கிபி 19 ஆம் நூற்றாண்டின் இறுதி காலம், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என எண்ணவோட்டம் மக்களிடத்தில் நிறைந்து காணப்பட்ட காலகட்டம். இத்தகைய காலகட்டத்தில் பல்லவராயர் வம்சத்தில் உதித்து, கிபி 1886 ல் புதுக்கோட்டை மன்னராக, பதவியேற்றார் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான். உயர்ந்த கல்வியும் , முற்போக்கு சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், பெண்களுக்கான கல்வி மற்றும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஆதீத கவனம் எடுத்துக் கொண்டார். தனது ஆட்சிக்காலத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தினார்.
பெண்களுக்காக…..
புதுக்கோட்டை மன்னரான மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான் காலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு பல முன்னெடுப்புகள் கொண்டு வரப்பட்டது.
- ராணியார் பெண்கள் பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார மையம், ராணியார் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
- பெண்களுக்கான பிரத்யேகமாக தனியாக நான்கு நூலகங்கள் உருவாக்கப்பட்டன.
- 1902 ல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவமனை தொடங்கப்பட்டது.
- 1915 ல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டன.
- 1915ல் பெண்களுக்கான கல்வி தரத்தை உயர்த்த 5000 ரூபாயை ஒதுக்கினார்
இன்று பெண்கள் உரிமை பற்று பேசுவது சாதாரணமான செயலாக இருந்தாலும், நூறாண்டுகளுக்கு முன்பே பெண்களின் கல்வி , சுகாதாரம் மற்றும் உரிமைகளில் அக்கறை கொண்டு
பல திட்டங்களை வகுத்து மன்னர் செயல்பட்டது அக்காலத்தில் மிக பரபரப்பாக பேசபட்டது.
(Manual of pudukkottai state vol 2 part1)
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கிய மன்னர்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கிபி 1886, ஜூலை முப்பதாம் நாள் , புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பிறந்தார். இவரது தந்தை நாராயணசாமி ஐயர். இவர் அந்த காலகட்டத்திலேயே இசை வேளாளர் வகுப்பை சேர்ந்த சந்திரம்மா என்பவரை கலப்பு திருமணம் செய்துக்கொண்டவர். பிராமணர்- இசை வேளாளர் பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் சுந்தர ரெட்டி என்பவரை திருமணம் செய்த பின் தனது பெயருக்கு பின் ரெட்டி என சேர்த்துக்கொண்டார். பெண்களுக்கான படிப்புரிமை பெரிதும் அங்கீகரிக்கப்படாத அந்த காலத்தில் மன உறுதியுடன் முத்துலெட்சுமி படித்தார். 1902ஆம் ஆண்டு நடைபெற்ற மெட்ரிக்குலேசன் தேர்வில் பங்கேற்று முதல் மாணவியாக தேற்றம் பெற்றார். 100 பேர் எழுதிய மெட்ரிக் தேர்வில் பத்து பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதில் இடம்பெற்ற ஒரே பெண் முத்துலட்சுமி ஆவார்.

பிறகு மேற்படிப்பை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி அல்லது பாளையங்கோட்டை பெண்கள் கல்லூரியில் தொடர விரும்பினார் முத்துலட்சுமி. ஆனால் இங்கெல்லாம் பெண்கள் தங்கும் விடுதி இல்லாததால் மேற்படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிவெடுத்தார். ஆனால் மன்னர் கல்லூரியில் அக்காலத்தில் ஆண்கள் மட்டுமே படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிப்ரவரி 04, 1904 ல் மன்னர் கல்லூரியில் சேர முத்துலட்சுமி விண்ணப்பம் செய்தார். இது மக்கள் மத்தியில் புதிய பரபரப்பை உண்டாக்கியது. தேவதாசி தாய்க்கு பிறந்த ஒரு பெண், ஆண்கள் படிக்கும் கல்லூரியில் சேர நினைப்பது அக்காலத்தில் பழமைவாதிகளின் பெரும் எதிர்ப்பை பெற்றது.
மன்னர் கல்லூரியின் தலைவர், ராதாகிருஷ்ண ஐயர், ஆண்கள் கல்லூரியில் பெண்ணை அனுமதிப்பது படிக்கும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கல்லூரியில் சேர்க்க மறுத்து புதுக்கோட்டை திவானுக்கு அறிக்கை அனுப்பினார். முத்துலட்சுமியை கல்லூரியில் சேர்ப்பதற்கு அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முத்துலட்சுமி அவர்கள் பற்றிய விவகாரம், மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் காதுகளை எட்டியது. முத்துலட்சுமி ரெட்டியின் ஆர்வத்தைக் கண்ட மன்னர் உடனே அதிகாரிகளை அழைத்து முத்துலெட்சுமியாருக்கு கல்லூரியில் இடமளிக்க உத்தரவிட்டார். முத்துலெட்சுமி ரெட்டியாரின் கல்வி செலவையும் தானே ஏற்றார். மன்னரின் சீரிய நடவடிக்கையால் படிப்பை தொடர்ந்த முத்துலெட்சுமி, 1912ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உருவாகி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். மன்னரின் தொலை நோக்குப்பார்வையும், முற்போக்கு சிந்தனையும் முத்துலெட்சுமி ரெட்டியாரை உச்சத்தில் ஏற்றும் படிக்கட்டுகளாக அமைந்தது என கூறுவது சாலப் பொருத்தமாகும். (Gazetteer of pudukkottai district 1983/ pg 693)
காதலியா? சாம்ராஜ்யமா?


1915ல் புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்க் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். மன்னர் அமெரிக்காவில் தேனிலவை முடித்துக் கொண்டு, மனைவியுடன் புதுக்கோட்டை திரும்பினார். சமஸ்தானத்தின் ராணியாக ஒரு வெள்ளையர் வழிவந்த பெண்ணை ஏற்க மன்னரின் உறவினர்களும், ஒரு தரப்பு பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதல் மனைவி முக்கியமா? அல்லது தனது மன்னர் பதவி முக்கியமா? என யோசித்த மன்னர், தனது மணிமுடியைவிட, தன்னை நம்பி வந்த பெண்ணே முக்கியம் என முடிவெடுத்தார். 1916 ல் மன்னரும் அவரது மனைவியும் ஆஸ்திரேலிய நாட்டுக்கு சென்றுவிட்டனர். அங்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நாட்டு நிர்வாகத்தை மன்னரின் சகோதரர் திவான் விஜய ரகுநாத பல்லவராயர் கவனித்துக் கொண்டார். ராஜா பட்டத்தைவிட நம்பி வந்த பெண்ணே முக்கியம் என முடிவு செய்து முடி துறந்த மன்னர், பாரீஸ் நகரில் தனது இறுதி காலத்தைக் கழித்து 1928 ல் மரணமடைந்தார். இவரது உடல் லண்டன் மாநகரில் வைதீக முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்கள் பல மனைவிகளைக் கொண்டு வாழ்ந்து மடிந்த வரலாற்றையே நாம் கண்டுள்ளோம். ஆனால் காதல் மனைவிக்காக தனது நாட்டையே துறந்த மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் தியாகம் என்றும் பெண்ணியத்தை போற்றிக் கொண்டிருக்கும்.(Manual of pudukkottai state vol 2 part1 pg 896/ புதுக்கோட்டை மாவட்ட வரலாறு ராஜா முகமது பக்கம் 145)

இங்கனம் தன் வாழ்நாளில் பெண்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பெண்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து ஆதரவளித்து வந்த மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் இறுதியில் பெண்ணின் நம்பிக்கையை காக்க தனது நாட்டையே துறந்த தியாகம், என்று வரலாற்றின் பொன் பக்கங்களில் மிளிறும்!
வாழ்க பல்லவராயர் குல தோன்றல் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் புகழ்!
Post by : www.sambattiyar.com
Total views 1,772 , Views today 2