பல்லவ அரசர்களின் சிறப்பு பெயர்களில் ” காடவர்” என்பதும் ஒன்றாகும். பல்லவ அரசரான முதலாம் பரமேஸ்வரன் ” மன்னு சிவ லோகத்து வழியன்பர் மருங் கணைந்தார் கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவர் ஐ அடிகளார்”எனும் பாடல் வரிகள் மூலம் காடவர் என குறிப்பிடப்பட்டுள்ளார். பல்லவர் ஆட்சி வீழ்ந்தபின் சோழர்களின் தலைமையை ஏற்ற பல்லவர்கள் அதிகாரிகளாக படைவீரர்களாக வாழ்த் தொடங்கினர். இவ்வகையில் புதுக்கோட்டை வட்டார பகுதியில் வாழ்ந்த காடவராயர்களின் வரலாற்றை காண்போம்.
புதுக்கோட்டை கள்ளர் நாடுகளில் ஒன்றாக “ கவிநாடு” புதுக்கோட்டை சமஸ்தான மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவிநாட்டின் தலைமை கிராமமாக திருவப்பூர் உள்ளது. கவிநாடு புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கவிர் நாடு தென்கவிர்நாடு, கவிற்பா எனும் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புதுக்கோட்டை திருக்கட்டளை கல்வெட்டில் வல்லநாட்டு கவிற்பா கள்ளப்பால் நாடாய் இசைந்த நாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வல்லநாட்டை சேர்ந்த கவிர்பால் எனும் பகுதி கள்ளர்கள் வாழும் மற்றும் ஆளும் பகுதியாக விளங்கியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கிபி பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த திருக்கட்டளை கல்வெட்டில் முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் “ ராஜராஜவளநாட்டு தென்கவிர்நாட்டு கள்ளப்பால் கற்குறிச்சியை சேர்ந்த கள்ளன் குலோத்துங்க சோழ மங்கள நாடாள்வான்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கள்ளர் நாடாக விளங்கிய கவிர்நாட்டு கற்குறிச்சியில் கள்ளர்களே நாடாள்வராக விளங்கியதை அறியமுடிகிறது.
இதே காலகட்டத்தை சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் கால புதுக்கோட்டை திருவப்பூர் கல்வெட்டில் “ தென்கவிர்நாட்டு நாடாய் இசைந்த நாட்டோம் “ என தென்கவிர்நாட்டார்கள் திருவப்பூர் சிவன் கோயிலுக்கு அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது.

இதில் தென்கவிர்நாட்டின் கள்ளர் குல அரையர்களாக பல்லவ வம்சத்தினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவர்கள்:-
அரையன் கூத்தன்
சாந்தி ஐய்யாறு தேவன்
தென்னவன் பல்லவதரையன்
கங்கைகொண்ட சோழக்காடவராயன்
செம்பியன் பல்லவரையன்

காடவரையர் குடிகாடு
கிபி 1222 ஆம் ஆண்டை சேர்ந்த முதலாம் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் ” வண்டாங்குடி கள்ளர்கள் நில விற்பனை செய்ததற்கு கல்வாயில் நாடாள்வான் கள்ளர்களின் தலைவனாக கற்பூர வில்லை பெற்று சம்மதம் தெரிவித்ததை நெய்வாசல் அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கிபி 1337 ஆம் ஆண்டை சேர்ந்த வீரபாண்டியர் கால கல்வெட்டில் புதுக்கோட்டை கல்வாயில் நாட்டை சேர்ந்த நெய்வாசல் எனும் ஊருக்கு அருகில் காடவதரையர் குடிகாடு எனும் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் காடவராயன்பட்டி முதலிய ஊர்களில் காடவராயர்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்வாயில் நாடாள்வராக காணியுடையோராக கள்ளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதையும், இதே பகுதியில் பதிமூன்றாம் நூற்றாண்டில் காடவராயர் குடிகாடு எனும் ஊர் இருந்துள்ளதையும் கொண்டு இங்கு கள்ளர் குல காடவராயர்கள் வாழ்ந்துள்ளதை அறிகிறோம்.

சோழக்காடவராயர்
கிபி பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோயிலில் கிடைத்த கல்வெட்டில் கவிநாட்டார்கள் கோயிலுக்கு நிலதானம் அளித்தபோது அதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரிகளில் ஒருவராக “சோழக்காடவராயர்” என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.


கிபி பதினாறாம் நூற்றாண்டில் திருவாண்டானான காடவத்தரையன் என்பவர் புதுக்கோட்டை குடுமியான்மலை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வத்தனாக்கோட்டை காடவராயர்
கிபி 1813 ஆம் ஆண்டு வெளியிட்டப்பட்ட புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகளில் ஏடு 129 ல் வத்தனாக்கோட்டையை சேர்ந்த முருகன் காடவராயனுக்கு உரிய கம்மாயை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டை, காடவராயன்பட்டி மற்றும் பல சிற்றூர்களில் கள்ளர் குல காடவராயர்கள் வாழ்ந்து வருகின்றனர்.



தென்மலை நாட்டை சேர்ந்த வத்தனாக்கோட்டை காடவராயர்கள் பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோயிலில் இன்றும் முதன் மரியாதை பெறுகிறார்கள். தென்மலை நாட்டின் மிராசுதாரர்களாக இன்றும் வத்தனாக்கோட்டை காடவராயர்களே கோலோச்சுகின்றனர்.
காடுவெட்டி, தொண்டைமான், பல்லவராயர், காடவராயர் முதலிய வம்சத்தினர் இன்றும் கள்ளர் இனத்தினராக புதுக்கோட்டையில் வாழ்ந்து வருவதை Manual of pudukkottai state vol 2 part 1 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கள்ளர் குல காடவராயர்கள் பற்றிய அரிய வரலாற்று தகவல்கள் கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையதாகும். இன்றும் புதுக்கோட்டை காடவராயர்கள் இப்பகுதியில் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வருகிறார்கள்.
Article by: www.sambattiyar.com
Total views 132 , Views today 1