புதுக்கோட்டை மாவட்டம் குன்னண்டார் கோயில் சிவன் கோயில் மிகவும் பழம்பெருமை கொண்டது. பல்லவர் கால குடைவரை கோயிலாக அமைந்துள்ள இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோயிலை மையமாக கொண்டு வடமலை நாடு மற்றும் தென்மலை நாடு எனும் இரு கள்ளர் நாடுகள் இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருகிறது. இருநாட்டு கள்ளர் தலைவர்களும் குன்னண்டார் கோயிலில் நாட்டு மரியாதைகள் பெறுகின்றனர்.
இத்தகைய பழமை மிகுந்த இக்கோயிலில் “கொழுந்திரார் கருப்பு” எனும் கள்ளர் குலத் தலைவர் ஒருவரின் சிலை மக்களால் வழிபாடு செய்யப்படுகிறது. ஊர் மக்களால் கருப்பு என அழைக்கப்படும் இவர் தென்மலை நாட்டு வத்தனாக்கோட்டையை சேர்ந்த கொழுந்திரார் வம்சத்தவர் ஆவார்.
கிபி 1245 ஆண்டை சேர்ந்த மூன்றாம் ராசராசன் காலத்து கல்வெட்டில் வீரசிங்க நாட்டு அரையர்களில் ஒருவராக குழந்தைராயர் என்பவர் குறிப்பிடப்படுகிறார். குழந்தராயர் எனும் பட்டம் பிற்காலத்தில் கொழுந்திரார் என திரிந்து உள்ளது.

இத்தகைய பழமையான கொழுந்திரார்கள் வழிவந்த வீரனான ” கொழுந்திரார் கருப்பு” பதினெட்டாம் நூற்றாண்டில் குன்னண்டார் கோயிலுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை தடுத்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இவரது வீரத்திற்கும் தியாகத்திற்கும் மரியாதை அளிக்கும் விதமாக குன்னண்டார் கோயில் சிவன் கோயிலில் கொழுந்திரார் கருப்புக்கு சிலை அமைத்து காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
வத்தனாக்கோட்டை கொழுந்திரார்கள் இவரது நினைவாக பிடி மண் எடுத்து வத்தனாக்கோட்டையிலும் ஒர் கோயில் எழுப்பியுள்ளனர்.ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கொழுந்திரார் வம்சத்தில் ஒருவர் சாமியாடி, கொழுந்திரார் கருப்பரை குன்னண்டார் கோயிலில் இருந்து வத்தனாக்கோட்டைக்கு அழைப்பது வழக்கம். ஆடி பதினெட்டு அன்று கொழுந்திரார்கள் கிடாவெட்டி பூசை போட்டு தங்களது முன்னோரான” கொழுந்திரார் கருப்பரை” வணங்குவது வழக்கம்.
இன்றும் குன்னண்டார் கோயில் சிவன் கோயிலில் நுழைந்தவுடன் மகா மண்டபத்துக்கு இடது புறம் ” கொழுந்திரார் கருப்பு” வின் கம்பீர தோற்றத்தை காணலாம்.
கம்பீரம் காட்டும் கண்கள், முத்து மணி மாலைகள், வாளின் நுனி போன்ற கூர்மையுடன் அமைந்த முறுக்கு மீசை, இடுப்பில் இருக்கும் பட்டாக்கத்தி என பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கள்ளர் குல வீரனின் தோற்றத்தை கண் முன்னே காணலாம் ” கொழுந்திரார் ” வடிவில்……



Article by: www.sambattiyar.com
Total views 1,470 , Views today 1