சோழ மன்னன் இராசாதிராசன் கிபி 1163ல் பட்டம் பெற்ற நான்கு ஐந்து ஆண்டுகளில், பாண்டிய நாட்டில் அரச மரபினர் இருவர்க்குள் பூசல் உண்டானது. ஒருவன் பராக்கிரம பாண்டியன் என்பவன்; மற்றவன் குலசேகர பாண்டியன் என்பவன். பராக்கிரம பாண்டியன் அப்பொழுது இலங்கையை ஆண்டு வந்த பராக்கிரம பாகு (கி.பி.1153-1186) என்பவனைத் துணை வேண்டினான். உடனே இலங்கைப் படைவீரர் இலங்காபுரன் என்பவன் தலைமையிற் சென்றனர். அவன் பாண்டிய நாட்டை அடைவதற்குள், குலசேகரன் பராக்கிரமனை ஒரு நகரத்தில் அகப்படுத்தி, அதனை முற்றுகை இட்டான்; அப்பொழுது நடந்த போரில் பராக்கிரமன் கொல்லப்பட்டான். அவன் மகனான வீரபாண்டியன் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தான். குலசேகரன் பாண்டிய மன்னன் ஆனான்.
இதனை உணர்ந்த இலங்காபுரன் கிபி 1168 ஆம் ஆண்டளவில் குலசேகரனை வென்று பாண்டிய நாட்டை இறந்தவன் உறவினர்க்கு உரிமையாக்கத் துணிந்து, நாட்டினுள் நுழைந்தான். லங்காபுரன் தென் தமிழகத்தில் மேற்கொண்ட படையெடுப்பு நிகழ்வுகளை இலங்கை நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் தென் தமிழ்நாட்டில் நடந்த போர் நிகழ்வுகளை தத்ரூபமாக விவரிக்கிறது. மதுரையை அடைந்த லங்காபுரன் குலசேகரனை வீழ்த்திவிட்டு பராக்கிரம பாண்டியனின் மகனான வீரப்பாண்டியனை அரியணையில் ஏற்றினான். இதனையடுத்து குலசேகர பாண்டியன் மீண்டும் படையெடுத்து மதுரையை கைப்பற்றினான். வீரப்பாண்டியன் அங்கிருந்து தப்பித்து சென்றான்.
இதையடுத்து மீண்டும் சிங்களர்களின் பெரும்படை மதுரையை முற்றுகையிட்டு குலசேகர பாண்டியனை வீழ்த்தியது. மதுரையின் மன்னராக பராக்கிரம பாண்டியனின் மகன் வீரப்பாண்டியன் முடிசூட்டப் பெற்றார். தோல்வியுற்ற குலசேகர பாண்டியன் புதுக்கோட்டையை அடைந்து நார்த்தாமலையில் அமைந்திருந்த தொண்டைமானின் கோட்டையில் தஞ்சம் புகுந்தார்.
குலசேகரனை தேடி சிங்களப் படை புதுக்கோட்டை நோக்கி விரைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குலசேகர பாண்டியன் சிங்களப்படையை தாக்கினார். ஆயினும் சிங்களப்படையே முன்னேறியது. இதன் பிறகு புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பிற குறுநில தலைவர்களின் உதவியோடு குலசேகர பாண்டியன் சிங்களரை தாக்கினார். ஆயினும் சிங்களப்படையே வெற்றி பெற்றது.
இதையடுத்து குலசேகர பாண்டியன் சோழ மன்னனிடம் உதவி கோரினான்.சோழநாட்டை ஆண்டு வந்தவன் இராசாதிராசன் ஆவன். அவனுக்குப் பேருதவியாக இருந்தவன் திருச்சிற்றம்பலம் உடையானான பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவன். அப் பெருந்தகை திரண்ட படைகளுடன் பாண்டியன் நாட்டை அடைந்து கொலைகளால் குடிகளைத் துன்புறுத்திவந்த ஈழப்படைகளைத் தாக்கினான். திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும் இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது. குலசேகரன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கினான்.


குலசேகர பாண்டியனுக்கு உதவிய புதுக்கோட்டை தளபதிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் தொண்டைமான் கோட்டையில் குலசேகர பாண்டியன் தஞ்சை அடைந்ததை முன்பு கண்டோம்.
நார்த்தாமலையில் உள்ள கடம்பர் கோயிலில் கிடைத்த கிபி 1056 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு தெலிங்குகுலகாலபுரமான நார்த்தாமலையில் தொண்டைமானாரின் தலைமையில் நிலங்கள் அளக்கப்பட்டு கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது.

“தெலிங்ககுலகாலபுரத்து நகரத்தோம் எங்களின் ஒத்திசைவு கைத்திட்டு இட்ட பரிசாக நாங்கள் தொண்டைமானார்க்காய் பார்க்கிற” என குறிப்பிடுகிறது.
நார்த்தாமலை பகுதியில் கிபி பதினோராம் நூற்றாண்டிலேயே ” தொண்டைமான்கள்” ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதை கல்வெட்டு உணர்த்துகின்றது.
இதே போல குளத்தூர் தாலுகா மடத்துக்கோயிலில் கிடைத்த இரண்டாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் இராசாதிராச சோழனின் படைதளபதியாக இலங்கை படையை விரட்டியடித்த திருச்சிற்றப்பலமுடையான் பெருமாநம்பி பல்லவராயரும் இவரது உறவினரான வேதவனமுடையான் அண்ணன் பல்லவராயரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் உள்ள பைய்யூர் எனும் பகுதியை நிர்வாகம் செய்து வந்ததை கல்வெட்டு உணர்த்துகிறது.
” உறத்தூர் கூற்றத்து பைய்யூர் பைய்யூருடையான் திருச்சிற்றம்பலமுடையான் வேதவனமுடையானை” என பல்லவராயர் தளபதிகள் குறிப்பிடப்படுகின்றனர்.


பல்லவர்- தொண்டையர்- பாண்டியர் தொடர்பு
பாண்டியர்களுக்கு பக்க பலமாக இருந்து உதவிய பல்லவராயர்களும் தொண்டைமான்களும் தங்களது ஆவணங்களில் பாண்டியரோடு தங்களுக்கு இருந்த தொடர்பை விளக்குகின்றனர்.
புதுக்கோட்டையை ஆட்சி செய்த பல்லவராயர்கள் வழிவந்த மன்னரான சிவந்தெழுந்த பல்லவராயர் பாண்டியர்களின் மீன்கொடியையும் சேர்த்து பயன்படுத்தி உள்ளார். பல்லவராயர்கள் தங்களது கல்வெட்டுகளில் பாண்டியன் முடிகாத்தான் , வழுதி மானங்காத்தான் என அடைமொழிகளை குறிப்பிட்டு உள்ளனர்.

புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர்களும் தங்களது சிங்க கொடியோடு மீன் கொடியையும் பயன்படுத்தி வந்துள்ளனர். குன்றத்தூர் நொண்டி நாடகம் எனும் இலக்கியத்தில் தன்னை ” சந்திர குல நேயன்” என குறிப்பிட்டுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை ஆட்சி செய்த தொண்டைமான்களும் தங்களது கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் ” ஏழு நாளில் ஈழத்திறை கொண்டவன் ” என குறிப்பிட்டு உள்ளனர். அதாவது ஈழத்து சிங்கள தளபதிகளை வென்றதை குறிப்பிட்டு உள்ளனர்.

கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் தொண்டைமான்களும் பல்லவராயர்களும் இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்



Article by: www.sambattiyar.com
Total views 1,959 , Views today 1