் இருப்பார். இந்த சிற்பத்திற்குப் பின்னாக காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் முன்வைத்த ஒரு கோரிக்கை உள்ளது.

அதனைச் சேக்கிழார் பெரிய புராணத்தில், ‘இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்துபாடி அரவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்’ – என்று பதிவு செய்கின்றார்.

(பொருள்: முடிவற்ற இன்ப அன்பை வேண்டிய காரைக்காலம்மையார் தொடர்ந்து வேண்டுகிறார். பிறவாமை (முக்தி) எனக்கு வேண்டும். ஆனால் எனது பிரவிப் பலனின்படி ஒருவேளை பிரவாமையை எனக்கு அளிக்க இயலவில்லை என்றால், அடுத்து வரும் பிறவிகளிலும் சிவனை மறக்காமல் இருக்க வேண்டும்,. இன்னும் வேண்டியது என்னவென்றால் பாம்பை அணிந்த சிவனே நீ மகிழ்ச்சியோடு தாண்டவம் ஆடும்போது அதனை உன் பாதங்களின் கீழே இருந்து பார்க்கும் பாக்கியத்தை நீ அருள வேண்டும்.)

இந்த வேண்டுதலின் படியே சிவபெருமான் தன் தாண்டவத்தைக் காணும் வாய்ப்பினை காரைக்கால் அம்மையாருக்கு வழங்கி உள்ளதாக சைவ சமயம் போற்று கின்றது. சைவ சமயத்தின் போற்றுதலையே சோழர் கால சிற்பங்களும் காட்டுகின்றன. தஞ்சைப் பெரிய கோவிலிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலும் இதற்கான உதாரணங்கள் உள்ளன. கோவில்கள் என்று மட்டும் இல்லாமல் பிற்காலச் சோழர்கள் தங்கள் நாணயங்களிலும்கூட காரைக்கால் அம்மையார் உருவத்தைப் பொறித்து வெளியிட்டு உள்ளனர்.

சோழர் நாணயங்களில் காரைக்கால் அம்மையார்
தமிழக கோயில்களில்…

இந்தச் சிறப்பை அம்மையாரைத் தவிர வேறு எந்த சிவனடியாருக்கும் அவர்கள் தரவில்லை. காரைக்கால் அம்மையார் தொண்டை மண்டலத்திலே பிறந்து சோழ மண்டலத்திலே முக்தி அடைந்தவர். எனவே அம்மையைக் கொண்டாடுவதில் பல்லவர்களுக்கும் உரிமை இருந்தது. சோழர்களின் நேரடியான தாக்கத்தினாலோ அல்லது பல்லவர் வழியாக காரைக்கால் அம்மையாரை அறிந்ததனாலோ கம்பூச்சியர்களும் தங்களது சிற்பங்களில் காரைக்கால் அம்மையாரைக் குறித்து உள்ளனர்.

காரைக்கால் அம்மை உருவம் பொறிக்கப்பட்ட சிற்பங்கள் பண்டைய கம்போடியாவில் ஒன்பது (அதாவது இன்றைய தாய்லாந்தில் மூன்றும், கம்போடியாவில் ஆறுமாகக்) கிடைத்துள்ளன. இந்தியாவின் மிக அருகில் உள்ள இலங்கையில் காரைக்கால் அம்மையாரின் வழிபாடு இருந்துள்ள போதும் அங்கு அவருடைய 3 செப்புத் திருமேனிகள் மட்டுமே கிடைத்து உள்ளன.

கம்போடியாவில்….
கம்போடியாவில்…

இந்நிலையில் கெமர்களின் கோவில்களில் சிற்பங்களே ஒன்பது கிடைக்கப் பெற்று உள்ளது காரைக்கால் அம்மையார் வழிபாடு நேரடியாக தமிழக அரசர்கள் பண்டைய கம்போடியாவுடன் கொண்ட உறவால் அங்கு சென்றது என்பதையும், ஒவ்வொரு நாடாகப் பரவி கம்போடியா சென்ற வழக்கம் அல்ல என்பதையும் காட்டுவதாக உள்ளது. சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் கம்பூச்சியாவோடு இருந்த உறவுக்கு இது சான்றாக அமைகின்றது.

சோழர் காசில் காரைக்கால் அம்மையார் உருவம். தமிழகத்தில் பிறந்த சிவனடியாரை கம்பூச்சியர்கள் போற்றுவது கட்டாயம் தற்செயலான ஒன்றாக இருக்க முடியாது. கம்பூச்சியர்களின் காரைக்கால் அம்மையார் வழிபாடு இன்னும் பல வரலாற்று ஆய்வுகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது. இது தவிர கெமர்களின் பிற கல் வேலைப்பாடுகளிலும் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் தாக்கங்கள் தென்படுகின்றன.

தகவல்: பல்லவர் வரலாறு – இரா. மன்னர் மன்னன்

www.sambattiyar.com

Total views 2,120 , Views today 1 

Author: admin

1 thought on “கம்போடியாவில் காரைக்கால் அம்மையார் சிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *