பல்லவராயர்கள் இன்றைய புதுக்கோட்டையின் சில பகுதிகளை கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை குறுநிலத்தலைவர்களாக ஆட்சி புரிந்து வந்தனர். புதுக்கோட்டை பல்லவராயர்கள் கொண்டிருந்த ஒரே படைபற்று திருக்கட்டளை கற்குறிச்சி கள்ளர் படைபற்று ஆகும்.விஜயநகர பிரதிநிதிக்கு எதிராகவும், வெள்ளாளர்களுக்குள் நடந்த சண்டையின் போதும் தன் கள்ளர் படையை அனுப்பினார்கள் பல்லவராயர்கள். இவற்றை பற்றி சிறிது விரிவாக காண்போம்.
கவிநாட்டு படைபற்று

புதுக்கோட்டை டவுனில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள திருக்கட்டளை சிவன் கோயில் , ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இவ்வூர் கல்வெட்டுகளில் கற்குறிச்சி என குறிப்பிடப் பட்டுள்ளது.
கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு எண் 38, ” வல்லநாட்டு கவிற்பா கள்ளப்பால் நாடாய் இசைந்த நாட்டோம் இந்நாட்டு கற்குறிச்சி” என வல்லநாடு எனும் கள்ளர் நாட்டின் ஒரு பகுதியாக கற்குறிச்சி விளங்கியதை குறிப்பிடுகிறது.


கற்குறிச்சியானது கள்ளர்கள் ஆட்சி செய்த பகுதி எனும் குறிக்கும் விதமாக , புதுக்கோட்டை கல்வெட்டு எண் 232, தென்கவிர்நாட்டு கள்ளப்பால் கற்குறிச்சி என திருக்கட்டளையை சுட்டுகிறது. அதாவது தென்கவிர்நாடு என்பது கவிநாடு எனும் கள்ளர் நாடாகும். கவிநாடு என்னும் கள்ளர் நாட்டமைப்பு இன்றும் உள்ளது.

அந்த கவிர்நாட்டின் ஒரு பகுதியாக திருக்கட்டளையானது, கள்ளர் வாழும் பகுதி என குறிக்கும் விதமாக கள்ளப்பால் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கல்வெட்டின் காலம் 12 ஆம்,நூற்றாண்டு ஆகும்.


புதுக்கோட்டை கல்வெட்டு எண் 683ல், கிபி 1381 ல் வெட்டப்பட்டது. அதில் கள்ளப்பால் கற்குறிச்சி கவிநாடு படைபற்று என கள்ளர் படைபற்று குறிக்கப்பட்டுள்ளது.விசயநகர மன்னர் காலத்திலும் கள்ளர்களின் படைபற்றாக திருக்கட்டளை விளங்கியதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.


புதுக்கோட்டை கல்வெட்டு எண் 711, கிபி 1461 ம் ஆண்டை சேர்ந்தது. அந்த கல்வெட்டு சீரங்க பல்லவராயர் காலத்தை சார்ந்ததாகும். அவர் பெருங்கோளி ஊர் (பெருங்களூர்)அரசு என குறிக்கப்படுகிறார். “பெருங்கோளி ஊர் அரசு சீரங்க பல்லவராயரின் கவிநாடு படைப்பற்று கற்குறிச்சி பற்று” என பெருங்களூர் பல்லவராயரின் கவிநாட்டை சேர்ந்த படைபற்றாக கள்ளர் வாழ்ந்த கற்குறிச்சி பற்று குறிக்கப்படுகிறது. பல்லவராயர்களின் படைபற்றாக குறிக்கப்பட்ட ஒரே ஊர் கள்ளர் நாடான கவிநாட்டு கற்குறிச்சி பற்று ஆகும். தங்களின் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே கள்ளர்களை கொண்டு படைபற்றை உறுதிபடுத்தியுள்ளார் கள்ளர் பெருமகனான சீரங்க பல்லவராயர்.
பல்லவராய அரசி அனுப்பிய கள்ளர் படை

விஜயநகர அரசின் பிரதிநிதியான அக்கால ராசா என்பவன் விசங்கி நாட்டு கள்ளர்களை அடக்க புதுக்கோட்டையில் வந்து முகாமிட்டான். புதுக்கோட்டையிலுள்ள நார்த்தாமலை பகுதியில் கோட்டை கட்டி வாழ்ந்தான். விசங்கி நாட்டு கள்ளர்களை அடக்க வந்தவனை விரட்டி அடிக்க முடிவு செய்தார் பல்லவராயர் அரசி அக்காச்சி என்பவள். கச்சிராயன் பட்டம் கொண்ட கள்ளர் குல வீரன் தலைமையில் ஒரு படையை அனுப்பி, அக்கால ராசாவின் தலையை கொய்து வருமாறு ஆணையிட்டாள். அரசியின் ஆணைப்படி அக்காலராசாவின் தலையை கொய்து அரசி அக்காச்சியின் பாதத்தில் சமர்பித்தான் கள்ளர் குல கச்சிராயன்.
கணவனை இழந்த அக்காலராசாவின் 7 மனைவிகளும், நார்த்தாமலை நொச்சி கண்மாய் அருகில் கணவனுடன் தீப்பாயந்து உயிர் விட்டனர். பல்லவராய அரசி அக்காச்சியின் நினைவாக அக்காச்சியார் குளம் இன்றும் உள்ளது. கந்தர்வகோட்டை அடுத்த பகுதியில் அக்காச்சிப்பட்டி எனும் ஊர் இவரது அடையாளமாக உள்ளது. (General history of pudukottai state Appendix)
கானாடு கோனாடு போரில் கள்ளர் படை


புதுக்கோட்டை பகுதியில் வாழ்ந்த வெள்ளாளர்கள் நிலத்தரசு என குறிக்கப்பட்டுள்ளனர். அக்காலத்தில் நிலக்கிழார்களாக வேளாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். வெள்ளாளர்களில் கானாடு வெள்ளாழர்களுக்கும் கோனாடு வெள்ளாளர்களுக்கும் இடையே சச்சரவு இருந்துள்ளது. தங்களது பகைவர்களை சமாளிக்க படைபற்றுகளில் வாழ்ந்த கள்ளர் மற்றும் மறவர்களை அழைத்து தங்களுக்கு ஆதரவாக அமர்த்தினர் .
கிபி 1539 ல் கோனாட்டு வெள்ளாளர்களுக்கும், கானாட்டு வெள்ளாளர்களுக்கும் மிகப்பெரிய சண்டை மூண்டது. இரு பக்கமும் கள்ளர்கள் இருந்துள்ளனர். கானாடு வெள்ளாளர்களுக்கு ஆதரவாக சிவந்தெழுந்த பல்லவராயர் கள்ளர்களின் படையை அனுப்பி உதவி செய்கிறார். சிவந்தெழுந்த பல்லவராயர் என இருவர் புதுக்கோட்டை பல்லவராயர் வம்சத்தில் இருந்துள்ளர். முன்னவரின் காலம் கிபி 1539, அடுத்தவரின் காலம் கிபி 1650 க்கு பின் ஆகும். தனது ஆட்சிப்பகுதியை சேர்ந்த வல்லநாடு, பாலையநாடு, செங்காட்டூர் நாடு, பெருங்களூர் நாடு, அம்புநாடு, தானவ நாடு, காய நாடு, கீழ்வேங்க நாடுகளை சேர்ந்த கள்ளர்களை கானாடு வெள்ளாளருக்கு ஆதரவாக சிவந்தெழுந்த பல்லவராயர் அனுப்பினார். அவர்களின் எண்ணிக்கை 4500 மட்டுமே இருந்தது. உடனே விசங்க நாட்டு கள்ளர்களின் ஆதரவை பெற்று 1000 கள்ளர்களை படையில் இணைத்தனர்.
கோனாட்டு வெள்ளாளர்கள், கவிநாடு மற்றும் பேரையூர் பகுதி ஏரிகளை உடைத்து விட்டனர். இதன்மூலம் கானாட்டு வெள்ளாளர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. கானாட்டு வெள்ளாழர் தலைவன் வாணாதிராயர், கள்ளர்களை வெள்ளாற்றுக்கு தெற்கே அழைத்து சென்று கோனாட்டு வெள்ளாளரை தாக்கினார். தேக்காட்டூர், முனைசந்தை, பெருங்குடி, குளக்குடி மிரட்டுநிலை ஆகிய பகுதிகளில் கடும் சண்டை நடந்தது. கானாட்டு வெள்ளாளர்களுக்கு ஆதரவாக கள்ளர்கள் தீவிர தாக்குதலை தொடங்கினர். கோனாட்டு வெள்ளாளர்கள் பின்வாங்க தொடங்கினர்.
விசங்கிநாட்டு கள்ளர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க இயலாத, கோனாட்டு வெள்ளாளர்கள் புதுக்கோட்டையின் எல்லைக்கு வெளியே ஒடினர். விசங்கிநாட்டு கள்ளர்கள் கோனாட்டாரை சூரக்குடிவரை விரட்டினர். கோனாட்டு வெள்ளாளர்களின் 7 தலைவர்களையும் பிடித்த கள்ளர்கள், கானாட்டு வெள்ளாள தலைவர்களான வாணாதிராயர் மற்றும் அவரது சகோதரரான குரந்தைராயரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சண்டையில் மொத்தமாக 75 கள்ளர்கள் உயிரிழந்தனர். கோனாட்டின் 7 வெள்ளாள தலைவர்களை கள்ளர்கள் சிவந்தெழுந்த பல்லவராயர் முன் நிறுத்தினர். கள்ளர்களால் வெற்றபெற்ற கானாட்டு வெள்ளாள தலைவர்களுடன் கள்ளர்கள் மாமா- மருமகன் போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும் என சிவந்தெழுந்த பல்லவராயர் வலியுறுத்தினார். கள்ளர்களுக்கு 550 தங்க காசுகளும், 530 கலம் நெல்லும் பல்லவன் படி அளவுமுறையில் அளிக்கப்பட்டது. பெருங்களூரின் அரசாக இருந்த பல்லவராயர், வேளாண்மையில் சிறந்து விளங்கிய வெள்ளாழ தலைவர்களுக்கு ஆதரவாக தனது கள்ளர்படையை அனுப்பி காத்துள்ளார். ( தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள்)/General history of pudukkottai state 1916/கள்ளர் சரித்திரம் நமு வேங்கடசாமி நாட்டார்)
புதுக்கோட்டை பல்லவராயர்கள் ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை நிலத்தரசு செப்பேடுகளில் கள்ளப்படைத் தலைவர்கள் என்றும், பேரரசு மக்கள் என்றும் கள்ளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


பெருங்களூரில் பல்லவராயரின் கள்ளர் படை


சிவந்தெழுந்த பல்லவராயருக்கு பின் ஆட்சியை இழந்த பல்லவராயர்கள் பெருங்களூரில் இருந்து தொண்டைமான்களால் இடம் மாற்றப்பட்டு நார்த்தாமலை பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். போரம் பல்லவராயர் ரெஜிமண்ட் என அழைக்கப்பட்ட பல்லவராயர் ரெஜிமண்ட் 722 பேர் கொண்ட படைபலம் பெற்றது.இந்த பல்லவராயர்களுக்கு நிலங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டது.
250 ஆண்டுகளுக்கு முன்பே பெருங்களூரை விட்டு இடம் பெயர்ந்தாலும், இன்றும் பெருங்களூர் உருமநாதர் கோயில் திருவிழாக்களில் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை.
பல்லவராயர்களின் வழியினராக, சின்னச்சாமி பல்லவராயர், அண்ணாச்சாமி பல்லவராயர் ஆகியோர் நார்த்தாமலை அருகில் உள்ள ஆவாரங்குடிப்பட்டியில் வாழ்கின்றனர்.
இவர்களுக்கு நாரத்தாமலை அம்மன் கோயிலில் மண்டகப்படி உள்ளது. புதுக்கோட்டை பகுதியில் அரையர்களாக இருந்து அரசாக உயர்ந்த கள்ளர் பெருமகன்களான பல்லவராயர்கள், கள்ளர் படைபற்றின் தலைவர்களாக இருந்து சிறப்புடன் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது எளிதாக விளங்கும்i
Article by : www.sambattiyar.com
Total views 2,047 , Views today 1