அரசு மக்கள் முதல் அரசர்கள் வரை- புதுக்கோட்டை தொண்டைமான்களின் எழுச்சி


புதுக்கோட்டை மன்னர்களின் வரலாற்றை எழுதிய ஆய்வாளர்கள், அவர்கள் மன்னராக உயர்ந்ததை பற்றி குறிப்பிடும்போது,ராம்நாடு மன்னர் கிழவன் சேதுபதி , பல்லவராயரிடம் இருந்த பகுதிகளை பறித்து தனது மச்சானாகிய ரகுநாதராய தொண்டைமானிடம் அளித்ததாக மேம்போக்காக எழுதியுள்ளனர். சில ஆசிரியர்கள் தொண்டைமான்கள் செய்த இராணுவ உதவி மற்றும் திருமண பந்தத்தின் விளைவாக புதுக்கோட்டை பகுதிகள் தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டதாக குறித்துள்ளனர். உண்மையில் தொண்டைமான்கள் எப்போது ஆட்சி அமைத்தனர்? எதனால் ஆட்சியை பிடித்தனர்? என்னென்ன போர் உதவிகள் செய்தனர்? பல்லவராயர்கள் முழு புதுக்கோட்டையையும் ஆண்டனரா? என பல கேள்விகளுக்கு விடை தேடியதன் விளைவாக கிடைத்த தகவல்களின் தொகுப்பை காண்போம். 

* கிபி 12 ஆம் நூற்றாண்டில் வெங்கடாசல பல்லவராயர் என்பவருடன் தொண்டைமண்டலத்தில் இருந்து அம்புநாட்டில் தொண்டைமான்கள் குடியேறினர்.( General history of pudukkottai state R.aiyar 1916 page 114)
* கிபி 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஸ்ரீவல்லபதேவர் ஆனை தொண்டைமான் என்பவர் அம்புநாட்டில் வாழ்ந்ததாக குறிக்கப்படுகிறார்.( புதுக்கோட்டை க.வெ 458)
* கிபி 13 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய தேவர் ஆட்சி காலத்தில் அம்புகோயிலில் பல்லவராயர்கள் குறிக்கப்படுகின்றனர்( புதுக்கோட்டை க.வெ 369)
* கிபி 13 ஆம் நூற்றாண்டில் சுந்தர பாண்டிய தேவர் காலத்தில் அம்புகோயில் அஞ்சுகுடி அரையர்கள் என அம்புநாட்டு அரையர்கள் தங்களை குறித்துள்ளனர்( புதுக்கோட்டை க.வெ 522). 
* அம்புநாட்டில் குடியேறிய தொண்டைமான்கள் மற்றும் பல்லவராயர்கள் , (குருக்கள், பிச்சர், மேளக்காரர், அம்பட்டன், வண்ணான்) ஆகிய ஐந்து குடிகளை கொண்டுவந்து அமர்த்தி ஐந்து குடிகளுக்கும் அரையராக தங்களை குறித்துள்ளனர். (General history of pudukkottai state R.aiyar 1916 page 118)
* அம்புக்கோயிலில் அரையர்களாக இருந்த தொண்டைமான்கள் யானைகளை பயிற்றுவித்து, படைக்கு தயார் செய்யும் பணியை செய்துவந்தனர்.இராய தொண்டைமான் அணுராகமாலை எனும் காவியம் இதற்கு சான்றாக அமைகிறது. ” இந்நீலமன் சீரங்க ராயருக்கு ராயத்தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால்யானை ” எனும் வரிகள் விஜயநகர மன்னர் ஸ்ரீரங்கராயருக்கு யானைகளை பயிற்றுவித்து அனுப்பியதை விளக்குகிறது.(General history of pudukkottai state R.aiyar 1916 page 120)
* புதுக்கோட்டை தொண்டைமான்கள் தங்களது செப்பேடுகளில் அன்பில் தெற்காலூரில் இருக்கும் காணியுடைய அரையர்கள் என தங்களை குறிப்பிட்டுள்ளனர். ( “பன்றிசூழ்நாடு அன்பில் தெற்காலூரிலிருக்கும் காணியுடைய அரையர்களில் ஸ்ரீமது திருமலைராய தொண்டைமானார்‘ காடங்குடி செப்பேடு கிபி 1739)

இனி அம்புநாட்டில் சாதாரண அரையர்களாக இருந்துவந்த தொண்டைமான்கள் வீரத்தால் உயர்ந்த இடத்தை அடைந்ததை காண்போம்.

யானையை அடக்கி பெற்ற குறுநிலமன்னர் அந்தஸ்து


* கிபி 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விஜய நகர பேரரசர் ஸ்ரீரங்கராயர் ராமேஸ்வரம் செல்லும்போது, அவரது யானைகளில் ஒன்றுக்கு மதம் பிடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 
* அந்த சமயத்தில் அம்புநாட்டில் ( கறம்பக்குடி பகுதியில்) வாழ்ந்து வந்த ஆவுடை ரகுநாத தொண்டைமான் ( பச்சை தொண்டைமானின் மகன்) தீரத்துடன் போராடி யானையை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
* தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய ஸ்ரீரங்கராயர் , தொண்டைமானுக்கு” ராய ரகுத்த ராய வஜ்ஜிருடு ராய மன்னிடு ராயர்” எனும் பட்டத்தை அளித்து , நிலங்களையும் அளித்தார்.
* இவற்றோடு சேர்த்து,அம்பாரி யானை, முரசு யானை, சிங்கமுகபல்லக்கு, பெரிய மேளங்கள், உலா வரும்போது கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை, ” கண்டபெருண்டா( யானையை ஒரு பறவை வேட்டை ஆடுவது போல்)” எனும் உருவம் பதித்த பதாகைகளை தனக்கு முன் எடுத்துசெல்லும் உரிமை( அக்காலத்தில் இந்த உரிமை சிற்றரசர்களுக்கே உரியது), பகல் நேரங்களில் தனக்கு முன்னும் பின்னும் விளக்குகளை எடுத்து செல்லும் உரிமை, இவரது புகழை பாடிச்செல்ல கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை, சிங்கக்கொடி, மீன் கொடி, கருடக்கொடி, ஹனுமர்கொடி பயன்படுத்தும் உரிமை, குதிரைகள் படைசூழ செல்லும் உரிமை, வெண்குற்ற குடை உயபோகப்படுத்தும் உரிமை என சிற்றரசருக்கே உரிய பல உரிமைகள் ஆவுடை ரகுநாத தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது. ( (General history of pudukkottai state R.aiyar 1916 page 120: ராய தொண்டைமான் அணுராக மாலை)

விசயநகர அரசர் ஸ்ரீரங்கராயர் உதவியுடன் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பல்லவராயர் பகுதிகளை கைப்பற்றுதல்:– 

” In a palace document, dated 1819AD, it is said that 180 years before that date ” the pallavarayars were ruling at pudukkottai and raya tondaiman with the consent of sriranga raya of anagundi( vijayanagar) conquered it” (General history of pudukkottai state R.aiyar 1916 page 120)
” கிபி 1819 ல் எழுதப்பட்ட அரண்மனை குறிப்பில் கிபி 1639 ல் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் உதவியோடு புதுக்கோட்டை பல்லவராயர் பகுதிகள் ராய தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக 
* தொண்டைமான் மன்னர்கள் வெளியிட்ட 24 செப்பேடுகளிலும் ஸ்ரீரங்கராயரின் மேலாண்மையை மட்டுமே குறித்துள்ளனர். நாயக்கர் மேலாண்மை பற்றியோ, கிழவன் சேதுபதியின் மேலாண்மையையோ எங்கும் குறிப்பிடவில்லை.
* விஜயநகர பேரரசின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே முடிந்துவிட்ட போதிலும், தொண்டைமான்கள் கிபி 1805 ல் வெளியிட்ட செப்பேட்டில் கூட ” ஸ்ரீரங்க தேவ மகாராயர் பிரதிராச்சியம் பண்ணியருளுகின்ற நாளில்” என குறித்து தங்களது நன்றியுணர்ச்சியை காட்டியுள்ளனர்.
* புதுக்கோட்டை பல்லவராயர்கள் தங்களை அரசு என குறித்த கடைசி கல்வெட்டு கிபி 1618 ஆகும்.( புதுக்கோட்டை க.வெ 866) . 
* கிபி 1686 ல் வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள பல்லவராயர் பகுதிகள் கிழவன் சேதுபதி உதவியுடன் தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது என ” இளந்தாரி அம்பலக்காரர்” சுவடிகள் கூறுகிறது.General history of pudukkottai state R.aiyar 1916 page 126) வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளை பற்றி இந்த நூலில் குறிப்பிடப்படவில்லை. 
* கிழவன் சேதுபதியின் ஆட்சியை குறிக்கும் கல்வெட்டுகள் எதுவும் வெள்ளாற்றுக்கு வடக்கே கிடைக்கவில்லை. கிபி 1600 வரை விசயநகர மன்னர்களின் மேலாண்மையை குறிக்கும் கல்வெட்டுகளும், அதற்கு பிந்தைய கல்வெட்டுகளில் பல்லவராய மன்னர்கள் தன்னிச்சையாக ஆட்சி புரிந்ததை குறித்துள்ளனர்.இதன்மூலம் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் சேதுபதிகளின் ஆதிக்கம் இருக்கவில்லை என்பது உறுதி.
* கிபி 1655 ல் திருமலை நாயக்கர் பிறமலை நாட்டு பின்னத்தேவருக்கு அளித்த செப்பேட்டில், சாட்சியாக தொண்டைமான் புதுக்கோட்டை என குறிப்பிடப்பட்டுள்ளது.(பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் பக்கம் 493)
* திருமலை சேதுபதி காலத்தில் அவரின் வருகையின் போது புதுக்கோட்டை தொண்டைமான் மரியாதை அளித்ததாக ” மறவர் சாதி வர்ணம்” எனும் ஒலைச்சுவடிகள் கூறுகிறது. இவரது ஆட்சி காலம் ( கிபி 1645-1670) . (Mackenzie manuscript : madras journal of literature and science பக்கம்:347 கிபி 1836)
* திருமலை நாயக்கர் ஒலைச்சுவடி ஒன்றில், அவரது காலத்தில் இருந்த சமஸ்தானமாக புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானம் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் கால 72 பாளையங்களில் குளத்தூர் தொண்டைமான் பாளையமும் குறிக்கப்பட்டுள்ளது.திருமலை நாயக்கரின் காலம் கிபி (1623-1659) ஆகும் (oriental historical manuscripts in tamil language vol 2 பக் 161 கிபி 1835) 
இவற்றின் முலம் புதுக்கோட்டையின் பெரும்பான்மையான பகுதிகள் கிபி 1686 க்கு முன்பே அதாவது கிபி 1639 ல் தொண்டைமான் வசம் வந்துவிட்டதை அறியலாம்.

ரகுநாதராய தொண்டைமானின் எழச்சி:-

* கிபி 1639 ல் புதுக்கோட்டை வெள்ளாற்றின் வடக்கே உள்ள பகுதிகளை கைப்பற்றிய ஆவுடைய ரகுநாத தொண்டைமானின் மகனான ரகுநாதராய தொண்டைமான் கிபி 1641 ல் பிறந்தார்.General history of pudukkottai state R.aiyar 1916 page 122).வீர தீர செயல்கள் மூலம் குறுகிய காலத்தில் மிக உயர்ந்த புகழை அடைந்தார்.

தஞ்சை நாயக்கர் படையில் தளபதியாக :-
* தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர், வீரராகவ நாயக்கர், ரகுநாத ராய தொண்டைமானை தனது படையில் இணைத்துக்கொண்டார். ஆபத்து காலங்களில் வீர தீரம் காட்டிய தொண்டைமானுக்கு உயர்ந்த பதவிகளை அளித்தார்.
* ரகுநாதராய தொண்டைமானின் வீரத்தை பாராட்டி, யானை, குதிரை, வைர சங்கிலி முதலியவற்றை அளித்தார்.
* ” பெரிய ராம பாணம் ” எனும் வீரவாள் ஒன்றினை பரிசாக அளித்தார். அந்த வாள் இன்றும் அரண்மனையில் பாதுகாக்கப்படுகிறது. விஜயதசமி அன்று மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். கிபி 1674 வரை தஞ்சை நாயக்கரிடம் தளபதியாக பணியாற்றினார்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 123) 

திருச்சி நாயக்கருக்கு படை உதவி:-

* கிபி 1682 ல் சொக்கநாத நாயக்கர் காலத்தில், திருச்சியை நாயக்கர் ஆண்டபோது, அவர்களின் நண்பராக இருந்த, மராத்தியர்கள் திருச்சி கோட்டையை பிடிக்க திடீர் தாக்குதல் நடத்தினர். துரோகத்தை தாங்க இயலாத சொக்கநாத நாயக்கர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார்.அவரது வாரிசான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ரகுநாதராய தொண்டைமானின் உதவியை நாடினார். 
* தொண்டைமான் படையினர் கோட்டை சுவர்களை வீரத்துடன் கடந்து கோட்டையை அடைந்து, எதிரிகளை விரட்டியடித்தனர். 
* இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்துவீரப்ப நாயக்கர் அம்புநாட்டு கள்ளர்களை ரகுநாதராய தொண்டைமான் தலைமையில் திருச்சியின் முக்கிய 12 பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்.
* ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டார்
* மருங்காபுரி பூச்சிநாயக்கரின் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்:- ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக 
நியமிக்கப்பட்டுள்ளதால், ” ஸ்ரீரங்கம் திருவானைக்கால் பகுதிகளில் உள்ள கடைகள் ஒரு காசும், ஒவ்வொரு வீடும் வருடத்திற்கு 2 பணமும்,பெரிய கிராமங்கள் வருடத்திற்கு 10 கலம் நெல்லும், சிறிய கிராமங்கள் வருடத்திற்கு 5 கலம் நெல்லும் ரகுநாதராய தொண்டைமானுக்கு அளிக்க கடமைபட்டுள்ளனர்.
இவ்வாறு தஞ்சை நாயக்கர், திருச்சி நாயக்கர் மத்தியில் தனது வீரத்தால் பெரும் செல்வாக்கை பெற்றார் ரகுநாதராய தொண்டைமான்
* இதே காலத்தில் நாகலாபுரம் பாளையக்காரர் மற்ற நாயக்க பாளையங்களோடு சேர்ந்து கொண்டு, மதுரை நாயக்கருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். நாயக்கர் தொண்டைமான்களின் உதவியை நாடினர். ரகுநாதராய தொண்டைமான் மற்றும் நமண தொண்டைமான் தலைமையிலான படை நாகலாபுரம் நோக்கி சென்றது.கலக்ககாரர்களை ஒடுக்கி, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட குதிரை, யானை, மற்ற போர்கருவிகளுடன் திருச்சி வந்தடைந்தனர் தொண்டைமான்கள். நமண தொண்டைமானுக்கு குளத்தூர் பாளையம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அம்பாரி யானை, ஆடல் மகளிர், முரசு, நரகஜ மேளம், கருடகொடி, அனுமர்கொடி, போர் முரசுகள், கண்ட பேருண்ட கருவி முதலியவை அளிக்கப்பட்டது. நமண தொண்டைமான் தன்னை, ரங்க முத்து கிருஷ்ண வீரப்ப நமண தொண்டைமான் என அழைத்துக்கொண்டார்.

(General history of pudukkottai state R.aiyar 1916 page 124,136) 

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி படையில் :-

தொண்டைமான்களின் எழுச்சியை கண்ட கிழவன் சேதுபதி ரகுநாதராய தொண்டைமானையும், அவரது தம்பி நமண தொண்டைமானையும் அழைத்து தனது படையில் பணியாற்ற வைத்தார்.


மறவர்களின் கிளர்ச்சியை ஒடுக்குதல்
கிழவன் சேதுபதிக்கு எதிராக கிளம்பிய மறவர்களை ரகுநாதராய தொண்டைமான் ஒடுக்கினார். கிழவன் சேதுபதியின் நன்மதிப்பை பெற்றார்.


தஞ்சை மராத்தியரின் பட்டத்துயானையை கொள்ளையிடல்


தஞ்சை மராத்திய மன்னர்கள் கிழவன் சேதுபதியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர் . மன்னார்குடியில் கட்டிவைக்கப்பட்டிருந்த தஞ்சை மராத்தியரின் பட்டத்து யானையை கைப்பற்றி, கறம்பக்குடிக்கு கொண்டுவந்தார் தொண்டைமான்.அங்கிருந்து ராமநாதபுரம் மன்னரிடம் கொண்டு சேர்த்தார். தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய சேதுபதி, தொண்டைமானுக்கு மரியாதைகளை அளித்தார்.


எட்டயபுர பாளையக்காரர் தலையை கொய்தல்


எட்டயபுர பாளையக்காரரான நாயக்கர் வழியினர், கிழவன் சேதுபதிக்கு கட்டுப்படாமல் ஆட்சி செய்ய முயன்றனர். இவரை அடக்க படைதிரட்டி சென்ற ரகுநாதராய தொண்டைமான் எட்டயபுர பாளையக்காரரின் தலையை கொய்து கிழவன் சேதுபதியின் காலடியில் வைத்தார்.


இராமநாதபுர பட்டத்து யானையை அடக்குதல்


இராமநாதபுர மன்னரின் பட்டத்து யானைக்கு ஒரு சமயம் மதம் பிடித்து, கட்டுபாடு இழந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இச்சமயத்தில் நமண தொண்டைமான் மிகுந்த வீரத்துடன் பட்டத்து யானையை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தார்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 124) 


ரகுநாதராய தொண்டைமானின் போர் உதவிகளால் மணம் மகிழ்ந்த கிழவன் சேதுபதி தொண்டைமானுடன் மண உறவில் இணைந்தார்.
ரகுநாதராய தொண்டைமானின் தங்கையான கதலி நாச்சியாரை தர்மபத்தினியாக ஏற்றார். கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் இவர் உடன்கட்டை ஏறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சாதாரண அரையராக வாழ்ந்து வந்த ராய தொண்டைமான் வீரத்தால் குறுநில மன்னர் அளவுக்கு உயர்ந்து, புதுக்கோட்டையின் வடவெள்ளாறு பகுதிகளை கைப்பற்றினார். ரகுநாதராய தொண்டைமானின் போர்க்கள வெற்றிகளால் ராமநாதபுர மன்னருடன் சமந்தம் செய்யும் அளவுக்கு உயர்ந்தனர்.

வெள்ளாற்றுக்கு தெற்கில் இருந்த பல்லவராயரின் பகுதிகளை பெறுதல்:-

வீரத்தாலும், மண உறவினாலும் சேதுபதியுடன் நெருங்கிய உறவினரான ரகுநாதராய தொண்டைமானுக்கு பல்லவராயரின் எஞ்சிய ஆட்சிப்பகுதிகளை அளிக்க எண்ணினார் கிழவன் சேதுபதி. 
* அந்த சமயத்தில் வெள்ளாற்றின் தெற்கே உள்ள பகுதிகளை வசம் வைத்திருந்தார் சிவந்தெழுந்த பல்லவராயர்.
* காளையார் கோயிலில் இருந்த கிழவன் சேதுபதி பல்லவராயரை தன்னை வந்து காணுமாறு பணித்தார்.கண்டதேவி எனும் ஊரில் இருந்த பல்லவராயர் , தான் சிவபூஜையில் இருப்பதாகவும்,பூஜை முடிந்ததும் சந்திப்பதாகவும் பதில் அளித்தார்.
* தன்னை அவமதித்த பல்லவராயர் மேல் கோபம் கொண்ட சேதுபதி, தனது மகனை பட்டத்து யானையில் அமர்த்தி பல்லவராயரை தண்டிக்க அனுப்பினார்.
* தாக்குதலில் பல்லவராயர் கொல்லப்பட்டார். பல்லவராயரின் காவலர்கள் சின்ன பங்காரு, பெரிய பங்காரு பதிலுக்கு பட்டத்து யானையில் வீற்றிருந்த சேதுபதியின் மகனை வேல் எறிந்து கொன்றனர்.
* சேதுபதியின் கள்ளர் படையின் தலைவரான இளந்தாரி முத்து விஜய அம்பலக்காரர் மூலமாக தங்க பல்லக்கையும் வைர மோதிரத்தையும் தொண்டைமானுக்கு அளித்தார் கிழவனார். திருமயத்தில் இருந்த சேதுபதியின் அதிகாரி தர்ம பிள்ளை என்பவரிடம் தொண்டைமானை பல்லவராயரின் பகுதிகளுக்கு பொறுப்பேற்க ஏற்பாடுகளை செய்யுமாறு பணித்தார்.
* ரகுநாதராய தொண்டைமான் பதவி ஏற்கும்போது, சின்னராம பானம் எனும் வாள்,வலம்புரிச்சங்கு முதலியவை கிழவன் சேதுபதி சார்பாக அளிக்கப்பட்டது.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 127-128//ilandari ambalakarar manuscript ) 

அரசு மக்களாக யானைப்படையை தயார் செய்து வந்த தொண்டைமான்கள், குறுநில மன்னராக உயர்ந்து, தொடர்ச்சியான ராணுவ சேவைகள் மூலமாக , கிழவன் சேதுபதியின் ஆதரவுடன் கிபி 1686ல் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மன்னராக பதவியேற்றனர் என்பதே வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.

கிபி 1686க்கு பின் போர் மற்றும் போர் உதவிகளால் தொண்டைமான்கள் கைப்பற்றிய பகுதிகளில் சில-


* குமாரவாடி பாளையக்காரரிடம் இருந்து விராலிமலையை வென்றனர்.
* பூச்சி நாயக்கரை வதம் செய்து மருங்காபுரி பாளையத்தை இணைத்தனர்.
* பெரம்பூர், கத்தலூர், ஆவூர் பகுதிகளில் படையெடுத்து வென்று புதுக்கோட்டை உடன் இணைத்தனர்.
*கிபி 1723 ல் சேதுபதி திருவுடையத்தேவருக்கு பின் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் பங்கேற்று திருமயத்தை பெற்றனர்.
*பொன்னமராவதி பகுதியில் ஆட்சி செய்த பொம்மி நாயக்கரை வீழ்த்தி, கரிசல்பட்டு- வாராப்பூர் பகுதிகளை இணைத்தனர்.
*நகரம் ஜமீன், பாலையவன ஜமீன்களின் கணிசமான பகுதிகளை புதுக்கோட்டையுடன் இணைத்தனர்.
* வாராப்பூர் பாளையக்காரரை வீழ்த்தி, வாராப்பூர் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது.
*கிபி 1749 ல் கீழாநிலை கோட்டை கைப்பற்றப்பட்டது.
* கிபி 1756 ல் வல்லநாடு தாலுக்காவில் 10 கிராமங்கள் இணைக்கப்பட்டது.
* கிபி 1770ல் பட்டுக்கோட்டையின் சில பகுதிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது.
* கிபி 1781 ல் ஐதர் அலியுடன் நடைப்பெற்ற போரில் வென்று அறந்தாங்கியை இணைத்தார்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 123) 

தொகுப்பு : www.sambattiyar.com

Total views 1,851 , Views today 4 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *