குளச்சல் போரும் பொன்பாண்டித்துரை தேவரும்


மார்த்தாண்டவர்மன் (1706–1758) திருவிதாங்கூர் அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் அட்டிங்கல் இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது.

திருநெல்வேலி மறவர் படைகளின் உதவியுடன் திருவாங்கூர் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் திட்டத்தையும் தீட்டத் தொடங்கினார். புதுக்கோட்டை, சிவகங்கை, சேதுநாடு மற்றும் தஞ்சை நாடுகளைப் போல் தனது நாட்டை விரிவாக்க எண்ணினார். புதிய படை வீரர்களைத் தேர்வு செய்து தானே அவர்களுக்குப் புதிய முறையில் பயிற்சி அளித்தார். அது மலபார் வரலாற்றில் எந்த மன்னரும் செய்யாத செயலாகும்.

அஞ்சங்கோ மற்றும் எடவாய் பகுதிகளில் இருந்த ஆங்கிலேய வியாபாரிகளிடமிருந்து புதிய நவீன ஐரோப்பியப் போர்த் தளவாடங்களை வாங்கினார். தனது படையின் வலிமையைப் பெருக்கிய பின் மீண்டும் போர்க்களம் இறங்கினார். இம்முறை தனது படையை இரு பிரிவாகப் பிரித்து ஒரே நேரத்தில் காயாங்குளத்தையும், கொல்லத்தையும் தாக்கினார்.

கொல்லத்தின் மீது நடத்திய தாக்குதல் வெற்றியைத் தந்தது. ஆனால் காயாங்குளத்தின் மீது மார்த்தாண்டவர்மன் தானே தலைமை ஏற்று நடத்திய தாக்குதல் தோல்வியைத் தந்தது. காயாங்குளத்தின் மன்னர் போர்க்களத்தில் கொல்லப்பட்டாலும் அவரது சகோதரர் நிலைமையைச் சமாளித்து மார்த்தாண்டவர்மனைப் பின்வாங்கச் செய்தார்.

பொன்பாண்டித்துரை தேவர்

மீண்டும் தனது படைவலிமையைப் பெருக்க மார்த்தாண்டவர்மன் எண்ணிய நேரத்தில் தளவாய் ராம ஐயன் திருநெல்வேலி திருக்கனங்குடியைச் சேர்ந்த பொன்னம் பாண்டித்தேவர் என்ற மறவர் தலைவரை மார்த்தாண்டவர்மனிடம் அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். பொன்னம்பாண்டித் தேவரிடம் 1000 வீரர்களைக் கொண்ட வலிமையான குதிரைப்படை இருந்தது. அந்தக் குதிரைப் படையினைக் கொண்டு மீண்டும் காயாங்குளத்தின் மீது தனது மற்றொரு தாக்குதலை மார்த்தாண்டவர்மன் கொடுத்தார். ஆனால் சிறப்பான வெற்றி கிடைக்கவில்லை. காயங்குளம் மன்னரிடத்தில் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

குளச்சல் போர்

போர்த்துக்கீசியர்களைத் தோற்கடித்து ‘மிளகு’ வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த டச்சுக்காரர்கள் மார்த்தாண்டவர்மனின் எல்லை விரிவாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்கள். டச்சு கவர்னர் வான் இம்வேஹாஃப் அது குறித்து மார்த்தாண்டவர்மனுக்கு ஒரு கடிதத்தின் மூலம் தன் எதிர்ப்பைத் தெரிவித்துக் காயாங்குளம் மற்றும் இழையாடுதுஸ்வரூபம் அரசுகளை அந்தந்த அரச குடும்பத்தினரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டினார்.

அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து டச்சுக்காரர்களை மலபார் அரசியல் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மார்த்தாண்டவர்மன் எச்சரித்தார். இந்த எச்சரிக்கையின் ஆழத்தை உணர்ந்த கவர்னர் டச்சு கவுன்சிலில் இதுபற்றி விவாதித்துத் தானே மார்த்தாண்டவர்மனை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சு தோல்வியில் முடிந்தது. அதனால் ஆத்திரமடைந்த டச்சுக்காரர்கள் மார்த்தாண்டவர்மனைப் போர்முனையில் சந்திக்க முடிவெடுத்தனர்.

தங்களது தலைமையில் ‘இழையாடுதுஸ்வரூபம்’ மற்றும் கொல்லம் மன்னர்களைச் சேர்த்துக் கொண்டு போர் புரிந்தனர். மார்த்தாண்டவர்மன் தலைமையில் போர்புரிந்த மறவர் படைக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் திருக்கனங்குடி மறவர் தலைவர் பொன்னம் பாண்டியத் தேவரின் தலைமையில் வந்த குதிரைப்படை வந்தவுடன் போர் மார்த்தாண்டவர்மனுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

மலபாரில் தங்களது அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட எண்ணிய டச்சுக்காரர்கள் தங்களுக்கு அரசியல் அந்தஸ்தை அளிக்கும்படி மார்த்தாண்டவர்மனுடன் சமாதானமாகப் பேசிப் பார்த்தார்கள். ஆனால் மார்த்தாண்டவர்மன் அதற்கு இடம் தராமல் டச்சுக்காரர்களுக்கு வியாபாரக் கம்பெனி அந்தஸ்தை வழங்கினார். தங்களுக்கு இருந்த அரசியல் மற்றும் வியாபார அந்தஸ்துகளை நிலைநாட்ட எண்ணி டச்சுக்காரர்கள் 1746-ல் காயாங்குளம், புறக்காடு, தெக்கம்கூர் என்ற மூன்று அரசுகளை இணைத்துத் தங்களின் தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து மீண்டும் போர் தொடுத்தனர்.

மார்த்தாண்டவர்மன் இந்தக் கூட்டணியைச் சிதறடித்துத் தோற்ற அரசுகளை நிரந்தரமாகத் திருவாங்கூரோடு இணைத்தார். மிகவும் பரிதாபமாகத் தோல்வியைத் தழுவிய டச்சு நாட்டினர் மார்த்தாண்டவர்மனோடு வியாபாரத்தைத் தவிர மலபாரில் எப்போதும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ஒரு சமாதான உடன்படிக்கையை இறுதியாக 1748-ல் செய்து கொண்டனர்.

டச்சுப்படைகளை விரட்டியடித்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை காவல் அரண்களாக காத்த பொன் பாண்டிதுரை தேவர் தலைமையிலான மறவர் படையின் வீரம் என்றும் போற்றுதலுக்குரியது!

தொகுப்பு: www.sambattiyar.com

( ஆதார நூல்: மாவீரன் சசிவர்ணத்தேவர் வரலாறு: k.v.s மருது மோகன்)





Total views 2,874 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *