சிங்களர்கள் போற்றிய மனுநீதி சோழன்


மகாவம்சம் எனும் நூல் இலங்கையின் புத்த பிக்குகளால்எழுதப்பட்ட இலங்கை வரலாறு கூறும் தொகுப்பாகும். இலங்கையின் மொத்த வரலாறும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரிய நூலில் சங்க காலத்தில் வாழ்ந்த சோழ மன்னனை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. அவற்றின் தமிழாக்கத்தை காண்போம்.

” கிமு இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உயர்குடிப் பிறந்த சோணாட்டன் ஒருவன் ஈழத்திற்கு வந்தான்.அப்போது இலங்கை அரசனாக இருந்தவன் அலேசன் என்பவன்.  ஈழத்திற்கு வந்த சோணாட்டரசன் பெரும் படையோடு வந்து அலேசனை வென்று 45 ஆண்டுகள் ஈழத்தை ஆட்சி புரிந்துள்ளான்.அந்த சோணாட்டரசன் பெயர் ஏழாரன் என்பது. அவ்வரசன் பகைவர்க்கும் நண்பர்க்கும் ஒரே நீதி வழங்கினான். தன் மகன் தேர் ஊர்ந்து சென்று அறியாது,  பசுவின் கன்றை கொன்றதற்காக, அத்தனி மகனைக் கிடத்தி,  அவன் மீது தானே தேர் ஊர்ந்து கொன்ற உத்தமன். அப்பேரரசன் பௌத்த சமயத்தவன் அல்ல. ஆயினும் புத்த துறவிகள் மேல் பேரன்பு காட்டி வந்தான். அவனது ஆட்சி குடிகட்கு உகந்ததாகவே இருந்தது. அவன் இலங்கையின் வடபகுதியை ஆண்டான். பின்னர் இலங்கையின் அரசனான ” துத்தகாமணி” என்பவன் ஏழாரனை போரில் வென்று தமிழ் அரசை தொலைத்தான்.ஏழாரனை துரத்திச் சென்று அனுராதபுரத்தில் எதிர்த்தான்.அங்கு நடந்த போரில் ஏழாரன் இறந்தான்.தமிழர் சமயக் கொள்கைகள் இலங்கையில் பரவுவதை தடுக்கவும்,  பௌத்தம் காக்கவுமே ஏழாரன் கொல்லப்பட்டான். இங்கனம் வெற்றி பெற்ற இலங்கை மன்னன் ஏழாரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்து முடித்தான். அவன் இறந்த இடத்திலே நினைவுக்குறி எழுப்பி,  வழிபாடு நடைபெற செய்தான்.பின் வந்த ஈழத்தரசரும் அந்த இடத்தை அடையும்பொழுது இசையை நிறுத்தி அமைதியாக வழிபட்டு செல்வது மரபாகும்”

Geiger’s mahavamsa ( ch 21-25)

மேலே குறிப்பிடப்பட்ட ஏழாரன் என்பவர் மனுநீதி சோழனின் பிரதிநிதியாக இலங்கை ஆட்சி புரிந்த சோழன் ஆவார்.  மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் ” பசுவுக்கு நீதி வழங்க மகனின் மீது தேரை ஏற்றிக் கொன்றான்” எனும் நிகழ்வு திருவாரூரில் ஆட்சி புரிந்த மனுநீதி சோழன் பற்றி குறிப்பிடுவதாகும். இவரைப் பற்றியும் இந்த அரிய நிகழ்வு பற்றியும் பல்வேறு வரலாற்று குறிப்புகள் உள்ளன.

பசுவுக்கு நீதியளித்த மனுநீதி சோழன்

மனுநீதி சோழனின் ஆட்சி காலத்தில் இவரது மகன் ஒட்டிச் சென்ற தேரின் சக்கரத்தில் சிக்கி ஒரு இளம் கன்று இறந்தது. துயரமடைந்த தாய் பசு  சோழ மன்னரிடம் நியாயம் கேட்டு நீதி கேட்கும் மணியை ஒலித்தது. .நடந்த நிகழ்வை கண்டு வருத்தமுற்ற மனுநீதி சோழன் இதற்கு ஈடாக தனது மகனையும் சக்கரத்தில் ஏற்றி கொல்ல முயன்றார் என்பது வரலாறு.

இதைப்பற்றி கூறும் சிலப்பதிகாரம் பாடல்

“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என்”  என மனுநீதி சோழன் பற்றி குறிப்பிடுகிறது.

( வழக்குரை காதை 50-63)

அறவாழி மைந்தன் மேல் ஊர்ந்தோன்” என இராசராச சோழனுலா மனுநீதி சோழனை பற்றி குறிப்பிடுகிறது.

மனுநீதி சோழன் திருவாரூரில் உள்ள சிவன் கோயிலான புற்றிடங்கொண்ட பெருமானுக்கு பூசைக்குரிய நிவந்தங்கள் அனைத்தையும் சிவாகம விதிப்படி செய்து முடித்தாராம்.

இதனை ” பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர் எங்கு மாகி இருந்தவர்” என சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

திருத்தொண்டர் புராணத்தில்

பொன்றயங்கு மதிலாரூர்ப் பூங்கோயி 
 லமர்ந்தபிரான் வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே 
யருள்கொடுத்துச் சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க் கென்றுமெளி வரும்பெருமை யேழுலகு மெடுத்தேத்துமே” எனும் வரிகள் அழகிய மதில்களையுடைய திருவாரூரில் அழகிய கோயிலில் வீற்றிருந்த பெருமான்,  மனுநீதி சோழனின் மகனால் கொல்லப்பட்ட பசுவுவை உயிர்ப்பித்து அருளியதாக குறிப்பிடுப்படுகிறது.

இந்த அற்புத நிகழ்வை பற்றி குறிப்பிடும் திருவாரூர் கோயில் கல்வெட்டு பல அரிய தகவல்களை தருகின்றது. திருவாரூர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகார தென்புறச்சுவரில் உள்ள கிபி 1123 ஆம் ஆண்டை சேர்ந்த விக்கிரம சோழன் கால கல்வெட்டில் பின்வரும் தகவல் உள்ளது.

” சூரிய புத்திரனான மனு என்னும் சோழ அரசனின் மகன் ப்ரியவிருத்தன் திருவாரூரில் தேரில் சென்ற போது இளங்கன்று ஒன்று தேரில் அடிபட்டு இறந்தது. இதனால் தாய்பசு திருவாரூரில் இருந்த சோழ அரண்மனை வாயிலில் இருந்த மணியை ஒலித்து நீதி கேட்டது.  நடந்த நிகழ்வுகளை அறிந்த சோழ மன்னன் , தனது மந்திரியான பாலையூருடையான் உபய குலாமலனிடம் தேரில் சென்று தனது மகனான ப்ரிய விருத்தனை கொல்ல ஆணையிட்டார். ஆனால் அமைச்சரோ இதை செய்ய மறுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து சோழ மன்னனே தேரை எடுத்து தனது மகனின் உயிரை பறிக்க புறப்பட்டார். இந்த நேரத்தில் சிவபெருமான் தோன்றி இறந்த பசுவுக்கும் , இறந்துபோன மந்திரிக்கும் உயிரூட்டியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.( திருவாரூர் திருக்கோயில்- குடவாயில் பாலசுப்ரமணியம்)

இதன் மூலம் சங்க இலக்கியங்களும் பிற்கால தமிழ் இலக்கியங்களும் போற்றும் மனுநீதி சோழனின் புகழ் ஈழ நாடு வரை பரவியிருந்த உண்மை சம்பவம் என்பது உறுதியாகிறது. மனுநீதி சோழனின் ஆட்சி காலம் தோராயமாக கிமு இரண்டாம் நூற்றாண்டு என மகாவம்சம் நூல் நமக்கு உணர்த்துகிறது. சங்க காலத்திலேயே ஈழ நாட்டின் மீது சோழர் படையெடுப்பு நடந்துள்ளதையும் , சோழர்களின் நல்லாட்சி ஈழத்திலும் தொடர்ந்துள்ளதையும் இலங்கை நாட்டின் வரலாற்று நூல் வலிமையான சாட்சியாக அமைகிறது. எதிரி மன்னனை வீழ்த்தி அவனது நினைவிடத்தில் மரியாதை செய்த ஈழ மன்னர் துத்தகாமணியின் உயிரிய பண்பு போற்றுதலுக்கு உரியதாகும்.

Article by: www.sambattiyar.com

Total views 2,274 , Views today 3 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *