மதுரை நாட்டில் 1019 முதல் 1070 வரை சோழ நாட்டுப் பிரதிநிதிகளின் ஆட்சி நடந்தபோது திருவாங்கூரை ஆண்ட அன்றைய மன்னன் எடுத்த ஒரு ஒப்பந்த முடிவின்படி திருவாங்கூர் என்ற வேணாட்டின் பெரும்பான்மையான சொத்துக்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப ஆலயத்திற்கு வழங்கப்பட்டது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தக் குழுவில் பரம்பரைப் பெருமை கொண்ட எட்டு பிராமணக் குடும்பங்களின் தலைவர்களான மாடம்பிமார்களும் திருவாங்கூர் மன்னரும் இடம் பெற்று இருந்தனர். மன்னர் பெயரளவில் தான் இடம் பெற்று இருந்தார். பத்மநாப ஆலயத்துக்குச் சொந்தமான சொத்துக்களிலிருந்து வரும் வருவாயை வசூலித்து அதை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றிருந்த அந்தக் குழுவினர் ‘யோகக்காரர்கள்’ என்ற பட்டம் பெற்று இருந்தனர். ஆலயத்தின் சொத்துக்கள் உள்ள பகுதிகள் எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாவட்டங்களிலிருந்து வருவாயை வசூலிக்கும் பொறுப்பில் எட்டுக் குடும்பத்தின் பிரபுக்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தான் ‘எட்டு வீட்டில் பிள்ளைமார்’ என்றழைக்கப்பட்டனர்.
எட்டு வீட்டில் பிள்ளைமார்கள் அவர்கள் தங்களுக்கு மேல் அதிகாரம் உள்ளவர்கள் பிராமணர்கள் என்பதாலும், குழுவில் இருந்தாலும் திருவாங்கூர் மன்னருக்கு அதிகாரம் இல்லை என்பதாலும், வலிமை மிக்க நாயர் படை அவர்களின் ஆணைக்குக் காத்து இருந்ததாலும், காலப்போக்கில் சொத்துக்கள் அனைத்தையும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு திருவாங்கூரை மனம் போன போக்கில் ஆளத்தொடங்கினார்கள்.
பிற்காலத் திருவாங்கூர் சரித்திரத்தில் அழியா இடம் பெற்ற மார்த்தாண்டவர்மன்(1706-1758) இளவரசராக முடிசூட்டப்படுகிறார். இளவரசராக இருக்கும்போதே மார்த்தாண்டவர்மன் பிள்ளைமார்களின் சூழ்ச்சியால் பல்வேறு சோதனைகளைச் சந்திக்கிறார்.
மார்த்தாண்டவர்மன் குஞ்சு தம்பிகள் மற்றும் எட்டு வீட்டில் பிள்ளைமார் விவகாரங்களைச் சற்று தள்ளிப்போட்டு அரசியலில் சில பிரச்சனைகளில் நிரந்தரத் தீர்வுகளுக்கு திட்டமிடத் தொடங்கினார். முந்தைய மன்னரின் காலத்தில் உருவாக்கப்பட்ட திருச்சிராப்பள்ளிப் படைகளும் தனது தனிப் படையான மறவர் படைகளும் தனக்குப் பெரும் பாதுகாப்பாக இருப்பதால் மற்ற முக்கிய நாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தலானார்.

நிலங்களில் வரவேண்டிய நிலுவைத் தொகைகளைத் தானே நேரில் தலையிட்டு வசூல் செய்து கடன் சுமைகளைக் குறைத்து அரசு கஜானா நிரம்பும் வண்ணம் நிர்வாகம் செய்தார். திருவாங்கூர் நாட்டில் அதிக விளைச்சல் தரும் பகுதியான நாஞ்சில் நாட்டில் நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்கினார். புதிய அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களை உருவாக்கினார். இவ்வாறு நாட்டு மக்கள் நலம் பெறும் திட்டங்களை உருவாக்கும் பணியில் மார்த்தாண்டவர்மன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எட்டு வீட்டில் பிள்ளைமார்களும் குஞ்சு தம்பிகளும் இணைந்து ஒரு பெரிய சதித்திட்டத்தை மன்னருக்கு எதிராக உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். வெவ்வேறு இடங்களில் சந்தித்து தங்களின் சதி ஆலோசனைகளை நடத்தி வந்தனர். இந்தக் கூட்டுச் சதிக்குத் தலைமைப் பொறுப்பேற்றவர் பாப்பு தம்பியாவார். பத்மநாபபுரம் மற்றும் ஆத்திங்கள் இடைப்பட்ட பகுதியில் வாழும் பிரபுக்கள் இந்தச் சதியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டனர்.

மார்த்தாண்டவர்மரின் ஒற்றர்கள் இந்தச் சதிகாரர்களின் ஆலோசனைக் கூட்டங்களைப் பற்றி தகவல் தெரிவித்தனர். உடனடியாகத் தன் நம்பிக்கைக்குரிய பல உளவாளிகளையும் ஒற்றர்களையும் மன்னர் பயன்படுத்தி, தக்க ஆதாரங்களோடு குற்றவாளிகளைப் பிடிக்க எண்ணினார். நாடு முழுவதும் மார்த்தாண்டவர்மனின் ஒற்றர்கள் மாறுவேடத்தில் கவனமாகக் காத்து இருந்தனர்.
‘துலாம் மாதத்தில் ஆராட்டு ஊர்வலத்தின்போது திருவாங்கூர் மன்னர்கள் விக்ரகங்களைச் சுமந்த வண்ணம் சிறிது தூரம் நடந்து வருவது காலங்காலமாகக் கடைப்பிடிக்கும் மரபு. அந்தச் சமயம் எட்டு வீட்டில் பிள்ளைமார் மற்றும் எட்டு யோகக்காரர்கள் அவர்களோடு நெருங்கிய தொடர்புடைய மூத்தாடத்து பண்டாரம், எழும்பாலை பண்டாரம், எழும்பள்ளி பண்டாரம், எடுத்தாரை பொட்டி என்ற நான்கு பிராமண பிரபுக்களும் தவறாது தங்களின் நாயர் படைகளோடு ஊர்வலத்திற்கு வருவது போல் வருகை தருவது என்றும், கடற்கரையில் பூஜைக்காக விக்ரகங்கள் வழக்கப்படி வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டுச் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் மன்னர் ஓய்வெடுக்கத் தன் மாளிகைக்குத் திரும்பும் சமயம் ஒரே சமயத்தில் நாயர் படைகள் திடீரெனத் தாக்குதல் தொடுத்து மன்னரைக் கொலை செய்ய வேண்டும் எனவும் திட்டமிட்டனர்.

அவ்வமயம் எட்டு வீட்டில் பிள்ளைமார் மற்றும் யோகக்காரர்களும் பிற பிரபுக்களும் என்ன நடக்கிறது என்பது அறியாமல் திகைத்து, செய்வதறியாது நின்றது போலவும் நடிக்க முடிவெடுக்கின்றனர். அதில் மன்னரின் பாதுகாப்புக்காக இருக்கும் மறவர் படைகள் மன்னரைக் காக்கும் முயற்சியிலோ அல்லது கொலையாளிகளைத் தாக்கும் முயற்சியிலோ இறங்கும் பட்சத்தில் அவர்களையும் தாக்கி ஒட்டுமொத்தமாக அனைவரையும் கொல்லவேண்டும்.’ அதுவே அவர்களின் சதித்திட்டத்தின் முழு சாராம்சமாகும்.
அந்தச் சதித்திட்டங்களை நேரில் பார்த்த சாட்சி, வெங்கனூர் பிள்ளையிடத்தில் பணிபுரியும் ஒரு வயதான பண்டாரம் ஆவார். அவர் வெங்கனூர் பிள்ளையின் பணியாளராக இருக்கும் அதே நேரத்தில் மார்த்தாண்டவர்மனின் உளவாளியாகவும் விளங்கினார். கண் மற்றும் காது குறைபாடு உள்ளவரைப் போல் நடித்து வேவு பார்த்து மார்த்தாண்ட வர்மனுக்குத் தகவல் அனுப்பினார். பண்டாரத்தின் தகவல் மார்த்தாண்டவர்ம மகாராஜாவுக்குக் கிடைத்த மறு நிமிடமே சதிகாரர்களின் தூதுவர்களை உயிருடன் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டுபேர் ஓலைகளோடு பிடிபட்டனர். அவர்கள் ரகசிய இடத்தில் சிறைவைக்கப்பட்டனர்.
உற்சவம் ஐப்பசி மாதத்தில் துவங்கியது. அதே சமயம் எட்டு வீட்டில் பிள்ளைமார் மற்றும் பிற தலைவர்களின் படைகள் தலைநகரில் திட்டமிட்டப்படி குவிக்கப்பட்டன. அந்த ஆராட்டு நாளில் வழக்கத்திற்கு மாறாக மன்னரின் மறவர் படை விக்கிரகங்களைச் சுற்றி வியூக வளையங்கள் வகுத்து வர, நடுவில் மன்னர் மார்த்தாண்டவர்மன் எந்தவித பயமுமின்றி விக்கிரகங்கள் முன்னே ஒரு பெரிய அகலமான வாளைச் சுழற்றியபடி நடந்து வந்தார்.
ஆராட்டு விழாவில் அன்று மன்னர் மார்த்தாண்டவர்மனின் தனிப்பட்ட வலிமையான தோற்றத்தையும், மன்னருக்குப் பாதுகாப்பு வியூகம் அமைத்து நடந்து வரும் மறவர் படையையும் பார்த்த மாத்திரத்திலேயே எட்டு வீட்டில் பிள்ளைமார் மற்றும் யோகக்காரர்கள் பயந்து நடுங்கி தங்கள் திட்டத்தைக் கைவிட்டனர். ஆராட்டுத் திருவிழா இனிதே முடிந்தது. உடனடியாக மார்த்தாண்ட வர்மன் தலைநகரில் பாதுகாப்பை அதிகப்படுத்தினார்.
1733-ல் ஒரு நாள் மன்னர் திருவாங்கூரிலிருந்து நாகர்கோவில் அருகில் இருக்கும பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்றடைந்தார். அங்கே தன் எதிரிகள் அனைவருக்கும் முடிவு கட்டத் திட்டமிட்டு இருந்தார். தன்னிடமிருந்து உத்தரவு கிடைத்த மறுநிமிடம் எட்டுவீட்டில் பிள்ளைமார், யோகக்காரர்கள், பண்டாரங்கள் மற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்ட அத்தனை தலைவர்களையும் உடனடியாகப் பிடிக்க ராம ஐயன் மூலம் ரகசிய உத்தரவுகள் படைத்தலைவர்கள் அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டு இருந்தன. அந்த உத்தரவுகளை விரைவாகக் கொண்டுசெல்ல நாகர்கோவிலிலிருந்து திருவாங்கூர் வரை மறவர் குதிரைப் படைகள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டு இருந்தன.
அன்று மன்னர் எதிர்பார்த்தபடி சதிகாரர்களான குஞ்சு தம்பிகள் மன்னரைச் சந்திக்க வந்தனர். மன்னர் மாளிகையின் மாடியில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். குஞ்சு தம்பிகளில் மூத்தவரான பாப்பு தம்பி, முன்னாள் மன்னரின் மகன் என்ற இறுமாப்பில் மன்னரின் மறவர்குலப் பாதுகாப்புப் படைகளைத் தாண்டி மாடிப் படிகட்டுகளை நெருங்க, மறவர் படை தடுக்க, வாக்குவாதம் தொடங்கி முற்றியது. பாப்பு தம்பி தன் வாளை எடுத்து ஒரு மறவர் வீரரை நோக்கி வீசிய நேரத்தில் அவரது கழுத்தில் மறவர் வீரர்களின் பல வெட்டுகள் விழுந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
அதைக் கண்ட ராமன் தம்பி மாடிப் படிக்கட்டுகளில் தாவி ஏறி மன்னர் இருக்கும் அறையில் நுழைந்து ஊஞ்சலில் அமர்ந்திருந்த மன்னரை நோக்கித் தனது குறுவாளைப் பலமாக வீசினார். அந்த வாள் மன்னர் அமர்ந்திருந்த ஊஞ்சலின் சங்கிலியில் பட்டுத் தெறித்தது. இரண்டாவது முறை வாள் வீசுவதற்கு முன் கண்ணிமைக்கும் நேரத்தில் மன்னர், ராமன் தம்பி மீது பாய்ந்து, அவரைக் கீழே சாய்த்து அவரது மார்பில் அமர்ந்து தன் பாரசீகக் கட்டாரியை ராமன்தம்பியின் இதயத்தில் ஆழமாக இறக்கினார். அதே வேகத்தில் ராமன் தம்பியைத் தூக்கி அரண்மனைச் சாளரத்தின் வழியாக வெளியே தூக்கி வீசினார் மார்த்தாண்டவர்மன்.
அன்று பொழுது விடிவதற்குள் எட்டு வீட்டில் பிள்ளைமார், மாடம்பிமார், யோகக்காரர், பண்டாரங்கள், அனைவரும் ஒட்டு மொத்தமாகக் கைது செய்யப்பட்டனர். குஞ்சு தம்பிமார்களின் ஆதரவாளர்கள் சிலர் மன்னரின் மறவர் படையால் வெட்டிக் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கல்குளம் என்ற ஊரில் மன்னர் மார்த்தாண்டவர்மன் முன் நிறுத்தப்பட்டனர். விசாரணை துவங்கியது. ஓலைகளும் அவற்றைக் கொண்டு சென்ற தூதுவர்களும், மேலும் சதி ஆலோசனையை நேரில் பார்த்த வயதான பண்டாரமும் சாட்சிகளாகக் கொண்டு விசாரணையை நடத்தி முக்கியமான 42 பேர்களுக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் மன்னர் மார்த்தாண்டவர்மன்.
சதியில் பங்கு கொண்ட நான்கு பிராமணர்களின் நெற்றியிலும் ‘நாய்’ உருவம் வரையப்பட்டுச் சாதி நீக்கம் செய்த பின் நாடு கடத்தப்பட்டார்கள். எட்டு வீட்டில் பிள்ளைமார்களின் பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்ய வேண்டாம் என மன்னர் மார்த்தாண்டவர்மன் முடிவு எடுத்தார். எட்டு வீட்டில் பிள்ளைமார் மற்றும் மாடம்பிமார்களின் பெண்களையும் குழந்தைகளையும் மீனவர்களிடம் அடிமைகளாக விற்று விட உத்தரவிட்டார்.
அந்தப் பெண்கள் மீனவர்களுடன் கலந்து சாதிப் பெருமையை இழக்கவும், மேலும் சதிகாரர்களின் குழந்தைகளின் மனதில் எக்காலத்திலும் திருவாங்கூர் அரச குடும்பத்திற்குத் துரோகம் செய்யும் எண்ணம் எழக்கூடாது எனவும் மன்னர் விரும்பினார். ஆகவேதான் மேற்கூறிய தண்டனையை எட்டு வீட்டில் பிள்ளமார்களின் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அளித்தார்.
கடந்த பல நூற்றாண்டுகளாகத் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தைத் தங்களின் பிடிக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்குரிய உடமைகள், உரிமைகளை மட்டுமல்லாமல் உயிர்களையும் நீக்கி வெளி உலகிற்குத் தெரியாமல் சர்வாதிகாரிகளாக விளங்கிய எட்டு வீட்டில் பிள்ளைமார்களின் ஆதிக்கத்தை அடியோடு அழித்த பெருமை மன்னர் மார்த்தாண்டவர்மனுக்கு மட்டுமே கிடைத்தது.
எட்டு வீட்டில் பிள்ளைமார்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு மார்த்தாண்டவர்மன் எடுத்த நடவடிக்கையினால் மலபாரில் நீண்ட காலமாகக் கடைபிடிக்கப்பட்ட அரசியல் மரபுகள் மீறப்பட்டன என்பது மலபாரின் அரசியல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும். மலபாருக்கு அந்நியர்களும் திருவாங்கூர் நாட்டின் கிழக்குக் கரையிலிருந்து மார்த்தாண்டவர்மனால் தேர்வு செய்யப்பட்டவர்களுமான மறவர் படைகளைக் கொண்டு மலபாரின் வீரப் பரம்பரையான நாயர் படைகளை மலபார் வரலாற்றில் முதன் முதலாகத் தோற்கடித்தவர் மன்னர் மார்த்தாண்டவர்மனாவார்.
திருவாங்கூர் சமஸ்தானத்தை காத்து கயவர்களை ஒழித்து அமைத்தியை நிலை நாட்டியதில் திருநெல்வேலி பகுதி மறவர்களின் பங்கு வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்…
தொகுப்பு : www.sambattiyar.com
( Ref: Travancore state manual 1906/ மாவீரர் சசிவர்ணத்தேவர் வரலாறு: மருதுமோகன்)
Total views 2,991 , Views today 1