புதுக்கோட்டை பல்லவராயர்கள் வரலாறு

பல்லவராயர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் மற்றும் வைத்தூர் ஆகிய ஊர்களை தலைமையிடமாகக் கொண்டு புதுக்கோட்டையின் வடக்கு பகுதிகளை கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள். கிபி 1539 ஆம் ஆண்டை சேர்ந்த திருமலைராய சிவந்தெழுந்த பல்லவராயர் கல்வெட்டில் (புதுக்கோட்டை கல்வெட்டு 752), பாண்டியர் முடிக்காத்தவர் என தன்னை குறித்துள்ளார். சிவந்தெழுந்த பல்லவராயர் உலாவில் தங்களது முன்னோர்களாக பெருமாள் நம்பி பல்லவராயர், கருணாகர தொண்டைமான் முதலியோரை சிவந்தெழுந்த பல்லவராயர் குறித்துள்ளனர். இவர்கள் தமிழ் போர்குடி மரபினரான முக்குலத்தோரில் கள்ளர் மரபினை சேர்ந்தவர்கள் என புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.

பல்லவராயர்கள் கள்ளர்கள்

தொண்டை மண்டலத்தில் இருந்து குடியேற்றம்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில், இனாம் செட்டில்மெண்ட் ஆபிசில் உள்ள செப்பேடு பல்லவராயர்கள் குடியேற்றம் பற்றிய சில தகவல்களை தருகிறது.அதில் உள்ள தகவலின்படி, உக்ர வீர பாண்டியன் தொண்டைமண்டலத்தில் 7 வருடங்கள் காத்திருந்து, வெங்கடாசல பல்லவராயர் என்பவரை, தெற்கு நோக்கி அழைத்து வந்ததாகவும், பல்லவராயர் மூலம் சேதுபதி நொண்டி மறவன் என்பவரை வீழத்தியதாகவும், அவரின் வீரத்தால் மகிழ்வுற்ற பாண்டிய மன்னர் , பல்லவராயருக்கு தனது மருமகன் எனும் பட்டத்தை அளித்து , பொன்னமராவதி பக்கத்தில் பெருமளவு நிலங்கள், குதிரைகள், யானைகளை அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெங்கடாசல பல்லவராயரும் அவரை தொடர்ந்து வந்த தொண்டைமான் சக்கரவர்த்தியும் , புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள அம்புநாட்டில் குடியேறினார்கள். 
(General history of pudukkottai state R aiyar 1916 p 98)/ Manual of pudukkottai state vol 2 part 1

Genera

பாண்டிய மன்னருக்கு உதவியதால் புதுக்கோட்டை பகுதியில் கேரள சிங்கவளநாட்டில் பல்லவராயர் குடி அமர்ந்ததை 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிவந்தெழுந்த பல்லவராயன் உலா பாடுகிறது. வெங்கடாசலப் பல்லவராயர் புதுக்கோட்டை இனாம் செட்டில்மெண்ட் செப்பேட்டிலும் குறிப்பிடப்படுகிறார்.

சிவந்தெழுந்த பல்லவராயர் உலா

அரையர்களாக பல்லவராயர்கள்:-

தொண்டை மண்டலத்தில் இருந்து தெற்கில் குடியேறிய பல்லவராயர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் கீழ் தளபதிகளாக விளங்கினர். பாண்டியர் ஆட்சி முடிவுற்றப் பின், பல்லவராயர்கள் புதுக்கோட்டை பகுதிகளில் அரையர்களாக இருந்துள்ளதை தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள் எடுத்துரைக்கின்றது. அரையர்களாக வரி வசூல், காவல், நீதி பரிபாலனம் முதலியவற்றை செய்து வந்துள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில், சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவர் கலசமங்கலம், சிங்கமங்கல பகுதிகளின் அரசாக இருந்துள்ளதை தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள் குறிப்பிடுகின்றன.புதுக்கோட்டையில் இருந்த செட்டியார்கள், இப்பகுதியில் இருந்த வாணாதிராய நிலச்சுவன்தார்களுக்கு கடன்களை அளித்து உதவியுள்ளனர். இதற்காக செட்டியார்கள் சில கிராமங்களை பெற்றுக்கொண்டனர். கோனாட்டு வெள்ளாழர்கள் பாண்டிய நாட்டு பகுதிகளையும், வாணாதிராய நிலக்கிழார்கள் சோழ நாட்டு பகுதிகளிலும் வசித்துவந்தனர். கோனாட்டு வெள்ளாழ தலைவர்கள், வாணாதிராயருக்கு எதிராக சச்சரவு செய்யும் பொழுது, வாணாதிராயருக்கு ஆதரவாக கள்ளர்கள் போரிடவும், இதற்கு கள்ளர்கள் பெற வேண்டிய பணம் முதலியவற்றை பல்லவராயர் நிர்ணயித்துள்ளார்.(General history of pudukkottai state 1916/ தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள்)

அம்பு நாட்டில் குடியேறிய வெங்கடாசல பல்லவராயரின் வழியினர் அம்புகோயிலில் கிடைத்த கல்வெட்டுகளில் அரையர்களாக குறிப்பிடப்படுகின்றனர்.கிபி 13 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய தேவர் ஆட்சி காலத்தில் அம்புகோயிலில் பல்லவராயர்கள் குறிக்கப்படுகின்றனர்( புதுக்கோட்டை க.வெ 369)

கிபி 13 ஆம் நூற்றாண்டில் சுந்தர பாண்டிய தேவர் காலத்தில் அம்புகோயில் அஞ்சுகுடி அரையர்கள் என அம்புநாட்டு அரையர்கள் தங்களை குறித்துள்ளனர்( புதுக்கோட்டை க.வெ 522)அம்புநாட்டில் குடியேறிய தொண்டைமான்கள் மற்றும் பல்லவராயர்கள் , (குருக்கள், பிச்சர், மேளக்காரர், அம்பட்டன், வண்ணான்) ஆகிய ஐந்து குடிகளை கொண்டுவந்து அமர்த்தி ஐந்து குடிகளுக்கும் அரையராக தங்களை குறித்துள்ளனர்(General history of pudukkottai state R aiyar ) புதுக்கோட்டை தொண்டைமான்கள் தங்களது செப்பேடுகளில் அம்புநாட்டு காணியுடைய அரையர் மக்கள் என்றே குறித்துள்ளர்.( காடங்குடி செப்பேடு கிபி 1739)

புதுக்கோட்டை கல்வெட்டு 522
General history of pudukkottai state 1916
( காடங்குடி செப்பேடு கிபி 1739)-” அழும்பில் அரையர்கள்”

அரசு மக்கள்

பல்லவராயர் காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த கள்ளர மரபினர் தங்களை நாராயணப்பர் அரசு மக்கள் என்றும், படைத்தலைவர் அல்லது தந்திரிமார் என்றும் குறித்துள்ளனர். புதுக்கோட்டை பகுதியில் கிடைத்த செப்பேடுகளில், வெள்ளாளர்கள் காணியாச்சிக்கு நிலத்தரசு என்றும் கள்ளர்கள் அரசு மக்கள் மற்றும் படைத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

General history of pudukkottai state 1916

தென்பனங்காட்டு நாடு பெருங்களூர் அரசாக பல்லவராயர்கள்

கோனாட்டு வெள்ளாழ நிலக்கிழார்களுக்கும் வாணாதிராயர்களுக்கும் பல முறை கடுமையான மோதல்கள் நிகழ்ந்துள்ளது. கோனாட்டு வெள்ளாழர்களுக்கு ஆதரவாக பாண்டி நாட்டு கள்ளர்களும் மறவர்களும், வாணாதிராயருக்கு ஆதரவாக சோழ நாட்டு கள்ளர்களும் போரிட்டுள்ளனர். போரில் உயிரிழிந்த கள்ளர்களுக்கு வாணாதிராயர்கள் பழிக்காணியாக நிலங்களை அளித்துள்ளார். ஓரு சமயம் கோனாட்டார்களுக்கு எதிரான போரில் 50 கள்ளர்கள் உயிரிழந்ததாகவும், அச்சமயம் பழிக்காணியாக பாலையநாட்டு பகுதிகளை கள்ளர்கள் பெற்றுள்ளனர்.மற்றொரு போரில் 50 கள்ளர்கள் இழந்ததற்கு மற்ற பல கிராமங்களை பெற்றுள்ளனர்.கீரனூர் தாலுகா கட்சேரி எனும் இடத்தில் கிடைத்த செப்பேடு கானாடு கோனாடு போரில் 80 கள்ளர்கள் உயிரிழந்ததாகவும், அதன்பின் பழிக்காணியாக பெருங்களூர் அருகே உள்ள பனங்காடு எனும் பகுதியை கள்ளர்கள் பெற்றுள்ளனர். பல்லவராய அரையர்கள் பனங்காடு பகுதிக்கு குடியேறினர். பாலையநாடு மற்றும் வல்லநாட்டு கள்ளர் அரையர்களான பல்லவராயர்கள் நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் பணிகளை செய்து வந்துள்ளனர். இதற்காக வாணாதிராயர் 120 பொன் மற்றும் 100 கலம் நெல்லை பல்லவராயர்களுக்கு அளித்துள்ளார் என தேக்காட்டூர் சுவடிகள் குறிப்பிடுகின்றது.(General history of pudukkottai state R aiyar 1916 p 67-68)

General history of pudukkottai state 1916

தென்பனங்காட்டு நாட்டில் குடியேறிய பல்லவராயர்கள், தென்பனங்காட்டு நாட்டை சேர்ந்த பெருங்களூரை மையமாக கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். பல்லவராயர்கள் தங்களது கல்வெட்டுகளில் தென்பனங்காட்டு நாட்டு பெருங்களூர் அரசு என குறித்துள்ளனர். பனங்காட்டு பகுதி கள்ளர்களின் ஆதரவை கொண்டு பல்லவராய அரையர்கள் “பனங்காடு நாட்டு பெருங்களூர் அரசு” நிலைக்கு உயர்ந்துள்ளனர். ( புதுக்கோட்டை கல்வெட்டு 713,714)

பனங்காட்டுப்பகுதி கள்ளர் நாடுகளில் ஒன்றாக இருந்ததை புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் குறிப்பிடுகிறது.

 ஓரு சமயத்தில் கோனாட்டு வெள்ளாளருக்கும், கானாட்டு வெள்ளாளர்களுக்கும் ஏற்பட்ட பெரும் சண்டையில் வல்லநாடு, பாலையநாடு, பெருங்களூர் நாடு, செங்காட்டூர் நாடு, அம்பு நாடு, தானவநாடு ஆகிய நாடுகளை சேர்ந்த கள்ளர்கள் கானாட்டு வெள்ளாள தலைவரான வாணாதிராயருக்கு ஆதரவாக போரிட்டனர். மேலும் உதவி தேவைப்பட்ட நிலையில் விசங்கி நாட்டை சேர்ந்த 12000 கள்ளர்கள் வாணதிராயருக்கு ஆதரவாக களமிறங்கி கோனாட்டு வெள்ளாள ஆதரவு படையினரை வீழ்த்தி கோனாட்டு தலைவர்களை, சிவந்தெழுந்த பல்லவராயர் முன் கள்ளர்கள் நிறுத்தினார்கள். இப்போரில் வெற்றி பெற்றதற்காக கள்ளர்களுக்கு 550 பொன்னும், 530 களம் நெல்லும் வாணாதிராயர் அளிக்க வேண்டும் என சிவந்தெழுந்த பல்லவராயர் உத்தரவிட்டார். மேலும் வெள்ளாள ர்கள் மாமனும் மருமகனும் போல கள்ளர்களுடன் இருக்க அறிவுறுத்தினார். உகந்தரசு செட்டியார் என்பவர் வாணாதிராயருக்கு தேவையான பொற்காசுகளை கடனாக அளித்தார். சாதாரண அரையர்களாக இருந்த பல்லவராயர்கள் அரசு நிலைக்கு உயர்ந்து ஆதனக்கோட்டை முதல் கவிநாடு வரையும், குடுமியான்மலை முதல் குளவாயப்பட்டி முதலான் பகுதிகளை ஆளத்தொடங்கினர். தங்களை “ராஜ்யம் பண்ணியருளுகையில்”என மன்னர்களாக குறித்தனர். ( தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள், general history of pudukkottai state page 68-69) R aiyar.)

தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள்- கள்ளர் சரித்திரம்
General history of pudukkottai state 1916
General history of pudukkottai state 1916

பல்லவராயர்களின் ஆட்சி

பல்லவராயர்கள் ஆட்சி செய்த பகுதிகளாக ஆலங்குடி நாடு, அமராபதி நாடு, கடவன்குடி நாடு, செங்காட்டூர் நாடு, திருப்பேரையூர் நாடு, வல்லநாடு, மெய்மலை நாடு, சந்திரேக்க நாடு, கொடுங்குன்றநாடு, கோளக்குடி நாடு, கோனாடு ஆகிய பகுதிகள் சிவந்தெழுந்த பல்லவராயர் உலாவில் குறிக்கப்படுகிறது.( Manual of pudukkottai state vol 2 part 1 733). பல்லவராயர்கள் தங்களது கல்வெட்டுகளில் பெருங்களூர் அரசு என்றே குறித்துள்ளனர். இவர்கள் புலிக்கொடியை கொண்டிருந்ததாகவும், பல்லவன்படி எனும் பெயரில் கோயில்களில் வழிபாடுமுறை ஏற்படுத்தி அதற்கு கொடைகளை அளித்து வந்துள்ளனர். இவர்கள் தங்களது ஆட்சி காலத்தில், கள்ளப்பால் நாடு என குறிக்கப்பட்ட கவிநாட்டு திருக்கட்டளையை முக்கிய படைபற்றாக கொண்டிருந்தனர்

கல்வெட்டுகளில் பல்லவராய அரசர்கள்

  • தென்னதிரையன் பிள்ளை பல்லவராயர்(கிபி 1312)
  • ஸ்ரீரங்க பல்லவராயர் (கிபி 1462)
  • பெருமாள் பல்லவராயர் (கிபி 1481)
  • மாலையிட்டான் பல்லவராயர் பிள்ளை பல்லவராயர் (கிபி 1466)
  • வீரநரசிங்க நாயக்க பல்லவராயர் (கிபி 1510)
  • நல்ல பெருமாள் பல்லவராயர் (கிபி 1526)
  • சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் (கிபி 1540)
  • அச்சுதப்பல்லவராயர் (கிபி 1588)
  • ஆவுடைய நாயனார் பல்லவராயர் (கிபி 1607)
  • மல்லப்ப பல்லவராயர் (கிபி 1616)
  • ஆளுடைய நாயனார் பல்லவராயர் ( கிபி 1675)
  • மல்லப்ப பல்லவராயர் மற்றும் சிவந்தெழுந்த பல்லவராயர் (கிபி 1681) (Manual of pudu.state vol 2 part 1 page 734)

சுதந்திர ஆட்சி

14 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் அரசர்களாக ஆட்சி செய்த பல்லவராயர்கள் தொடக்கத்தில் கோனேரிராயர், காங்கேயர் மற்றும் விஜய நகர பேரரசுக்கு கட்டுப்பட்டு ஆட்சி புரிந்திருந்தாலும், இடைக்காலங்களில் தன்னாட்சி புரிந்ததற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கிறது.புதுக்கோட்டை கல்வெட்டு எண் 866 ( கிபி 1537) ல் அச்சுதப்பல்லவராயரின் மகன் மல்லப்ப பல்லவராயர் தன்னாட்சி புரிந்துள்ளதை விளக்குகிறது. புதுக்கோட்டை க.வெ 860(கிபி 1589) மற்றும் 864 (கிபி 1607) களில் முறையே அச்சுதப்பல்லவராயர் மற்றும் ஆவுடை நயினார் பல்லவராயர் தங்களது கல்வெட்டுகளில் எந்த மன்னரின் மேலாண்மையையும் குறிக்காமல் சுதந்திர ஆட்சி புரிந்துள்ளதை உணர்த்தியுள்ளனர். புதுக்கோட்டை கல்வெட்டு எண் 968 மல்லப்ப பல்லவராயர் மற்றும் சிவந்தெழுந்த பல்லவராயர் தன்னாட்சி புரிந்ததையும், கொடை அளித்ததையும் விளக்குகிறது.புதுக்கோட்டை கல்வெட்டு எண் 958 பெருங்களூர் அரசு ஆளுடைய நாயினார் பிள்ளை பல்லவராயர் தன்னாட்சி புரிந்து அளித்த கொடையினை விளக்குகிறது.

Inscriptions of Pudukkottai state 864
Inscriptions of Pudukkottai state 864
Inscriptions of Pudukkottai state 864

விஜயநகர அரசோடு போர்

  • விஜயநகர அரசின் பிரதிநிதியான அக்கால ராசா என்பவன் விசங்கி நாட்டு கள்ளர்களை அடக்க புதுக்கோட்டையில் வந்து முகாமிட்டான்.
  • புதுக்கோட்டையிலுள்ள நார்த்தாமலை பகுதியில் கோட்டை கட்டி வாழ்ந்தான்.
  • விசங்கி நாட்டு கள்ளர்களை அடக்க வந்தவனை விரட்டி அடிக்க முடிவு செய்தார் பல்லவராயர் அரசி அக்காச்சி என்பவள்.
  • கச்சிராயன் பட்டம் கொண்ட கள்ளர் குல வீரன் ஒருவனை அனுப்பி, அக்கால ராசாவின் தலையை கொய்து வருமாறு ஆணையிட்டாள்.
  • அரசியின் ஆணைப்படி அக்காலராசாவின் தலையை கொய்து அரசி அக்காச்சியின் பாதத்தில் சமர்பித்தான் கள்ளர் குல கச்சிராயன்.
  • கணவனை இழந்த அக்காலராசாவின் 7 மனைவிகளும், நார்த்தாமலை நொச்சி கண்மாய் அருகில் கணவனுடன் தீப்பாயந்து உயிர் விட்டனர்.
  • பல்லவராய அரசி அக்காச்சியின் நினைவாக அக்காச்சியார் குளம் இன்றும் உள்ளது.கந்தர்வகோட்டை அடுத்த பகுதியில் அக்காச்சிப்பட்டி எனும் ஊர் இவரது அடையாளமாக உள்ளது. (General history of pudukottai state R aiyar. Appendix)

ஆட்சிமாற்றம்

கிபி 1639 ல் ராய தொண்டைமான் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் துணை கொண்டு பல்லவராயர்களிடம் இருந்து புதுக்கோட்டையின் பெரும்பான்மையான பகுதிகளை பெற்றார். கிபி 1686 ல் கிழவன் சேதுபதி துணைக்கொண்டு சிவந்தெழுந்த பல்லவராயர் கொல்லப்பட்டு வெள்ளாற்றுக்கு தெற்கில் இருந்த பல்லவராயரின் பகுதிகள் இரகுநாதராய தொண்டைமான் வசம் வந்தது. அந்த நிகழ்வு இளந்தாரி அம்பலக்காரர் மேனுஸ்கிரிப்டில் விவரிக்கப்பட்டுள்ளது. “கண்டதேவியில் இருந்த பல்லவராயருக்கு தன்னை வந்து காணுமாறு தூது அனுப்பினார் சேதுபதி. ஆனால் பல்லவராயர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டு இருந்தார். இதனால் கோபமடைந்த சேதுபதி தன் மகனை யானை மேல் அமர்த்தி பல்லவராயரை தண்டிக்குமாறு அனுப்பினார். சேதுபதியின் மகன் பல்லவராயரை கொன்றுவிடுகிறார்.இதனை அடுத்து பல்லவராயரின் உதவியாளர்கள் சின்ன பங்காரு மற்றும் பெரிய பங்காரு ஈட்டியை எய்து சேதுபதியின் மகனை கொன்றுவிடுகிறார்கள். இதன்பின் புதுக்கோட்டை வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள பகுதிகள் தொண்டைமான் வசம் வந்தது. பெருங்களூர் பல்லவராயர்கள் பிற்காலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் படையில் முக்கிய தளபதிகளாக பணியாற்றினர். (General history of pudukkottai state R aiyar 1916 p 120-130/ இளந்தாரி அம்பலக்காரர் ஒலைச்சுவடி)

பல்லவராய மன்னர்களின் அறச்செயல்கள்

  • சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டை பல்லவராய மன்னர்களில் சிறந்தவராக கருதப்படுகிறார். அவர் மேல் 17 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட சிவந்தெழுந்த பல்லவராயர் உலா இவரது புகழை எடுத்துரைக்கிறது.இவர் பல்லவர் வழி வந்தவர் என்றும், பெரிய பெருமாள் பல்லவராயர் என்பவரின் மகன் என்றும் கூறப்பட்டுள்ளது . இவர் சிறந்த சிவபக்தர் என்றும், சோழனின் மருமகன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா)
  • சிவந்தெழுந்த பல்லவராயர் திருக்கோகர்ணம் சிவபெருமானுக்கு பொற்கிரீடம் அளித்துள்ளார். திருக்கோகர்ணத்தில் பாரசங்கிலி மண்டபத்தை கட்டியுள்ளார். (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா). குடுமியான்மலை கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில் தான் பல்லவராயர்கள் முடிசூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்பின் தொண்டைமான் மன்னர்களும் இதே சன்னதியில் முடிசூட்டுவதை 18 ஆம் நூற்றாண்டுவரை பின்பற்றினர்.
  • குடுமியான்மலை குடுமிநாதர் மேல் கொண்ட பக்தியினால், அக்கோயிலின் கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், பூங்கா, தேர் ஆகியவற்றை உருவாக்கினார். (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா/manual of pudukkottai state vol 2 part 1 )
  • தேரடிக்கு தெற்கில் பல்லவராயர் கட்டின பன்னீரண்டு கால் பிள்ளையார் மண்டபம்(( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 972)
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருக்கோயில்
குடுமியான்மலை சிவன் கோயில் எதிரில் உள்ள 12 கால் மண்டபம்
குடுமியான்மலை சிவன் கோயில்
புதுக்கோட்டை மாவட்ட வரலாறு : ராஜா முகமது
புதுக்கோட்டை பல்லவன் குளம்
  • புதுக்கோட்டை மையத்திலும், பேரையூர், விளத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும் பல்லவன் குளத்தை உருவாக்கினார். (manual of pudukkottai state vol 2 part 1 )
  • பாப்பான்வயல், பழிஞ்சி, சேந்தமங்கலம், சிவபுரம் ஆகிய கிராமங்களை பிராமணர்களுக்கு அளித்தார். (General history of pudukkottai state page R aiyar pg – 100-101)
  • தில்லையிலும், காவேரிபூம்பட்டினத்திலும் பல்லவனீச்வரம் எனும் கோயிலை கட்டியவர்கள். (சிவந்தெழுந்த பல்லவராயர் உலா)
  • கிபி 1312 ல் தென்னதிரையன் பிள்ளை பல்லவராயன் வழுத்தூர் கோயிலுக்கு பல்லவன் சந்தி எனும் வழிபாட்டுக்கு நிலங்களை தானமாக அளித்தார்
  • கிபி 1387 ல் பெருங்களூர் விழித்துறங்கும் பல்லவராயர் திருக்கோகர்ணம் கோயிலுக்கு, விளக்குடி எனும் ஊரிலுள்ள நிலங்களை அளித்தார்
  • கிபி 1462 ல் பெருங்களூர் ஸ்ரீரங்க பல்லவராயர் திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு பல்லவன் சந்தி வழிபாட்டுக்காக நிலங்களை அளித்தார்
  • கிபி 1466 ல் பெருங்களூர் மிலிச்சர் பிள்ளை பல்லவராயர் என்பவர் குளத்தூர் சிவன் கோயிலுக்கு கொடை அளித்துள்ளார்.
  • கிபி 1481 ல் பெருங்களூர் விழித்துறங்கும் பிள்ளை பல்லவராயர் திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு ஆட்டங்குடி எனும் ஊரிலுள்ள நிலங்களை கொடையாக அளித்தார்.
  • கிபி 1539 ல் சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு நிலங்களை அளித்துள்ளார்.
  • கிபி 1615 ல் அச்சுத பல்லவராயர் மற்றும் மல்லப்ப பல்லவராயர் குடுமியான்மலை அருகே பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்.
  • மல்லப்ப பல்லவராயர் குடுமியான்மலை கோயிலில் பணிப்பெண்ணாக இருந்த பல்லவராய மாணிக்கத்தாள் என்பவருக்கு நிலங்களை தானமாக அளித்துள்ளார்.
  • பெருங்களூர் கோனேரிராய பல்லவராயர் என்பவர் குன்றாண்டார் கோயிலில் உள்ள கோயில்களுக்கு கொடைகள் அளித்துள்ளார்.
  • பெருங்களூர் ஆவுடை நயினார் பல்லவராயர் கீழக்குடியில் உள்ள கோயிலுக்கு நிலக்கொடை அளித்துள்ளார். (General history of pudukkottai state page R aiyar pg – 100-101)

பல்லவராயர்கள் கண்ட போர்கள்

  • வாரைப்பதி ,அழும்பில், சூரக்குடி ஆகியவற்றை போர்களில் வெற்றி கண்டவர்கள்
  • பாண்டிய மன்னர்களுக்கு போரில் உதவிய காரணத்தால் பெறப்பட்ட வழுதி மானங்காத்தான் எனும் பட்டத்தை கொண்டவர்கள்.
  • 18 வன்னியர்களை போரில் வென்றவர்கள்.
  • சாளுவர்களுக்கு போர் உதவி செய்ததால் சாளுவர் மானங்காத்தான் எனும் பட்டத்தை பெற்றனர்.
  • கிபி 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களுக்குள் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் ஈழத்தரசரை வென்று பாண்டியருக்கு முடிசூட்டினர்
  • அறந்தாங்கி தொண்டைமானை எதிர்த்து போரிட்டு வென்றுள்ளனர். (சிவந்தெழுந்த பல்லவராயன் உலா)
  • கோனாட்டு வெள்ளாழ தலைவர்களுக்கும் கானாட்டு வெள்ளாழ தலைவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில், கோனாட்டு வெள்ளாழ தலைவர் வேண்டுகோளுக்கு இணங்க 8000 கள்ளர் போர்வீரர்களை அனுப்பி கோனாட்டு தலைவர்கள் வெற்றி பெற உதவினார். (தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள், General history of pudukkottai state page 68-69) R aiyar.)
  • சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் களபத்தை(யானை) வென்றவர் என போற்றப்படுகிறார்.(சிவந்தெழுந்த பல்லவராயன் உலா)
  • ஈரப்ப நாயக்க ஐயன் எனும் விஜய நகர தளபதிக்கு போர் உதவி அளித்ததால் கிடைத்த பகுதிகளை சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு தானமாக அளித்தார்.(General history of pudukkottai state page 100-101) R aiyar.)

புதுக்கோட்டை தொண்டைமான்களின் ஆட்சியில் பல்லவராயர்கள்

புதுக்கோட்டையை தொண்டைமான் மன்னர்கள் கைபற்றிய பின் பல்லவராயர்கள் தொண்டைமான் மன்னர்களின் கீழ் பெருங்களூரில் மிகப்பெரிய படைபற்றை உருவாக்கினர். மற்றொரு பிரிவு பல்லவராயர்கள் அம்புநாட்டில் ஜாகீர்தார் எனும் குறுநில ஆட்சியாளர்களாக விளங்கினர்.

கிபி 1732ல் புதுக்கோட்டையை தாக்கிய மராத்தியரை எதிர்த்து ரங்கு பல்லவராயர் போரிட்டார்.

கிபி 1736 ல் புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத ராய தொண்டைமான் பல்லவராயர்களுக்கு நிலங்களை கொடையாக அளித்துள்ளதை தென்னங்குடி கோயில் கல்வெட்டு கூறுகிறது.(General history of pudukkottai state 1916 page 175)

கிபி 1767 ல் கண்ட பல்லவராயர் குடுமியான்மலை அருகில் உள்ள கூடலூர் எனும் ஊரை குடுமிநாதர் கோயிலுக்கு கொடையாக அளித்தார். அதற்கு பின் கூடலூர் கண்ட பல்லவராயர் பூபாலபுரம் என அழைக்கப்பட்டது.( manual of pudukkottai state vol 2- part 2 page 1029)

மன்னர் ராய ரகுநாத தொண்டைமான் (1769-1789) தனது மகளான அம்மாள் ஆயியை, மாப்பிள்ளை பல்லவராயருக்கு மணம் முடித்து கொடுத்தார்

General history of pudukkottai state 1916

விஜய ரகுநாதராய தொண்டைமான்( 1730-1769) ஆட்சி காலத்தில் பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போரத்தில் ராய பல்லவராயர் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தலைமையில் 722 பேர் கொண்ட படையானது பல்லவராயர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. மன்னரின் ஆணைக்கு ஏற்ப பல போர்களில் வீர தீரம் காட்டி உள்ளனர். (General history of pudukkottai state 1916 page 240-243) • இவர்களுக்கு பல சலுகைகள் மற்றும் நிலங்கள் அளிக்கப்பட்டு இருந்தது. இவர்களிடம் வாள், கத்தி, துப்பாக்கி, வளரி ஆகியவற்றை கையாளும் திறனுடைய மிகப்பெரிய படை இருந்துள்ளது ( General history of pudukkottai state 1916 page 243)

போரம்- பெருங்களூர்

கிபி 1781ல் ஐதர் அலியால் பிடிக்கப்பட்ட கீழாநிலை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளை மீட்க தொண்டைமான் மன்னரின் ஆணைக்கேற்ப, போரம்( பெருங்களூர்) பல்லவராயர் தலைமையில், ராமசாமி ராங்கியர், சுப்ரமணிய முதலியார் முதலியோர் உதவியுடன் பெரும்படை சென்று ஐதர் அலியின் படையை விரட்டியடித்து, அறந்தாங்கி, கீழாநிலை கோட்டைகளை மீட்டது. (General history of pudukkottai state 1916 page 270)

ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் ஆட்சி காலத்தில், கிபி 1797 ல் விசங்கி நாட்டு கள்ளர்கள் செய்த கிளர்ச்சிகளை அடக்க 700 பேர் கொண்ட படையானது போரம் ( பெருங்களூர்) ராய பல்லவராயர் தலைமையில் அனுப்பப்பட்டது. (General history of pudukkottai state 1916 page 296)


 பெருங்களூரில் படைபற்றை உருவாக்கி பல போர்களில் பங்கேற்ற போரம் பல்லவராயர்கள் 18 ஆம் நூற்றாண்டில், தொண்டைமான் மன்னரால் நார்த்தாமலை பகுதியில் உள்ள ஆவாரங்குடிப்பட்டி கிராமத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அளிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு அளிக்கப்பட்ட கிராமங்களில் பல்லவராயர் பெயர்களில் குளங்கள் இருந்ததை புதுக்கோட்டை சமஸ்தான ஒலைச்சுவடிகள் குறிப்பிடுகிறது. நீர்பழனி மாகாணத்தில் அவையாப்பட்டி எனும் ஊரில் சிவந்தி பல்லவராயன் குளம், அழகப்பன் பல்லவராயன் குளம், சொக்கநாத பல்லவராயர் குளம் முதலிய குளங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவையாப்பட்டி உட்பட 10 க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் போரம் பல்லவராயர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 153)

புதுக்கோட்டை சமஸ்தான ஒலைச்சுவடிகள்

நார்த்தாமலை மாகாணத்தில் உள்ள பரம்பூரில் அரண்மனைத்தோப்பு, ரா ரா ஸ்ரீ பல்லவராயர் தோப்பு முதலியவை ஒலைச்சுவடி குறிப்புகளில் உள்ளது .( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 1072)

புதுக்கோட்டை சமஸ்தான ஒலைச்சுவடிகள் 1813

பிலாக்குடி விடுதி மாகாணத்தில் பல்லவராயன்பத்தை கிராமம் அம்புநாட்டு பல்லவராயர்கள் வாழும் ஒர் கிராமம்.(( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 1426)

புதுக்கோட்டை சமஸ்தான ஒலைச்சுவடிகள்

கிபி 1807-1814 காலகட்டத்தில் மாப்பிள்ளை பல்லவராயர் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தான தலைமை மேலாளராக இருந்தார்.

General history of pudukkottai state 1916
  • மாப்பிள்ளை பல்லவராயர் இறந்தபின், அம்மாள் ஆயி, பல்லவராயரின் தம்பியான ரங்கன் பல்லவராயர் என்பவரை தனது வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார்.(General history of pudukkottai state 1916 page 382)
  • கிபி 1828 ல் புதுக்கோட்டை மன்னர் ரகுநாத தொண்டைமான் தனது மகளை ஜாகிர்தாரான ரங்கன் பல்லவராயர் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார்.(General history of pudukkottai state 1916 page 382)
  • கிபி 1767 ல் கண்ட பல்லவராயர் குடுமியான்மலை அருகில் உள்ள கூடலூர் எனும் ஊரை குடுமிநாதர் கோயிலுக்கு கொடையாக அளித்தார். அதற்கு பின் கூடலூர் கண்ட பல்லவராயர் பூபாலபுரம் என அழைக்கப்பட்டது.( manual of pudukkottai state
  • மன்னர் ராமசந்திர தொண்டைமான் தனது மகளை அம்புநாட்டை சேர்ந்த குழந்தை பல்லவராயர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களது மகனான மார்தாண்ட பைரவ பல்லவராயரை தனது அரசியல் வாரிசாக தத்தெடுத்தார் தொண்டைமான்.(manual of pudukkottai state vol 2 part 1 pg 854)

கிபி 1829 ல் ரங்கன் பல்லவராயர், தொண்டைமானாரின் ஆணைக்கு ஏற்ப இலுப்பூர் வட்டம் சுந்தரப்பட்டியில் அணை கட்டியுள்ளார்.( கல்வெட்டு 24, புதுக்கோட்டை கல்வெட்டுகள், பனையூர் ராஜேந்திரன்)

 கிபி 1898 முதல் 1928 வரையிலான காலகட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தான திவான் மற்றும் ரீஜன்ட் ஆகிய பதவிகளை, மார்த்தாண்ட பைரவ பல்லவராயரின் சகோதரர் விஜய ரகுநாத ராய பல்லவராயர் வகித்து சிறப்பித்தார். (manual of pudukkottai state vol 2 part 1 949-950)

Manual of pudukkottai state vol 2 part 1
Potrait of vijaya raghunatha pallavarayar: Pudukkottai museum

மேல அரண்மனை ஜாகீர்தாரான ராஜ்குமார் ராமச்சந்திர தொண்டைமான், பெருங்களூர் பல்லவராயர் வழிவந்த அண்ணாச்சாமி பல்லவராயரின் மகளான மதுராம்பாள் ஆயி என்பவரை திருமணம் செய்தார். மதுராம்பாள் ஆயி 1920 ல் மரணமடைந்தார். 
இதற்கு பிறகு ராஜ்குமார் ராமச்சந்திர தொண்டைமான்,   பிலாவிடுதியை சேர்ந்த குழந்தைசாமி பல்லவராயர் அவர்களின் மகளான ஜானகி ஆயி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவரே புதுக்கோட்டை யின் கடைசி மன்னர் 1 தொண்டைமான்.(Manual of pudukkottai state vol 2 part 1 pg 896)
 1935 ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்து எழுதப்பட்ட கடிதத்தில் போரம் பல்லவராயர் வழிவந்த ராமசாமி பல்லவராயரை , புதுக்கோட்டை மன்னருக்கு முதல் மாமன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமசாமி பல்லவராயருக்கு எழுதப்பட்ட கடிதம்

புதுக்கோட்டை மன்னராக மீண்டும் பல்லவராயர்

புதுக்கோட்டையை கிபி 1839-1886 காலகட்டத்தில் ஆட்சி செய்த மன்னர் ராமசந்திர தொண்டைமான், ஆண் வாரிசு இல்லாததால் தனது மகள் வயிற்று பேரனான மார்த்தாண்ட பைரவ பல்லவராயரை 1877 ல் தனது அரசியல் வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு : தமிழக அரசு வெளியீடு
Trichinopoly gazetter


புதுக்கோட்டையை ஆட்சி செய்த பல்லவராயர்களின் பங்காளிகளான இவர்கள் அம்புநாட்டில் பிலாவிடுதி கிராமத்தை சேர்ந்தவர்கள்.

இவரது காலத்தில் புதுக்கோட்டை நகரம் பொலிவு பெற்று விளங்கியது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய அருங்காட்சியமான புதுக்கோட்டை அருங்காட்சியகம் இவரது ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.

கிபி 1899 ல் மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு திரும்பியதன் நினைவாக புதுக்கோட்டை டவுன் ஹால் கட்டடம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை டவுன் ஹால்

புகழ்பெற்ற புதுக்கோட்டை மன்னர் கல்லூரி இவரது காலத்தில் இறுதி வடிவம் பெற்றது.

மன்னரது மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் முயற்சியால் அக்காலத்தில் முதல் பெண்ணாக மன்னர் கல்லூரில் சேர்ந்து படித்த, முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உயரந்தார். அக்காலத்தில் ஒரு பெண்ணை கல்லூரியில் அனுமதிக்க பலத்த எதிர்ப்பு எழுந்தபோதும் மாரத்தாண்ட பைரவ தொண்டைமான் தனது ஆதரவு கரத்தை நீட்டி முத்துலட்சுமி ரெட்டியை கல்லூரியில் சேர்த்து,  இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக அவர் உருவாக முக்கிய காரணமாக இருந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு : ராஜா முகமது

புதுக்கோட்டை நகரத்திற்கு கம்பீர தோற்றத்தை அளிக்கு பொது அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டது இவரது காலத்தில்தான். புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் புதுக்கோட்டை அரண்மனை( இன்றைய ஆட்சியர் அலுவலகம்) இவரது காலத்தில் கட்டப்பட்டதே.

புதுக்கோட்டை பொது அலுவலக கட்டிடங்கள்
புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் சிலை – புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம்

*மன்னராட்சியில் மக்களாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் சபை அமைக்கப்பட்டு , அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக தேர்தலும் நடத்தப்பட்டது.

 * கிபி 1902 ல் மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக ராணியார் மருத்துவமனை தொடங்கப்பட்டது.

* முதன்முதலில் விவசாயத்தை ஊக்குவிக்க விவசாய பள்ளிகள் தொடங்கப்பட்டது.

 * மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆஸ்திரேலிய பயணத்தின் போது ஆஸ்திரேலிய பெண் ஒருவரை மணந்தார். மக்களின் எதிரப்பை அடுத்து, தனது காதலியே முக்கியம் என பாரீசில் குடியேறி வாழ்ந்து , கிபி 1928 ல் மரணித்தார். இவரது உடல் லண்டனில் வைதீக முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. (manual of pudukkottai state vol 2 part 1 873-890

* அம்புநாட்டில், தென்தெரு குப்பைத்தை சேர்ந்த பல்லவராயர்கள் , கோயில் திருவிழாக்களில் முதன்மை பெறுகின்றனர்.(Hollow crown :Ethinohistory of small kingdom : nicholas dirks 1987)

 * அம்புநாட்டில் அரண்மனை மரியாதை ராஜாவான தொண்டைமான்களுக்கு அளிக்கப்பட்டாலும், இனமரியாதை பல்லவராயர்களுக்கே முதன்மையாக அளிக்கப்படுகிறது. அதாவது புதுக்கோட்டை மன்னருக்கு புதுக்கோட்டையிலுள்ள அனைத்து கோயில்களிலும் முதல் மரியாதை உண்டு. அதன்படியே அம்புகோயில் அம்மன் கோயிலிலும் அரண்மனை மரியாதை அளிக்கப்பட்டு, பிறகு தென்தெரு குப்பத்தில் வாழும் பல்லவராயர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. தொண்டைமான்களுக்கு முன் புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள் எனும் அடிப்படையில் பல்லவராயர்களுக்கு இங்கு முதன்மை அளிக்கப்படுகிறது.Hollow crown :Ethinohistory of small kingdom : nicholas dirks 1987)

போரம் ( பெருங்களூரில்) 722 பேர் கொண்ட படைபற்றை நிர்வகித்த பல்லவராயர்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நார்த்தாமலை பகுதியில் ஆவாரங்குடிப்பட்டிக்கு இடம் மாற்றப்பட்டனர். இவர்களுக்கு இங்கு ஒர் அரண்மனை இருந்துள்ளது.

போரம் பல்லவராயர்களுக்கு விழா நாட்களில் புதுக்கோட்டை அரண்மனையில் இருந்து மரியாதைகள் வருவது வழக்கம்.

 * பல்லவராயர்களும் முக்கிய விழா நாட்கக

அரண்மனை சென்று மன்னரை சந்தித்து வாழ்த்துக்கள் கூறி வருவது வழக்கம்.

* சர்தார் போரம் பல்லவராயரின் குமாரர் மலையப்ப பல்லவராயர் மற்றும் அண்ணாசாமி பல்லவராயரின் குமாரர் ராமசாமி பல்லவராயர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளாக:-குதிரை, கத்தி, இரட்டை தீவட்டி, வாள், குடை, ஈட்டி, கேடயம் , பல்லக்கு, பயல், சவுரி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.( புதுக்கோட்டை கேசட் 1917 பக்கம் 87) (Structure of social and political relations in little kingdom: Nicholas dirks)

* பெருங்களூர் உருமநாதர் கோயில் சித்திரை திருவிழா பெருங்களூர் நாட்டு கள்ளர் நாட்டார்களால் நடத்தப்படுகிறது.இவர்கள் ஐந்துகரை நாட்டார்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஐந்துகரை என்பது ஐந்து கள்ளர் குழுமங்களை கொண்டு பிரிக்கப்பட்டதாகும். சிந்துரார், கொம்பியார், கூழியர், சேப்பிளார், பம்பாளியார் ஆகிய ஐந்து பட்டங்களை கொண்ட கள்ளர்களின் தலைமையில் ஐந்து கரை பிரிக்கப்பட்டுள்ளது.இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பல்லவராயர் முதல் மரியாதை பெற்ற பின் நாட்டார்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது.சித்திரை திருவிழாவின் போது நாட்டார்களுக்கு கச்சை கட்டப்படுகிறது. உருமநாதர் கோயிலை புதுப்பிக்க திருப்பணி தலைவராக துரை குமரப்பன் கூழியர் செயல்பட்டார். இவர் கூழியர் பட்டம் கொண்ட நாட்டார்.( பெருங்களூர் உருமநாதர் கோயில் ஸ்தல வரலாறு சுவடிகள்)

பெருங்களூர் உருமநாதர் கோயில் சுவடிகள்
Manual of pudukkottai state vol 1

போரம் பல்லவராயர்களின் குல தெய்வம் பெருங்களூரில் உள்ள உருமநாதர் கோயில். பெருங்களூரில் உள்ள புகழ்பெற்ற உருமநாதர் கோயிலில், சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் போரம் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. திருவிழாவின்போது முதல் திருநீர் , பொங்கலுக்கு முதல் பானை, கெடா வெட்டில் முதல் கிடா அனைத்தும் பல்லவராயர்களுக்கே. பெருங்களூரில் உள்ள சோழர்கால சிவன் கோயில், மலைய மருங்கனார் கோயில் என அனைத்து கோயில்களிலும் போரம் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உருமநாதர் கோயிலில் மூலவரை நோக்கியவாரு நேர்கோட்டில் யானை மற்றும் குதிரை சிலைகளை வைக்கும் உரிமை பல்லவராயர்களுக்கே உண்டு.( மன்னர் காலத்தில் வைக்கப்பட்ட பழைய சிலைகள் சிதிலமடைந்து விட்டது) யானை மற்றும் குதிரைகளை கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. கம்மங்காடு எனும் ஊரில் பல்லவராயர் காளி எனும் ஒரு காளியையும் பல்லவராயர்கள் வழிபட்டு வருகின்றனர்.( பெருங்களூர் உருமநாதர் கோயில் தலைமை பூசாரி :- மணி அய்யர், 23 தலைமுறைகளாக உருமநாதர் கோயிலில் பூசாரிகளாக இருப்பவர்கள்)

 

* பெருங்களூரில் இருந்து நார்த்தாமலையை அடுத்த ஆவாரங்குடிப்பட்டியை சுற்றியுள்ள 10 கிராமங்கள் இவர்களுக்கு தொண்டைமானால் அளிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படை தளவாடங்களுடன் அங்கு குடியேறினர். நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயிலில், இன்றும் பெருங்களூர் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. நார்த்தாமலை அம்மன் கோயிலில் ஆறாம் மண்டகப்படி பல்லவராயர்களுக்கு உரியதாகும். ஆறாம் மண்டகப்படியின் போது மட்டுமே, காளை வாகனம் தேரில் வைத்து கோயிலை சுற்றி இழுத்து வரப்படுகிறது. ஆகாச ஊரணி எனும் இடத்தில் இருந்து சாமி கொண்டுவரப்பட்டு ஆறாம் மண்டகப்படி அன்று கோயிலை சுற்றி வலம் வரும் . (சர்தார் முத்துக்குமார் பல்லவராயர் : லெக்கணாப்பட்டி தலைவர், ஆவாரங்குடிப்பட்டி)

 * இது தவிர இலுப்பக்குடிப்பட்டியில் உள்ள குளவாய் கருப்பர் கோயிலிலும் பல்லவராயர்களே முதல் மரியாதை பெறுகின்றனர். (சர்தார் முத்துக்குமார் பல்லவராயர் : லெக்கணாப்பட்டி தலைவர், ஆவாரங்குடிப்பட்டி)

 * போரம் பல்லவராயர்கள் சர்தாராக இருந்தபோது, தொண்டைமான் மன்னர் காலத்தில் அவர்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டு இருந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக, குற்ற வழக்குகளில் ஒருவேளை பல்லவராயர்கள் குற்றம் சாட்டப்பட்டால் நீதி விசாரணையின் போதோ, நீதிமன்றங்களிலோ இவர்கள் உட்கார அனுமதிக்கப்படுவர். நிற்க வேண்டிய அவசியமில்லை. அக்காலத்தில் இது மிகப்பெரிய மரியாதையாகும்.(803/1916) pudukkottai darbar letter)

கிபி 1839 ல் ஜாகிர்தார் ரங்கன் பல்லவராயர் வசம் 11 கிராமங்கள் இருந்துள்ளது( Gazettee of pudukkottai district by Gandhi 1983)

பல்லவராயர்கள் வழிவந்த விஜய ரகுநாத பல்லவராயர் கறம்பக்குடி சேர்மனாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு , தன்னலமின்றி பல சேவைகளை செய்துள்ளார். அவரது பொது நலத்தொண்டால் பலனடைந்த பொது மக்கள் தங்களது சொந்த செலவிலேயே பல்லவராயருக்கு சிலை வைத்து வருடா வருடம் அவரது பிறந்தநாளில் விழா எடுத்து வருகின்றனர்.

தொண்டை மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டை பகுதிக்கு குடியேறிய பல்லவராயர்கள் தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி ஆண்டுள்ளனர். நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்து வரும்போதெல்லாம் போர்களத்தில் வீர தீரம் காட்டியுள்ளனர். தங்களது முடியாட்சி முடிவடைந்த பின்பும், பெரிய படைபற்றை உருவாக்கி தொடர்ந்து உதிரம் சிந்தியுள்ளனர். புதுக்கோட்டை வரலாற்றில் பல்லவராயர்களின் சாதனைகள் மணிமகுடமாக திகழும்.

புதுக்கோட்டை பல்லவராய மன்னர்களின் தலைநகரான பெருங்களூர் உருமநாதர் கோயிலின் 23 தலைமுறைகள் வழிவந்த பூசாரி திரு. முத்துக் கருப்பன் அவர்கள் அளித்த பேட்டி:-https://youtu.be/YNRtnEK3EgI

Article by : www.sambattiyar.com

Total views 4,113 , Views today 4 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *