சோழ வேந்தர்களும் பழுவேட்டரையர்களும்


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பழுவூரை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் பழுவேட்டரையர்கள் ஆவர்.
இவர்கள் சோழ அரசர்களின் நெருங்கிய உறவினர்களாவர். சேர அரச மரபினர்களான பழுவேட்டரையர்கள் சோழ பேரரசின் உருவாக்கத்திற்கு அடிகோலிட்டவர்களில் மிக முக்கியமானவர்கள். சோழர்களோடு உதிரமும் உறவுமாக கலந்து இருந்த பழுவேட்டரையர்களின் வரலாற்றின் சில துளிகளை காண்போம்…

பழுவேட்டரையர்கள் சேரர்களின் ஒரு கிளையினராவர். சேரருக்கு உரியது பனம்பூ மாலை, பழுவேட்டரையரின் பனைமரச் சின்னமுடைய கொடி அவர்களைச் சேரரோடு உள்ள தொடர்பை காட்டுகிறது. பழுவூரானது முற்காலத்தில் மண்ணுப் பெரும்பழுவூர்,அவனிகந்தபுரம், பகைவிடை ஈஸ்வரம் முதலிய பெயர்களில் அழைக்கப்பட்டது.

SII vol 13

முதலாம் ஆதித்த சோழன் காலத்தை சேர்ந்த திருநெய்தானத்து கல்வெட்டு ” பல்யானை கோக்கண்டனான ஆதித்த சோழனும் சேரமான் ஸ்தானு இரவியும் உற்ற நண்பர்களாக திகழ்ந்து இருவரும் விக்கியண்ணன் என்ற தலைவனுக்கு ” செம்பியன் தமிழ்வேள் ” எனும் பட்டத்தை அளித்து சிறப்புகள் செய்ததாக கூறுகிறது.( Sii vol 3 – 89)

பழுவேட்டரையர்கள் குடும்பத்தை சேர்ந்த சேரமான் ஸ்தானு இரவி , சோழ மன்னன் ஆதித்தனோடு சரி நிகரா1க இருந்து செம்பியன் தமிழ்வேள் எனும் பட்டத்தையும் சிறப்புகளையும் விக்கியண்ணனுக்கு அளித்துள்ளதன் மூலம் சோழ அரசியலில் பழுவேட்டரையர்களுக்கு இருந்த ஆளுமையையும் முக்கியத்துவத்தையும் நாம் உணரலாம்.

  கோயம்புத்தூர் பொன்னிவாடியில் கிடைத்த கிபி ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு சேர மன்னர் கோக்கண்டன் இரவி பற்றி குறிப்பிடுகிறது.அதன்படி”  கலிநிருப கள்வனான கோக்கண்டன் இரவி” குறிப்பிடப்படுகிறார்.  சேர அரசரான கோக்கண்டன் இரவி கள்வன் என்று குறிப்பிடப்படுவது இங்கு நோக்கத்தக்கது.Ep ind vol 40) . பழுவேட்டரையர்கள் தங்களது பெயரோடு மறவன் என்றும் பயன்படுத்தி வந்துள்ளதையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

மண உறவுகள்

சோழர்களுடனான பழுவேட்டரையர்களின் மண உறவு முதலாம் ஆதித்தன் காலத்திலேயே தொடங்கியதாகும். முதலாம் ஆதித்த சோழன் சேரமான் ஸ்தானு இரவி வீரராகவ பழுவேட்டரையரின் மகளான முதலாம் கோக்கிழானடிகளை மணந்தார்.

அன்பில் செப்பேடு மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் மூலம் முதலாம் பராந்தக சோழன், கண்டன் அமுதன் பழுவேட்டரையரின் மகள்களான இரண்டாம் கோக்கிழானடிகள் மற்றும் அருள்மொழி நங்கை முதலிய சேர வம்சத்து பழுவேட்டரையர் இளவரசிகளை திருமணம் செய்திருந்ததை அறிகிறோம்.(299 of 1901)

முதலாம் பராந்தக சோழன்  பழுவேட்டரையர் இளவரசியை மணந்ததை குறித்து உதயேந்திரம் செப்பேடு பின்வருமாறு புகழ்கிறது.

பராந்தக சோழன் ” புலோமரின் மகளான சசியை இந்திரன் மணந்தது போலவும், மலையரசன் மகளை சிவபெருமான் மணந்தது போலவும் முதலாம் பராந்தகன் கேரள அரசரான பழுவேட்டரையரின் மகளை மணந்திருந்தார்” என புகழ்கிறது.

“கேரள அரசரான பழுவேட்டரையர் இளவரசி திருமகள் போல் இருந்ததாக” அன்பில் செப்பேடு புகழ்கிறது.

முதலாம் பராந்தகன் மணந்த சேர இளவரசி கோக்கிழானடிகள் பட்டத்தரசியாக திகழ்ந்தார். லால்குடி சபதரீஸ்வரர் கோயிலில் கிடைத்த முதலாம் பராந்தகன் கால கல்வெட்டில் ” சேரமானார் மகளார் கோக்கிழானடிகள் ” என பழுவேட்டரையர் இளவரசி குறிப்பிடப்படுகிறார்.( Sii vol 19- No 408)

முதலாம் பராந்தகனுக்கும் பழுவேட்டரையர் இளவரசி இரண்டாம்  கோக்கிழானடிகளுக்கும் பிறந்தவரே ராஜாதித்ய சோழன். இவர் தக்கோலத்தில் நடந்த போரில் வீரமரணம் அடைந்தார்.

முதலாம் பராந்தகனின் மற்றொரு மகனான கண்டராதித்த சோழன் சேர இளவரசியான வீரநாராயணியை மணந்தார்.அரிஞ்சய சோழன் சேர இளவரசியான கல்யாணியை திருமணம் செய்திருந்தார்.

முதலாம் இராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரசோழனின் மனைவி பராந்தக தேவியார் சேர வம்ச பழுவேட்டரையர்கள் மகளாவார். இவர் ” பொன்மாளிகை துஞ்சின தேவர் தேவியார் பராந்தக தேவியார் சேரமானார் மகளார் ” என கல்வெட்டு குறிப்பிடப்படுகிறார்( 159/1895)

உத்தம சோழனின் மனைவியருள் பழுவேட்டரையர் வம்சத்து இளவரசியும் ஒருவராவார்.( Ins 494 of 1925)

முதலாம் ராசராசனுடைய மனைவியருள், பஞ்சவன் மாதேவி மற்றும் நக்கன் மாதேவி முதலானோர் பழுவேட்டரையர் விக்ரம கண்டன் அமுதனின் புதல்விகள் ஆவர்.( Ins 385 of 1924).

ஆட்சி

இராசராசன் காலத்தில் சிறப்புற்று விளங்கிய பழுவூர்க் குறுநில மன்னன், அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவன் என்பவராவார். அவர், சோழப் பேரரசனின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு ஆண்டு வந்தார். இச்செய்தியை மேலைப் பழுவூரிலும் கீழைப் பழுவூரிலும் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பேரரசனுக்குரிய உரிமைகள் பல அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய அனைத்துரிமையும் வாய்ந்த ஒரு தனியரசனாக அவர் விளங்கினார். அவனுடைய அதிகாரிகளும் பெருந்தரம், சிறுதரம் என்ற பிரிவினர் இருந்தனர். சோழப்பேரரசின் கீழ் பழுவேட்டரையர்கள் தனிக் கொடி ,தனி சின்னம் என தன்னாட்சியே நடத்தியுள்ளனர்.

இராஜராஜன் காலத்து குறுநில மன்னர்களில் அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவன் மிக முக்கியமானவர்.  சோழ வேந்தர்களைப் போல் இவர்களும் பெரும் தரம் அதிகாரிகளை நியமித்தனர்.

இதனை பழுவூரில் கிடைத்த கல்வெட்டு” திருவாலந்துறையுடைய மகாதேவர்க்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் பெருந்திரத் தரையந் சுந்தரசோழநென்”  என குறிப்பிடுகிறது. (106 of 1895)

நந்திபுரத்தில் நிலவிய பண்டைய முறைகளின் அடிப்படையில் பழுவூரில் வரி விதிக்கும் முறைகளை பழுவேட்டரையர்கள் ஒழுங்குபடுத்தினர்.  இது பற்றி குறிப்பிடும் சுந்தர சோழன் காலத்து மேலப்பழுவூர் கல்வெட்டு ” பழுவேட்டரையர் மறவன் கண்டனார் அவனிகந்தபுரத்து மன்றுபாடு எப்பெற்பட்டது பண்டைய நந்திபுர மற்றாதியே கொள்க” என குறிப்பிடுகிறது.(Ins 365 of 1924)

இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் நந்திபுரம் திருவையாறில் அமைந்துள்ள கண்டியூர் எனும் ஊராகும். பல்லவர் காலம் முதல் இவ்வூர் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.  சுந்தர சோழன் ” நந்திபுரத்து சுந்தரசோழன்” என போற்றப்படும் அளவுக்கு நந்திபுரம் சோழர் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ளது.

பழுவேட்டரையர் படை

தஞ்சையில் முத்தரையர்களுடன் நடந்த போரில் சோழ மன்னன் விஜயால சோழனுக்கு ஆதரவாக சேரமான் குலசேகர கண்டன் பழுவேட்டரையர் போரிட்டார். விஷம் தடவப்பட்ட எதிரிகளின் அம்புகள் தைத்ததில் இருவரின் கால்களும் செயல் இழந்தது என்பது வரலாற்று தகவலாகும்.

கிபி 879ல் இரண்டாம் வரகுண பாண்டியனுக்கும் பல்லவருக்கும் நடந்த திருப்புறம்பயம் போரில் குலசேகர கண்டன் பழுவேட்டரையரின் புதல்வர்களான குலசேகர விக்ரம பழுவேட்டரையரும் , பழுவேட்டரையர் கண்டன் அமுதனாரும் விஜயாலய சோழனுக்கு ஆதரவாக பல்லவர் அணியில் போர்க்களம் கண்டனர்.

ஆதித்த சோழனின் கொங்கு நாட்டு படையெடுப்புகளில் பழுவேட்டரையர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.முதலாம் பராந்தகன் காலத்தில் நடந்த தக்கோலப் போரில் பழுவேட்டரையர் விக்ரம கண்டன் அமுதனார் சோழர்களுக்காக போரிட்டார்.

கிபி 915 ஆம் ஆண்டளவில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் பாண்டிய நாட்டில் வெள்ளளூர் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் பாண்டியர் இராசசிம்மன் மற்றும் ஈழப்படைகளை எதிர்த்து பழுவேட்டரையர் கண்டன் அமுதனார் தலைமையிலான சோழர் படை வெற்றி அடைந்தது.  இவ்வெற்றியின் நினைவாக நக்கன் சாத்தன் என்பவர் சிறுபழுவூரில் இருந்த திருவளந்துறை சிவன் கோயிலுக்கு நந்தா விளக்கு எரிக்க ஆடுகளை தானமாக அளித்துள்ளார்.(கல்வெட்டு எண் 231 of 1926)

முதலாம் பராந்தகன் காலத்தில் நடந்த தக்கோலப் போரில் பழுவேட்டரையர் விக்ரம கண்டன் அமுதனார் சோழர்களுக்காக போரிட்டார்.

சோழப் பேரரசின் நிர்வாகத்தில் தலைமை பொறுப்பை வகித்த பழுவேட்டரையர்கள் தங்களுக்கென்று தனியாக  படையையும் கொண்டிருத்தனர். கீழப்பழுவூர் சிவன் கோயிலில் கிடைத்த கல்வெட்டு ” பழுவேட்டரையர் கண்டன் மறவனார் படை”  என குறிப்பிடுகிறது. பழுவூரில் பழுவேட்டரையர்கள் தலைமையிலான படை இருந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.( Ins 109 of 1895)

திருப்பணிகள்

சோழப்பேரரசின் முக்கிய அங்கமான பழுவேட்டரையர்கள் பல்வேறு திருப்பணிகளை செய்து புகழ் பெற்றனர். அவற்றில் சில திகவல்களை காண்போம்….

பழுவூர் அரசர் அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் முதலாம் ராசராசன் காலத்தில் மேலப்பழுவூரில் திருத்தோற்றம் உடையாருக்கு ஒரு கோயிலை எடுப்பித்தார். ( Ins 394 of 1924)


” பழுவேட்டரையர் கண்டன் மறவன் எடுப்பித்த ஸ்ரீகோயில்” எனும் கல்வெட்டு வரிகள் மேலப்பழுவூர் சிவன் கோயிலில் கிடைக்கின்றது.
( Ins 394 of 1924

கீழப்பழுவூரில் உள்ள  கோயிலான மறவனீச்சுவரம் எனும் பசுபதீஸ்வரம் பழுவேட்டரையர் மறவன் கண்டனாரால் கட்டப்பட்டதாகும்.

முதலாம் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் மகளான நம்பிராட்டியார் அருள்மொழி நங்கை தனது பணியாள் குணவன் மூலம்,  கீழப்பழுவூர் சிவன் கோயிலுக்கு பன்னிரண்டு கழஞ்சு பொன்னை தானமாக அளித்துள்ளார்.( Ins 299 of 1901)

சுந்தர சோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் அடிகள் பழுவேட்டரையர் மறவன் கண்டன்  கீழப்பழுவூர் சிவன் கோயிலில் விளக்கு எரிப்பதற்கு 90 ஆடுகளை தானமாக அளித்துள்ளார்.(Ins 229 of 1926)

சுந்தர சோழனின் பதினாராம் ஆட்சியாண்டில் அடிகள் பழுவேட்டரையர்   கீழப்பழுவூர் சிவன் கோயிலில் விளக்கு எரிப்பதற்கு பொன்னை தானமாக அளித்துள்ளார்.(Ins 373 of 1924)

உத்தமசோழரின் இரண்டாம் ஆண்டு ஆட்சியில் உடையார்குடியில் உள்ள வீரநாராயணசுவாமி கோயிலுக்கு பழுவேட்டரையர் கோதண்டணார் 12.5 கழஞ்சு தங்கத்தை கொடையாக அளித்துள்ளார்.( Ins 609 of 1920)

உத்தம சோழனினை ஐந்தாம் ஆட்சியாண்டில் லால்குடி சப்தரீஸ்வரர் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன் 30 கழஞ்சு பொன்னை தானமாக அளித்துள்ளார்.( Ins 117 of 1929)

உத்தமசோழனின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் விக்ரமாதித்தியரின் மனைவி ராமன் கோவியார் கீழப்பழுவூர் சிவன் கோயிலுக்கு பன்னிரண்டு ஆட்டுகளை தானமாக அளித்துள்ளார்.( Ins 237 of 1926)

உத்தம சோழனின் பன்னிரெண்டாம் ஆட்சியாண்டில் உடையார்குடி சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் சுந்தர சோழன் தனது சகோதரன் கண்டன் சத்ருபயங்கரனுக்காக நிலதானம் அளித்துள்ளார் (Ins 592 of 1920)

உத்தம சோழனின் பதினாறாம் ஆட்சியாண்டில் ஆடுதுறை சிவன் கோயிலுக்கு  பழுவேட்டரையர் கண்டன் மறவனார் விளக்கு எரிக்க தானம் அளித்துள்ளார். (Ins 395 of 1924)

பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் கீழப்பழுவூர் சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் மாமனான மழவர் கொங்கணி சென்னி நம்பியார் விளக்கு எரிப்பதற்கு நிலதானம் அளித்துள்ளார்.( Ins 249 of 1926)

பத்தாம் நூற்றாண்டை கல்வெட்டில் கீழப்பழுவூர் சிவன் கோயிலுக்கு  பழுவேட்டரையர் கண்டன் மறவனார் நிலங்களை தானமாக அளித்துள்ளார்.( Ins 219 of 1926)

கீழப்பழுவூர் சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் சுந்தரசோழனார் 180 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளார். ( Ins 120 of 1895)

கீழப்பழுவூர் சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவன் இரு தங்க ஆபரணங்கள் அளித்ததை ராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.( Ins 111 of 1895)

கீழப்பழுவூர் சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மாறன் என்வரின் மனைவி நில தானம் அளித்ததை ராசராசனின் ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.( Ins 226 of 1926)

பிற்கால சோழப் பேரரசின் எழுச்சிக்கு வித்திட்ட பழுவேட்டரையர்கள் கிபி பதினோறாம் நூற்றாண்டு வரையிலும் மிகவும் உன்னத நிலையில் இருந்த கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. பழம்பெருமை வாய்ந்த பழுவேட்டரையர்கள் வம்சாவளியில் வந்த மதிப்பிற்குரிய திரு அர.க. விக்ரம கர்ண பழுவேட்டரையர் குடும்பத்தினர் திருச்சியில் இன்றும் தங்களது பழம்பெருமை மாறாது கலாச்சாரக் காவலர்களாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பழுவேட்டரையர் மரபினர் குறித்த வரலாற்று தகவல்களை அளித்து உதவிய வாழும் பழுவூர் அரசர் அர.க.விக்ரம கர்ணன் பழுவேட்டரையர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் , விரைவில் பழுவேட்டரையர் அவர்களால் வெளியிடப்பட இருக்கும் ” உய்யங்கொண்டான்” எனும் வரலாற்று நாவலில் பழுவேட்டரையர்கள் மற்றும் சோழர்களின் பல அரிய வரலாற்று தகவல்கள் உலகிற்கு வெளிப்படும் :-http://www.pazhuvettarayar.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/

www.sambattiyar.com

Total views 4,106 , Views today 2 

Author: admin

1 thought on “சோழ வேந்தர்களும் பழுவேட்டரையர்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *