ஒரே மாவட்டத்தில் 28 படைப்பற்றுகள்

சோழநாடு என்பது தஞ்சை, திருச்சிக் கோட்டங்களைக் கொண்ட நிலப்பரப்பாகும். வடக்கும் தெற்கும் வெள்ளாறுகள்; கிழக்கே கடல், மேற்கே கோட்டைக் கரை இதற்கு எல்லைகள் ஆகும். ‘கோட்டைக் கரை’ என்பது ஆற்றங்கரை மீதமைந்த கோட்டை, அஃதாவது ஆற்றங்கரையை மிகவுயர்த்திக் கோட்டை போலக் கட்டப்பெற்ற அரண் அமைப்பாகும். இஃது திருச்சிக் கோட்டத்தில் உள்ள குழித்தலை நாட்டில் உள்ளது. கோட்டையின் சிதைவுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

சோழ மற்றும் பாண்டிய நாட்டின் எல்லையாக தென் வெள்ளாறு அமைந்துள்ளது.  தெற்கு வெள்ளாறு புதுக்கோட்டை வழியாக சென்று கடலில் கரைகிறது. சோழ மற்றும் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியாக விளங்கிய இப்பகுதியில் ஏராளமான படைப்பற்றுகள் இருந்ததை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. பாண்டிய நாடு மற்றும் சோழ நாடு ஆகிய இரு நிலப்பகுதிகளையும் உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்டம் ” இன்றைய காஷ்மீர்” போல மிலிட்டரி படை குவிக்கப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை படைப்பற்றுகளில் கள்ளர் மறவர் மற்றும் கைக்கோளர்கள் வாழ்ந்ததாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் Manual of pudukkottai state vol 2 part 1 பக் 681 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. கிபி 15 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டை செப்பேடுகளில் ”  நாராயணபேர் அரசு மக்கள் கள்ளப்படைத் தலைவர்கள் ” என கள்ளர்கள் அரசு மக்களாகவும் படைத் தலைவர்களாகவும் குறிப்பிடப் பட்டுள்ளனர். வெள்ளாற்றுக்கு வடக்கே இருந்த படைப்பற்றுகள் முழுக்க கள்ளர்களின் ஆளுமையில் இருந்துள்ளது.  வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள சில படைப்பற்றுகளில் மறவர்களின் ஆளுமையில் இருந்துள்ளதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஒரு சில படைப்பற்றுகளில் கள்ளர் மற்றும் மறவர் இன மக்கள் இருவருமே ஆளுமை செய்துள்ளனர்.

01) கல்வாசல் நாட்டு படைப்பற்று

புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரம் சிவன் கோயிலில் கிடைத்த கிபி 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கால கல்வெட்டு”கல்வாசல் நாட்டு சிராத்தக்குடி படைத்தலைவரில் பாண்டியனான தொண்டைமானார்” என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

கிபி 1222 ஆம் ஆண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் கல்வாசல் நாட்டு வண்டாங்குடி கள்ளரிடம் இருந்து தில்லை கூத்தன் என்பவர் நிலங்களை வாங்கியதற்கு கல்வாயில் நாடாள்வான் கற்பூர வில்லை வாங்கி ஒப்பந்தம் செய்துள்ளார். கல்வாசல் நாட்டின் நாடாள்வாராக கள்ளர்களே இருந்துள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

02) விசங்கி நாட்டு குளத்தூர் படைபற்று

குளத்தூர் ஈஸ்வரன் கோயிலில் கிடைத்த கிபி 1227 ஆம் ஆண்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு ” கள்ளப்பற்றில் வில்லி நீலனும் வில்லி வீரனும் குளத்தூர் வயக்கல்”  என குளத்தூரில் செயல்பட்டு வந்த கள்ளர்களின் விற்படை பற்றி குறிப்பிடுகிறது.

கத்தலூர் பெரம்பூர் நரசிங்கத்தேவர்கள், ஐந்து நிலைப்பற்று சர்தார்கள் மற்றும் குளத்தூர் தொண்டைமான்கள் இப்பகுதியில் இருந்த உதித்த வீரர்களே ஆவர்.

03)வல்லநாட்டு பெருங்குடி படைப்பற்று

கிபி 1260 ஆம் ஆண்டை சேர்ந்த வீரப்பாண்டியர் ஆட்சி காலத்து புதுக்கோட்டை திருவரங்குளம் கோயில் கல்வெட்டு ” விருதராஜ பயங்கரவளநாட்டு கானாட்டு நாட்டவற்கு தங்கள் நாட்டுப் படைப்பற்று பெருங்குடி” என குறிப்பிடுகிறது.  பெருங்குடி படைப்பற்றை சேர்ந்த நாட்டவர் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு அளித்த கொடை பற்றி இக்கல்வெட்டு உரைக்கிறது. கிபி பத்தாம் நூற்றண்டை சேர்ந்த திருக்கட்டளை கல்வெட்டு வல்லநாட்டை கள்ளர் பால் நாடு என குறிப்பிடுகிறது. கள்ளப்பால் என்பது கள்ளர்களின் நாட்டை குறிக்கும் என Inscriptions in pudukkottai state vol 1 பக்கம் 33 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்குடியில் சிங்கம்புலியார், அரையர், கிளியாண்டார்,  கண்டுவார், சூரியர், சிவன் தாக்கியார் முதலிய பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்.  இவ்வூரில் உள்ள அம்மன் கோயில் மற்றும் சிவன் கோயில்களில் கள்ளர்கள் முதல் மரியாதை பெறுகின்றனர்.

பேரையூர் மலையாலங்குடி படைப்பற்று

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் நாகநாதசுவாமி கோயிலில் கிடைத்த கிபி 1288 ஆம் ஆண்டை சேர்ந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டில் ” இந்நாட்டு படைப்பற்று மலையாலங்குடி அரசு மக்கள் இராசராச நாடாழ்வனும் உத்தமசோழ நாடாள்வானும் வில்லி வீரமழகியதேவனும் மறமுதலிகளும்” எனும் கல்வெட்டு வரிகள் இவ்வூரில் செயல்பட்டு வந்த படைப்பற்றை பற்றி குறிப்பிடுகிறது. கல்வெட்டில் நாடாழ்வார் தென்னவதரையர் உள்ளிட்ட கள்ளர் பட்டங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. மறவர்களும் அதிகாரிகளாக இருந்துள்ளனர். மலையாலங்குடியில் இன்றும் தேவர் குல மறவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பேரையூர் நாகநாத சுவாமி கோயில் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கல்வெட்டு கிடைக்கப்பெற்ற நாகநாதசுவாமி கோயிலில் தேக்காட்டூர் கள்ளர்கள் முதல் மரியாதை பெறுகின்றனர்.
ரகுநாதராய தொண்டைமான் காலத்தில் மராத்தியர் மற்றும் சேதுபதிக்கு எதிராக நடைபெற்ற போர் பேரையூரிலேயே நடைபெற்றது. இக்கோயில் கிபி 19 ஆம் நூற்றாண்டில் ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

05) வல்லநாட்டு-கவிநாட்டு சிங்கமங்கலப் படைப்பற்று

கிபி 1291 ஆம் ஆண்டை சேர்ந்த வீரப்பாண்டிய காலத்து கல்வெட்டு ” புதுக்கோட்டை வல்லநாட்டை சேர்ந்த படைபற்றான சிங்கமங்கலம் மற்றும் புதுக்கோட்டை அரையர்கள் தங்களுக்குள் உள்ள பகை நீக்கி செய்துக்கொண்ட ஒப்பந்தம்” பற்றி கூறுகிறது. அழகியா சோழ நாடாள்வான், தெற்கிலரையன், அயிலைரயன் முதலான அரையர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டில் வல்லநாடு ” கள்ளப்பால்”  நாடு என கள்ளர்களின் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிபி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டிலும் ” கள்ளப்பாற் கற்குறிச்சி வல்லநாடு” என கள்ளர் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வல்லநாடு எனும் நாட்டமைப்பு இன்றும் புதுக்கோட்டையில் கள்ளர்களின் நாடாக வலுவான கட்டமைப்புடன் உள்ளது. வல்லநாடு திருவரங்குளம் சிவன் கோயிலில் கள்ளர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை கோயிலூர் சிவன் கோயிலில் கிடைத்த கிபி 1351 ஆம் ஆண்டை சேர்ந்த வீர சயன்ன உடையார் காலத்து கல்வெட்டு ” கள்ளப்பால் கற்குறிச்சி  எத்தகரைகண்டசோழ கவிநாட்டு படைப்பற்று சிங்கமங்கலத்தரையர்களில்” என கவிநாட்டின் ஒர் படைபற்றாக சிங்கமங்கலத்தை குறிப்பிடுகிறது. கள்ளப்பால் என்பது கள்ளர்களால் ஆளப்படும் ஒர் பகுதியாக ஆகும். சிங்கமங்கலம் சில கல்வெட்டுகளில் வல்லநாட்டிலும், சில கல்வெட்டுகளில் கவிநாட்டிலும் சேர்ந்த ஊராக குறிப்பிடப்பட்டுள்ளது.  கவிநாடு இன்றும் கள்ளர் நாடாக விளங்குகிறது. கவிநாட்டு தலைமை கோயிலான திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் கள்ளர்கள் முதல் மரியாதை பெறுகின்றனர்.

06) விசங்கி நாட்டு நீர்பழனி படைப்பற்று

கிபி 1301 ஆம் ஆண்டை சேர்ந்த குலசேகர பாண்டியன் காலத்து புல்வயல் ஈஸ்வரன் கோயில் கல்வெட்டு ” இத்துறையில் குடிப்பற்றும் படைப்பற்றும் ஆயத்திலே பிடித்து குடுப்பதாக ” என நீர்பழனி மாகாணத்தில் இருந்த படைபற்றுகள் குறிப்பிடப்படுகிறது.

குளத்தூர் தாலுகாவில் உள்ள நீர்பழனி மாகாணத்து படைபற்றுகளும் குடிபற்றுகளும் புல்வயல் ஈஸ்வரன் கோயிலுக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடுகிறது.

நீர்பழனி மாகாணத்தில் உள்ள லட்சுமணப்பட்டி எனும் ஊர் லட்சுமண பாண்டுரார் எனும் கள்ளர் குல தலைவரின் பெயரில் அமைந்துள்ளது. இவ்வூரே விசங்கி நாட்டு கள்ளர்களின் தலைமையாக இருந்ததாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் குறிப்பிடுகிறது. புதுக்கோட்டை போரம் பல்லவராயர் இப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் பல்லவராயர்கள் பெயரில் பல குளங்களும் உள்ளன.
(Manual of pudukkottai state vol 2 part 2 pg 1056)/ புதுக்கோட்டை சமஸ்தான கணக்காய்வு ஒலைச்சுவடிகள்

புதுக்கோட்டை தொண்டைமான் படையில் முக்கிய பங்காற்றிய ஐந்து நிலைப்பற்று சர்தார்கள் இப்பகுதியை சேர்ந்தவர்களே.

07) விராச்சிலை படைப்பற்று

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பில்வனேஸ்வரர் கோயிலில் கிடைத்த ஸ்ரீவல்லப பாண்டியர் கால கல்வெட்டில் ” கானாட்டு படைப்பற்று விராச்சிலை மறவரில் நயினான் கங்கன் ”  என விராச்சிலையில் செயல்பட்டு வந்த பாண்டியர் கால படைபற்று பற்றி குறிப்பிடுகிறது. இன்றும் விராச்சிலை புதுக்கோட்டை வாழ் மறவர்களின் முக்கிய ஊராக திகழ்கிறது. 

08) இளஞ்சார் படைபற்று

புதுக்கோட்டை  கோட்டையூர் ஈஸ்வரன் கோயிலில் கிடைத்த மற்றொரு பாண்டியர் கால கல்வெட்டு ” வளநாட்டு படைபற்று இளஞ்சார் அரையமக்களில்” எனும் வரிகள் மூலம் இளஞ்சாவூரில் செயல்பட்டு வந்த படைபற்று பற்றி குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு பெரும்பாலும் சிதிலமடைந்துள்ளது.

09) அதளையூர் படைப்பற்று

திருமயம் சத்திய மூர்த்தி கோயிலில் கிடைத்த கிபி 1338 ஆம் ஆண்டை சேர்ந்த வீர விருப்பண்ண உடையார் கால கல்வெட்டில் “ அதளையூர் நாடு தேனாற்றுப் போக்கு எங்கள் நாட்டில் படைப்பற்று செங்குன்ற நாடு”  எனும் வரிகள் சூரைக்குடி அரசு விசயாலயதேவரின் முக்கிய படைப்பற்றாக அதளையூர் நாடு செயல்பட்டு வந்ததை குறிப்பிடுகிறது.

கிபி 13 ஆம் நூற்றாண்டு கால சுந்தரப்பாண்டியர் கல்வெட்டுகளில் அதளையூர் நாடாள்வான் தன்னுடைய நிலத்தை விற்பனை செய்த போது அவற்றில் கோயில் நிலம் மற்றும் கள்ளர் காணி நீங்கலாக மற்றவையே விற்பனை செய்யப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன. கோயிலு நிலங்களுக்கு ஈடாக கள்ளர் காணிகளும் மதிப்புடன் திகழ்ந்ததை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

10) சிறுவாயில் நாட்டு கீரனூர் படைபற்று

கீரனூர் உத்தமநாத சுவாமி கோயிலில் கிடைத்த  கிபி 1437 ஆம் ஆண்டை சேர்ந்த வீர பிரதாபராயர் காலத்து கல்வெட்டு ” செயசிங்ககுலகால வளநாட்டு சிறுவாயில் நாட்டு படைப்பற்று கீரனூர் ” என கீரனூரில் செயல்பட்டு வந்த சிறுவாயில் நாட்டு படைபற்று குறிப்பிடுகிறது.

விசங்கிநாட்டின் உள்நாடான சிறுவாயில் நாடு வடசிறுவாயில் நாடு மற்றும் தென்சிறுவாயில் நாடு என இருநாடுகளாக கள்ளர்களால் ஆளப்படுகிறது. சிறுவாயில் நாடு மற்றும் மீசெங்கிளி நாட்டு கள்ளர்களின் நாட்டுக்கூட்டம் கீரனூர் கோயிலில் கூடுவது வழக்கம்.( Manual of pudukkottai state vol 1 /120):

11)புலிவலம் படைப்பற்று

திருமயம் பெருமாள் கோயிலில் கிடைத்த கிபி 1452 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் ” இன்னாட்டு படைப்பற்று புலிவலத்து புரவில்” என குறிப்பிடப்படுகிறது.

சூரைக்குடியை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய விசயாலயத் தேவரின் முக்கிய படைப்பற்றாக புலிவலம் இருந்துள்ளது. இவ்வூர் கள்ளர்களின் ஆளுமையில் உள்ள ஒர் சிற்றூராகும். காடுவெட்டியார், சம்பட்டியார், காலிங்கராயர், சூரியர் பட்டம் கொண்ட கள்ளர்களும் கிளைவழி கள்ளர்களும், மறவர்களும் இவ்வூரில் வாழ்கின்றனர்.

12) கவிநாட்டு திருக்கட்டளை படைப்பற்று

புதுக்கோட்டை திருக்கட்டளை சிவன் கோயிலில் கிடைத்த கிபி 1467 ஆம் ஆண்டை சேர்ந்த வீரபிரதாப தேவராயர் கால கல்வெட்டில் ” காட்டு நாடான தென்பனங்காட்டு நாட்டு பெருங்கோளி ஊர் அரசு சீரங்க பல்லவராயர் கவிநாட்டு படைப்பற்று கற்குறிச்சி பற்று ” என கவிநாடான கள்ளர் நாட்டில் செயல்பட்டு வந்த படைப்பற்று பற்றி குறிப்பிடுகிறது.

இன்றைய திருக்கட்டளை அக்கால கல்வெட்டுகளில் கற்குறிச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கோயிலூர் சிவன் கோயிலில் கிடைத்த கிபி 1351 ஆம் ஆண்டை சேர்ந்த வீர சயன்ன உடையார் காலத்து கல்வெட்டு ” கள்ளப்பால் கற்குறிச்சி  எத்தகரைகண்டசோழ கவிநாட்டு படைப்பற்று சிங்கமங்கலத்தரையர்களில்” என கவிநாட்டினை கள்ளர்பால் நாடாக குறிப்பிட்டு உள்ளது.

கவிநாடு மற்றும் பனங்காடு முதலியவை கள்ளர்களின் நாட்டமைப்பை சேர்ந்தவை என புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் கூறுகிறது. ( Manual of pudukkottai state vol 1 pg 121)

13) நெய்வாசல் படைப்பற்று

புதுக்கோட்டை  நெய்வாசல் அகத்தீஸ்வரர் கோயிலில் கிடைத்த கிபி 1486 ஆம் ஆண்டை சேர்ந்த கிருஷ்ண தேவராயர் கால கல்வெட்டில் ” கல்வாசல் நாட்டு நம்பநாயக்கத்தனம் ஆன நெய்வாசல் படைத்தலைவரில் விருதராயன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.விருதராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும் இப்பகுதியில் வாழ்கின்றனர்.

கிபி 1222 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் கல்வாசல் நாட்டு வண்டாங்குடி கள்ளிரிடம் இருந்து தில்லை கூத்தன் என்பவர் நிலங்களை வாங்கியதற்கு கல்வாயில் நாடாள்வான் கற்பூர வில்லை வாங்கி ஒப்பந்தம் செய்துள்ளார். கல்வாசல் நாட்டின் நாடாள்வாராக கள்ளர்களே இருந்துள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

14) இலம்பலக்குடி படைப்பற்று

நெடுங்குடி கைலாசநாதர் கோயிலில் கிடைத்த கிபி 1497 ஆப் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் விருதராச பயங்கர வளநாட்டு கானாட்டு படைப்பற்று  கோட்டியூர் இலம்பலக்குடி” என குறிப்பிடுகிறது.  இலம்பலக்குடியில் செயல்பட்ட பழங்கால படைப்பற்று பற்றி இந்த கல்வெட்டு உரைக்கிறது.  இவுவூரில் மறவர்கள் பாரம்பபரியமாக வசித்து வருவதாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.( Manual of pudukkottai state vol 2 part 2 பக் 1159 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15) குருந்தன்பிறை விசையாலயத் தேவர் படைபற்று

கிபி 1516 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை ஊனையூர் பெருமாள் கோயில் கல்வெட்டு “செவ்வப்ப விசயாலத்தேவர் குமாரர் வெங்களப்ப விசயாலயத் தேவர் படைப்பற்று குருந்தன்பிறை” என குருந்தன்பிறையை குறிப்பிடுகிறது.  இவ்வூர் சூரக்குடி தொண்டைமான்களின் முக்கிய படைப்பற்றாக இருந்துள்ளது. செம்பியத்தரையர் முதலான கள்ளர் பட்டங்கள் அதிகாரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இவ்வூரில் கிளைவழிக் கள்ளர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர்.

16) கீழாநிலை படைப்பற்று

திருமயம் ஈஸ்வரன் கோயிலில் கிடைத்த கிபி 1520 ஆம் ஆண்டை சேர்ந்த கிருஷ்ணதேவ ராயர் கால கல்வெட்டில் ” துளையாநிலையில் படைத்தலைவரில் மீண்டவரன் சாமத்தமூர் படைத்தலைவரில் தாப்பாட்கலக்கி ஆவுடையானுக்கும் கானிலை படைத்தலைவரில் கண்டியத்தேவர்” முதலனானோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

துலையாநிலை தற்போது துளஞ்சனூர் என அழைக்கப்படுகிறது. இந்த ஊராட்சியில் பனங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர் பனங்கொண்டாவிடுதி என அழைக்கப்படுகிறது. இவ்வூர் ஒர் பழமையான விசயாலயதேவரின் படைப்பற்றாக விளங்கியதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இவ்வூரில் 1804 ஆம் ஆண்டு விஜய ரகுநாத தொண்டைமானார் பிராமணருக்கு அகரங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

17) உகிரையூர் படைப்பற்று

ஊனையூர் சிவன் கோயிலில் கிடைத்த கிபி 1577 ஆம் ஆண்டை சேர்ந்த மல்லிகார்சுன ராயர் கால கல்வெட்டில் ” உகிரையூர் படைத்தலைவரில் தாப்பாக்கலக்கி பெரியவிச்சி செல்லன் குருந்தன்” முதலானோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சூரைக்குடியை ஆட்சி செய்த அச்சுதப்ப விசயாலயதேவரின் படைப்பற்றாக உகிரையூர் இருந்துள்ளதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.

18) ஆலங்குடி மழவராயர் படைப்பற்று

நெடுங்குடி கைலாசநாதர் கோயிலில் கிடைத்த கிபி 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ” செங்கீரையில் பிள்ளை விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே இருபது ஆளையும் படவெட்டி ” என குறிப்பிடுகிறது.

ஆலங்குடி மழவராயர் படை நாயனார் காங்கேயரை போரிட்டு வீழ்த்தியதாக குறிப்பிடுகிறது. ஆலங்குடி நாடு கள்ளர்களின் நாட்டமைப்பில் ஒன்றாகும். ஆலங்குடி அருகே உள்ள கல்ல ஆலங்குடி என ஊரில் மழவராயர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இது தவிர ழவராயன்பட்டி(வம்பன்),  ராப்பூசல் , பெருங்குடி(வல்லநாடு),  நெய்வேலி, கந்தர்வகோட்டை,  பூங்குடிப்பட்டி,  சேந்தங்குடி, மழவராயன்பட்டி(அன்னவாசல்) , வம்பன் உள்ளிட்ட பல ஊர்களில் கள்ளர் குல மழவராயர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  புதுக்கோட்டை முதல் மன்னர் ரகுநாதராய தொண்டைமானின் மனைவியருள் ஒருவர் மழவராயர் வம்சத்தவரே. ஆலங்குடி மழவராயர்கள் தலைமையில் ஒரு படைப்பற்றே செயல்பட்டு வந்ததை இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.

19) அஞ்சூர் படைப்பற்று

பேரையூர் நாகநாதசாமி கோயிலில் கிடைத்த கிபி 1701 ஆம் ஆண்டை சேர்ந்த ரகுநாதராய தொண்டைமான் கால கல்வெட்டு  ” அஞ்சூர் படைப்பற்று நாட்டாரும் அரண்மனை முத்திரை மனுஷரும்” என குறிப்பிடுகிறது. அஞ்சூர் நாடு இன்றும் கள்ளர் நாடாக திகழ்கிறது.  இங்கு கள்ளர்கள் நாட்டு அம்பலங்களாக முதல் மரியாதை பெற்று வருகின்றனர். தொண்டைமான் காலத்தில் அஞ்சூரும் படைப்பற்றாக திகழ்ந்துள்ளதை இந்த கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.

17 ஆம் நூற்றாண்டு முதல் புதுக்கோட்டையில் ஆட்சி அமைத்த தொண்டைமான்கள் தங்களது ஆட்சிப்பகுதியில் புதிதாக பல படைப்பற்றுகளை உருவாக்கினர்.18 ஆம் நூற்றாண்டின் இறுதியில்  புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முக்கிய மிலிட்டரி சர்தார்களின் படைப்பற்றுகள் பற்றிய குறிப்புகள் புதுக்கோட்டை தர்பார் பதிவுகளில் உள்ளது.

20) போரம்( பெருங்களூர் ராய பல்லவராயர்) படைப்பற்று
21)அஞ்சு நிலைப்பற்று குறிகாரர்கள் படைப்பற்று
22)அண்டகுளம் நல்லப்பெரியான் மண்ணவேளார் படைப்பற்று
23) வேகுப்பட்டி ராமச்சந்திர ராங்கியத்தேவர் படைப்பற்று
24) இளந்தாரி முத்துவிஜய அம்பலக்காரர் படைப்பற்று
25) கண்ணனூர் ஆவுடையப்ப சேர்வைக்காரர் படைப்பற்று
26) ஆனைவரி முத்துக்கருப்பன் அம்பலக்காரர் படைப்பற்று
27) ஆயிங்குடி சுப்பையா அம்பலக்காரர் படைப்பற்று
28) கடையப்பட்டி ராமசாமி ராங்கியத்தேவர் படைப்பற்று  முதலோனார் தலைமையில் படைப்பற்றுகள் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளிலும் இயங்கி வந்துள்ளது. இவர்கள் அனைவரும் கள்ளர் வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.( Hollow crown: Ethino history of small kingdom pg 175). சர்தார்களின் மேலாண்மையில் அமரக்காரர்கள் எனும் படைவீரர்கள் படைபற்றுகளில் வாழ்த்து வந்தனர். இவர்கள் போர்க்காலங்களில் மன்னரின் ஆணைக்கு ஏற்ப போர்களம் கண்டுள்ளனர்.

இங்கனம் பண்டைய காலம் முதலே போர் பூமியாக திகழ்ந்த புதுக்கோட்டை படைப்பற்றுகளால் நிரம்பி வழிந்ததை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இப்பகுதியில் கடைசி வரை தமிழ் மன்னர்களின் நேரடி ஆளுமையிலேயே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இடைக்காலத்தில் பல்வேறு அரசுகள் உருவாயின.  பெருங்களூர் அரசு பல்லவராயர், அறந்தாங்கி அரசு தொண்டைமான், சூரைக்குடி அரசு விசயாலயத் தேவர், பேராம்பூர் கத்தலூர் அரசு என முழுக்க தமிழ் அரசுகளால் இப்பகுதி ஆளப்பட்டு வந்துள்ளது.

ARTICLE BY : www.sambattiyar.comTotal views 2,794 , Views today 1 

Author: admin

4 thoughts on “ஒரே மாவட்டத்தில் 28 படைப்பற்றுகள்

  1. உங்க வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  2. அருமை அருமை நன்றாக உள்ளது வளரட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *