சோழப் பேரரசின் எழுச்சிக்கு பிறகு பல்லவ மரபினர் பல கிளைகளாக பிரிந்து சோழ பேரரசின் கீழ் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் விளங்கினர். இவர்களில் புகழ்பெற்றவர்களான கருணாகர தொண்டைமான், பெருமாநம்பி பல்லவராயர் முதலானோர் சோழர் காலத்து புலவர்களால் போற்றப்பட்டுள்ளனர்.
கலிங்கத்துப்பரணியில்
முதலாம் குலோத்துங்க சோழருக்கு கப்பம் செலுத்த மறுத்த அனந்த பன்மன் எனும் கலிங்க அரசனை வென்று திறைக் கொண்டு சாதனை படைத்தவர் கருணாகர தொண்டைமான்.
கலிங்க நாட்டை வென்று உயர்ந்த ரக குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், ஒன்பது வகை ரத்தினங்கள் என பல வளங்களையும் கருணாகர தொண்டைமான் சோழ மன்னரிடம் ஒப்படைத்ததாக கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி பாடல்களில் கருணாகர தொண்டைமான் தொண்டையர், தொண்டையர் அரசு, வண்டையர் கோன், வண்டையர்க்கு அரசு என்றெல்லாம் போற்றப்படுகிறார். கருணாகர தொண்டைமானை புகழும் கலிங்கத்துப்பரணி பாக்களை காண்போம்.
“தொண்டையர்க் கரசு முன்வரும் சுரவி
துங்க வெள் விடை உயர்த்தகோன்
வண்டையர்க் கரசு பல்லவர்க் கரசு
மால் களிற்றின்மிசை கொள்ளவே”
“மண்ட லீகரு மாநில வேந்தரும் வந்து ணங்குக டைத்தலை வண்டைமன்தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர் சூழ்ந்து தன்கழல் சூடியி ருக்கவே”
“இறைமொ ழிந்தளவி லெழுக லிங்கமவை எறிவ னென்றுகழல் தொழுதனன்மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல திலகன் வண்டைநக ரரசனே“
“அடைய வத்திசைப் பகைது கைப்பனென் றாசை கொண்டடற் தொண்டைமான்“
“மறித்தோடி யெவ்வரசுஞ் சரிய வென்றுவருமனுக்கைப் பல்லவர்கோன் வண்டை வேந்தன்எறித்தோடையிலங்குநடைக் களிற்றின் மேற்கொண்”
இவ்வாறு கருணாகர தொண்டைமானின் புகழ் கலிங்கத்துப்பரணியில் பாடப்படுகிறது.
தக்கையாப்பரணியில்
ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கையாப்பரணியில் இரண்டாம் ராசாதிராசன் காலத்து அமைச்சர் பெருமான் திருச்சிற்றம்பலமுடையான் பெருமாநம்பி பல்லவராயர் புகழப்படுகிறார்.
பல்லவராயன் சேரனைப் போரில் வென்று அவன் பால் திறைகொண்டு வந்தான் என்ற செய்தி தக்கயாகப் பரணியிலுள்ள பின்வரும் தாழிசையால் அறியலாம் :-
”வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்டகாபதியைப் பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே” (தக், 236)
சிலையெழுபதில்
கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 – கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டைமானே”
இங்கனம் பல்லவர் குல கள்ளர் சிற்றரசர்கள் புலவர்களால் புகழப்பட்டுள்ளனர். இப்பல்லவ சிற்றரசர்கள் வழிவந்த குறுநில மன்னர்களும் தங்களது முன்னோர்கள் புலவர்களால் பாடப்பட்டதை தங்களது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். பல்லவ மரபினர் வழிவந்த புதுக்கோட்டை பல்லவராயர்கள், புதுக்கோட்டை -அறந்தாங்கி தொண்டைமான்கள், சிங்கவனம் ஜமீன்களான கோபாலர்கள் முதலானோர் தங்களது முன்னோர்களின் வீரம் புலவர்களால் போற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை பல்லவராயர்கள்
புதுக்கோட்டையை கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள் புதுக்கோட்டை பல்லவராயர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கள்ளர் மரபினராவர். ( ஆதாரம்: Manual of pudukkottai state vol 2 part 1 பக் 681)/ Pudukkottai Gazetter- pg 149 )


புதுக்கோட்டை பல்லவராயர்களில் கடைசி மன்னரான சிவந்தெழுந்த பல்லவராயர் கிபி பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மீது பாடப்பட்ட சிவந்தெழுந்த பல்லவராயர் உலா எனும் பாடல் தொகுப்பில் தங்களது முன்னோரை பற்றி குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறுகிறார்.
” தேரிய காவிரி நாடன் கலிங்கத் தமிழ்பரணி பாவினில் வீறுமொழிப் பல்லவனும் – மூவருலா பாத்தன் தமிழினுமுன் பாடும் பரணியினும் கூத்தன் கவிக்கொண்ட கொற்றவனும்“

கலிங்கத்துப்பரணியில் பாடப்பட்ட கருணாகர தொண்டைமானும், தக்கையாப்பரணியில் பாடப்பட்ட பெருமநம்பி பல்லவராயரும் தனது முன்னோர் என சிவந்தெழுந்த பல்லவராயர் குறிப்பிடுகிறார்.
அறந்தாங்கி தொண்டைமான்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 18 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள் ஆவர். இவர்கள் புதுக்கோட்டை தொண்டைமான்களின் கிளை மரபினர். அறந்தாங்கி தொண்டைமான்களின் வம்சாவளிகள் பிற்காலத்தில் பாலையவனம் ஜமீன்தார்காக வாழத் தலைப்பட்டனர். இவர்கள் கள்ளர் மரபினர் ஆவர்.
( ஆதாரம்:புதுக்கோட்டை மாவட்ட வரலாறு(பக் 60)- இராஜா முகமது ( தமிழக அரசு வெளியீடு)/அறந்தாங்கி தொண்டைமான்கள்(பக் 5)- உலக தமிழாராய்ச்சி நிறுவனம்/Epigraphica indica vol 21- பக் 122)


அறந்தாங்கி தொண்டைமான்கள் வழிவந்த விசைய அருணாச்சல வணங்காமுடி தொண்டைமான் தனது பண்ணைவயல் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
” கலிங்கத் திறைக் கொண்டு பரணி புனைந்தோன்”
” மல்லை மயிலை வண்டைநகராதிபன்”
” கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்”
” ஒட்டக்கூத்தன் உயர்தமிழ் புனைந்தோன்”
கலிங்கப்போரில் வென்ற கருணாகர தொண்டைமான் இவர்களின் முன்னோர் என்றும், இவர் கலிங்கத்துப் பரணியிலும், கம்பரால் சிலையெழுபதிலும் பாடப்பட்டவர் என்றும் இங்கே குறிப்பிடப்படுகிறது. இதே போல் ஒட்டக்கூத்தரால் தக்கையாப்பரணியில் பாடப்பட்ட பெருமாநம்பி பல்லவராயரும் இவர்களின் முன்னோர் என குறிப்பிடுகிறார்.
சிங்கவனம் ஜமீன்தார்கள்
பட்டுக்கோட்டை சீமையில் சிங்கவனத்தின் ஆட்சியாளர்களாக திகழ்ந்த மெய்க்கண் கோபாலர்கள் தஞ்சை மராத்தியர்கள் இடத்தில் பெரும் தளபதிகளாக விளங்கினர். இவர்கள் வசம் 32 கிராமங்கள் இருந்ததாக தஞ்சை மராத்தியர் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
கிபி 1323 ஆம் ஆண்டை சேர்ந்த இராசராசன் சுந்தரப்பாண்டியன் ஆட்சி காலத்தில் மன்னார்குடி கல்வெட்டில் ” வரகூருடையார் காடுவெட்டியார் சொக்க நயினார் விசைய கண்ட கோபாலன் ” குறிப்பிடப்படுகிறார். இவர் முக்கண் காடுவெட்டி பல்லவர் வம்சத்தை சேர்ந்தவராவர்.

கிபி 1335 ஆம் ஆண்டை சேர்ந்த இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மன்னார்குடி கல்வெட்டில் ” வண்டாழை நாட்டு அரசு மெய்க்குத் தேவனான விசைய கண்ட கோபாலன்” என இவர்களின் முன்னோர் வண்டாழை பகுதியின் அரசர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கிபி 1758 ஆம் ஆண்டை சேர்ந்த செயங்கொண்ட நாதர் கோயில் செப்பேட்டில் ” வளவன் பல்லவதரையன் முன்பாக நெல்லூர் கல்லூர் வெட்டி செயங்கொண்ட நாடு ” என பாப்பா நாட்டவர்கள் மன்னை செயங்கொண்டநாதர் கோயிலுக்கு அளித்த செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது பாப்பா நாட்டு கள்ளர்கள் பல்லவதரையன் தலைமையில் சென்று நெல்லூர் கல்லூர் முதலிய ஊர்களை வெற்றி பெற்றதாக குறிப்பிடுகின்றனர். வெற்றியின் நன்றிக்கடனாக செயங்கொண்டநாதருக்கு கோயில் எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளனர். கிபி 11 ஆம் நூற்றாண்டில் ராசாதிராசசோழன் காலத்தில் நடந்த போர் நிகழ்ச்சியை செப்பேடு குறிப்பிடுகிறது.

கிபி 1758 ஆம் ஆண்டில் சவ்வாயி ஸ்ரீ விசய ரகுநாத வாளோசி மெய்க்கண் கோபாலர் அவர்கள் மன்னார்குடி செயங்கொண்டநாதர் கோயிலுக்கு அளித்த கொடை பற்றி செயங்கொண்ட நாதர் கோயில் செப்பேடு குறிப்பிடுகிறது.
அதில் ” காணியுடைய அரசாளி, நெல்லூர் கல்லூர் நிருபரை கடிந்தூம் அலூர் அறுத்தும், வீரகங்கன் , செம்பொன்மாரி திறை கொண்டு வந்தவன், கம்பர் ஒட்டக்கூத்தர் கவிக் கொண்டருள்வோன், அம்பலம் கனிய செம்பியர்க்கு உதவியோன்” என இவரது முன்னோர்கள் பற்றி குறிப்பிடுகிறார்.

இவரது முன்னோர் ” சோழ மன்னருக்காக நெல்லூர் , கல்லூர் , அலூர் முதலிய ஊர்களை வென்றவர்கள் என்றும் செம்பொன்மாரியில் திறை கொண்டு வந்தவர்கள் என்றும், ஒட்டக்கூத்தரால் தக்கையாப்பரணியில் பாடப்பட்ட பெருமாநம்பி பல்லவராயரும், சிலையெழுபதில் கம்பரால் பாடப்பட்ட கருணாகர தொண்டைமானும் தங்களது முன்னோர் என குறிப்பிடுகின்றனர். இவர்களின் முன்னோரே பல்லவதரையன் என மற்றொரு செயங்கொண்டநாதர் கோயில் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சிங்கவனம் மெய்க்கண் கோபாலர்கள் கள்ளர் மரபினர் என தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட தமிழக கல்வெட்டியலும் வரலாறும் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கனம் பல்லவர் வழி வந்த அரையர்கள் தங்களது முன்னோர்கள் பற்றியும், அவர்களை பாடிய புலவர்களைப் பற்றியும் தங்களது வரலாற்று ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் தங்களது பரம்பரை பற்றிய புகழ்மொழிகள் வழி வழியாக சொல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருந்ததை நாம் அறிகிறோம்.
Article by: www.sambattiyar.com
Total views 1,837 , Views today 1
superintendent