சோழ மற்றும் பாண்டிய நாடுகளின் எல்லைப் பகுதியாக விளங்கிய தெற்கு வெள்ளாறு புதுக்கோட்டை மாவட்டத்தின் வழியே சென்று கடலில் கரைகிறது. தமிழக வரலாற்றில் புதுக்கோட்டை மாவட்டம் தனி சிறப்பு பெற்று விளங்குகிறது.
புதுக்கோட்டை பகுதியில் குடிகளின் குடியேற்றம் பற்றி பல கற்பனை கதைகள் சில ஆய்வாளர்களால் திணிக்கப்பட்டுள்ளது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வரலாற்றையும் திரிக்க முயன்று தோல்வி அடைந்துள்ளனர். இதற்கு ஒரு படி மேலே சென்று வெள்ளாளர்கள் தான் கள்ளர் மற்றும் மறவரை புதுக்கோட்டை பகுதியில் குடியேற்றம் செய்ததாக பல ஆதாரமற்ற தகவல்களை எழுதியும் வந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக பழைய காலத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் குடிகளைக் கொண்டு குடியேற்றம் தொடர்பான உண்மை தன்மைகளை அறிந்து கொள்ளலாம். புதுக்கோட்டையில் கிபி பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பான கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் ” கள்ளர் இனத்தவர்கள்” குறித்து காண்போம்.
கிபி 909 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை திருக்கட்டளை சிவன் கோயில் கல்வெட்டில் ” வல்லநாட்டுக் கவிற்பா கள்ளப்பால் நாடாய் இசைந்த நாட்டோம் ” எனும் வரிகள் முக்கிய தகவலை தருகின்றது. அதாவது முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே புதுக்கோட்டை வல்லநாடும் கவிற்பா எனும் கவிநாடும் கள்ளர்கள் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன. ( ஆதாரம்: Inscriptions of pudukkottai state vol 1 பக் 33)

கிபி 915 ஆம் ஆண்டை சேர்ந்த முதலாம் பராந்தக சோழன் காலத்து புதுக்கோட்டை குடுமியான்மலை கல்வெட்டில் ” கானவன் சேந்தன் கள்ளன்” என்பவர் குடுமியான்மலை சிவன் கோயிலுக்கு அளித்த கொடை பற்றி குறிப்பிடப்படுகிறது. இவர் குடுமியான்மலையை சேர்ந்தவராக குறிப்பிடப்படுகிறார்.

கிபி 921 ஆம் ஆண்டை சேர்ந்த முதலாம் பராந்தக சோழன் கால திருப்பழனம் கல்வெட்டில் ” கோனாட்டு கொடும்பாளூர் கள்ளன் ஆச்சப்பிடாரி” என்பவர் குறிப்பிடப்படுகிறார். இவர் புதுக்கோட்டை கொடும்பாளூரை ஆட்சி செய்த வேளிர் குல அரச மரபினர் ஆவார்.( கல்வெட்டு: 140/1928)

கிபி 940 ஆம் ஆண்டை சேர்ந்த முதலாம் பராந்தக சோழன் கால திருப்பழனம் கல்வெட்டில் ” கோனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கள்ளன் ஆதித்தபடாரி ” என கொடும்பாளூர் அரச குலத்தவர் குறிப்பிடப்படுகிறார். ஆதித்த படாரி என்பவர் கொடும்பாளூர் அரசரான தென்னவன் இளங்கோவேளாரின் மகளாவார்.( கல்வெட்டு 345/1902)

கிபி 956 ஆம் ஆண்டை சேர்ந்த சுந்தர சோழன் கால புதுக்கோட்டை கொடும்பாளூர் கல்வெட்டில் ” மதுராந்தகன் சுந்தர சோழன் வேளத்து பெண்டாட்டி கள்ளச்சி உத்தம” என குறிப்பிடுகிறது. சோழ நாட்டில் அரச குலத்தவர் குடியிருப்புகள் ” வேளம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சையில் திருமஞ்சனத்தார் வேளம், திருமஞ்சனட்டார் வேளம், இராசராச தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம் என்பனவாம். குறிப்பிட்ட ஒரு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளருக்கெனத் தனி வேளம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூரில் இவ் வேளங்கள் யாவும் நகரின் எல்லைக்கு அப்பால் ‘புறம்பாடி’யில் அமைக்கப்பட்டிருந்தன. வேளத்தில் பணி புரிபவர்கள் வேளத்து பெண்டாட்டி என அழைக்கப்பட்டனர். அவ்வகையில் புதுக்கோட்டை கொடும்பாளூர் வேளிர்களின் வேளத்தில் கள்ளர் குல பெண் பணி புரிந்ததை இந்த கல்வெட்டு உணர்த்துகிறது.

இதே போல் கிபி 917 ஆம் ஆண்டை சேர்ந்த சேர்ந்த முதலாம் பராந்தக சோழன் காலத்து குடுமியாமலை கல்வெட்டில் ” ஒல்லையூர் கூற்றத்து நெரிஞ்சிக்குடியை சேர்ந்த கிழவன் மறவன்” என்பவர் குறிப்பிடப்படுகிறார். ஒல்லையூர் கூற்றம் என்பது புதுக்கோட்டை மாவட்டம் தென் பகுதியை சேர்ந்த பொன்னமராவதி பகுதியை குறிக்கும். இப்பகுதியில் அமைந்துள்ள நெரிஞ்சிக்குடியை சேர்ந்த கிழவன் மறவன் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

மேற்கூறிய கல்வெட்டுகள் கள்ளர் மற்றும் மறவர்கள் கிபி பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பே புதுக்கோட்டை பகுதிகளில் நாடாள்வராகவும், அரசர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்து வந்துள்ளதை உணர்த்துகின்றன.
இந்நிலையில் கள்ளரும் மறவரும் பிற்காலத்தில் வெள்ளாளர்களால் அழைத்து வரப்பட்டு புதுக்கோட்டையில் குடியேறியதாக ஒரு சில வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரமின்றி குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளாளர்களை பற்றி குறிப்பிடும் புதுக்கோட்டையின் முதல் கல்வெட்டு கிபி 1175 ஆம் ஆண்டை சேர்த்ததாகும். இரண்டாம் ராசாதிராச சோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டை சேர்ந்த புதுக்கோட்டை நீர்பழனி கல்வெட்டில் ” இவ்வூர் வெள்ளாளன் திருப்பன் குன்றன்” என்பவர் குறிப்பிடப்படுகிறார்.(IPS 207)

ஆக மேற்கண்ட கல்வெட்டுகள் நமக்கு பல உண்மைகளை உணர்த்துகின்றன. வெள்ளாளர்களை குறிப்பிடும் கல்வெட்டின் காலத்திற்கு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பே புதுக்கோட்டையில் கள்ளர்களும் மறவர்களும் நாடாள்வாராகவும் ஆட்சியாளர்களாகவும் இருந்துள்ளதை கல்வெட்டுகள் நமக்கு உரைக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் மூலம் வெள்ளாளர்கள் காலத்தில் தான் கள்ளர்கள் மற்றும் மறவர்கள் புதுக்கோட்டையில் குடியமர்த்தப்பட்டனர் எனும் வாதங்கள் பொய்த்துப் போகின்றன. கள்ளர்களும் மறவர்களும் புதுக்கோட்டையில் ஆதியில் இருந்தே அதிகாரம் செலுத்து வருகின்றனர் என்பது தெளிவாகும்.
Total views 1,798 , Views today 1