சங்க காலத்தில் திருக்கோயிலூர் மையமாக கொண்ட பகுதிகள் மலையமான் நாடு , மலாடு மற்றும் மலை நாடு எனும் பெயர்களில் அழைக்கப்பட்டது. திருக்கோவிலூரை மையமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர்.
இப்பகுதியை பிற்கால கல்வெட்டுகள் நடுநாடு, திருமுனைப்பாடி நாடு, சேதி நாடு, மகத நாடு, சனநாத நாடு என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.
மலையமான் திருமுடிக்காரி
சங்க காலத்தில் கோவல் என்று அழைக்கப்பட்ட திருக்கோவலூரை மையமாகக் கொண்டு மலையமான் திருமுடிக்காரி ஆட்சி செய்ததாக சங்க இலக்கியங்கள் உரைக்கின்றன.
” கோவல் கோமான் நெடுந்தேர் காரி” – ( அகநானூறு 35)
” முள்ளூர் மன்னன் கழல் தொடிக்காரி”- ( அகநானூறு 209)
மலையமான் திருமுடிக்காரி கடையெழு வள்ளல்களில் ஒருவராக போற்றப் படுகிறார்.இவர் தன்னை நாடிவரும் புலவர்களுக்கு தேரினை பரிசாக வழங்குவாராம். இதனால் இவர் தேர்வண் மலையன் ( புறம் 125) என போற்றப்படுகிறார்.
மூவேந்தர்கள் மலையனின் உதவியால் வெற்றி பெற்று முடிசூடியதாக புறநானூறு(பாடல் 122) பாடுகிறது.காரி குதிரையில் சென்று போர் புரிவதில் வல்லவர். இவர் தனது குதிரைக்கும் காரி என்றே பெயரிட்டு இருந்தார்.
” கழல்தொடிக்காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஒரிக் கொன்று சேரலர்க்கு நத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி ” எனும் வரிகள் திருமுடிக்காரி கொல்லி மலை மன்னன் ஒரியைக் கொன்று, கொல்லி மலையை சேர அரசருக்கு அளித்ததாக அகநானூறு பாடல் 209 குறிப்பிடுகிறது.
முள்ளூரில் நடந்த போரில், ஆரிய படையை தனது வேல் கொண்டு தாக்கி வென்றதாக காரியை நற்றிணை பாடல் 170 புகழ்கிறது.
” ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர் பலருடன் கழித்த ஒய்வாள் மலையனது ஒரு வேற்கு ஒடியாங்கு “
மலையமான் சோழிய ஏனாதி
சங்க கால குறுநில மன்னரான மலையமான் சோழிய ஏனாதி, பெரும் வள்ளலாகவும் வீரராகவும் திகழ்ந்தார். சோழரது மேலாண்மையை ஏற்று இருந்ததை குறிக்கும் வகையில் சோழிய ஏனாதி என தங்களை குறிப்பிட்டுள்ளனர்.
சோழ மன்னர் எதிரிகளால் வீழ்த்தப்பட்ட போது, அவர் மலையமானிடம் தஞ்சம் புகுந்தார். சோழ மன்னரை தன்னுடைய முள்ளூர் மலையில் பாதுகாத்து வைத்தார் மலையமான். தக்க சூழ்நிலை உருவானதும், சோழ மன்னரின் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் சோழனை அரியணையில் ஏற்றியதாக மலையமான் சோழிய ஏனாதியை புறநானூறு பாடல் 174ல் புகழ்கிறது.
“எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந” – புறம்174
சேரமன்னன் மாத்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழ மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போர் புரிந்த போது மலையமான் சோழனுக்கு ஆதரவாக போரிட்டதாக புறநானூறு பாடல் 125 குறிப்பிடுகிறது.
மெய்ப்பொருள் நாயனார்
நாயன்மார்களில் ஒருவரான மெய்பொருள் நாயனார் மலையமான் மரபில் உதித்தவர். இவரைப் பற்றி பாடிய சேக்கிழார்
“சேதிநன் னாட்டு நீடு திருக்கோவ லூரின் மன்னி
சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான் “
எனும் பெரிய புராண பாடல் வரிகள் மூலம் மொய்பொருள் நாயனாரை சேதிராயர்களின் தலைவன் என புகழ்கிறார். மெய்ப்பொருள் நாயனார் அறநெறியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினார். முத்தநாதன் எனும் மன்னன் இவரை வெல்ல தொடர்ந்து போரிட்டு தோல்வியுடனே திரும்பினார். மெய்பொருள் நாயனாரை வெல்ல இயலாத முத்தநாதன் சூழ்ச்சியால் அவரை வீழ்த்த எண்ணி, சிவனடியார் போல வேடம் பூண்டு வந்தான். சிவனடியார் வேடத்தில் இருந்த முத்தநாதனை மெய்பொருள் நாயனார் வணங்கியபோது தான் வைத்திருந்த கத்தியால் நாயனாரை குத்தினான். மெய்பொருள் நாயனாரின் வீரர்கள் முத்தநாதனை தாக்க முற்பட்ட போது சிவனடியாராக வந்துள்ள முத்தநாதனை தாக்குவது அழகல்ல எனக் கூறி முத்த நாதனை பத்திரமாக வழியனுப்பி வைத்துவிட்டு உயிரிழந்தார். சிவன் மீது மெய்பொருள் நாயனார் கொண்டிருந்த அதீத அன்பை இது நமக்கு உணர்த்துகிறது.
பிற்கால சோழர் காலத்தில் மலையமான்கள்
கிபி பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த சுந்தர சோழன் திருக்கோவிலூர் மலையமான் மகளான வானவன் மாதேவியை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவர்களே சோழ மன்னர்களான ஆதித்த கரிகாலனும், ராஜராஜசோழனும் ஆவர். சுந்தர சோழன் மறைந்தவுடன் ராசராசனின் தாயார் வானவன் மாதேவி உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்.
(Colas: K.A.Nilakanta sastri pg 156)
கிபி 1024ல் இராசேந்திர சோழ மிலாடுடையார் எனும் மலையமான் அரசர் திருக்காளத்திக் கோயிலில் கார்த்திகை விளக்கிட நிவந்தமாகப் பொன் வழங்கியுள்ளார்.
மிலாடுடையான் நரசிங்க வர்மன் எனும் மலையமான் அரசர் இராஜேந்திர சோழன் காலத்து குறுநில மன்னராக திகழ்ந்தவர். இவரது காலத்தில் தான் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோயில் கருங்கற் கோயிலாக எடுப்பிக்கப்பட்டது.
இது தவிர மலையமான்கள் கிளியூர், ஆடையூர் முதலிய ஊர்களில் இருந்தும் ஆட்சி செய்துள்ளனர். கிளியூரை மையமாக கொண்டு ஆட்சி செய்த மலையமான்கள் கிளியூர் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழ சேதிராயன் என்றும், கிளியூர் மலையமான் ராசராச சேதிராயன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.( பிற்கால சோழர் சரித்திரம்- பகுதி 2- சதாசிவ பண்டாரத்தார்- பக் 91)
மலையமான்களும் வாணாதிராயர்களும் ஒரே வழியினராக இருந்ததை வாணகுலராயன் மலையமான், வாணகோவரைய மலையமான் என வரும் கல்வெட்டு ஆதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. (Colas KAN sastri pg 403)
முதலாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு ” கிளியூர் மலையமான்களில் அத்திமல்லனான எதிரிலி சோழ வாணகுலராயன்” என மலையமான்களை வாண.(Ins 390 of 1902)
மலையமான் நன்னூற்றுவன் மலையன் எனும் அரசர் முதலாம் குலோத்துங்கன் காலத்திலும் விக்ரம சோழன் காலத்திலும் அரசியல் அதிகாரியாக இருந்துள்ளார்.
அதிராஜேந்திர கோவலராயன் எனும் மலையமான் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் புகழ் பெற்று விளங்கியுள்ளார்.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் விக்ரவாண்டி எனும் ஊரில் ” சேதிகுலசிந்தாமணி ஈஸ்வரமுடையார்” எனும் திருக்கோயில் மலையமான் சேதிராயர் வம்ச மன்னரால் கட்டப்பட்டது.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் அரங்கநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் தட்சிணாமூர்த்தி தேவரின் திரு உருவத்தை ராஜேந்திர சோழ சேதிராயன் அமைத்துள்ளார். இதே மன்னர் திருநெல்வெண்ணை எனும் ஊரில் நடராஜர் திருவுருவம் அமைக்க உதவியுள்ளார்.
விக்ரம் சோழன் காலத்தில் கங்கவாடி எனும் பகுதியை கைப்பற்ற சோழர்களுக்கு ஆதரவாக மலையமான்கள் போரிட்டுள்ளனர்.
விக்ரம சோழன் காலத்தில் விக்ரம சோழ சேதிராயன் எனும் மலையமான் மன்னர் குறிப்பிடப்படுகிறார். “சேதித்திருநாடர் சேவகன்“என இவர் விக்ரம சோழன் உலாவில் போற்றப்படுகிறார். கருனாடருக்கு எதிரான போரில் இவர் சோழ மன்னருக்கு உதவியதாக போற்றப்படுகிறார்.
விக்ரம் சோழன் காலத்தில் சித்தலிங்கமடம் எனும் ஊரில் உள்ள வியாக்ரபுதீஸ்வரர் கோயிலில் ராஜேந்திர சோழ சேதிராயனின் மகளான ஆளவந்தாள் திருப்பணி செய்துள்ளார்.
இரண்டாம் ராஜாராஜன் காலத்தில் ராஜகம்பீர சேதிராயன் மதிப்பு புகழுடன் விளங்கியுள்ளார்.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், கீழூர் எனும் ஊரில் விக்ரம சோழ சேதிராயனின் மகளான உத்தமசீலி என்பவர் சிவன் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளார்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அரங்கநாதநல்லூரில் உள்ள சிவன் கோயிலின் மண்டபத்தை அழகிய சொக்க சேதிராயன் என்பவர் கட்டியுள்ளார்.
மலையன் நரசிம்மவர்மன் எனும் சேதிராய மன்னர் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் பெருமானம்பி பல்லவராயருக்கு ஆதரவாக ஈழப்படையை எதிர்த்து வெற்றி வாகை சூடினார்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இளவாசனூரில் உள்ள சிவன் கோயிலில் ராஜராஜ மலையகுலராயன் என்பவர் திருமாளிகை அமைத்துள்ளார்.
இதே காலத்தில் கூகையூரில் ராஜராஜ சேதிராயன் என்பவர் திருக்கைலாசம் எனும் கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்.
திருவொரியூரில் சேதிராயத்தேவர் என்பவர் சிவன் கோயிலுக்கான திருமதிலை எழுப்பி திருப்பணிகள் செய்துள்ளார்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முடிகொண்டசோழ சேதிராயன், திருக்கோயிலூரில் உள்ள பெருமாள் கோயிலில் மண்டபங்கள் எழுப்பி திருப்பணிகள் செய்துள்ளார்.
இதே காலத்தில் தஞ்சையில் சேதிகுலமாணிக்க பெரும்பள்ளி எனும் சமண கோயில் சேதிராய மன்னரால் கட்டப்பட்டுள்ளது.
சங்க காலம் முதல் சோழர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த மலையமான்கள், பிற்கால சோழர் காலத்தில் சோழர்களின் மிக முக்கிய தளபதிகளாக விளங்கினர். ராசராச சோழன் எனும் பேரரசரை உலகிற்கு தந்த வானவன் மாதேவியாரே, மலையமான் வம்சத்தவர்கள் எனும் அழியாப் புகழை உடையவர்கள் மலையமான்கள்.
தற்காலத்தில் மலையமான் சேதிராயர்கள்…


சோழர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய மலையமான்கள் பிற்காலத்தில் குறநில தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் வாழத் தலைப் பட்டனர். மலையமான் வம்சாவளிகள் மலையமான் எனும் பெயரிலேயே தோகைமலை வட்டத்தில் உள்ள 47 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பூர்வீகமாக திருக்கோவலூரை கூறுகின்றனர். இவர்கள் பழைமை மாறா பல சம்பிரதாயங்களை இன்றும் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(Trichinopoly gazetteer 1907 pg 109 )
மலையமான் சேதுராயர்கள் கள்ளர் மரபினரின் ஒரு பிரிவனராக வாழ்ந்து வருவதாக 1907 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Trichinopoly gazetter பக் 108 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையிலும் கள்ளரின் ஒரு பிரிவினராக மலையமான் சேதிராயர்கள் வாழ்ந்து வருவதாக 1906 ல் எழுதப்பட்ட Tanjore gazetter பக் 76 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் கள்ளர்களின் ஒரு பிரிவினராக சேதிராயர்கள் வாழ்ந்து வருவதாக 1920ல் எழுதப்பட்ட Manual of pudukkottai state vol 1 பக் 110 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிபி 1262 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்து காஞ்சிபுரம் கல்வெட்டில் ” மகதராயன் கல்லன் ” எனும் குறுநில தலைவர் அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மகத நாட்டின் தலைவனாக குறிப்பிடப்பட்டுள்ளார். ( கல்வெட்டு 192 of 1901)

மலாடு எனும் சேதி நாடு, மகதை மண்டலத்தின் ஒரு பகுதி எனும் வகையில் ” மகதை மண்டலம் மலாடாகிய ஜனநாத நாடு ” என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.( சேலம்- நாமக்கல் வட்ட கல்வெட்டுகள் பக் 57)

திருக்கோவலூர் வட்டத்தில் மகதநாட்டை ஆட்சி செய்த வாணாதிராயர்களும் தங்களை மகத நாட்டின் தலைவர் என குறிப்பிட்டுள்ளனர். ஏகம்ப வாணன் எனும் வாணதிராய மன்னரை பற்றிய பெருந்தொகை பாடல் இவர்களை
” மகதேசன் ஆறைநகர் காவலன் வாண பூபதி ” என குறிப்பிட்டுள்ளனர்.
மலையமான்களும் வாணாதிராயர்களும் ஒரே கொடி வழியினர் என குறிக்கும் வகையில் கல்வெட்டுகளில் வாணகுலராயன் மலையமான், வாணகோவரைய மலையமான் என மலையமான்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.(Colas KAN sastri pg 403)
மகத தேசத்தை ஆண்ட வாணகோவரைய மலையமான்கள் மகதேசன் என்றும் மகதராயன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதே மகதராயர்கள் கல்வெட்டுகளில் ” மகதராயன் கல்லன்” என குறிப்பிடப்பட்டுள்ளது இவர்கள் கள்ளர் வம்சத்தினர் என்பதனை உணர்த்தும். விசங்கி நாட்டு கள்ளர்கள் ஆட்சி செய்த புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் மகதராயன் எனும் அரையர் வாழ்ந்ததை புதுக்கோட்டை கல்வெட்டு எண் 636 குறிப்பிடுகிறது.

சேதி நாடு எனும் மகத நாட்டை ஆட்சி செய்த கள்ளர்கள் குல மலையமான்கள் சேதிராயர் எனும் பட்டத்தோடு புதுக்கோட்டை தஞ்சை திருச்சி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.







இதே போல் கள்ளர்களின் உறவினர்களான மறவர் குலத்து ஊர்க்காடு ஜமீனும் தங்களை சேதுராயர் என்றே குறிப்பிட்டு உள்ளனர்.

சோழர்களோடு மிக நெருங்கிய உறவில் இருந்த மலையமான் சேதிராயர்கள் தஞ்சையில் பெருமளவில் குடியேறியுள்ளனர். இன்றும் கள்ளர் குல சேதிராயர்கள் தஞ்சையில் இளங்காடு, திருச்சின்னம்பூண்டி, திருவேதிக்குடி, வேதபுரம், ஒரத்தநாடு வட்டத்தில் தென்னமநாடு, பனையக்கோட்டை தலையமங்கலம், சேதிராயன் குடிகாடு ஆகிய பகுதிகளிலும், மன்னார்குடி வட்டத்தில் சோழபாண்டியிலும் புதுக்கோட்டை வட்டத்தில் மழையூர் உள்ளிட்ட பல ஊர்களில் சேதிராயர்கள் வாழ்ந்து வருகின்றனர்.



மகதையாண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் தஞ்சையில் துறையுண்டார்க்கோட்டை, பனையக்கோட்டை முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். கள்ளர் குல சேதிராயர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் சேதிராயர் எனும் பெயரை மையமாக வைத்து ஊர்களை உருவாக்கியுள்ளதை பின்வருமாறு அறியலாம்.
சேதுராப்பட்டி:- திருச்சி மாவட்டம், மணிகண்டம் வட்டத்தில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் மிகுந்து வாழும் சிற்றூர்.
சேதுராப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் திருநல்லூர் ஊராட்சியில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்
சேதுராப்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் , சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராவயல்: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் வட்டத்தில், மேலப்புதுவயல் ஊராட்சியில் சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராயன்ஏந்தல்:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மாங்குடி ஊராட்சியில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராயன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராயன்நத்தம்:- திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் வட்டம், மாணிக்கமங்கலம் ஊராட்சியில் கீழ சேதுராயநத்தம்/ மேல சேதுராயநத்தம் என இரு ஊர்கள் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்.
கிளியூர் மலையமான்களின் வழிவந்த கள்ளர்கள் இன்றும் கிளியூரார், கிளியாண்டார் பட்டத்துடன் தஞ்சையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் ஊருக்கும் கிளியூர் என்றே பெயரிட்டு உள்ளனர். கிளியாண்டார்கள் திருச்சி துளசிமகா நாட்டிலும் வாழ்ந்து வருகின்றனர்.

மலையமான்களின் ஆட்சிப்பகுதியில் இருந்த மற்றொரு நாடு திருமுனைப்பாடி நாடாகும். இந்த நாட்டை ஆட்சி செய்த கள்ளர்கள் முனையதரையர் எனும் பட்டம் பெற்றனர். கள்ளர் குல முனையரையர் வம்சத்தினர் திருச்சி மாவட்டம் கூத்தைப்பார், தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு, புதுவூர், கருக்காக்கோட்டை மற்றும் மன்னார்குடி நெடுவாக்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர். புதுக்கோட்டையில் முனையதரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழ்ந்து வருவதாக 1920 ல் எழுதப்பட்ட Manual of pudukkottai state vol 1 பக் 110 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மலையமான்கள் ஆட்சி செய்த திருக்கோவலூர் அமைந்திருந்த பகுதி நடுநாடு என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. நடுநாட்டை ஆண்டை கள்ளர்கள் நடுவாண்டார் என்றும் நெடுவாண்டார் என்றும் விருதுப்பெயர்களுடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். நெடுவாக்கோட்டை எனும் ஊரில் பெருமளவிலான நெடுவாண்டார்கள் வாழ்ந்து வருகின்றனர். இது தவிர மற்ற பல ஊர்களிலும் கணிசமான அளவில் நெடுவாண்டார்கள் வாழ்ந்து வருகின்றனர்.நெடுவாண்டார் வம்சத்தினர் கள்ளரில் ஒரு பிரிவினராக வாழ்ந்து வருவதாக Tanjore gazetter பக் 85 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையமான் திருமுடிக்காரியின் வழிவந்த கள்ளர்கள் காரியார், காரியர் பட்டத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். காரியார்கள் புதுக்கோட்டை மாவட்டம் பாத்தம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் பரவி வாழ்கின்றனர்.


மலையமான்கள் தங்களை வாணகோவரைய மலையமான்கள் என பல கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். வாணராயரும் மலையமான்களும் ஒரே வழியினர். வாணாதிராயர்கள் கள்ளரில் ஒரு கிளையினராக இருப்பதாக Tanjore gazetter பக்கம் 85 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. வாணாதிராயர் வம்ச கள்ளர்கள் தஞ்சையில் அத்திவெட்டி, அணைக்காடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டத்தில் வாணாதிராயன் குடிகாடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டத்தில் வாணாதிராயன்பட்டி முதலிய ஊர்கள் இன்னோர் பெயர்களில் அமைந்துள்ளதாகும்.




சங்க காலம் முதல் பிற்கால சோழர் காலம் வரை கோலோச்சிய தமிழ் மன்னர்களான மலையமான்களின் வரலாறு தமிழகத்தின் பொற்காலங்களில் இன்றியமையாதது ஆகும். வீரம், அறம் மற்றும் கொடை என அனைத்து பண்புகளிலும் சிறந்து விளங்கிய மலையமான் சேதிராயர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்……
Article by : www.sambattiyar.com
Total views 4,023 , Views today 5