கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழர் காலத்தில் சோழர்களின் எழுச்சி தொடங்கியது. சோழப் பேரரசு முதலாம் ராசராசன் காலத்தில் உச்சத்தை அடைந்தது. சோழப் பேரரசின் எழுச்சியிலும் வளர்ச்சியிலும் பல்வேறு குறுநில மன்னர்களும் படை வீரர்களும் தங்களது பங்களிப்பை செலுத்தியுள்ளனர். இவர்களில் மன்னார்குடி வட்டத்தை சேர்ந்த அதிகாரிகளும் படைவீரர்களும் மிக முக்கியத்துவம் பெற்று விளங்கினர். அவர்களில் சிலரைப் பற்றி காண்போம்.
கிபி பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு மன்னை ராஜகோபாலசாமி கோயிலின் முன்னால் இருந்த மாமரத்தின் அடியில் இராசாதிராசதுர்வேதி மங்கலத்து சபையார் கூடி மன்னார்குடியில் உள்ள காடு, நாடு, நகரம், கள்ளர்பற்று முதலியவற்றின் மூலம் 30,000 காசு வசூலித்து கோயிலுக்கு கொடுக்க முடிவு செய்த தகவலை தருகிறது.(கல்வெட்டு எண் 103 of 1897)


” பண்ணினபடி காடும் நாடும் நகரங்களும் கள்ளப்பற்றுமகப்பட முப்பதிநாயிரங் காசுக்கு” எனும் கல்வெட்டு வரிகள் இத்தகவலை தருகிறது. இவ்வட்டத்தில் உள்ள காடு, நாடு, நகரங்கள் மற்றும் கள்ளர்களின் படைபற்றுகள் மூலம் கொடை வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். கள்ளர்களின் படைப்பற்று மற்ற பிற நாடு காடு நகரங்களில் இருந்து தனித்து காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற மற்றொரு கல்வெட்டு புதுக்கோட்டை குடுமியான்மலை கோயிலில் கிடைக்கிறது. கிபி 1228 ஆம் ஆண்டை சேர்ந்த முதலாம் சுந்தரபாண்டியன் காலத்து இக்கல்வெட்டில் ” சோழவளநாட்டு நாடும் நகரமும் கிராமங்களும் வன்னியர்களும்( படைவீரர்) படைபற்றுகளும் நிறைவற நிறைந்து குறைவற கூடி” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார்குடி கல்வெட்டைப் போல் இக்கல்வெட்டிலும் நாடும் நகரமும் கிராமங்களும் படைபற்றுகளும் என படைபற்றானது மற்ற பகுதிகளில் இருந்து தனித்து காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.( கல்வெட்டு: IPS 285)
இதன் மூலம் மன்னார்குடியில் வட்டத்தில் கள்ளர்களின் படைபற்றுகள் நிரம்பி இருந்ததை முதலாம் குலோத்துங்கன் கால கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.
இப்பகுதியில் இருந்து சோழப் பேரரசின் படைத்தலைவராகவும் முக்கிய அமைச்சராகவும் பணியாற்றிய சிலரைப் பற்றி காண்போம்.

அரசூருடையான் சென்னிப் பேரரையன்
இவர் சோழ மண்டலத்து பாம்புணிக்கூற்றத்தை சேர்ந்தவர். பாம்புணிக் கூற்றம் இன்றைய மன்னார்குடி பகுதியை குறிக்கும். கிபி பத்தாம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் ஆட்சி காலத்தில் பாண்டிய மன்னன் இராசசிம்மன் படையும் இலங்கை சிங்கள தளபதி சக்க சேனாதிபதியின் சிங்களைப்படையும் கூட்டு சேர்ந்து சோழருக்கு எதிராக போர்க்களம் கண்டது. பாண்டிய நாட்டு வெள்ளலூர் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் சோழர் படையின் தளபதிகளாக கொடும்பாளூர் வேளிர் மன்னன், பழுவூரை ஆண்ட பழுவேட்டரையர் கண்டன் அமுதன், பரதூருடையான் நக்கன் சாத்தன் முதலானோர் போரிட்டனர். இவர்களோடு மன்னார்குடியை சேர்ந்த சென்னிப் பேரரையனும் சோழத் தளபதியாக போரிக்களம் கண்டார். இப்போரில் பாண்டியர் மற்றும் ஈழப்படை தோற்கடிக்கப்பட்டு பாண்டிய நாடு முழுமையும் சோழரின் கட்டுப்பாட்டில் வந்தது.( கல்வெட்டு எண்:Sii vol 3: 99)
மன்னார்குடியில் கள்ளர்களின் படைபற்றுகள் செறிந்து இருந்ததை கண்டோம். இன்றும் இப்பகுதியில் சென்னிக்கொண்டார், சென்னித்தலைவர், சென்னிநாடர்,சென்னியாண்டார், சென்னிராயர் முதலிய பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.( நூல்: கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் : ஒரு வரலாற்றுப் பார்வை பக் 256 / இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் நிதி உதவியில் வெளியிடப்பட்டது)
ஈராயிரவன் பல்லவராயன் ஆன மும்முடி சோழ போசன்
இவர் பாம்புணிக் கூற்றம் எனும் மன்னார்குடியில் அரசூரில் வாழ்ந்தவர். முதலாம் இராசராச சோழனின் அதிகாரிகளுள் ஒருவராவார். தஞ்சை பெரிய கோயிலில் சண்டேசுர தேவரை எழுந்தருளிவித்து வழிபாட்டிற்கு நிவந்தங்கள் அளித்தார். இராசராச சோழனின் திருமந்திர ஒலை நாயகமாகவும் இவர் விளங்கியுள்ளார். ஆனைமங்கல செப்பேடு குறிப்பிடும் அதிகாரிகளுள் இவரும் ஒருவராவார். இவர் ராஜேந்திர சோழன் காலத்திலும் உயர் அதிகாரியாக திகழ்ந்துள்ளார்.
இன்றும் கள்ளர் குல பல்லவராயர்கள் மன்னார்குடி வட்டத்தில் மூவாநல்லூர் உள்ளிட்ட பல ஊர்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.



வேளான் உத்தமசோழனாகிய மதுராந்தக மூவேந்த வேளான்
இவர் அருமொழிதேவ வளநாட்டு நென்மேலி நாட்டு பருத்திக்குடியை சேர்ந்தவர். இராசராச சோழனிடத்தில் திருமந்திர ஒலை நாயகம் எனும் உயர் அதிகாரியாக திகழ்ந்தார். நென்மேலி நாடு மன்னார்குடி பகுதியில் அமைந்துள்ள பகுதியாகும்.
கங்கை கொண்டானாகிய பொத்தபிச் சோழன்
இவர் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் ராசாதிராசன் காலத்தில் சுத்தமல்லி வளநாட்டில் வெண்ணிக்கூற்றத்தில் இருந்த அரசியல் அதிகாரி ஆவார். வெண்ணிக்கூற்றம் இன்றைய மன்னார்குடி வட்டத்தில் அமைந்து இருந்த பகுதியாகும். இவர் ஆந்திர தேசத்தில் நடைபெற்ற போரில் பங்கேற்றதால் பொத்தப்பி சோழன் எனும் விருது பெற்றார். இவர் திருவலஞ்சுழி இறைவர்க்கு நிவந்தங்கள் அளித்துள்ளார்.
இங்கனம் சோழப் பேரரசு உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் மன்னார்குடி பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான கள்ளர் போர்வீரர்களும் பல்வேறு படைத்தலைவர்களும் அதிகாரிகளும் பணியாற்றியுள்ளனர். இன்றும் மன்னார்குடியில் பல்வேறு பட்டப்பெயர்களோடு கள்ளர் மரபினர் வாழ்ந்து வருவது சோழப் பேரரசின் வாழ்வியல் சான்றாக அமைந்துள்ளது.
Total views 1,773 , Views today 1