புதுக்கோட்டையை ஆண்ட கடைசி பல்லவர்கள்

தமிழக வரலாற்றில் மூவேந்தர்களுக்கு அடுத்தபடியாக பெருஞ்சிறப்பை உடையவர்கள் பல்லவ வேந்தர்கள். தமிழக கட்டிட கலையில் பல்லவர்கள் பல புதிய புரட்சிகளை செய்வித்தனர். தொண்டை நாடு முதலாக பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த பல்லவர்கள் சோழர்களின் எழுச்சிக்கு பிறகு சோழர்களின் மேலாண்மையை ஏற்று அதிகாரிகளாகவும் தளபதிகளாகவும் வாழ தலைப்பட்டனர். இத்தகைய பல சிறப்புகளை உடைய பல்லவ வேந்தர்களின் வழிவந்த பல்லவராயர்களும் தொண்டைமான்களும் சென்ற நூற்றாண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே பல்லவர்கள் தொடர்பான அடையாளங்கள் சென்ற நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டமாகும். கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி வரையிலும் புதுக்கோட்டை பல்லவராயர்கள், அறந்தாங்கி தொண்டைமான்கள் மற்றும் புதுக்கோட்டை தொண்டைமான்கள் என பல்லவ மரபினரின் ஆட்சியிலேயே புதுக்கோட்டை மாவட்டம் இருந்துள்ளது. இவர்களின் ஆட்சி காலத்தில் பல்லவ மரபினை தொடர்பு படுத்தும் பல நடைமுறைகள் பயன்பாட்டில் இருந்துள்ளது.

பல்லவன் சந்தி


புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் சிவன் கோயிலில் கிடைத்த கிபி 1253 ஆம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் சந்தரபாண்டியன் கால கல்வெட்டில் ” திருப்பனங்காடுயாருக்கு பிள்ளை பல்லவராயர் கட்டின பல்லவன் சந்திக்கு ” எனும் வரிகள் கிபி 13 ஆம் நூற்றாண்டிலேயே பல்லவராயர்கள் பல்லவன் சந்தி எனும் வழிபாட்டை நடத்தியுள்ளதை நமக்கு உணர்த்துகின்றது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் வைத்தூர் சிவன் கோயிலுக்கு ” பல்லவன் சந்தி” எனும் வழிபாடு நடத்த பிள்ளை பல்லவராயர் தானம் அளித்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.மாறவர்மன் திரிபுவனசக்கரவர்த்தி என குறிப்பிடப்பட்ட பெயர் சிதைந்த பாண்டிய மன்னரின் கல்வெட்டு புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோயிலில் குடபோக மண்டபத்தில் உள்ளது.

இக்கல்வெட்டில் திருக்கோகர்ண பெருமானுக்கு பல்லவன் சந்தி எனும் வழிபாடு நடத்த புதுக்கோட்டை அரையர்கள் நிலதானம் வழங்கியுள்ளனர். பாண்டியர்களின் தளபதிகளாக செயல்பட்ட புதுக்கோட்டை பல்லவராயர்களின் பெயரிலேயே கோயில்களில் ” பல்லவன் சந்தி” எனும் வழிபாட்டு முறை பயன்பாட்டில் இருந்துள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

பெருமானுக்கு பல்லவன் சந்திக்கும் பல்லவன் திருநாளுக்கும் ஆவணி மாதம் சித்திரை ” எனும் கல்வெட்டு வரிகள் இந்த அரிய தகவலை தருகிறது.ஆலங்குடி தாலுகா திருக்கட்டளை சிவன் கோயிலில் கிடைத்த கிபி 1480 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் ” பெருங்களூர் அரசு விழித்துறங்கும் பெருமாள் பல்லவராயர்” எனும் அரசர் இக்கோயிலுக்கு ” பல்லவன் சந்தி ” எனும் வழிபாடு நடைபெற தானம் அளித்துள்ளதை குறிப்பிடுகிறது.

திருக்கட்டளை ஆண்டநாயினாற் பல்லவன் சந்தியாக ஆடி அருளி அமுது செய்யவும் ” எனும் கல்வெட்டு வரிகள் இந்த அரிய தகவலை தருகின்றது.பல்லவன் திருநாள்


கிபி 1270 ஆம் ஆண்டை சேர்ந்த மாறவர்மன் குலசேகர பாண்டின் காலத்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சிவன் கோயில் கல்வெட்டில் பெருங்களூர் மிழித்தான் பல்லவராயர் என்பவர் தென்கவிநாட்டு மக்களிடம் இருந்து நிலங்களை பெற்று அதனை திருக்கோகர்ணம் சிவன் கோயிலுக்கு பல்லவன் திருநாள் மற்றும் பல்லவன் சந்தி முதலிய வழிபாடுகள் நிகழ்த்த தானமாக அளித்துள்ளார். தனது பெயரால் ” பல்லவன் திருநாள்” எனும் மண்டகப்படியே நிகழத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிபி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாறவர்மன் திரிபுவனசக்கரவர்த்தி எனும் குறிப்பிடப்பட்ட பெயர் சிதைந்த பாண்டிய மன்னரின் கல்வெட்டு புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோயிலில் குடபோக மண்டபத்தில் உள்ளது.

இதே கல்வெட்டில் பல்லவராய மன்னர்களின் பெயரில் ” பல்லவன் திருநாள் ” எனும் திருவிழாவும் திருக்கோகர்ணம் பெருமானுக்கு நடத்தப்பட்டுள்ளது. இது புதுக்கோட்டையில் பல்லவராயர்களின் ஆதிக்கத்தை நமக்கு எடுத்துரைக்கிறது.
பல்லவன் தடி


கிபி 1530 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் சிவன் கோயில் கல்வெட்டில் வல்லநாட்டு மக்கள் வரிநீக்கிய நிலங்களை சொக்கனார் பல்லவராயர் என்பவருக்கு அளித்துள்ளனர். நிலங்கள் அளக்கப்படும் அளவையாக ” பல்லவன் தடி” எனும் அளவுகோல் பயன்பாட்டில் இருந்துள்ளதை கல்வெட்டு உணர்த்துகிறது.உட்பட நிலம் இதுவும் தெற்கில் பல்லவன் தடி” எனும் கல்வெட்டு வரிகள் பல்லவராயரின் பெயரிலேயே ” பல்லவன் தடி” எனும் நில அளவுகோல் பயன்பாட்டில் இருந்த அரிய தகவலை நமக்கு தருகிறது.

பல்லவன் படி

புதுக்கோட்டை மன்னர் விசயரகுநாத பாதர் தொண்டைமானின் அடப்பன் கூத்தப்பன் சத்திர செப்பேடு கிபி 1797 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இச்செப்பேட்டில் எண்ணையை அளக்கும் அளவையாக “பல்லவன் படி” பயன்பட்டுள்ளது. தொண்டைமான் மன்னர்களும் தங்களது ஆட்சி காலத்தில் தங்களது பல்லவர் அடையாளத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

பல்லவன் குளம்

Manual of pudukkottai state vol 2 part 1


புதுக்கோட்டையில் ஆட்சி செய்த பெருங்களூர் பல்லவராயர்கள் தங்களது பெயரில் குளங்களை உருவாக்கினர். புதுக்கோட்டை நகரம், பேரையூர் மற்றும் விராலிப்பட்டி முதலிய ஊர்களில் பல்லவன் நீர்நிலைகளை உருவாக்கி அதற்கு பல்லவன் குளம் என பெயரிட்டனர். கிபி 1881 ல் புதுக்கோட்டை மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் புதுக்கோட்டை பல்லவன் குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டதாக புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.

சிங்க இலச்சினை

பல்லவர்கள் தங்கள் ஆரம்பகால எழுத்துப் பொறிப்புகள் அற்ற நாணயங்களில் (சிம்ம விஷ்ணுவின் காலத்தியவை என்று கணிக்கப்படுபவை) தங்கள் அரச சின்னமாக சிங்கங்களைப் பொறித்து உள்ளனர். பல்லவர்கள் கோவில்களிலும் சிங்கங்கள் பெருமளவில் செதுக்கப்பட்டு உள்ளன. பல்லவர்களின் உருவப்பள்ளி பட்டயங்களும் பீகிரப் பட்டயங்களும் சிங்க இலச்சினையை பயன்படுத்தி உள்ளனர். இவை போர் முனையில் இருந்து விடப்பட்ட பட்டயங்கள், இவற்றை ஆதாரங்களாகக் கொண்டு போர் வெற்றிகளைப் பறைசாற்ற மட்டும் வலிமையுடைய சிங்க இலச்சினைகளை பல்லவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
( பல்லவர் வரலாறு: இரா மன்னர் மன்னன்)

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்களது இலட்சினையாக ” சிங்கக்கொடியை ” தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். ( General history of pudukkottai state : 1916 : pg 120)

General history of pudukkottai state 1916புதுக்கோட்டை தொண்டைமான்களின் கொடி

அறந்தாங்கியை ஆட்சி தொண்டைமான்களும் தங்களது இலட்சினையாக ” சிங்கக்கொடியை” பயன்படுத்தி வந்துள்ளனர். கிபி 1530 ஆம் ஆண்டை சேர்ந்த வணங்காமுடி ஆதொண்டைமானாரின் காணியாட்சி செப்பேடு ” சிங்கக்கொடியான்” என தொண்டைமானாரை போற்றுகிறது.


பல்லவ மரபினர்


பதினேழாம் நூற்றாண்டில் பெருங்களூரை மையாக கொண்டு புதுக்கோட்டையை ஆட்சி செய்த பல்லவராயர்களில் கடைசி மன்னரான சிவந்தெழுந்த பல்லவராயர் தன்னை

” நிறைந்தவடி வேலன் புகழ்வழுதி வேந்தன் செய்ந்தனர பாலன் சிவந்தெழுந்த பல்லவர்கோன்” என தன்னை பல்லவர் வழியினன் என குறிப்பிட்டுள்ளார்.

( சிவந்தெழுந்த பல்லவராயர் உலா 68-70)

சிவந்தெழுந்த பல்லவராயர் மற்றொரு பாடலில்

“நெறிமால் தலைத்தொண்டை மான்மழுவன் சாமந்தன் இன்னொர் குலத்தொண்டை மண்டலத்தார் கோமான் ” என குறிப்பிட்டுள்ளார்.

( சிவந்தெழுந்த பல்லவராயர் உலா 105-106)

நெறிமால் தலை தொண்டைமான் குலத்தை சேர்ந்த தொண்டை மண்டலத்தார் கோமான் என சிவந்தெழுந்த பல்லவராயர் தொண்டைமானோடு தனக்குள்ள தொடர்பை குறிப்பிடுகிறார்.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களில் முதல்வரான ராயத் தொண்டைமான் மேல் பாடப்பட்ட ராய தொண்டைமான் அனுராகமாலை எனும் நூல்

” இந்நிலமன் சீரங்க ராயருக்கு ராய தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால் யானை” என பாடுகிறது.

இராய தொண்டைமான் அனுராகமாலைதொண்டை மன்னனான ராய தொண்டைமான் ஸ்ரீரங்க ராயருக்கு போர் யானைகளை பயிற்றுவித்து அனுப்பியதாக இப்பாடல் குறிப்பிடுகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிவகங்கை சரித்திர கும்மி எனும் நூலில் விஜய ரகுநாதராய தொண்டைமான் போர் உதவி செய்ததை பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

” மன்னன் சேதுபதி சுவான்துரை தொண்டை மண்டலத்துரை மூவருடன் “

இப்பாடலில் விஜயரகுநாதராய தொண்டைமான் ” தொண்டை மண்டலத்துரை” என தொண்டை மண்டல அரசராக குறிப்பிடப்படுகிறார்.
புதுக்கோட்டை மன்னர்கள் தங்களை ” ராஜ பல்லவர்” என குறிப்பிட்டு உள்ளதாகவும், இவர்கள் பல்லவர் வழியினர் என்றும் இந்திய தொல்லியல் துறை 1906 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.( Annual report on epiraphy 1906-1907)


அறந்தாங்கியை ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர்களும் தங்களை ” தொண்டை மண்டல பரிபாலனன், மல்லை மயிலை கச்சி ஆறம்பதியுடையான், தொண்டை வளநாடன், வண்டை நகராதிபன்” என தங்களை பல்லவ மரபினராக குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் வழிவந்தவர்களே பாலையவனம் ஜமீன்தார்களான வணங்காமுடி பண்டாரத்தார்கள்.( அறந்தாங்கி தொண்டைமான்கள்: புலவர் இராசு: பக் 67)/ General history of pudukkottai state பக் 97)

பல்லவராயர்களின் கடைசி கல்வெட்டுசோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் இருத்து புதுக்கோட்டையில் அதிகாரம் செய்த பல்லவராயர்கள் பிற்காலத்தில் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் ஜாகீர்தார்கள் , படைவீரர்கள் என மிக உயர்ந்த நிலையில் இருந்தனர்.

புதுக்கோட்டை பல்லவராயரை குறிப்பிடும் கடைசி கல்வெட்டு கிபி 1830 ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஒரு அணை கட்டியது தொடர்பாக குறிப்பிடும் இக்கல்வெட்டு ” மகாராச மானியராய ரங்கம் பல்லவராயர்” என குறிப்பிடுகிறது. ரங்கன் பல்லவராயர் என்பவர் மகாராசர் என குறிப்பிடப்பட்டுள்ளார். ஏனெனில் இவர் புதுக்கோட்டை மன்னரான ராஜா ரகுநாத தொண்டைமானின் மருமகன் ஆவார். ரங்கன் பல்லவராயர் ஜாகிர்தார் எனும் பெரும் நிலச்சுவான்தாராக இருந்தார். இவர் வசம் பதினோரு கிராமங்கள் இருந்துள்ளது.
(General history of pudukkottai state 1916 பக் 382)கிபி 1813 ஆம் இயற்றப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான கணக்காய்வு ஒலைச்சுவடிகளில் நீர் பழனி மாகாணத்தில் ” ராஜ ராஜ ஸ்ரீ பல்லவராயர் அவர்களின் அரண்மனை – தோப்பு ” முதலியன குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் 1813இதே சுவடிப்பதிப்பில் ” அரண்மனை ராஜ ராஜ ஸ்ரீ மாப்பிள்ளை ஐயா தோப்பு ” என குறிப்பிடுகிறது. இங்கு குறிப்பிடப்படும் மாப்பிள்ளை ஐயா என்பவர் மாப்பிள்ளை பல்லவராயர் ஆவார். இவர் 1769-1789 காலத்தில் புதுக்கோட்டை மன்னராக இருந்த ராய ரகுநாத தொண்டைமான் அவர்களின் மருமகன் ஆவார். ரங்கன் பல்லவராயரும் மாப்பிள்ளை பல்லவராயரும் சகோதரர்கள் ஆவர்.

General history of pudukkottai state
சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் அரசியலில் முக்கிய பங்காற்றிய பல்லவர் மரபினர் பிற்காலத்தில் புதுக்கோட்டை மண்டலத்தில் குறுநில மன்னர்களாக ஆட்சி புரிந்துள்ளதை வரலாற்று ஆவணங்கள் உணர்த்துகின்றன. பழமையான பல்லவ பேரரசின் கடைசி அடையாளங்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பரவிக் கிடந்ததை வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

பல்லவர்கள் தொடர்பான ஊர் பெயர்கள்:

பல்லவராயன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்தில், கள்ளர் குல பல்லவராயர்கள் வாழும் சிற்றூர்.

பல்லவராயன்பத்தை:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

பல்லவராயன்பத்தை:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், முள்ளங்குறிச்சி ஊராட்சியில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். இது தெற்கு பல்லவராயன்பத்தை என அழைக்கப்படுகிறது.

பல்லவராயர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், காட்டாத்தி ஊராட்சியில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

காடவராயன்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம்,  புனல்குளம் ஊராட்சியில் காடவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

Article by: www.sambattiyar.com

Total views 2,037 , Views today 10 

Author: admin

1 thought on “புதுக்கோட்டையை ஆண்ட கடைசி பல்லவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *