நாட்டு மக்களால் நாட்டாரய்யா என அன்புடன் அழைக்கப்பட்ட ந.மு.வேங்கடசாமி நாட்டார் , சோழவளநாட்டில் நடுக்காவேரி எனும் ஊரில், (12-04-1884) அன்று முத்துச்சாமி நாட்டார் – தையலம்மாள் ஆகியோருக்கு புதல்வராய் உதித்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக காலமெல்லாம் உழைத்த நாட்டார், அறுபது ஆண்டுகள் இப்பூவுலகில் தவ வாழ்வை வாழ்ந்து, 28-03-1944 ல் இறைவனடி சேர்ந்தார்.
நாட்டாரின் சிறப்புகள்
👉 மதுரை தமிழ்ச்சங்கத்தில் நடத்தப்பட்ட பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் எனும் தேர்வுகள் தலா இரண்டிரண்டு ஆண்டுகள் படித்து மொத்தம் 6 ஆண்டுகளில் முடிக்க வேண்டும். இந்த மூன்று தேர்வுகளையும் 3 ஆண்டுகளில்(1905-1907) எழுதி தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்தார் நாட்டார். மதுரை தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரை தேவர் கையில் பொற்பதக்கமும், தங்கத்தோடாவும் பெற்று பண்டிதராக உயர்ந்தார்.
👉 மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வுகளை எந்த கல்லூரிக்கும் சென்று பயிற்சி பெறாமல் மூன்றே ஆண்டுகளில் தேர்ச்சிப் பெற்றதால் ” தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியர் ” எனப் போற்றப்பட்டார்.
👉 நாட்டார் தன்னுடைய 37 ஆவது வயதில் 1921ல் தஞ்சையில் தமிழுக்காக ஒரு கல்லூரியாக திருவருட் கல்லூரியை நிறுவ முடிவு செய்து, அதற்கான நிலத்தை பெற தஞ்சை வட்டாட்சியரிடம் மனு அளித்தார்.தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு, கல்லூரி கட்டுவதற்காக நன்கொடைகளை பெற்று வந்தார். ஆனாலும் ஈளை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றதாலும், தேவையான நிதி திரட்ட இயலாமையாலும் திருவருட் கல்லூரியை அமைக்கும் முயற்சியை அப்போது கைவிட்டார்.ஆனால் நாட்டாரின் எண்ணம் 1992 ல் நிறைவேறியது. ந.மு. வேங்கடசாமி திருவருட் கல்லூரி என்னும் தனிlத்தமிழ் புலவர் கல்லூரி 14-10-1992ல் தஞ்சையில் தொடங்கப்பட்டு தமிழகத்தில் உள்ள ஒரே தனித்தமிழ் புலவர் கல்லூரி எனும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
👉 கோவை செயிண்ட் மைக்கேல் உயர்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி பிசப் ஈபர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கரந்தை புலவர் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் தமிழ் ஆசானாக 33 ஆண்டுகளுக்கு மேல் தமிழெனும் அமுதத்தை மாணக்கர்களுக்கு ஊட்டினார். தனது இறுதி காலத்தில் கரந்தை தமிழ்க் கல்லூரியில் ஊதியம் பெறாமல் ஆசிரியராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
👉 1933ல் திருச்சி பிசப் ஹீப்பர் கல்லூரியில் இருந்து பணிநிறைவு பெற்று வெளியேறியபோது, தமிழ் ஆர்வலர்கள் நாட்டாருக்கு வெள்ளிக் கூஜா ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தனர். அதில் ” திரிசபுரத்து தமிழ் பண்டிதர்களும் அன்பர்களும் அளித்த அன்பின் பரிசு ” என அச்சிடப்பட்டு இருந்தது.
👉 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்குழு உறுப்பினராக நாட்டார் திகழ்ந்தார். இதன்மூலம் தமிழ் பாடத்திட்டங்களை வடிவமைக்கும் முக்கிய பணிகளை செய்து வந்தார்.
👉 1932-1934, 1942-1944 ஆகிய காலகட்டங்களில் சென்னை பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வாளராக திகழ்ந்தார். பல ஆண்டுகள் இந்த பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியேட் பி ஏ தேர்வாளராக பணியாற்றினார்.
👉 மதுரை தமிழ்ச்சங்கம் ஆண்டு தோறும் நடத்தும் பண்டிதத் தேர்வில் ஊதியம் பெறாமல் தேர்வாளராக பணியாற்றினார். காசி இந்து பல்கலைக்கழகத்தில் இருமுறை தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
👉 கரந்தைத் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, திருச்சிராப்பள்ளி சைவ சிந்தாந்த சபை, தென்னிந்திய சைவ சிந்தாந்த மகா சமாஜம், கம்பர் செந்தமிழ்க்கழகம், தென்காசித் திருவள்ளுவர் கழகம், சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் ஆகிய தமிழ் கழகங்களின் பல விழாக்களில் பங்கேற்று தனது சொற்பொழிவுகள் மூலம் தமிழ் இலக்கியங்களின் சுவையை அனைவரும் உணரும்படி செய்தார்.
👉 தமிழுக்கென்று தனி பல்கலைக்கழகம் வேண்டும் என தொடர்ந்து உரைத்து வந்தார். 1925ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற காரணகர்த்தாவாக இருந்தார். அரசாங்கத்தின் குழுவிடம் தமிழ் பல்கலைக்கழகம் வேண்டியதன் அவசியத்தை கட்டுரையாக எழுதி அளித்தார்.
👉 நாட்டார் ஐயா 1923-1925 காலகட்டத்தில் மூன்று முறை தமிழ்ப்புலவர் மாநாடுகளை திருச்சியில் நடத்தி சிறப்பித்தார்.
👉 சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட நாட்டார் 1933ல் சைவர் மாநாடு ஒன்றை தஞ்சையில் நடத்தினார். அந்த மாநாட்டில் ” சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் ” என முழங்கினார்.
👉 உயர்நிலைப்பள்ளிகளில் 9-10 ஆம் வகுப்புகளுக்கு பாட நூலாக வைக்கப்பட்ட செந்தமிழ்ப் பூம்பொழில் என்னும் பாட நூல்கள் நாட்டாரால் இயற்றப்பட்டவை.
👉 1915 முதல் 1944 வரையிலான காலத்தில் நாட்டார் 22 நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன:- வேளிர் வரலாற்று ஆராய்ச்சி(1915), நக்கீரர்(1919), கபிலர்(1923), கள்ளர் சரித்திரம்(1923), இன்னாநாற்பது உரை(1925), களவழி நாற்பது உரை(1925), கார் நாற்பது உரை (1925), ஆத்திச்சூடி உரை (1925) , கொன்றைவேந்தன் உரை (1925), வெற்றி வேற்கை உரை(1925), மூதுரை உரை(1925), நல்வழி உரை (1925), நன்னெறி உரை (1925), அகத்தியர் தேவாரத்திரட்டு உரைத்திருத்தம்(1925), கண்ணகி வரலாறும் கற்புமாண்பும்(1926) , சோழர் சரித்திரம் (1928) , திருவிளையாடற்புராணம் உரை(1931) , கட்டுரைத் திரட்டு பகுதி-1 (1940) , சிலப்பதிகார உரை (1942) , மணிமேகலை (1942) , கட்டுரைத்திரட்டு தொகுதி -2 (1943) , அகநானூறு உரை (1944)
👉 திருச்சி வானொலியில் 4 ஆண்டுகள் தமிழ் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
👉 நாட்டார் பல தமிழ் சார்பு கழகங்களில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்தார் , அவையாவன :- திருநெல்வேலி சைவசிந்தாந்த சங்கம், சாத்தூர் தமிழ்ச் சங்கம், குளித்தலைக் கம்பன் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், திருச்சிராப்பள்ளி சைவ சித்தாந்த சபை , பூவாளூர் சைவ சிந்தாந்த சபை, பலவான்குடி மணிவாசக சங்கம், மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மாணவர் கழகம், சைவ சித்தாந்த மகா சமாஜம், இளங்காடு மாணவர் தமிழ்ச் சங்கம், முருகன் செந்தமிழ்க் கழகம், தென்காசி திருவள்ளுவர் கழகம்.
👉 சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் 24-12-1940ல் நடைப்பெற்ற சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ந.மு.வே அவர்களின் தமிழ் தொண்டை பாராட்டி நாட்டாருக்கு ” நாவலர்” பட்டம் அளித்து சிறப்பித்தது.
👉 நாட்டார் பல மாணாக்கர்களுக்கு தன் வீட்டில் இடமளித்து, உணவளித்து படிக்க வைத்துள்ளார். அவர்களில் ஒருவரான வித்துவான். வீ உலக ஊழியர் என்பவர் பிற்காலத்தில் நாட்டாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
👉 நாட்டார் ஐயாவின் நூற்றாண்டு விழா 1984ல் நடுக்காவேரியிலும் கரந்தை தமிழ் சங்கத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
👉 1984ல் நாட்டார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதையடுத்து தமிழக அரசு நாட்டாரின் பெயரில் சிறப்பு இதழ் வெளியிட்டு பெருமை செய்தது.
👉 நாட்டார் பல்வேறு இதழ்களில் எழுதிய 75 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நமு வேங்கடசாமி நாட்டார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற பெயரில், (01.01.1995) அன்று தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதல்வர் வெளியிட்டார்.
👉 1956 ல்” தாமே பயின்ற பேராசிரியர் நமு வேங்கடசாமி நாட்டார்” எனும் நூல் நாட்டார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
👉 முதல்வர் ஜெயலலிதா நாட்டாரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட மரபுரிமை தொகையாக ரூ 5 லட்சம் வழங்கினார். கலைஞர் கருணாநிதி ஆணையின்படி நாட்டார் கல்லூரிக்குத் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ரூ 15 லட்சம் அளிக்கப்பட்டது.
👉 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ” நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார்” எனும் நூலை 2004 ல் வெளியிட்டு போற்றியது.
👉 நாட்டாரை போற்றும் விதமாக தமிழ்ப் பல்கலைக்கழகம்
” திறனாய்வு நோக்கிய வேங்கடசாமி நாட்டார் ” எனும் நூலை 2010 ல் வெளியிட்டு பெருமை சேர்த்தது.
👉 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய போது நாட்டார் தன் மகனுக்கு எழுதிய கடிதங்கள், தமிழ் பல்கலைக்கழக அரிய சுவடித்துறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
👉 நாட்டாரின் மறைவிற்கு பிறகு நமு வே நாட்டார் பேரவை தொடங்கப்பட்டு அவரது பெயரில் தமிழ்ப் பணிகள் நடைபெற்று வருகிறது.
👉 கரந்தை புலவர் கல்லூரி தலைவராக இருந்தபோது பணியின் போதே நாட்டார் உயிரிழந்தார். தமிழகமெங்கும் 100 க்கும் மேற்பட்ட இரங்கல் கூட்டங்கள் நடைப்பெற்றது. ரூ 2000 செலவில் நடுக்காவேரியில் நாட்டார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கற்றளி உருவாக்கப்பட்டு பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகிறது . தமிழ் புலவர்களில் முதல் முதலாக கற்றளி எடுக்கப்பட்டது நாட்டாருக்கே…..
காலமெல்லாம் தமிழுக்காக உழைத்திட்ட திருமகன் நாட்டாரய்யாவின் புகழை எந்நாளும் போற்றுவோம்…
தொகுப்பு :-www.sambattiyar.com
Total views 1,689 , Views today 1