” பள்ளி” எனும் சொல் ஊர், இருப்பிடம், சேரி, சமணக்கோயில், சாலை, நித்திரை, மருத நிலத்தின் ஊர், ஒரு வகை சாதி என பல பொருள் படும்.

பிற்கால கல்வெட்டுகளில் ” குடிப்பள்ளி” எனும் சொல் பட இடங்களில் வருகிறது. ஒர் ஊரை சேர்ந்த வாழுமிடத்தை குறிப்பிட குடிப்பள்ளி எனும் சொல் பயன்பட்டு வந்துள்ளதை இந்திய கல்வெட்டு ஆவணங்கள் உணர்த்துகின்றன.
முதலாம் ராஜேந்திர சோழனின் கரந்தை செப்பேட்டில் ” ஸ்ரீகரமங்கலமான கொட்டாரக் குடிப்பள்ளியும் புறக்குடியும் ஆக இவ்வூர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.( ஏடு 11, வரி 482)
ராஜேந்திர சோழன் காலத்திலேயே குடிப்பள்ளி என்பது ஊரை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை இந்த செப்பேடு வரிகள் உணர்த்துகிறது.

கிபி 1120 ஆம் ஆண்டை சேர்ந்த விக்ரம சோழன் காலத்து திருவக்கரை கல்வெட்டில் ” ஒய்மாநாடான விஜயராஜேந்திர வளநாட்டு முஞ்நூற்று குடிப்பள்ளி செங்கேணி அம்மையப்பன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுக்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தொல்லியல் துறை முஞ்நூற்று குடிப்பள்ளி எனும் ஊரை சேர்ந்த செங்கேணி அம்மையப்பன் என குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் குடிப்பள்ளி ஒர் இருப்பிடத்தை குறிப்பிடுவதாக அமைகிறது( ஆதாரம்: South Indian inscriptions vol 17 – கல்வெட்டு 201)
கிபி 1167 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் கல்வெட்டில் ” எயில்நெடுங்கலநாட்டு நெடியத்துக் குடிப்பள்ளி அப்பன் சாத்தனும் ” எனும் வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தொல்லியல் துறை ” எயில்நெடுங்கல நாட்டின் நெடியம் எனும் ஊரில் உள்ள குடிப்பள்ளி எனும் பகுதியை சேர்ந்த சேந்த அப்பன் சாத்தன்” என குறிப்பிட்டுள்ளது. குடிப்பள்ளி என்பது Hamlet எனும் வாழுமிடத்தை குறிப்பிடுவதாக தெளிவாக உணர்த்தியுள்ளனர்.( ஆதாரம்: South Indian inscriptions vol 26 – கல்வெட்டு 373)
கிபி 1237 ஆம் ஆண்டை சேர்ந்த மூன்றாம் ராஜராஜன் கால திருக்கோயிலூர் கல்வெட்டு ” பிரம்மதேயஞ் சிற்றிங்கூர் குடிப்பள்ளி பட்டன் சோழனான பெரிங்கூர்ப்பெரையன்” என குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டில் பிரம்மதேயத்தை சேர்ந்த சிற்றிங்கூர் எனும் குடிப்பள்ளி( ஊரை) சேர்ந்த பட்டன் பெரிங்கூர்ப்பெரையர் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியாகும். இன்றைய அக்ரஹாரங்களே பிரம்மதேயங்கள் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிராமணர்கள் வாழும் ஊரான சிற்றிங்கூர் குடிப்பள்ளியை சேர்ந்த பட்டர் எனும் பிராமணர் இங்கு குறிப்பிடப்படுகிறார்.


கிபி 1244 ஆம் ஆண்டை சேர்ந்த ஈரோடு மாவட்ட பவானி வாகீசுவரர் கோயில் கல்வெட்டில் காணியுடைய பிராமணரில் மகாதேவ பட்டன் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

இதன் மூலம் பிரம்மதேயத்தில் வாழும் பிராமணர்களின் ஊர் பகுதியும் குடிப்பள்ளி என வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.
பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த வீரராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் ” வேசாலி பிரம்மதேயத்து குடிப்பள்ளி பெருமான் மும்முடிசோழபெரியன்” எனும் பிராமணர் குறிப்பிடப்படுகிறார். பிரம்மதேயத்தில் உள்ள சிற்றூர் குடிப்பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.



கிபி 1500 ஆம் ஆண்டில் இம்மடி நரசிங்கராயர் ஆட்சி காலத்தில் பெரிய குப்ப அய்யரும் சிறுதப்ப அய்யரும் மண்ணீஸ்வரமுடையார் கோயிலுக்கு நிலங்களை தானமாக அளித்தனர். தாங்கள் அளித்த நிலப்பகுதிகளின் பெயர்களை கல்வெட்டில் காட்டியுள்ளனர். இப்பிராமணர்கள் அளித்த நிலங்களின் பெயர்களில் ” குடிப்பள்ளி தடிக்குழி” யும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேலே கொடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பிராமணர்களில் வாழும் பிரம்ம தேயங்களில் குடிப்பள்ளி எனும் ஊர் குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டோம்.

சித்திரமேழி பெரிய நாட்டில் அமைந்த ஊர்களில் ” குடிப்பள்ளியும்” ஒன்றாக அமைந்துள்ளது.

இன்றும் வேலூர் மாவட்டத்தில் குடிப்பள்ளி எனும் கிராமம் உள்ளது.


ஆகவே மேலே கொடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் குடிப்பள்ளி எனும் சொல்லாடல் முந்தைய காலங்களில் சிற்றூரையும் வாழுமிடங்களையும் குறிக்க பயன்பட்டுள்ளதை அறியலாம்.
Article by: www.sambattiyar.com
Total views 1,724 , Views today 3