வில் வீரர்கள் எனும் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் கல்வெட்டுகளில் வில்லிகள் என குறிப்பிடப்படுகின்றனர். முதலாம் ராஜேந்திர சோழர் கால கல்வெட்டு ஒன்றில் இவர்கள் ” வலங்கை வேளைக்காரப் படைகளில் பண்டித சோழ தெரிந்த வில்லிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டு அகராதியில், வில்லிகள் என்பதற்கு வில் வீரர்கள் என விளக்கம் அளித்துள்ளனர். வில்லிகள் எனும் விற்படையில் முக்குலத்தோர் கள்ளர் மற்றும் மறவர்கள் பெருமளவில் இருந்ததை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றில் சில கல்வெட்டுகளை காண்போம்.
சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கள்ளவில்லிகள்
பிற்கால பாண்டியர் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றவராக திகழ்பவர் பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரப்பாண்டியன். ” எம்மண்டலமுங் கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர் “எல்லாந் தலையான பெருமாள் ” என பல புகழ் மொழிகளை கொண்ட இவ்வேந்தன் பாண்டியர் அரசினை ஒரு பேரரசாக மாற்றினார். இவ்வேந்தரது ஆட்சி காலத்தில் பாண்டிய அரசின் ஆதிக்கம் சோழ நாட்டைக் கடந்து கொங்கு நாடு, ஆந்திரம், சேர நாடு என தென்னகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. இவரது ஆட்சி காலம் முழுவதையும் போர்க்களங்களில் கழித்த சடையவர்மன் சுந்தரப்பாண்டியன் சேரர், சோழர், போசளர், கன்னட நாட்டு சோமன், சிங்களர், கோப்பெருஞ்சிங்கன், வாணர்கள், தெலுங்கு பல்லவர்கள் முதலானவர்களை வெற்றிக் கொண்டு வாகை சூடினான்.
இத்தகைய பெருமைகளைப் பெற்ற சடையவர்மன் சுந்தரப்பாண்டிய தேவரின் பெரும்படை பற்றி கூறும் கல்வெட்டு கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் கிடைத்துள்ளது. சோபன மண்டபத்தின் தலை வாசலுக்கு வடக்கே உள்ள இக்கல்வெட்டு சடையவர்மன் சுந்தர பாண்டியனின் ஆறாவது ஆட்சி காலத்தை சேர்ந்தது.
1256 ஆம் ஆண்டை சேர்ந்த இக்கல்வெட்டு கரூரில் இருந்த பாண்டிய மன்னரின் பெரும்படை சார்பாக இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடை பற்றி கூறுகிறது.

கார்த்திகை மாதம், இருபத்தி ஏழாம் நாள் கூடிய பெரும்படையினர், பின்வரும் முடிவுகளை எடுத்து அறிவித்துள்ளனர்:-
” கோயிலின் உயர்ந்த கோபுரத்திற்கும் திருமதிலுக்கும் திருப்பணி செய்ய தேவையான செல்வத்தை அளிக்க பெரும்படையை சேர்ந்த வன்னிய( போர் வீரர்) வட்டத்தினர் உறுதி ஏற்கின்றனர். அதன்படி பெரும்படை வன்னிய(படை வீரர்) வட்டத்தை சேர்ந்த கன்னடியர், தெலுங்கர், ஆரியர் மற்றும் கள்ளர் வில்லிகள் ஆகிய நான்கு இனத்தவரும் ஆண்டு தோறும் பொன் ஒன்றுக்கு ஒரு பணம் வீதம் திருப்பணிக்காக கொடுக்க பெரும்படையால் முடிவு செய்யப்பட்டது. இதற்கு கட்டுப்படாதவர்கள் பெரும்படைக்கு புறம்பானவர்கள் என்றும் பாவத்திற்கு உரியவர்கள் என கூறப்பட்டுள்ளது.
இப்படிக்கு “பெரும்படை தொண்டைமான் எழுத்து” இப்படிக்கு “பெரும்படை களப்பாளன் எழுத்து” என பெரும்படை சார்பாக கள்ளர் இன தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இங்கு குறிப்பிடப்படும் பெரும்படை தொண்டைமான் மற்றும் பெரும்படை களப்பாளன் ஆகியோர் கள்ளர் வில்லிகள் எனும் விற்படையை சார்ந்தவர்கள் என்பது தெளிவு. ஏனெனில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட நான்கு இனத்தவர்களில் கள்ளர் வில்லிகள் மட்டுமே தொண்டைமான், களப்பாளர் போன்ற பட்டங்களை இன்றளவும் சுமந்து வாழ்கின்றனர். வன்னிய வட்டம் என தெலுங்கர், ஆரியர், கன்னடியர் மற்றும் கள்ளர் வில்லிகளும் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அக்காலத்தில் வன்னியர் என்பது படைவீரர்களை குறிக்கும் பொதுவான பெயராக இருந்துள்ளதை அறிகிறோம்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் காலத்து வில்வீரர்கள்

இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன்(1239-1251) ஆட்சி காலத்தில், நாங்குனேரியில் ” இரணசிங்க வீரன் தெரிந்த வில்லிகள்” எனும் வில் வீரர்கள் படைப்பற்று செயல்பட்டு வந்துள்ளது.
இரணசிங்கம் எனும் பெயர் இன்றும் கொண்டயங்கோட்டை மறவர்களால் மட்டுமே பெருமளவில் பயன்படுத்தப்படும் ஒரு வழக்காக உள்ளது. இக்கல்வெட்டு குறிப்பிடும் இடம் ஆறு பங்கு நாட்டை சேர்ந்த நாங்குனேரியாகும். ஆறு பங்கு நாட்டை சேர்ந்த நாங்குனேரி மறவர்களே ” இரணசிங்க வீரன் வில்லிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது தெளிவு.
( பாண்டியர் வரலாறு : ராஜசேகர தங்கமணி பக் 382)
மாறவர்மன் சுந்தரப்பாண்டினின் கள்ளவில்லிகள்


கிபி 1225 ஆம் ஆண்டை சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலத்தில் , குளத்தூர் கள்ளர் படைபற்றை சேர்ந்த வில்லி நல்லனும், வில்லி வீரனும் தங்களது நிலத்தை விற்றுள்ளதை குளத்தூர் ஈஸ்வரன் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
இப்பகுதியானது கிபி வடசிறுவாயில் நாட்டு படைபற்றாக இருந்ததை கிபி 1437 ஆம் ஆண்டை சேர்ந்த வீரபிரதாபராயர் கால கல்வெட்டு ” வடசிறுவாயில் நாட்டு படைபற்று கீரனூர் ஊராக இசைந்த” என எடுத்துரைக்கிறது.
சிறுவாயில் நாடு என்பது விசங்க நாடு எனும் கள்ளர் நாட்டின் ஒரு பிரிவு என புதுக்கோட்டை வரலாற்று சரிதம் கூறுகிறது.

பாண்டியரின் பெருங்காமநல்லூர் கள்ளவில்லிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுக்கள் பெருங்காமநல்லூர், பெ. கன்னியம்பட்டி மற்றும் வகுரணி – சந்தைப்பட்டி ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் சோலை பாலு, செல்வ பிரீத்தா கண்டுபிடிக்கப்பட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் ஆ.பத்மாவதி மற்றும் கோ.சசிகலா ஆகியோரால் படிக்கப்பட்டது.
பெருங்காமநல்லூர்: மடைக்கல்வெட்டு
1. பெருங்
2. காநல்லூர்
3. ரில்மூன்று
4. கூற்றில்கள்
5. ளவில்லிக
6. ளில்படியாண்
7. சிவல்(ல)வனான
8. இடங்கைந
9. ம்பிவச்சம
10. டையில்செ
11. াலாளன்சாந்(த)
12. தனானகாடு
13. வெட்டிபெ
14. ரையன்யி
15. தில்நாலத்
16. தொன்று
17. வச்சான்
பெருங்காமநல்லூர் மேற்கு கண்மாயின் தெற்கு புறத்தில் உள்ள மடை தூணில் ஒன்றில் 17 வரிகளில் நீண்ட கல்வெட்டாக காணப்படுகின்றது. வரிகள் வரிசையாக வெட்டப்படாமல் சற்று சாய்த்தவாறு எழுதப்பட்டுள்ளது. எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு பொ.ஆ 14-15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.
கல்வெட்டுச் செய்தி :
பண்டைய பாண்டியர் ஆட்சி காலத்தில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட நிலப் பிரிவான கோட்டம் எனும் பிரிவின் கீழ் அடங்குவது கூற்றம் எனும் குறு நிலப்பரப்பாகும். இவ்வாறாக பெருங்காமநல்லூர் மூன்று கூற்றத்தில் உள்ள கள்ளவில்லிகள் என்ற படை பிரிவின் அதிகாரியான சிரிவல்லவனான இடங்கை நம்பி என்பவன் இம்மடையை செய்வித்தான். இம்மடையை உருவாக்குவதற்கான செலவில் நான்கில் ஒரு பங்கினை சொலாளன் சாந்ததனான காடுவெட்டி பெரையன் என்பவன் ஏற்றுக்கொண்டு இந்த அறச்செயல் செய்தளிக்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறியமுடிகின்றது.
இக்கல்வெட்டு மூலம் 14-15 ஆம் நூற்றாண்டில் மதுரை பெருங்காமநல்லூரில் பாண்டியர்களின் கள்ள வில்லிகள் படைப்பிரிவு செயல்பட்டதை அறிகிறோம்.

பிற்கால பாண்டிய மன்னர்களின் மிக முக்கிய படைபற்றாக முக்குலத்து போர்குடி மரபினரின் படைப்பற்று இருந்ததை கல்வெட்டுகள் நமக்கு எடுத்துரைக்கின்றது. சங்க காலம் முதலாக தொடர்ந்து போர்த் தொழிலையே குலத்தொழிலாக கொண்ட தேவரின படைவீரர்கள் பிற்காலத்தில் மூவேந்தர்களுக்கும் தங்களது படை உதவியை அளித்து தமிழக வரலாற்றை செதுக்க உதவியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
Total views 1,986 , Views today 1