தமிழர்களின் உரிமைக் குரலாக மூக்கையாத் தேவர்

தேவர் தந்த தேவர், உறங்காபுலி என பல புகழ்மொழிகளால் அழைக்கப்படும் கல்வித்தந்தை பி. கே. மூக்கையாத்தேவர் , 1923 , ஏப்ரல் 4 அன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாப்பாப்பட்டி எனும் ஊரில் பிறந்தார்.

தேவருடன் அரசியல் பயணத்தை தொடர்ந்த மூக்கையாத் தேவர், பெரியகுளம் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை தேர்வானார். தெற்கு சீமையில் முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகளை நிறுவி கல்விக் கண் திறந்தவர். மூக்கையாத்தேவர் பல தரப்பட்ட சமூகப்பணிகளில் பங்கேற்று தனது சேவைகளை செய்துள்ளார். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படும் போதெல்லாம் மூக்கையாத் தேவரின் குரல் ஒங்கி ஒலித்துள்ளது. இந்திய நடுவண் அரசு மற்றும் அண்டைய மாநிலங்கள் நோக்கி மூக்கையாத்தேவர் எழுப்பிய உரிமைக்குரல் சிலவற்றைக் காண்போம்.

முல்லைப் பெரியாறு அணைமட்டம் குறித்து ….

நவம்பர் 10,1965 ல் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் மற்றும் முல்லைப் பெரியாரின் அணை மட்டத்தை உயர்த்தி தண்ணீரை திருப்பி விடுவதால் தென்மாவட்ட விவசாயிகளின் பெரும் பிரச்சனை தீர்க்கப்படும் என எடுத்துரைத்தார். ( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xxxii/ பக் 769)

சென்னையின் குடிநீர் தேவைக்காக…

மார்ச் 31, 1969ல் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர் கேரள அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தால் கோயம்புத்தூர் முழுவதும் குடிநீர் மற்றும் பாசன வசதியைப் பெறுகிறது. இதைப்போல கிருஷ்ணா நதிநீரை சென்னைக்கு திருப்பிவிடுவதன் மூலம் சென்னையின் குடிநீர் தேவை தீர்க்கப்படும் எனும் வாதத்தை வைத்தார்.

வட இந்திய அகதிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வாரி வழங்கும் போது, தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது, வடபுலத்து அரசினால் தென்பகுதி மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ” என நேரடியாக இந்திய அரசினயனை தாக்கி பேசினார் மூக்கையாத் தேவர். ( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xx/ பக் 792)

இந்தி எதிர்ப்பில் மூக்கையாத்தேவர்….

1967க்கு பிறகு இந்திய அரசின் மொழிக்கொள்கை பல விமர்சனங்களையும், குழப்பங்களையும் உருவாக்கியது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்து வந்தது. இக்கால கட்டத்தில் 1968, ஜனவரி 23 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், இப்போது நாம் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடுமையான காலகட்டத்தில் உள்ளோம், ஏனென்றால் பல பிரச்சனைகளை நாம் எதிர்நோக்கியுள்ளோம், நம் நாடு பல மாறுபட்ட மொழி, பண்பாடு, நாகரீக பாரம்பரியங்களைக் கொண்டது, நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் குறிக்கோள் உடையவர்களாக உள்ளோம், ஒரு தாய் பிள்ளைகளைப்போல சுதந்திரத்திற்காக போராடினோம், ஆனால் இந்தி மொழிப் பிரச்சனையால் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது , இந்தி மொழி இந்தியாவில் எல்லா மக்களாலும் பேசப்படும் மொழி அல்ல, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களால் மட்டுமே பேசப்படும் மொழி, இதற்கு மாறாக இருமொழிக் கொள்கையே சிறந்தது, இதன்படி நாம் இரண்டு மொழிகளை ஏற்றுக்கொள்ளலாம் ஒன்று தமிழ் மற்றொன்னு ஆங்கிலம் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய மூக்கையாத்தேவர், அண்ணாவின் கருத்துப்படி தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் நடுவண் அரசு மற்றும் மாநில அரசின் நிர்வாக தொடர்பு மொழியாக இருப்பதே சிறந்தது, தமிழக மக்கள் மீது இந்தித் திணிப்பை இந்திய அரசு நடத்தவில்லையெனில் எந்த வகையான போராட்டத்தையும் கையில் எடுக்க தயங்க போவதில்லை என்றும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் சாதி சமய வேறுபாடுகளை கடந்து போராட்டங்களை நடத்தப்போவதாக மூக்கையாத்தேவர் அறிவித்தார்( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி vii / பக் 28-34)

நாட்டின் ஒற்றுமைக்கு இரு மொழிக்கொள்கையே சிறந்தது என அப்போதே வாதிட்டார் மூக்கையாத்தேவர். மும்மொழிக் கொள்கைக்கான வலுவான எதிர்ப்பு சட்டமன்றத்தில் மூக்கையாத் தேவரால் பதியப்பட்டது.

ஆறுகள் இணைப்பு குறித்து…

மார்ச் 31, 1969 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், தமிழகத்தின் மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருசெல்வேலி பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சியை போக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார், மேலும் இந்திய நாட்டின் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கி, மத்திய நீர்வழிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதைச் செய்வதன் மூலம் மட்டுமே மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனும் தனது வாதத்தை வைத்தார்.( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xx / பக் 788)

சேது சமுத்திர திட்டம் குறித்து….

1975 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாராளுமன்றத்தில் உறையாற்றிய மூக்கையாத் தேவர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி பகுதி மக்கள் பஞ்சத்தில் இருந்து மீள முறையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் , கிழக்கு ராமநாதபுரம் மக்களின் பின்தங்கிய நிலையை உயர்த்த, சேது சமுத்திர திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ( பாராளுமன்ற மக்களவை விவாதம் தொகுதி XLVIII பக் 298-302)

கச்சித்தீவை மீட்க….

கச்சத்தீவு இலங்கை மற்றும் பாம்பனுக்கு இடையில் உள்ள நீள்வட்ட வடிவிலான தீவாகும். ராமேஸ்வரத்தில் இருந்து வடகிழக்கில் பத்து மைல் தொலைவில் இருக்கும் இந்த தீவை மீனவர்கள் ஒய்வு எடுக்கவும், தங்களது மீன் வலைகளை காய வைக்கவும் பயன்படுத்தி வந்தனர்.மேலும் இப்பகுதி ஏராளமான மீன் வளத்தை கொண்டதாகும். ஐநூறுக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். இங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் வருடா வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.

1974ல் மத்திய அரசு கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்க்க முடிவு செய்தது. 1974 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 மூக்கையாத்தேவர் பாரதப்பிரதமர் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில் ” கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் , இந்தியாவின் பாதுகாப்பையும் பாதிக்கும் ” என குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்திய ஒன்றிய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. மூக்கையாத்தேவர் கூறியபடியே இலங்கை அரசு தனது கடற்படை தளத்தை கச்சத்தீவில் நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒர் தேசிய கட்சியின் மாபெரும் தலைவராக செயல்பட்டபோதிலும், தமிழக உரிமைகள் தொடர்பான தளங்களில், தனது அழுத்தமான கருத்துகள் மூலம், உரிமைகளை நிலைநாட்ட குரல் எழுப்பியவர் மூக்கையாத்தேவர். தமிழக நலனுக்காகவும் இந்திய ஒருமைப்பாட்டுக்காவும் ஒருங்கே போராடிய மூக்கையாத் தேவர் தேசியத்தையும் தெய்வீகத்தையும் போற்றிப் பாதுகாத்தார் என்பதை இவரது வாழ்க்கை சரித்திரத்தை படித்தவர்கள் உணரலாம். வாழ்க தேவர் புகழ்! வாழ்க உறங்காபுலியாரின் புகழ்!

ஆதார நூல் : பி கே மூக்கையாத் தேவர் / ஆசிரியர் பேரா பொ கௌரி

Article by www.sambattiyar.com

Total views 2,021 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *