பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மை விளங்கி வந்தது. பல்வேறு அந்நியர் படையெடுப்புகள் தொடர்ச்சியாக நடந்து வந்தது. ஆர்காடு நவாப், ஆங்கிலேயர், ப்ரெஞ்சுக்காரர்கள் என பலர் தங்களது ஆளுமையை நிலைநாட்ட போராடிக்கொண்டிருந்தனர். தமிழக பாளையங்களும், மன்னர்களும் ஒற்றுமையின்றி தமக்குள் போரிட்டுக் கொண்டு இருந்தனர்.

1751ல் ஆர்காடு நவாபாக பொறுப்பேற்ற முகமது அலி , அப்துல் ரஹீம் என்பவரின் தலைமையில் தென்னக பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க படை திரட்டி அனுப்பினார். இந்த நிலையில் சந்தா சாகிப் என்பவர், முகமது அலிக்கு போட்டியாக, தென்னக பாளையக்காரர்களுக்கு பல சலுகைகளை வழங்கி, தனக்கு வரி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். சந்தா சாகிப்பின் பிரதிநிதியான ஆலம் கான் மதுரையை கைப்பற்றி ஆளத்தொடங்கினார்.
ஆர்காடு நவாபான முகமது அலி, தனது உரிமையை மீட்க வெள்ளையர்களின் உதவியை நாடினார். வெள்ளையர்கள் முகமது அலிக்கு ஆதரவாக கர்னல் ஹரான் தலைமையில் படையனுப்பி உதவினர். இவரது படையில் முகமது அலியின் அண்ணன் மாபூஸ் கான் , கான்சாகிப் ஆகியோர் இருந்தனர்.
பெரும்படையுடன் வந்த கர்னல் ஹரான் சந்தா சாகிப் வசமிருந்த மதுரையை கைப்பற்றினார். மதுரையின் கவர்னராக இருந்த ” மயன்னா” அங்கிருந்து தப்பித்து கோயில்குடி என ஊரில் தஞ்சம் புகுந்தார். கோயில்குடி எனும் ஊரானது மதுரையில் இருந்து 8 கிமீ கிழக்கில் உள்ளது.கர்னல் ஹரான் தலைமையிலான படை மயன்னாவை பிடிக்க கோயில்குடியை தாக்கியது. கோயில்குடியில் கள்ளர்கள் வழிபடும் கோயிலை சூரையாடினர் வெள்ளையர்கள். கோயிலில் இருந்த சிலைகளை கொள்ளை அடித்தனர்.5000 ரூபாய் கொடுத்தால் சிலைகளை திருப்பி தருவதாக கூறிய ஹரான், பணம் தரப்படாததால் சிலைகளை விற்று காசாக்க எடுத்துச் சென்றார்.

பிறகு ஹரான் தென்திசை பாளையக்காரர்களை நோக்கி வரி கேட்டு படையெடுத்தார். திருநெல்வேலி சீமையில் இருந்த கீழ்திசை பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான பொல்லாப்பாண்டிய நாயக்கர் (வீரப்பாண்டிய கட்டபொம்மு நாயக்கரின் பாட்டனார்). மேற்கு திசை பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர் பூலித்தேவர். இவர் வாழ்ந்த ஊர் நெற்கட்டுஞ் செவ்வல் என அழைக்கப்பட்டது.

மறவர் குல மாணிக்கம்
பூலித்தேவர் பரந்த தம் நாட்டையும் படையையும் விட ஒழுக்கத்தின் மேன்மையாலும் புகழாலும் திருநெல்வேலியில் உள்ள மேற்கு பாளையக்காரர்கள் மத்தியில் உயர்ந்த பதவியை அடைந்தார்-(திருநேல்வேலி சரித்திரம் 1881, பக் 156, கால்டுவெல்)
மேற்கு திசை பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர் பூலித்தேவர். இவர் வாழ்ந்த ஊர் நெற்கட்டுஞ் செவ்வல் என அழைக்கப்பட்டது. தற்போது இவ்வூர் ஆவுடையாபுரம் என அழைக்கப்படுகிறது. சங்க காலம் முதலே போர்த்தொழிலை முதன்மையாக கொண்ட முக்குலத்தோரில் மறவர் குலத்தில் உதித்தவர் பூலித்தேவர். பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இலக்கியமான திங்களூர் நொண்டி நாடகம் , பூலித்தேவர் பற்றியும் கள்ளர்- மறவர் உறவு பற்றியும் கூறுகிறது.
“வல்லாள கண்ட னென் தகப்பன்- அர்க்கும் வலுத்த
அவன் கள்ள மறவர் குலத்தில் உதித்தோன் மாயப் பூனைப்
புலித்தேவன் தம்பி – சின்னான மறவன் வளவில் நாங்கள் உறவு கொண்டாடிக் காயக்கமும் கற்ற சின்னாத்தேவன் – தந்த கண்ணியை கல்யாணம் பண்ணியே கொடுத்தார்”

பகலெத்தி எனும் கள்ளர் குல வீரன், பூலித்தேவன் தம்பியான சின்னாத்தேவர் எனும் மறவரை தனது உறவு என்றும், அவரது மகளை, பகலெத்தி திருமணம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூலித்தேவருக்கு வலது கரமாக விலங்கிய செம்புலி சின்னனஞ்சான்தேவரே இங்கு சின்னாத்தேவன் என குறிப்பிடப்பட்டுள்ளார். சின்னஞ்சான் தேவரின் சிலை குற்றாலம் ஈஸ்வரன் கோயிலில் உள்ளது.

” நாட்டிலுள்ள கவுண்டர்கள் நாட்டிமை செய்வோரும்
தண்மையாய்த் தியாகமது தந்து – நல்ல
தாரமும் பண்ணிக்கோவென்றுத் தாரமுஞ் சொன்னாரே
வன்மையுள்ள புலித்தேவன் தம்பி- சின்னா
மறவன் வளவில்நாங்கள் விவாகமது செய்ய
உறவு கொண்டாடியே வந்து”

புலித்தேவரை மறவர் என்றும், அவரது தம்பியான சின்னனஞ்சான்தேவர் வீட்டில் கள்ளமறவர் குலத்தில் உதித்த பகலெத்தி என்பவர் திருமண உறவு கொண்டதை இப்பாடலும் தெரிவிக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கள்ளர் மறவர் இடையே நிலவிய உறவினை மேலே குறிப்பிடப்பபட்ட பாடல்கள் குறிப்பிடுகிறது
கப்பம் கட்டிய கட்டபொம்மன்
” வரி கேட்டு வந்த வெள்ளையருக்கு கட்டபொம்மன் மற்றும் எட்டயபுர பாளையக்காரர்கள், உடனே வரியை செலுத்தியதோடு, மீதமுள்ள வரிபாக்கியை செலுத்தும் வரை பிணையாக சில ஆட்களையும் அனுப்பி வைத்தனர்”


கிபி 1755, மார்ச் 4 அன்று கர்னல் ஹரான் தலைமையிலான படை திருநெல்வேலி நோக்கி சென்று நத்தக்கோட்டையை தாக்கி அழித்தனர் . பிரிட்டீஷ் படை வருவதை அறிந்த பொல்லாப்பாண்டிய கட்டபொம்மன்( இவர் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தாத்தா) , yoஆங்கிலேயருக்கு சமாதான தூது அனுப்பினார்.தான் கப்பத்தை கட்டிவிடுவதாகவும், ஆனால் தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். முழு தவணையை கட்டும் வரை கட்டபொம்மன் சார்பாக சில பிணையாட்களை வெள்ளையரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவிதாங்கூர் வசம் இருந்த களக்காடு கோட்டை மற்றும் நத்தக்கோட்டை ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. மீதம் இருந்த சிறு பாளையங்களும் அடிபணிந்தன.
(Tinnevelly gazetter 1917 pg 376/387)
பூலித்தேவர் – வெள்ளையர் : முதல் சந்திப்பு
“ 1755ல் திருச்சிக்கு திரும்ப தலைமையிடம் இருந்து அழைப்பு வந்தபோதும், தளபதி ஹரான் நெற்கட்டுஞ்செவ்வல் நோக்கி திரும்பினான் காரணம், பாளையக்காரர்களில் வரி கொடுக்காதவர் பூலித்தேவர் மட்டுமே” -“Ananda ranga pillai” CS srinivasa chari

1755,May 5: கர்னல் ஹரானுக்கு திருச்சிக்கு விரைந்து வர, தலைமையிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் திருச்சி நோக்கி திரும்பும்போது, மாபூஸ்கானின் வேண்டுதலை ஏற்று, படையை நெற்கட்டுச்செவ்வல் நோக்கி திருப்பினார். பிரிட்டீஷ் படை பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டது. தனது ஒற்றர் படையின் மூலம், ஆங்கிலேயரிடம் போதுமான பீரங்கிகள் இல்லை என்பதை உணர்ந்த பூலித்தேவர் அதற்கேற்ப வியூகங்களை அமைத்து போரிட தயார் என அறிவித்தார். கர்னல் ஹரான் ஒரு இருபதாயிரம் ரூபாயாவது தரச் சொன்னான். பூலித்தேவரோ ஒரு ரூபாய் கூட கட்டமுடியாது என கூறிவிட்டார். ஆனாலும் போதிய படைபலம் மற்றும் உணவுப்பொருட்கள் இல்லாத காரணத்தால் ஹரான் படை வெறுங்கையுடன் திருச்சி நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
கர்னல் ஹரானுக்கு கள்ளர்களின் பதிலடி
“பூலித்தேவரிடம் கப்பம் பெறமுடியாமல் வெறுங்கையுடன் திரும்பிய ஆங்கிலேயர்களை,கள்ளர் பழங்குடியினர் வழிமறித்து தாக்கி, இழந்த தங்களது சாமி சிலைகளை மீட்டனர்”- Yusuf khan the rebel commandant 1914,SC hill
மதுரையை அடைந்தவுடன் ஆங்கிலேய படையினர் ஒய்வு எடுத்துக்கொண்டனர். ஜமால் சாகிப் என்பவர் தலைமையில் 1000 சிப்பாய்கள் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட தயாராயினர்.
* ஆனால் அங்கிருந்து திருச்சிக்கு நேரடியாக செல்லும் பாதை கள்ளர்கள் வாழும் அபாயகரமான பகுதியாதலால், கேப்டன் ஸ்மித் என்பவர் தலைமையில் 100 ஐரோப்பியர்கள், 4 கம்பனி சிப்பாய்கள் மதுரையில் இருந்து 20 கிமீ தொலைவில் (நத்தம் கணவாயின் தெற்கு எல்லையில்) உள்ள வெளிச்சி நத்தம் எனும் கோட்டையை நோக்கி செல்ல திட்டமிட்டனர்.
* கர்னல் ஹரானுக்கு கிடைத்த உளவு தகவல்படி கள்ளர்கள் நத்தம் கணவாயின் பாதையில் இருந்த மரங்களை வெட்டி தடையை ஏற்படுத்தி இருந்ததை அறிந்தார்.
* ஹரானுக்கு முன் மதுரை கமாண்டோ செர்ஜியண்ட கௌல்ட்(Sergeant gould) என்பவர் தலைமையில் சென்ற சிப்பாய்கள் அனைவரும் கள்ளர்களால் நத்தம் பகுதியில் கொல்லப்பட்டனர்.
* 28 May 1755 ல் ஹரான் தலைமையிலான ஆங்கிலப்படை மதுரையில் இருந்து புறப்பட்டனர்.
* காலை 5 மணிக்கு புறப்பட தயாரான வெள்ளையர் படை, பல அணிகளாக பிரிந்து சென்றனர். முதலில் கேப்டன் லின் தலைமையிலான அணி, எந்த பிரச்சனையும் இன்றி நத்தம் கணவாயை கடந்து நத்தம் நகரத்தை அடைந்தனர்.
* இதன் பின் ( Captain polier) கேப்டன் போலியர் தலைமையில் கம்பனி சிப்பாய்கள், செர்ஜியன்டகள்( ஓரு ராணுவ பதவி) , ஐரோப்பியர்கள் மற்றும் 12 பேர் அடங்கிய அணி நத்தம் கணவாயில் பயணத்தை தொடங்கியது. இவர்களை பின் தொடர்ந்து ராணுவ தளவாடங்கள் கொண்ட வண்டி, 20 ஐரோப்பியர்கள், 2 கம்பனி சிப்பாய்கள் வந்தனர். இதனை தொடர்ந்து மாபூஸ் கானின் யானைகள் மற்றும் ஒட்டகங்கள் தொடர்ந்தன. இதனை தொடர்ந்து 20 ஐரோப்பியர்கள், 200 சிப்பாய்கள் மற்றும் கம்பனி படைகள் கேப்டன் ஸ்மித் தலைமையில் வந்தது.ஹரான் முன்னாள் படைகளை வழிநடத்தி சென்றுகொண்டு இருந்தார். கணவாய் பகுதியில் கள்ளர்களை எதிர்நோக்கி திகிலுடன் சென்றனர் ஆங்கிலேயர்கள்.
* முன்னால் சென்ற படையினர் மற்றும் தளவாடங்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை.
* பின்பகுதியில் போர் கருவிகளை கொண்டு சென்ற ஒரு வண்டியின் சக்கரம் குழியில் இறங்கி சிக்கி கொண்டது.தளபதி முன்னாள் சென்ற வண்டிகளை நிறுத்தவில்லை. சக்கரம் சிக்கிய வண்டியை பின்தொடர்ந்த வண்டிகள் அனைத்தும் நின்றது.
* கள்ளர்கள் உளவாளிகள் மூலம் அனைத்து சம்பவங்களையும் கண்காணித்து வந்தனர். தாக்குதலை தொடுக்க உரிய நேரத்திற்காக காத்திருந்தனர்.
* முன்னாள் சென்ற வண்டிகளுக்கும், பின்னால் குழியில் மாட்டியிருந்த ராணுவ தளவாட வண்டிக்கும் இடையேயான தூரம் 2 மைல்களை அடைந்தவுடன், பின்னால் இருந்த ராணுவ படையை நோக்கி கள்ளர்கள் தாக்க தயாரானார்கள்.
*கள்ளர்களை கண்டவுடன் ஆங்கிலேய படையினர் சுடத்தொடங்கினர். கள்ளர்கள் தற்காலிகமாக பின்வாங்கினர்.சிறிது நேரம் அமைதி நிலவியது. அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என எண்ணிக்கொண்டிருந்த போது, பெரும் எண்ணிக்கையிலான கள்ளர்கள் அபாயகரமான சத்தம் எழுப்பிக்கொண்டு மற்றொரு புறத்தில் இருந்து தாக்க தொடங்கினர்.
* ஐரோப்பிய வீரர்கள் திக்குமுக்காடினர். கள்ளர்களின் கையில் நவீன ஆயுதங்கள் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டும் என எண்ணினர்.
* ஐரோப்பிய சிப்பாய்கள் சிறிய ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்கினர். கள்ளர்களும் தொடர்ந்து தாக்கினர்.
* கள்ளர்கள் (Arrows, matchlocks, spikes, javelines,, rockets) அம்புகள், துப்பாக்கி, வேல் கம்பு, ராக்கெட் முதலிய ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.கள்ளர்களின் மீது செய்யப்பட்ட ஒவ்வொரு தாக்குதலுக்கும் அதே அளவு வீரியத்துடன் அபாயகரமாக சத்தம் எழுப்பிக்கொண்டு பதிலடி கொடுத்தனர்.
* சிறுது நேரத்தில் கள்ளர்கள் காட்டுக்குள் பின்வாங்கி அங்கிருந்து தாக்குதல் நடத்தினர். பிறகு அங்கிருந்து முன்னேறி ராணுவ தளவாடங்கள் இருக்கும் பகுதியை நோக்கி வந்தனர்.
* அவற்றை பாதுகாத்து நின்ற சிப்பாய்களை தங்களது ஈட்டி மூலம் பலியிட்டனர்.பீரங்கிகள் இருந்த பகுதியை அடைந்து எதையோ தேடினர். பின்னால் இருந்து மற்றொரு படை கள்ளர்களை தாக்கியது. ஆனாலும் கள்ளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு தாக்கினர்.
* ராணுவ தளவாடங்கள் இருந்த பகுதியில் கள்ளர்கள் எதையோ தேடத்தொடங்கினர். ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். சிறுது நேரத்தில் கள்ளர்களின் குரல் ஒருங்கிணைந்து ஒரே சொல்லை ஒலிக்க ஆரம்பித்தது. ஆம், ” சாமி, சாமி, சாமி” என ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். அவர்கள் தேடி வந்தது கோயில்குடியில் ஹரானால் திருடப்பட்ட சாமி சிலைகள்.
* கள்ளர்களில் சிலர் அங்கிருந்த வண்டியில் இருந்த மூட்டைகளை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் ஒரு மூட்டையில் சுவாமி சிலைகள் இருந்தது.சாமி சிலைகள் கிடைத்த பின்பு அவர்கள் தங்களது மனைவி, பிள்ளைகள் திரும்ப கிடைத்தால் வரும் மகிழ்ச்சியைவிட அதிகம் சந்தோசம் அடைந்தனர்.
* சாமி சிலைகளை மீட்ட பின்பும் பல மணி நேரம் தொடர் தாக்குதல்கள் கள்ளர்களால் நடத்தப்பட்டது. கேப்டன் ஸ்மீத் உதவி கோரி அனுப்பிய உளவாளிகள் யாரும் திரும்பவில்லை, எந்த படை உதவியும் கிடைக்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது.
* மாலை 4 மணி அளவில் கள்ளர்கள் தாக்குதல் குறைந்தது. ஆனால் சற்று நேரத்தில் படையினர் மற்றும் கூலிகளை நோக்கி பாய்ந்தனர் கள்ளர்கள். கையில் சிக்கிய அனைவரையும் கொன்று தீர்த்தனர்.வெள்ளைய தளபதிகளின் குடும்பத்தினர் உறவினர் என அனைவரும் அலறியடித்து ஒடினர். சிப்பாய்களில் வெறும் 30 பேர் மட்டுமே உயிர்தப்பினர்.
* கேப்டன் ஸ்மீத், கணவாயில் இருந்து பின்வாங்கி காட்டுப்பகுதியில் இருந்து பின்வாங்கி சமவெளி பகுதிக்கு படையினரை அழைத்து வந்தார்.இதன் பிறகு கள்ளர்களின் தாக்குதல் ஒய்ந்தது. சிறுது நேரம் கழித்து ஸ்மீத் தலைமையிலான படையினர் மரண பயத்துடன் புறப்பட தொடங்கினர்.
* இரவு நேரம் நெருங்கியதால், முடிந்த அளவு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு வேகமாக ஒடினர் ஆங்கிலேயர்கள்.முன்னாள் சென்றிருந்த படைப்பிரிவினருடன் இணைந்து ஸ்மீத் தலைமையில் படையினர் வேகமாக நகர்ந்தனர். கடுமையான சூரிய வெப்பத்தால் வெள்ளையர்கள் சோர்ந்திருந்தனர்.அடுத்த நாள் காலை நத்தம் நகரத்தை அடைந்து அங்கிருந்து திருச்சி நோக்கி தப்பினோம் பிழைத்தோம் என ஒடினார்கள்.


களக்காடு கோட்டை மீட்பில் பூலித்தேவர்

திருவிதாங்கூர் மன்னர் தான் இழந்த களக்காடு கோட்டையை மீட்க பூலித்தேவரின் உதவியை நாடினார்.இவர்களுடன் சந்தா சாகிப்பின் பிரதிநிதியான மூடேமியாவும் இணைந்துக் கொண்டான். பூலித்தேவர் தலைமையில் ஏற்பட்ட இந்த கூட்டணியைக் கண்ட ஆர்காடு நவாபின் உடன்பிறந்தவனான மாபூஸ் கான், மதுரையில் இருந்து கும்பினியார் உதவியுடன் பெரும்படைக் கொண்டு, களக்காட்டை நோக்கி விரைந்தான். பூலித்தேவர் தலைமையிலான கூட்டணியின் தாக்குதலில் மாபூஸ்கான் படைகள் சிதறடிக்கப்பட்டு களக்காடு கோட்டை கைப்பற்றப்பட்டது. நவாபின் இருநூறு குதிரை வீரர்களும், ஐந்நூறு சிப்பாய்களும் சிறைப்பட்டனர்.
நெற்கட்டுஞ்செவ்வல் போர்

1755, நவம்பர் மாதம் களக்காடு கோட்டையை இழந்த மாபூஸ்கான், பூலித்தேவரை வீழ்த்த நெற்கட்டுஞ்செவ்வலை தாக்கினான். ஆனால் பூலித்தேவரின் மறவர் படை தாக்குதலை சமாளிக்க இயலாத மாபூஸ்கான் தோல்வியோடு திரும்பினான். சில நாட்கள் முயற்சிக்கு பின் மாபூஸ் கான் அங்கிருந்து கிளம்பினான்.
பூலித்தேவர் தலைமையில் கூட்டணி
” வெள்ளையரை எதிர்க்க பூலித்தேவர் ஒர் கூட்டணியை அமைத்தார், ஆனால் கட்டபொம்மனும், எட்டயபுர பாளையக்காரரும் வெள்ளையரை எதிர்க்க மறுத்து விட்டனர்”

மாபூஸ்கானை வீழ்த்தியபின் கிடைத்த உத்வேகத்தை சரியான திசையில் பூலித்தேவர் பயன்படுத்தினார். வடகரை முதலிய மேற்படாகைப் பாளையங்களையும், சந்தா சாகிப்பின் பிரநிதியான மூடேமியாவையும் தனது கூட்டணியில் இணைத்தார். கீழ்திசை பாளையக்காரர்களுக்கு தலைவரான பொல்லாப்பாண்டியன் கட்டபொம்மு இந்த கூட்டணியில் சேர மறுத்துவிட்டார். தனது பிணையாட்கள் வெள்ளையர் வசம் இருப்பதால் கூட்டணியில் சேர முடியாது என கூறிவிட்டார். மதுரைப் பகுதியில் இருந்த சில தலைவர்களும் பூலித்தேவர் அணியில் இணைந்தனர். தங்களுக்கு எதிராக பூலித்தேவர் உருவாக்கும் கூட்டணி பற்றிய தகவல் ஆர்காடு நவாப் மற்றும் கும்பினியாரை சென்றடைந்தது. மாபூஸ்கானின் மேல் நம்பிக்கையை இழந்த கும்பினியார், கான்சாகிப் தலைமையில் ஒரு பெரும்படையை திரட்டி அனுப்பினர்.
பூலித்தேவரின் ஸ்ரீவில்லிபுத்தூர் வெற்றி

கான்சாகிப் படைதிரட்டி வந்துகொண்டிருக்கும் போதே, பூலித்தேவர் நவாப் வசமிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையை தாக்கினார். கோட்டையை பாதுகாத்து வந்த நவாபின் உடன்பிறந்த சகோதரரான அப்துல் ரஹீம் மற்றும் அப்துல் மசூலி, மாபூஸ்கானுடன் சேர்ந்து பூலித்தேவரை எதிர்த்தனர். ஆனால் பூலித்தேவர் தலைமையிலான படையின் தாக்குதலை சமாளிக்க இயலாத நவாபின் படையினர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையை இழந்தனர். பூலித்தேவர் பெற்ற இந்த வெற்றி பாளையக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இந்த சமயத்தில் பூலித்தேவர் வசம் ஆயிரம் பேர்க்கொண்ட குதிரைப்படையும், இருபத்து ஐயாயிரம் பேர் கொண்ட காலாட்படையும் இருந்தது.
ஆங்கிலேயர்-கட்டபொம்மன் கூட்டணி

பூலித்தேவரின் வெற்றிமுகம் நவாப் மற்றும் கும்பினியார் கூட்டணியை உலுக்கியது. தங்களது பலத்தை பெருக்க, மாபூஸ்கான் கீழ்திசை பாளையக்காரர்களுக்கு தலைவரான பொல்லாப்பாண்டியன் கட்டபொம்மனை அணுகினான். கட்டபொம்மனுக்கு சில கிராமங்களையும், பிற வளங்களையும் தருவதாக உறுதி கூறினான். கட்டபொம்மனின் பிணைக்கைதிகளையும் விடுவிப்பதாக உறுதியளித்தான். இதனையடுத்து கட்டபொம்மன், ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர் கூட்டணியில் இணைந்தார்.
மாபூஸ் கானுடன் மீண்டும் மோதல்

மார்ச் 21,1756 அன்று கட்டபொம்மன்- மாபூஸ்கான் கூட்டணியினரை பூலித்தேவர் மீண்டும் தாக்கினார். போரின் முடிவு பூலித்தேவருக்கு பாதகமாக அமைந்தது. மூடேமியா போரில் கொல்லப்பட்டான். தாக்குதல் தோல்வியில் முடிந்ததால் பூலித்தேவர் தனது கோட்டைக்கு பின்வாங்கினார். இப்போரில் இருநூறு வீரர்கள் மரணமடைந்தனர். இவ்வெற்றியின் போக்கை பயன்படுத்த எண்ணிய கான் சாகிப் திருநெல்வேலியில் படையெடுத்து பல பாளையங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கான்சாகிப்புக்கு உறுதுணையாக கட்டபொம்மனும், எட்டயபுரம் பாளையக்காரரும் இருந்தனர். பூலித்தேவர் மறு தாக்குதல் நடத்த தக்க சமயம் பார்த்து காத்திருந்தார்.
(திருநெல்வேலி சரித்திரம் pg 159 : கால்டுவேல்:1881)
கூட்டணி மாற்றம்
இந்நிலையில் கும்பினியார் நெல்லை பாளையங்களை அழகப்ப முதலியார் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டனர். கும்பினியார் பெயரைச் சொல்லி வரி வசூல் செய்ய அழகப்பன் கிளம்பினார். இதனால் தனது அதிகாரம் குறைக்கப்பட்டதை உணர்ந்த மாபூஸ் கான், கும்பினியாரை வீழ்த்த பூலித்தேவரின் உதவியை நாடினார். திருவிதாங்கூர் மன்னர், சந்தா சாகிப்பின் பிரதிநிதிகள், மாபூஸ்கான், மற்ற பாளையக்காரர்கள் பூலித்தேவர் தலைமையில் ஒன்றிணைந்தனர்.மாபூஸ்கான் சந்தா சாகிப்பின் பிரதிநிதியான மயானா, பக்ரத்துல்லா மற்றும் கள்ளர்களின் உதவியுடன், மதுரையை சுற்றியிருந்த யூசுப் கானின் பகுதிகளை தாக்கினர். இது பற்றி கூறும் கான் சாகிப் எழுதிய கடிதம், மதுரையில் உள்ள ஒர் கோட்டையில் மாபூஸ் கான் இருப்பதாகவும், கோட்டையில் இருந்து இரவு நேரங்களில் கள்ளர்கள் திடீர் தாக்குதல்களை நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.(Country correspondence 1756,records of st george fort)/(Yusuf khan : the rebel commendant 1914/ pg 56)

கங்கைக்கொண்டான் போர்

பூலித்தேவர் தலைமையிலான பதினாராயிரம் பேர் கொண்ட படை திரண்டு கும்பினியாரிடம் இருந்து திருநெல்வேலியை மீட்டனர். ஆனாலும் கங்கைகொண்டான் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் கான்சாகிப் தலைமையிலான கும்பினியார் படை வெற்றி பெற்றது.
ஐதர் அலியுடன் கூட்டணி முயற்சி

தங்களிடம் போதிய படை பலம் இல்லாததை உணர்ந்த பூலித்தேவர் திண்டுக்கல்லில் ஆட்சி புரிந்து வந்த ஐதர் அலியுடன் கூட்டணி வைத்தார். தனக்கு உதவினால் ஐந்து லட்ச ரூபாயை தருவதாக பூலித்தேவர் கூறினார். சோழவந்தான் பகுதியை ஐதருக்கு அளிக்கவும் உடன்பாடு ஏற்பட்டது.ஆயினும் கேப்டன் காலியாட் தலைமையிலான ஆங்கிலேய படை, நெல்லையில் முகாமிட்டு இந்த திட்டத்தை முறியடித்தனர்.
பாளையங்கோட்டை போர்

மாபூஸ்கானும் பூலித்தேவரும் இணைந்து பாளையங்கோட்டையை தாக்கினர். பாளையங்கோட்டையை பாசப்ப நாயக்கர் என்பவர் நிர்வகித்து வந்தார். பூலித்தேவரது படையை எதிர்க்க கட்டபொம்மன் மற்றும் எட்டயபுர பாளையக்காரர்களின் உதவியை நாடினார். இப்போரில் பூலித்தேவருக்கு பெரிய வெற்றி கிட்டவில்லை. கட்டபொம்முவும், எட்டயபுரத்தாரும் தொடர்ந்து ஆங்கிலேயர் பக்கம் இருந்தனர்.
அமைதி நிலவிய காலம்
ப்ரெஞ்சு படையினர் சென்னைக் கோட்டையை கைப்பற்றினர். இதனால் கான்சாகிப் ஆங்கிலேயருக்கு உதவ சென்னை சென்றுவிட்டார். ஐதர் அலியின் தாக்குதலுக்கு அஞ்சி கும்பினியாரும், நவாபும் மதுரையை விட்டு அகலாமல் காத்து வந்தனர். இக்கால கட்டத்தில் பூலித்தேவரின் ஆளுமை பல பாளையங்களுக்கும் பரவியது. பொல்லாப்பாண்டிய கட்டபொம்மன் உயிரிழந்தார். அவரது மகன் ஜகவீரப்பாண்டிய கட்டபொம்மன் பூலித்தேவரின் கூட்டணியில் இணைந்திருந்தார்
500 கள்ளர்களை தூக்கிலிட்ட கான் சாகிப்
மதுரையின் கவர்னராக பதவியேற்ற கான் சாகிப், தனது கூட்டணிக்கு எதிராக கலகம் செய்தவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க ஆரம்பித்தான். இவன் கொடுக்கும் தண்டனை மற்ற பாளையக்காரர்களுக்கு பயத்தை உண்டு பண்ண வேண்டுமென திட்டமிட்டான். முதல்கட்டமாக 1759 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் மதுரையில் மாபூஸ் கானுக்கு ஆதரவாக போரிட்ட கள்ளர் தலைவனை தாக்கினான். பெரும்படைக் கொண்டு போரிட்டு கள்ளர் தலைவனையும், அவனோடு போரிட்ட 500 கள்ளர்களையும் திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றான்.

கள்ளர்களை கான்சாகிப் கொன்று குவித்ததை கூறும் கான்சாகிப் பற்றிய கதைப்பாடல், பின்வருமாறு பாடுகிறது


” மதுரை மீனாட்சிக் கள்ளரை
கருவறுத்த தீரன் “
“அடங்காத பிறமலை நாட்டாரை வளைத்து
ஆறுபொதி தலை வெட்டியடக்கினான் கானும்
ஒடுங்காத மயிலாடிக் கள்ளர் தன்னை
ஊருக்குயிரு பேரைகீர்த்தியாய் வைத்து
வண்டிக்கொண்டு குடமுட அடித்து “
என கள்ளர்களுக்கும் கான்சாகிப்புக்கும் நடந்த போர் விவரிக்கப்படுகிறது.1759, ஜூலை 6 ஆம் தேதி நாட்டுக் கள்ளர்களை தாக்கி போரிட்டான். அவர்கள் அனைவரையும் தண்டித்து, வரவேண்டிய வரி பாக்கியை, செலுத்துமாறு உத்தரவிட்டான். கள்ளர்களிடம் இருந்து ஆயிரம் மாடுகள் மற்றும் இரண்டாயிரம் ஆடுகளை பறித்துக்கொண்டு நெல்லை நோக்கி கிளம்பினான்.
பிரெஞ்சு கூட்டணி

தென்திசையில் ஆங்கிலேயர் கை ஒங்கியதை கண்ட ப்ரெஞ்சு காரர்கள் பூலித்தேவரை தங்களுடன் சேருமாறு தூது அனுப்பினர். இந்த அழைப்பை ஏற்ற பூலித்தேவர், பிரெஞ்சுக் காரர்கள் எழுதிய கடிதத்தை திருவிதாங்கூருக்கு அனுப்பி தங்களுடன் இணையுமாறு வலியுறுத்தினார். எனினும் திருவாங்கூரார் தொடர்ந்து கான் சாகிப் பக்கமே இருந்தார்.
நெல்லையில் கான் சாகிப்
1759 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நெல்லை நோக்கி படையெடுத்தார் கான்சாகிப். நெல்லையில் பூலித்தேவர் வசமிருந்த கொல்லங்கொண்டான் கான்சாகிப்பால் கைப்பற்றப்பட்டது. மூன்று நாட்களில் கோலார்ப்பட்டி கைப்பற்றப்பட்டது.கீழ்திசை பாளையங்கள் யாவும் கான்சாகிபிடம் சரணடைந்தன. பூலித்தேவர் பக்கம் இருந்த மாபூஸ் கான் , தன்னை கான் சாகிப் அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு தூது விட்டு துரோகியானான். தந்திரமாக திருவிதாங்கூரையும் பூலித்தேவர் கூட்டணியில் இருந்து பிரித்து தங்களது கூட்டணியில் இணைத்தான் கான் சாகிப்.

வடகரை பாளையக்காரர் கள்ளர்களைக் கொண்டு திருவிதாங்கூர் மீது தாக்குதல்களை நடத்தினார். இதனால் திருவிதாங்கூரார் கான்சாகிப்பிடம் உதவியை வேண்டினார்.(Yusuf khan the rebel commendant SC hill pg pg 99)
கான்சாகிப் பக்கம் சாய்ந்த திருவிதாங்கூர் அரசர்,1759, செப்டம்பர் மாதம், வடகரைப் பாளையத்தின் மேல் படையெடுத்தார். செங்கோட்டையருகே கூடுதலாக கும்பினியாரின் படையும் சேர்ந்து மொத்தம் பத்தாயிரம் பேர்க் கொண்ட மிகப்பெரிய படை வடகரை பாளையத்தை தாக்கியது. போரின் விளைவு மோசமடைந்ததால் வடகரையார் கோட்டையிலிருந்து வெளியேறி பூலித்தேவரிடம் சரணடைந்தார்.திருவிதாங்கூர் அரசருக்கு களக்காட்டை யூசுப் கான் அளித்தார்.

வாசுதேவநல்லூர் போர்
1759,நவம்பர் 6 அன்று கான்சாகிப் மற்றும் திருவிதாங்கூரார் பூலித்தேவர் மீது தாக்குதல் நடத்தினர். 1759, நவம்பர் 16 ஆம் தேதி கான்சாகிப் பூலித்தேவர் கூட்டணியை சேர்ந்த ஈஸ்வர தேவரின் கோட்டையை தாக்கி கைப்பற்றினான். 1759, நவம்பர் 20 அன்று ஆறாயிரம் போர்க்கொண்ட பூலித்தேவரின் படை திருவிதாங்கூரை தாக்கி சேதம் விளைவித்தனர்.இதில் நூறுக்கும் மேற்பட்ட திருவிதாங்கூர் வீரர்கள் மரணமடைந்தனர். ஏறத்தாழ ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு பூலித்தேவரின் கோட்டைகளில் ஒன்றான வாசுதேவநல்லூர் கோட்டையை கான்சாகிப் முற்றுகையிட்டான்.
“இந்த கோட்டை அகலத்திலும் நீளத்திலும் 300 கெஜமும் 650 கெஜமும் கொண்டது.மண்ணாலான இக்கோட்டை செங்கற்களைவிட வலிமையாக இருந்தது. கோட்டையின் மூலைகளில் கோபுரம் போன்ற கொத்தளமும், உள்ளிருந்து வெளியில் பார்க்க, துவாரங்களும் அமைந்திருந்தது””இந்த கோட்டை அகலத்திலும் நீளத்திலும் 300 கெஜமும் 650 கெஜமும் கொண்டது.மண்ணாலான இக்கோட்டை செங்கற்களைவிட வலிமையாக இருந்தது. கோட்டையின் மூலைகளில் கோபுரம் போன்ற கொத்தளமும், உள்ளிருந்து வெளியில் பார்க்க, துவாரங்களும் அமைந்திருந்தது”

பூலித்தேவரின் படையைப் பற்றி பின்வருமாறு வெள்ளையர் ஒருவர் விவரித்துள்ளார்:
பூலித்தேவர் படையில் இருந்த மறவர்கள் ஒங்கி உயர்ந்த அழகும் பொலிவும் கொண்டிருந்தனர்.அவர்களின் ஆயுதங்கள் ஈட்டி, வேல், வில், அம்பு, வளைதடி மற்றும் துப்பாக்கி முதலியன. ஒவ்வொரு மனிதனும் எப்பொழுதும் வாளையும் கேடயத்தையும் தங்கள் வசம் கொண்டிருந்தனர்.போரின் போது வெவ்வேறு படையினர் வெவ்வேறாக இடங்களில் இருந்து போரிட்டுள்ளனர். ஆனால் ஈட்டி எறிபவர்களே மிகுந்த ஆற்றல் வாய்ந்தவர்களாக விளங்கினர். அவர்களே அனைத்து போர்களையும் முன்னின்று நடத்தினர். இந்த படைக்கருவி 18 அடி நீளமுடையது.அவர்கள் இவ்வாயுதத்தின் நுனியில் குதிரை முடியை குஞ்சமாக கட்டுவர். இவ்வீரர்கள் விரைவில் அணியாக திரளும் வல்லமை படைத்தவர்கள். வாசுதேவநல்லூரைக் காக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் திரண்டாலும் அவர்களில் வலுவான 800-900 பேரே கோட்டையைக் காக்க நியமிக்கப்பட்டனர்.மற்றவர்கள் காட்டுக்குள்ளேயே தங்கி இரவில் தீடீர் தாக்குதல்களை நடத்தினர்.
கான்சாகிப்பின் பீரங்கி தாக்குதல்களை வீரமறவர்கள் பலமாக எதிர்த்து போரிட்டனர்.பூலித்தேவர் நெற்கட்டுஞ் செவ்வலில் இருந்து வந்து கள்ளர்கள் மூலம் இரவு நேர தாக்குதல்களை, வாசுதேவநல்லூர் கோட்டைக்கு எதிர்திசையில் இருந்து நடத்தினார்.


கான்சாகிப்பிடம் 18 பவுண்ட் பலமுள்ள ஒரே ஒரு பீரங்கி மட்டுமே இருந்தது. மற்றவை அனைத்து 6 பவுண்ட் பலமுள்ள சிறிய பீரங்கிகள். 18 பவுண்ட பலமுள்ள பீரங்கி பழுதடைந்தது. போதுமான வெடிமருந்துகள் இல்லாமல் கான் சாகிப் திணறினான். கான்சாகிப் படையில் இருநூறு பேரும், பூலித்தேவர் படையில் இன்னும் அதிகமாகவும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இரண்டு மாதங்கள் நடந்த தொடர்ச்சியான போரின் இறுதியில், இருமுனை தாக்குதலை சமாளிக்க இயலாத கும்பினிப்படை பூலித்தேவரின் மறவர் மற்றும் கள்ளர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க இயலாமல், வாசுதேவநல்லூர் கோட்டை முற்றுகையை விட்டுவிட்டு ஒட்டம் பிடித்தனர்.
(History of Millitary transactions of the british nation in hindustan 1861: Robert orme pg 565-570)
நெற்கட்டுஞ்செவ்வல் போர்

1759,டிசம்பர் மாதம் கான்சாகிபின் படை நெற்கட்டஞ்செவ்வல் கோட்டையில் இருந்து மூன்று மைல் தூரத்தில் முகாம் அமைந்தனர். 1759 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கான்சாகிப் நெற்கட்டுஞ்செவ்வலை அடைந்து படைக்கு தலைமை தாங்கினான். பல்வேறு பகுதிகளில் இருந்தும் கும்பினியார் பல போர் தளவாடங்களை அனுப்பினர். 1759 டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி பூலித்தேவர், கோட்டைக்கு வெளியே முகாமிட்டு இருந்த கான்சாகிப் படையினரை நோக்கி தாக்குதலை தொடங்கினார்.வீரமறவர்கள் உயிரை துச்சமென நினைத்து போரிட ஆரம்பித்தனர். பூலித்தேவர் படையினர் நூறு பேர் மரணமடைந்தனர். கான்சாகிப் படையில் பத்து பேர் மரணித்தனர். கான்சாகிப்பின் குதிரைப்படையும் பலத்தை சேதத்தை சந்தித்தது. கான் சாகிப்பின் கோட்டை முற்றுகை இடைவெளி விட்டு தொடர்ந்து நடந்துள்ளது.

ஆயினும் 1761 ஆம் ஆண்டு, மே மாதம் கான்சாகிப் கும்பினியாருக்கு எழுதிய கடிதத்தில் தான் பூலித்தேவரின் மூன்று கோட்டைகளையும் கைப்பற்றியதாக கூறியுள்ளான். எனவே எனவே 1759ல் இருந்து கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் பூலித்தேவர் கான்சாகிப்புடன் போரிட்டுள்ளதை அறியமுடிகிறது.(Yusuf khan the rebel commendant SC hill pg pg 104) 1764ஆம் ஆண்டு மதுரையில் தன்னாட்சி நிறுவ முயன்ற கான்சாகிப் வெள்ளையர்களால் கொல்லப்பட்டான்.
வாசுதேவநல்லூர் கோட்டை மீட்பும் தியாகமும்
வாசுதேவநல்லூர் கோட்டை 1766 வரை நவாப் வசமிருந்தது. 1766ல் இந்தக் கோட்டை பூலித்தேவரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1767ல் இந்தக் கோட்டையை கைப்பற்ற கும்பினியார் கர்னல் காம்பெல் தலைமையில் ஆங்கிலேயரின் படை வந்தது. ஒரு வாரம் முழுவதும் இந்தக்கோட்டை பீரங்கி குண்டுகளால் துளைக்கப்பட்டது. இச்சமயங்களில் கோட்டைக்குள் இருந்த மறவர்கள் சாதுரியமாக தங்களை தற்காத்துக் கொண்டனர். சாவுக்கு அஞ்சாது கோட்டையை காக்க மறவர்கள் போராடிய விதத்தை கண்டு ஆங்கிலேயரே வியந்து போயினர். நெருப்பு மழையையும் பொருட்படுத்தாது, கோட்டையில் ஏற்பட்ட பிளவுகளை, வைக்கோல் போரையும், பனைமரத்துண்டையும் கொண்டு சரி செய்தனர். ஒரு வார காலத்திற்கு பிறகு கடும் மழையின் காரணமாக கோட்டையை காத்த வீரர்கள், அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த காட்டில் நுழைந்தனர்.


வாசுதேவநல்லூர் கோட்டையப் பற்றி பின்வருமாறு ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளனர்:-
” வாசுதேவநல்லூர் கோட்டை அளவில் சிறிதாயினும் மிகவும் பலம் வாய்ந்தது, கோட்டைக்கு அருகே பெருங்காடு, பிற்பகுதியில் மேற்குதொடர் மலை என அந்த இடமே பல அரண்களை கொண்டிருந்தது. இங்கு வாழ்ந்த மறவர்கள் யாருடைய கண்ணிலும் படாமல் கூர்ந்து ஆராயும் திறனையும், நொடியில் தாக்கும் திறனையும் பெற்றிருந்தனர். கருவேல முட்களை அரணாக கொண்டு, கோட்டைக்கு கிழக்கிலும் தென்புறத்திலும் பேயாறு பாய்ந்தது. கோட்டைச் சுவர்கள் சுடுமண்ணால் ஆக்கப்பட்டிருந்தன. சுவர்களின் அடிப்பகுதியின் அகலம் 15 அடி, மேலே செல்ல செல்ல அகலம் 5 அடியாக குறுகி இருந்தது.கர்னல் காம்பெலின் அறிக்கையின்படி கோட்டையின் ஒரிடத்தில் 500 முறை சுட்டும் அங்கு ஒரு பிளவு கூட ஏற்படவில்லை, தற்போது கோட்டை தகர்க்கப்பட்டு ஒராண்டாகி விட்டது, கோட்டை இருந்த இடத்தில் புல் முளைத்து விட்டது , ஆனாலும் கோட்டையின் அடிப்பகுதி இன்னும் உள்ளது”
(Tinnevelly gazetter 1917 pg 420)
என கும்பினியாரே கோட்டையின் பலத்தை புகழ்ந்துள்ளனர். எனவே கர்னல் 1767ல் நடத்தப்பட்ட கர்னல் காம்பெலின் முற்றுகைக்கு பிறகு வாசுதேவநல்லூர் கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றுள்ளதை உறுதியாகக் கூறலாம். வீரத்தமிழ் போர்குடியில் உதித்த பூலித்தேவரின் கடைசி போராக வாசுதேவநல்லூர் போர் இருந்திருக்கலாம். இதற்கு பிறகு பூலித்தேவர் பற்றிய வரலாற்று குறிப்புகள் கிடைக்கவில்லை. கடைசி வரையிலும் எந்த சமரசமும் இன்றி, கும்பினியாரின் ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்நீத்த முக்குலத்து மாமறவன், போரக்குடித் தமிழர் பூலித்தேவர் புகழ் உலகில் என்றும் நிலைத்திருக்கும்.
பூலித்தேவரின் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு ப்ரெஞ்சுக்காரர் தனது நூலில் பூலித்தேவர் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
” ப்ரெஞ்சு காரர்களிடம் இருந்து சென்னை மாநகர் காப்பாற்றப்பட்டதும், கான்சாகிபு மதுரைக்கு திரும்பினான், அதன்பிறகு கான்சாகிப் பூலித்தேவரை கட்டுப்படுத்த போரிட ஆரம்பித்தான், பெரும்படை பலத்தை கொண்டிருந்தாலும் பூலித்தேவரை அடக்க அவனுக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது”
– marchands,precis historique
இந்தியாவில் காலூன்ற எண்ணிய அயலாரை எதிர்த்து கூட்டணி அமைத்து போரிட்டார் பூலித்தேவர். ஆயினும் ப்ரெஞ்சுக்காரர்களின் ஆதிக்க வீழ்ச்சி மற்றும் சுதேச பாளையங்களின் ஒற்றுமையின்மையால் வெள்ளையருக்கு எதிரான போராட்டம் வெற்றியடையவில்லை. தமிழகத்தில் இருந்த பாளையங்களும், மன்னர்களும் இணைந்து போரிட்டு இருந்தால் தமிழகத்தின் வரலாறு மாறியிருக்கும் என்பது உண்மை. எனினும் இந்திய மண்ணில் காலூன்ற முயன்ற வெள்ளையர்களுக்கு எதிரான முதல் அடியை கொடுத்த பூலித்தேவரின் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இந்தியாவின் முதல் சுதந்திரப் போரைத் தொடங்கிய பூலித்தேவரின் புகழ் ஒங்குக!
Total views 3,788 , Views today 7