இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தை தொடங்கிய மாமன்னர் பூலித்தேவர் திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டுஞ்செவ்வல் பகுதியை ஆட்சி செய்தவர். கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் ஆர்காடு நவாப் மற்றும் வெள்ளையர் கூட்டணியுடன் வீரப்போர் புரிந்த முக்குலத்து மறவர். இவரது வம்சாவளிகள் இன்றும் நெல்லை சீமையில் வாழ்ந்து வருகின்றனர். பூலித்தேவர் வம்சாவளிகள் தங்களது முன்னோர்கள் 13-14 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஆட்சியாளர்களாக விளங்கி வருவதாக குறிப்பிடுகின்றனர்.
முதல் கல்வெட்டு
பூலித்தேவரின் முன்னோரை குறிக்கும் முதல் கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம், கள்ளர் நாடான விசங்க நாட்டின் ஒரு பகுதியான குளத்தூர் தாலுகா நார்த்தாமலை பகுதியில் கிடைக்கிறது. (IPS 158)

இந்த கல்வெட்டு கிபி 1204 ஆம் ஆண்டில் ஆட்சி செய்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தை சேர்ந்தது. நார்த்தாமலையை சேர்ந்த நகரத்தவர்கள் , பரம்பையூரை சேர்ந்த கங்காதரன் மற்றும் அவ்வூர் வியாபாரிகளிடம் வரி நீக்கிய நிலத்தை விற்றுள்ளனர்.
அவர்கள் வழங்கிய நிலத்தின் எல்லைகளை குறிப்பிடும்போது ” கீழ்பால் எல்லை புலித்தேவன் வயலுக்கு மேற்கும் ” என கூறுகிறது. நகரத்தவர் விற்ற நிலத்தின் கிழக்கு எல்லை புலித்தேவர் வயலுக்கு மேற்கு புறம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் புலித்தேவர், மாமன்னர் பூலித்தேவரின் பெரும் முன்னோர்களாக இருக்கலாம்.
இரண்டாம் கல்வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் குழிப்பிறையில் கிடைத்த மற்றொரு கல்வெட்டில் , கிபி 1527ஆம் ஆண்டில், ” வாகு சமர் காலிங்க தேவர் குமாரர் சிவப்புலித்தேவர் ” எனும் தொடர் காணப்படுகிறது. மேலே குறிப்பிட்ட புலித்தேவரின் சந்ததியினராக இவர்கள் இருக்கலாம்.
சிங்கம்புலித்தேவர்

கிபி 1483 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை திருமயம் வட்டம் நெய்வாசல் கல்வெட்டு ” நெய்வாசல் ஊர் பாடிக்காப்பார்களாக சிங்கப்புலி வீரதேவர் ” என்பவரை குறிப்பிடுகிறது. (IPS 821)
புதுக்கோட்டை நகரம் சின்னப்பா நகர் விநாயகர் கோயில் அருகில் கிடைத்த 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் ” விசயரகுநாத முத்துவிசய சிங்கம்புலி” என்பவர் செய்த தானம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு சிங்கம்புலி, சிங்கம்புலித்தேவர் என குறிப்பிடப்படுபவர்கள் கல்லாக்கோட்டை ஜமீன்களான சிங்கம்புலியார்கள். கல்லாக்கோட்டை ஜமீன்களான சிங்கம்புலித்தேவர் வகையராவுக்கும், புதுக்கோட்டை கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் புலித்தேவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட கல்வெட்டுகள் பூலித்தேவரின் மூதாதையர்களோடு நெருங்கிய தொடர்புடையனவாக இருக்கலாம். இடப்பெயர்வு என்பது அக்காலத்தில் அசாதாரண நிகழ்வாக இருந்திருக்கவில்லை. பூலித்தேவர் எனும் பட்டம் பிற்கால சோழர்களின் காலம் முதல் பயின்று வருவதை இக்கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இதன்மூலம் பூலித்தேவர் வம்சாவளிகளின் தொன்மை குறைந்தது 800 ஆண்டுகள் என உறுதியாக கூறலாம்.
www.sambattiyar.com
Total views 3,342 , Views today 1