புதுக்கோட்டையை ஆண்ட கடைசி சோழன்

  தெற்காசியாவின் புகழ் வாய்ந்த பேரரசாக விளங்கிய சோழ தேசம் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் சரிவை சந்திக்க ஆரம்பித்தது.  சோழ பேரரசின் கடைசி மன்னரான மூன்றாம் ராஜேந்திரன் ஆட்சி காலத்தில்,  சோழப் பேரரசின் எல்லைகள் மத்திய தமிழகத்துக்குள் சுருங்கியது.  பாண்டியப் பேரரசின் எழுச்சி சோழ அரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. கிபி 1257ஆம் ஆண்டு, சடையவர்மன் சுந்தரப்பாண்டியன், சோழ தேசத்தின் மேல் படையெடுத்து மூன்றாம் இராசேந்திர சோழனை வென்று தனக்கு திறை செலுத்தும் குறுநில மன்னராக்கினார். இக்காலத்தில் பாண்டியப் பேரரசின் எல்லைகள் கன்னியாகுமரி முதல் கிருஷ்ண நதி வரை பரவி இருந்தது. கிபி 1279 ஆம் ஆண்டு மூன்றாம் ராசேந்திர சோழன் பற்றிய கடைசி கல்வெட்டு கிடைத்தது இதற்கு பிறகு ஒரு சோழப் பேரரசர் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.

சோழ இளவரசன் செமப்பிள்ளையார்

மூன்றாம் ராசேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் திருக்கண்ணபுரத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில்(515 of 1912) ,  சேமப்பிள்ளை என்பவரை மூன்றாம் ராசேந்தர சோழன் ” நம் மகன் ” என குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் கே கே பிள்ளை அவர்கள் மூன்றாம் ராசேந்திரன் காலத்தில் புதுக்கோட்டையில் ஆட்சி செய்த அழகிய சேமன் என்பவரே சோழனின் மகனாக குறிக்கப்பட்ட சேமப்பிள்ளை ஆவார் என குறிப்பிட்டுள்ளார்.

1257ல் சோழப் பேரரசு குறுநில மன்னர்கள் நிலைக்கு சுருங்கிய பிறகு , மூன்றாம் ராசேந்திரனின் மகனான சேமப்பிள்ளை  புதுக்கோட்டையில்  மாறவர்மன் குலசேகரன் மற்றும் மாறவர்மன் வீரப்பாண்டியன் ஆகியோருக்கு திறை செலுத்திய சிற்றரசாக ஆட்சி புரிந்து வந்தார்.
(சோழர் வரலாறு / டாக்டர் கே கே பிள்ளை / பக் 682: தமிழக அரசு வெளியீடு)

மூன்றாம் ராசேந்திரனுக்கு செழியர்கோன் மற்றும் செமப்பிள்ளையார் என இரு மகன்கள் இருந்ததாக 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Mysore Gazetter ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் கடைசி மன்னராக செமப்பிள்ளை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மூன்றாம் ராசேந்திரனுக்கு சோழகுல மாதேவியார் என்ற மனைவியும், சேமப்பிள்ளை எனும் மகனும் இருந்ததாக திருக்கண்ணபுரத்து கல்வெட்டு கூறுகிறது.( சோழர்கள்- வரலாற்று அறிஞர்  ம.ராசாமாணிக்கனார் பக் 351)

பழம்பெரும் இந்திய தொல்லியல் அறிஞரான கே ஏ நீலகண்ட சாஸ்திரிகள் தன்னுடைய புத்தகமான ” The pandyan kingdom” எனும் புத்தகத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியருக்கு அடங்கிய சிற்றரசராக சோழ வம்சத்தின் கடைசி இளவரசர் புதுக்கோட்டையில் இருந்து ஆட்சி புரிந்ததாக குறிப்பிட்டுள்ளார். ( The pandyan kingdom- From Earliest time to sixteenth century : பக் 214 : Central Archaeological library)

சேமப்பிள்ளையார் மூன்றாம் ராஜேந்திரனின் மகன் என்றும், அவர் கடைசியில் வாழ்ந்த இடம் புதுக்கோட்டை என்றும் Manual of pudukkottai state vol 2 part 1 ல் கூறப்பட்டுள்ளது.

1960 ஆம் ஆண்டு எழுதப்பட்ட History and culture of the indian people vol iv,  பக்கம் 232 ல் மூன்றாம் ராசேந்திர சோழனின் மகனான சேமப்பிள்ளை என்பவர் வீரப்பாண்டியன் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டையில் இருந்து அரசு செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் கடைசி சோழன்

மூன்றாம் இராசேந்திரனின் மகனான சேமப்பிள்ளையார் புதுக்கோட்டையில் ஆளுமை செலுத்தியதை புதுக்கோட்டை கல்வெட்டுகள் பல எடுத்துரைக்கின்றன.

கிபி 1257 ஆம் ஆண்டு சடையவர்மன் சுந்தரப் பாண்டியன் காலத்தில் கள்ளர் நாடான வல்லநாட்டு திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு செமப்பிள்ளை தானம் அளித்துள்ளார். கல்வெட்டில் ” செமப்பிள்ளையார் சிவநாமத்தால் அரசகண்டராமன் திருநந்தா விளக்கிற்கும்” என குறிப்பிடப்படுவதால் செமப்பிள்ளையார் ” அரசகண்டராமன்” என்றும் அழைக்கப்பட்டுள்ளதை அறிகிறோம்( IPS 427). வல்லநாடானது கள்ளர்களின் நாட்டு கட்டமைப்பில் ஒன்று என புதுக்கோட்டை கவெ எண் 38 தெரிவிக்கிறது. இதே தகவல் புதுக்கோட்டை மேனுவலிலும் கூறப்பட்டுள்ளது.

இதே ஆண்டில் செமப்பிள்ளையார் பிறந்த நாளை முன்னிட்டு தென்கவிர் நாடான கள்ளர் நாட்டு மக்கள் செமப்பிள்ளையார் பெயரில் அவரது திருநாமத்தால் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு குளத்தூர் எனும் ஊரை தானமாக அளித்துள்ளனர். தங்களது பகுதியின் ஆட்சியாளர் மேல் கொண்ட அன்பை இக்கல்வெட்டு விளக்குகிறது. இவரது பிறந்த நாள் ” அரசகண்டராமன் திருநாள்” என்றும் இவரது பெயரால் அளிக்கப்பட்ட கொடை ” அரசகண்டராமன் சந்தி” என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.(IPS 428)

கவிநாடு என்பது கள்ளர்நாடுகளில் ஒன்றாக உள்ளதாக புதுக்கோட்டை மேனுவல் பாகம் 1 பக் 112 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கல்வெட்டு எண் 38 ல் கவிர்நாடு என்பது கள்ளப்பால் நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1257 ல் சேமப்பிள்ளையாரின் திருத்தோப்புக்கு வல்லநாட்டு கள்ளர்கள் அளித்த கொடை அளித்துள்ளதை புதுக்கோட்டை கல்வெட்டு (IPS 429) குறிப்பிடுகிறது.  தோப்பானது கல்வெட்டில் ” அரசகண்டராமன் தோப்பு ” என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் இப்பகுதியில் அரண்மனையை கொண்டிருந்ததை ” திருமாளிகைப் பிள்ளை” என்பவரின் கையொப்பம் எடுத்துரைக்கிறது.

கிபி 1258 ஆம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் வீரப்பாண்டியன் காலத்தில் திருவரங்குளம் சிவன் கோயிலில் தீபம் ஏற்ற செமப்பிள்ளையார் சார்பாக அவரது பணியாள் கொடை அளித்துள்ளார். இக்கல்வெட்டில் சேமப்பிள்ளை அழகிய சேமன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.(IPS 431)

கிபி 1262 ஆம் ஆண்டு திருவரங்குளம் சிவன் கோயிலின் மடைப்பள்ளியை சேமப்பிள்ளையார் கட்டிவித்துள்ளார்.(IPS 432).கிபி 1263 ஆம் ஆண்டு “சேமன் குழிப்பற்று” எனும் நிலத்தின் பெயர் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.(IPS 433)

கிபி 1267ஆம் ஆண்டு சடையவர்மன் வீரப்பாண்டியன் காலத்தில்  சேமப்பிள்ளை புதுக்கோட்டை திருவப்பூர் விஷ்ணு கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். கள்ளர் நாடான விசங்கி நாட்டின் உட்பிரிவான பெருவாயில் நாட்டில் உள்ள ஒரு கோயிலுக்கு நாயனார் சேமப்பிள்ளையார் அளித்த கொடை பற்றி இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.( IPS 371)

கிபி 1277 ஆம் ஆண்டை சேர்ந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் , ஆலங்குடி தாலுகா திருவிடையப்பட்டியில் உள்ள ஸ்ரீமூலநாதர் கோயிலுக்கு சேமப்பிள்ளையார் ” அரசிமிகாமன்” எனும் சந்தியை ஏற்படுத்தி நிலங்களை தானமாக அளித்துள்ளார்.  கோயிலுக்கு தேவையான நிலம் வல்ல நாட்டு அரையர்களிடமே இருந்து வாங்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சோழ இளவரசர் “நாயனார் சேமப்பிள்ளையார் சாமந்தனார்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.(IPS 443)


இவரது மற்ற அடைமொழிகளாக “ அரசகண்டராமன் திருவம்பலப்பெருமாள் அருள்பெரிய செண்டேரசுன் ” முதலியவை இவ்வரசனின் திருமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசன் அளித்த திருமுகம் எனும் அரச ஆணையில் ” திருவம்பலப் பெருமாள் ” என  இவர் குறிப்பிடப்பட்டு உள்ளதன்  மூலம் சோழர்களின் முக்கிய விருப்ப கடவுளான தில்லை நடராசரோடு தனக்கு உள்ள தொடர்பை இங்கு சோழர் இளவரசர் குறிப்பிடுகிறார்.

இதே காலகட்டத்தை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு (IPS 1054) செம்பாட்டூர் திருவாருடையார் கோயிலில் கிடைத்துள்ளது.  இக் கல்வெட்டில் சேமப் பிள்ளையார் கட்டுவித்த கற்றளி பற்றி குறிப்பிடுகிறது. மன்னர்களுக்கு உரிய மங்கலச் சொல்லான “ஸ்வஸ்திஸ்ரீ” எனும் தொடங்கும் இக்கல்வெட்டில் ” திருவம்பலப் பெருமாள் அருள் பெரிய சண்டீசுரன் அழகிய சேமன் அரசகண்டராமனான நாவிளங்கிதாரன் செய்வித்த கற்றளி இது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோயிலில் சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் செய்வித்த திருப்பணி பற்றி இது குறிப்பிடுகிறது.  சிதம்பரத்தோடு சோழர்களுக்கு இருந்த தொடர்பை குறிக்கும் வகையில் திருவம்பலப் பெருமாள் என தன்னுடைய பெயரோடு சோழ இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமணஞ்சேரியில் கிடைத்த மற்றொரு கல்வெட்டு ” ஸ்வஸ்திஸ்ரீ திருவம்பலப் பெருமாள் அருள் பெரிய சண்டீசுரன் அழகிய சேமன் அரசகண்டராமன்” இக்கோயிலில் அம்மன் கற்றளியை உருவாக்கியதாக கூறுகிறது(IPS 1057)

திருவரங்குளத்தில் கிடைத்த மற்றொரு கல்வெட்டு ” அரசகண்டராமன் தோப்பு ” க்கு அளிக்கப்பட்ட கொடை பற்றி குறிப்பிடுகிறது. அரசகண்டராமன் சேமப்பிள்ளை அவர்களின்  பெயரில்  அமைந்த தோப்பு பற்றி குறிப்பிடுகிறது.

அரசகண்டராமன் கோட்டை

சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் அவர்களின் கோட்டை பற்றிய கல்வெட்டு புதுக்கோட்டை தெம்மாவூரில் கிடைத்துள்ளது. ” ஸ்வதிஸ்ரீ தென்வாய்யூரானான அரசகண்டராமன் கோட்டை ”  எனும் அரசர்களுக்கு உரிய மங்கலச் சொல்லோடு அரச கண்ட ராமன் சேமப்பிள்ளை அவர்களின் கோட்டை இருந்தது குறிப்பிடப்படுகிறது.( IPS 1119)

சோழ இளவரசரான சேமப்பிள்ளையார் அரசகண்டராமன் திருவம்பலப்பெருமாள் அவர்களின் கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், திருவரங்குளம், ஆலங்குடி, புதுக்கோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டார் கோயில் முதலிய ஊர்களில் கிடைக்கின்றது.  புதுக்கோட்டையின் வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் இவரது ஆட்சி இருந்துள்ளது.

இந்த சோழ மரபினன் தன்னுடைய பெயரோடு அடைமொழியாக திருவம்பலப் பெருமாள் என தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. 

  சோழ வேந்தர்களில் பலர் தங்களுடைய பெயரோடு பெருமாள் எனும் சொல்லையும் சேர்த்து தொடர்ச்சியாக பயன்படுத்தியுள்ளனர்.

முதலாம் பராந்தகன் தன்னுடைய சிறப்பு பெயர்களில் வீர நாராயணன் எனும் நாமத்தையும் கொண்டிருந்தார்.

சுந்தர சோழன் தனது கல்வெட்டுகளில் ” பாண்டியனை சுரம் இறக்கின பெருமாள்” என குறிப்பிடப்படுகிறார்.

முதலாம் ராசராச சோழனும் தனது பெயரோடு ” சோழ நாராயணன்” எனும் பட்டத்தையும் புணைந்துள்ளார்.

முதலாம் இராசராசசோழனின் விருதுப்பெயர்களுள் ” பெரிய பெருமாள்” என்பதும் ஒன்றாகும்.

முதலாம் ராசராசன் காலத்தில் ” சோழ நாராயணன்” எனும்  பெயரோடு வெள்ளி நாணயங்கள் வெளியிட்டுள்ளார்.

முதலாம் ராசாதிராசன் ” யானை மேல் துஞ்சின பெருமாள் விசயராசேந்திரதேவன்” என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்.

முதலாம் குலோத்துங்கன்  ” இராச நாராயணன்” எனும் சிறப்புப்பெயரை கொண்டிருந்தார்.

கிபி 12 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் இரண்டாம் இராசராசனுக்கு பிறகு விக்ரம சோழனின் பெயரனான நெறியுடைப் பெருமாளின் மகன் எதிரிலிப் பெருமாளுக்கு சோழ மன்னராக பட்டம் கட்டப்பட்டது.

 மூன்றாம் குலோத்துங்கன் தில்லையில் ” முடித்தலைக் கொண்ட பெருமாள் திருவீதி” என தன் பெயரில் மேற்கு தெரு ஒன்றை உருவாக்கினார்.

சோழ வேந்தர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பெயரோடு பெருமாள் மற்றும் நாராயணன் முதலிய சொற்களை சேர்த்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் கிடைத்த கிபி 1508 ஆம் ஆண்டை சேர்ந்த செப்பேடுகளில் ” நாராயண பேரரசு மக்கள் கள்ள படைத்தலைவர்கள்” என கள்ளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.  நாராயணன் வழிவந்த சோழர்களின் பேரரசு வழிவந்தவர்கள் என்பதனை செப்பேட்டில் இவ்வாறு குறித்துள்ளனர்.

சோழ குல பேரரையன்

கிபி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  மாறவர்மன் குலசேகர பாண்டியர் கால கல்வெட்டு புதுக்கோட்டை இலுப்பூர் – புல்வயல் முருகன் கோயிலில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டில் சோழ குல பேரரையன் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

புல்வயல் அரசான சுந்தரப்பாண்டிய பெருவாயில் நாடாழ்வார் அவ்வூர் மேலைக்கூற்று முதலிகளில் சொழகுல பேரரையன் என்பவருக்கும், பூர்வத்து ( பழமையான)  சோழப் பெரையன் என்பவருக்கும், மாதவராய பெரையனுக்கும்” நிலத்தை விற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சோழத்திரியர், சோழங்கதேவர், மாதவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே சேமப்பிள்ளையார் பெருவாயில் நாட்டில் உள்ள ஒரு சிவன் கோயிலுக்கு அளித்த கொடையை கண்டோம்.  இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சோழ குல பேரரையன் என்பவரும் பூர்வ சோழ பேரரையனும் சேமப்பிள்ளையார் அவர்களின் உறவினர்களாக இருக்கக் கூடும்.

ஏனெனில் சோழ மரபினர் தங்களை சோழ குலத்தவர் என பல கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். 

எடுத்துக்காட்டாக முதலாம் பராந்தகனின் சிறப்பு பெயர்களுள் சோழ குல பெருமானாரும் ஒன்றாகும்.

முதலாம் குலோத்துங்க சோழனின் மனைவியருள் ” சோழ குல வல்லியார்” என்பவரும் ஒருவராவார்.

மூன்றாம் ராஜேந்திரனின் மனைவியார் ” சோழ குல மாதேவியார்” என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பெருவாயில் நாடு கள்ளர்களின் விசங்கி நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. சோழங்கதேவர்,  சோழத்திரியர் முதலான கள்ளர் குலத்தினர் இன்றும் விசங்கி நாட்டு பகுதியில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.  சோழங்கதேவர் மரபினர் நார்த்தாமலை மாரியம்மன் கோயிலில் முதல் மரியாதை பெறும் உயர்ந்த நிலையில் இன்றும் உள்ளனர்.

புலிக்கொடி கொண்ட கள்ளர்கள்

கிபி பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருவிடைமருதூர் நொண்டி நாடகம் எனும் இலக்கியத்தில் புதுக்கோட்டை விசங்கி நாட்டு கள்ளர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

” மேன்மையான விசங்க நாடதின் மிக்க கள்ளச்சாதி – தக்க புகழ் பான்மை யுள்ள இந்திர குலம் மெத்தப் பாங்குள்ளதே விருதாங்குள்ளதே உள்ளதே புலிக்கொடியும் வாகையும்

மேன்மை பொருந்திய விசங்கி நாட்டின் கள்ளச் சாதியார்கள் சோழர்களின் புலிக்கொடியை தங்களது அடையாளமாக கொண்டு இருந்ததாக இங்கு புகழப்பட்டுள்ளது.  சோழ இளவரசன் சேமப்பிள்ளையார் அவர்களின் கல்வெட்டுகள் விசங்கி நாட்டில் கிடைத்ததை முன்பே கண்டோம்.  விசங்கி நாட்டின் தெம்மாவூரில் தான் சோழ இளவரசனின் கோட்டை இருந்ததையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.  சேமப்பிள்ளையார் வழிவந்த கள்ளர் மரபினரே இங்கு புலிக்கொடியை கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.

கிபி 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட மற்றொரு இலக்கியமான ” குன்றக்குடி நொண்டி நாடகம்” புதுக்கோட்டை தொண்டைமான் பற்றி சில வரிகளில் குறிப்பிடுகிறது.  இதில் ” நெடியோன் புலிக்கொடியும் உள்ளோன்,  விசயரகுநாதராய தொண்டைமான் கொண்டாடிப் போற்றி ” எனும் வரிகள் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் விசய ரகுநாத தொண்டைமான் புலிக்கொடியையும் கொண்டு இருந்ததாக குறிப்பிடுகிறது.  சோழர்களின் கிளைக்குடியான தொண்டைமான்கள் தங்களது சோழ அடையாளத்தை உணர்த்தவும் சேமப்பிள்ளையார் வம்சத்தோடு கொண்டிருந்த தொடர்பினாலும் புலிக்கொடியை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் அறந்தாங்கி பகுதியை ஆட்சி செய்த அறந்தாங்கி தொண்டைமான்களும் தங்களை ” சோழ மரபினன்“,சூரிய குலத்தவர், புலிக்கொடி கொண்டோர் ” என தங்களுக்கு இருந்த சோழ தொடர்பை காட்டுகின்றனர்.  ( அறந்தாங்கி தொண்டைமான்கள்- பெருவயல் செப்பேடு)

இதே காலகட்டத்தில் புதுக்கோட்டை பகுதியில் ஆட்சி செய்த பல்லவராயர்களும் தங்களுக்கு சோழர்களோடு இருந்த தொடர்பை விளக்குகின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர் மேல் பாடப்பட்ட ” சிவந்தெழுந்த பல்லவராயர் உலா” வில் சிவந்தெழுந்த பல்லவராயர் ” புலிக்கொடியோன்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.

இப்பகுதியில் வாழ்ந்த பிற கள்ளர் சிற்றரசர்களும் தங்களை சோழர் மரபினராகவே குறிப்பிட்டு உள்ளனர்.

சோழ இளவரசன் சேமப்பிள்ளையாரின் வம்சத்தினர்

கிபி 1508 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை நிலத்தரசு செப்பேட்டில் ” நாராயண பேரரசு மக்கள் கள்ளப்படைத் தலைவரான சோழங்கதேவன்”  எனும் கள்ளர் குல வீரர் குறிப்பிடப்பட்டுள்ளார்.  சேமப்பிள்ளையார் வழியில் சோழ மரபில் வந்தவரே இந்த சோழகங்க தேவர் ஆவார். இன்றும் புகழ்பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் சோழங்கதேவர்களே முதல் மரியாதை பெறுகின்றனர்.

கிபி 1056 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் ராசேந்திர சோழன் கால நார்த்தாமலை கல்வெட்டில் , இரண்டாம் இராசேந்திர சோழனின் சிற்றப்பன்மார்களில் மதுராந்தகன் என்பவர் “சோழகங்கன்” எனும் புனைப்பெயரை பெற்று இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது வழிவந்த கள்ளர் மரபினர் பிற்காலத்தில் சோழகங்கதேவர் எனும் பட்டத்தோடு இப்பகுதியில் வாழ்ந்து வந்ததை மேலே குறிப்பிடப்பட்ட செப்பேடு உரைக்கிறது.(IPS 112)

பெருங்களூர் சிவன் கோயிலில் கிடைத்த கிபி பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய கால கல்வெட்டில் வடமலை நாட்டு அரையர்களில் சோழகத்தேவர் எனும் சோழ குல அரையர் குறிப்பிடப்பட்டுள்ளார்(IPS 765). வடமலை நாடு கள்ளர் நாடான விசங்கி நாட்டின் ஒரு பிரிவாகும். 

கிபி 1316 ஆம் ஆண்டை சேர்ந்த பராக்கிரம பாண்டியன் ஆட்சி காலத்தில் குன்னண்டார்கோயிலில் கிடைத்த கல்வெட்டில் தென்மலை நாட்டை சேர்ந்த சோழகங்க தேவர் அதிகாரியாக குறிப்பிடப்பட்டுள்ளார். தென்மலை நாடு புதுக்கோட்டை  கள்ளர்களின் நாட்டமைப்பில் ஒன்றாகும்.(பு க 446)

கிபி பதினாழாம் நூற்றாண்டை சேர்ந்த மாறவர்மன் வீரப்பாண்டியன் கல்வெட்டு புதுக்கோட்டை வல்லநாட்டு அரையர்களாக சோழன் உலகமாணிக்க பேரரையன்,  சோழன் அரங்குளவ நாட்டரையன்,  சோழகன் முதலானவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.(பு.க 595)

இவர்கள் சோழ இளவரசரான சேமப்பிள்ளையார் ஆட்சி புரிந்த பகுதிகளான விசங்கி நாட்டில் பெருமளவில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குளத்தூர் தாலுகா தென்னங்குடியில் கிடைத்த பாண்டிய மன்னர் சீவல்லபதேவர் காலத்து கல்வெட்டில்,  தென்சிறுவாயில் நாடு மற்றும் குளமங்கல நாட்டில் சோழகர், சோழகங்கதேவர் முதலோனார் வாழ்த்து வந்தததை குறிப்பிடுகிறது. சிறுவாயில் நாடு மற்றும் குளமங்கலநாடு  முதலியவை கள்ளர் நாடுகள் என புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.  இப்பகுதியில் சோழங்கத் தேவர்,  சோழகர் மற்றும் சோழத்தரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.(IPS 636)

கிபி பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த காவியமான ” சீதக்காதி நொண்டி நாடகம்” எனும் நூலில் கள்ளர் குல வீரர் தன்னை” சேமன் வங்கிசத்தில் வந்தோன்” என குறிப்பிட்டுள்ளார்.  சோழ இளவரசன்  சேமப்பிள்ளையார் தன்னை “அழகிய சேமன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.  சோழ இளவரசன் அழகிய சேமன் வழி வந்த கள்ளர் குல வீரன் தன்னை சேமன் வங்கிசத்தவன் என குறிப்பிட்டுள்ளதை இங்கு உணரலாம்.

கிபி 18 ஆம் நூற்றாண்டில் கீரனூரில் சோழங்கத்தேவர் என்பவர் வாழ்ந்து வந்ததாக குளத்தூர் சிவன் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது(IPS 949). குளத்தூர் மற்றும் கீரனூர் விசங்கி நாடு எனும் கள்ளர் நாட்டை சேர்ந்ததாகும்.

புதுக்கோட்டை கள்ளர்கள் சோழகர், சோழங்கத்தேவர், சோழகனார் முதலிய பட்டங்களோடு வாழ்ந்து வருவதாக Pudukkottai manual vol 1 (pg 110-112) , Manual of tanjore in madras presidency மற்றும் Trichinopoly gazetter முதலிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட கொழுமம்- கொமரலிங்கம் எனும் நூலில் ” கொழுமத்தில் கள்ளர்கள் சோழகர், சோழங்கதேவர் முதலான பட்டங்களோடு வாழ்வதாகவும் அவர்கள் தங்களை சோழர்களின் பங்காளிகள் என்றும்,  கரிகால சோழன் வழியினர் என்றும் குறிப்பிடுவதாக கூறப்பட்டுள்ளது.

செமப்பிள்ளையார் வழியினர் பிற்காலத்தில் செப்பிள்ளையார், சேப்பிள்ளையார், சேப்ளார் எனும் பட்டங்களோடு புதுக்கோட்டையில் வாழ்ந்து வருகின்றனர்.1923 ல் எழுதப்பட்ட கள்ளர் சரித்திரம் நூலில் கள்ளர்களின் பட்டமாக ” சேப்பிழார்”  குறிப்பிடப்பட்டுள்ளது.  புதுக்கோட்டையில் பாலையூர் நாடு மற்றும் பெருங்களூர் நாடு பகுதிகளில் சேப்பிள்ளையார்கள் வாழ்ந்து வருவதாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கல்வெட்டு எண் 1054ல் திருவம்பலப்பெருமாள் அழகிய சேமனான நாவிளங்கிதாரன் என சேமப்பிள்ளையார் குறிப்பிடப்பட்டுள்ளார்.  நாவிளங்கியார் எனும் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் இவரது வழி வந்த கிளை மரபினராக இருக்கலாம்.

வரலாற்று சான்றுகள் மற்றும் வாழ்வியல் சான்றுகள் அடிப்படையில் சோழர்கள் கள்ளர் மரபினர் என Manual of tanjore in madras presidency (1883) எனும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகாறும் கூறப்பட்டவை நமக்கு உணர்த்துவது சோழப் பேரரசின் கடைசி இளவரசரான சேமப்பிள்ளையார் சோழரின் வீழ்ச்சிக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுநில மன்னராக சில காலம் ஆட்சி செய்துள்ளார். இதன் பிறகு இவரது வழி வந்த சோழ மரபினர் இப்பகுதியில் தங்களை சோழகுல பேரரையன், சோழங்க தேவர், புலிக்கொடி கொண்டார், சோழ ராசா மரபினன் என்றெல்லாம் வரலாற்று ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். சோழப்பேரரசு உறையூரில் தொடங்கி பிற்காலத்தில் புதுக்கோட்டையில் கரைந்துவிட்டதை கல்வெட்டு ஆவணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

தொகுப்பு: www.sambattiyar.com

Total views 3,627 , Views today 2 

Author: admin

1 thought on “புதுக்கோட்டையை ஆண்ட கடைசி சோழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *