புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தில் தொன்மையான வரலாற்று தடங்கள் கிடைக்கும் வெகுசில மாவட்டங்களில் ஒன்றாகும். கிபி பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டையில் தொண்டைமான்களின் ஆட்சி மலர்ந்தது.
அதற்கு முன்பாக புதுக்கோட்டையை ஆட்சி செய்தது பல்லவராயர் மரபினர் ஆவர். பல்லவராயர்களின் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை எனும் பெயர் வழக்கத்தில் இல்லை. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவந்தெழுந்த பல்லவராயர் எனும் மன்னர் மீது பாடப்பட்ட ” சிவந்தெழுந்த பல்லவராயர் உலா” எனும் நூலில் இவரது ஆட்சிப்பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
” ஆலங்குடி நாடரமாவதிநாடு
கோலங்கடுவன்குடிநாடு- மேலான
செங்காட்டு நாடு திருப்பேரையூர் நாடு
மங்காத வல்லவளநாடு – கொங்காரும்
மெய்யமலை நாடு மேவு சந்திரேகைநா
டுடையன் கொடுங்குன்றணி நாடு- செய்யத்திருக்
கோளக்குடிநாடு கோனாடென புரந்தே
ஆளப்பிறந்த அரசர்கோன்” என பல்லவராயரின் ஆட்சி பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன.
ஆலங்குடி நாடு, அமராவதி நாடு( பொன்னமராவதி) , கடுவன்குடிநாடு( விராலிமலை வட்டம்) , செங்காட்டு நாடு, பேரையூர் நாடு, வல்லநாடு, மெய்யமலை( திருமயம்) , சந்திரலேகநாடு( அம்புலியாறு பகுதி), கொடுங்குன்ற நாடு( பிரான்மலை) , திருக்கோளக்குடி நாடு, கோனாடு என இவரது ஆட்சி பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடுமியான்மலையில் கிடைத்த கிபி 1681ஆம் ஆண்டை சேர்ந்த சிவந்தெழுந்த பல்லவராயர் கல்வெட்டில் ” ராச்சியம் பண்ணியருளுகையில்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இப்பகுதியை ஆட்சி செய்யும் மன்னர் என தன்னை குறிப்பிட்டுள்ளார்.
இவரது ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை ” பல்லவராயன் சீமை” என அழைக்கப்பட்டதாக இளந்தாரி அம்பலக்காரர் ஒலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ( General history of pudukkottai state 1916 பக் 128)

கிபி 1686ல் புதுக்கோட்டை மன்னராக ரகுநாதராய தொண்டைமான் பொறுப்பேற்ற பின்னர் கலசமங்கலம் சிங்கமங்கலம் முதலிய பகுதிகளை ஒருங்கிணைத்து இன்றைய புதுக்கோட்டை நகரை உருவாக்கினார். நகரின் மையத்தில் ஒரு கோட்டை கட்டி, கோட்டையை சுட்டி மதில் சுவர்களை எழுப்பி வாடிகளை அமைத்தார். தான் உருவாக்கிய புதிய நகரத்திற்கு புதுக்கோட்டை என பெயரிட்டார். ( General history of pudukkottai state 1916 பக் 145)

காளையார்கோயில் ” புதுக்கோட்டை “
கிபி 1686க்கு முற்பட்ட சேதுபதி மன்னர் செப்பேடுகளில் ” புதுக்கோட்டை சீமை” என குறிப்புகள் காணப்படுகிறது. கிபி 1684 ஆம் ஆண்டு கிழவன் சேதுபதியால் வெளியிடப்பட்ட ” புதுக்கோட்டை செப்பேட்டில்” காளையார்கோயில் சீமையில் தென்னாலை நாட்டில் அரசியலாற்றுப் பாய்ச்சலில் புதுக்கோட்டை ” என குறிப்பிடப்பட்டுள்ளது. காளையார் கோயில் பகுதியில் ஒரு புதுக்கோட்டை இருந்ததை செப்பேடு உணர்த்துகிறது.

மதுரை மேனுவலில் இந்த புதுக்கோட்டை பற்றிய மற்றொரு குறிப்பு காணப்படுகிறது. மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் மறவர் நாட்டின் மேல் படையெடுத்து திருப்பத்தூர், புதுக்கோட்டை, மானாமதுரை முதலிய பகுதிகளில் இருந்த கோட்டைகளை கைப்பற்றி காடுகளின் வழியே ஊடுருவி காளையார்கோயிலை கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து படையெடுத்து வந்த சொக்கநாத நாயக்கர் கைப்பற்றிய கோட்டைகளில் காளையார் கோயில் பகுதியில் இருந்த ” புதுக்கோட்டை” யும் ஒன்றாகும். சேதுபதி மன்னர் செப்பேடுகளில் ” புதுக்கோட்டை சீமை” என குறிப்பிடப்பட்டு இருக்கும் பகுதிக்கும் இன்றைய புதுக்கோட்டைக்கும் எந்த தொடர்பும் இல்லை என இதன் மூலம் உணரலாம். ஏனெனில் கிபி 1686 க்கு முன் புதுக்கோட்டை எனும் பெயர் இன்றைய புதுக்கோட்டை நகரை குறிக்கும் பயன்பாட்டில் இல்லை.
புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமான் புதியதாக தான் உருவாக்கிய கோட்டை கொத்தளங்கோடு கூடிய நகருக்கு சூட்டிய பெயரான ” புதுக்கோட்டை ” நாளடைவில் சமஸ்தானத்தின் பெயராக நிலைத்துவிட்டது.
Article by: www.sambattiyar.com
Total views 2,382 , Views today 5