தனது கணவனை இழந்த பெண், தனது கணவரின் உடலை எரியூட்டும்போது அவருடன் சேர்ந்து அக்னிக்கு தன்னை அர்பணிக்கும் தியாகச் செயல் “உடன்கட்டை ஏறுதல்” என அழைக்கப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட பாண்டிய மன்னரான ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தபோது, அவரது மனைவி பெருங்கோப் பெண்டு என்பவர் உடன்கட்டை ஏறியுள்ளதை புறநானூறு பாடல் 246 பாடுகிறது.
கொடும்பாளூர் அரசர் வீரசோழ இளங்கோவேளார் மரணித்த பின் அவரது மனைவியான கங்க மாதேவியார் உடன்கட்டை ஏறி உயிரிழந்தார்.(Cholas vol 1 -553 / KAN sastri)
பேரரசர் ராஜராஜ சோழரின் தந்தையான சுந்தரச் சோழன் இறந்தபின், சுந்தரசோழரின் மனைவியான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறி உயிரிழந்தார்.
(Cholas vol 1 -553 / KAN sastri)
சங்க காலம் முதலே போர்க்குடியில் உதித்த அரச மரபினர், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பின்பற்றி வந்ததை நாம் காண முடிகிறது.
இவ்வரிசையில் பண்டைய காலம் முதல் தமிழகத்தின் பல பேரரசர்களை உருவாக்கிய, தேவர் சமுதாயத்திலும் உடன்கட்டை ஏறும் வழக்கம் அரச குடும்பங்களில் வழக்கத்தில் இருந்ததை வரலாற்று ஏடுகள் உரைக்கின்றன.
உடன்கட்டை ஏறிய காதலி நாச்சியார்
கிபி 17 ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் கிழவன் சேதுபதி. கிபி 1639 ல் புதுக்கோட்டையின் மன்னரான ராய தொண்டைமானின் மகளும், ரகுநாதராய தொண்டைமானின் சகோதரியுமான காதலி நாச்சியார் வீரத்தில் சிறந்து விளங்கியதால் அவரை தம் பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார் கிழவன் சேதுபதி. இராமேசுவர அம்மன் “மலைவளர் காதலி ” என்ற பெயரின் ஒரு பகுதி காதலி நாச்சியாருக்கு வைக்கப்பட்டது. அப்பெயர் ” பர்வதவர்த்தினி எனும் பெயரின் தமிழாக்கமாகும்(சேதுபது மன்னர் வரலாறு. கமால். பக்-41)
சேதுபதிகளின் வழக்கப்படி முதல் மனைவியாக வீரமறத்தியை மணந்தார். இரண்டாவதாக கள்ளர் சமூக காதலி நாச்சியாரை மணந்து பட்டத்து அரசியாக்கினார்.( Nicholas dirks hollow crown. P.160)
கிழவன் சேதுபதி மன்னரைப்போன்று காதலி நாச்சியாரும், ஆன்மீகப் பணிகளில் மிகுந்த அக்கரை காட்டினார். இராணியார் காதலி நாச்சியார் வழங்கிய அறக்கொடைகள் இராமனாதபுர சமஸ்தான குறிப்புகளில் உள்ளன.(சேதுபது மன்னர் வரலாறு. கமால். பக்-42)
இராமேஸ்வர திருக்கோயில் உள்துறை கட்டளைக்கு மேலச் சீத்தை என்ற கிராமத்தை கிபி 1693 ல் இராணியார் காதலி நாச்சியார் வழங்கியதை சேதுபதி செப்பேடுகள் கூறுகின்றன.
சேது பயணிகளின் பயன்பாட்டிற்கு எம்மண்டலமும் கொண்டான் எனும் கிராமத்தை தானமாக வழங்கினார். அந்த அன்னசத்திரம் இன்றும் உச்சிப்புளி என்ற இடத்தில் செயலற்று உள்ளது. அந்த கிராமம் இன்று என்மனம் கொண்டான் என அழைக்கப்படுகிறது.( சேதுபது மன்னர் வரலாறு. கமால். பக்-42)
கிழவன் சேதுபதியின் களத்தூர் செப்பேடு கிபி 1709 ல் வெளியிடப்பட்டது.இச்செப்பேட்டில் ” ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் தர்மபத்நியான ராய தொண்டைமானார் புத்ரி ரெகுநாத ராய தொண்டைமானார் சகோதரியான காதலி நாச்சியாரவர்கள் ” இராணியார் என குறிக்கப்படுகிறார்.
கிபி 1709ல் தேர்போகி நாட்டிலுள்ள களத்தூருக்கு ” ரெகுநாத காதலி ஆயிபுரம்” என்று பெயர் மாற்றி 55 பாகங்களாக பிரித்து 55 அந்தணர்களை குடியேற்றி கொடையளித்த செய்த இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.இவ்வூர் இக்காலத்தில் டி.களத்தூர் என அழைக்கப்படுகிறது.(தொண்டைமான் செப்பேடுகள் – பக் 31. த.தொ.து.வெ)
கிபி 1710ல் கிழவன் சேதுபதி மரணமடைந்தார்.அதற்கு பிறகு நடந்த சடங்குகள் The madura manual ( கிபி 1868 ) Nelson பின்வருமாறு கூறியுள்ளார்
ராமநாதபுரம் நகரத்துக்கு வெளியே பெரிய குழி வெட்டப்பட்டு மரக்கட்டைகள் நிரப்பப்பட்டன. மன்னரின் உடல் அலங்கரிக்கப்பட்டு எறியூட்டுவதற்கு வைக்கப்பட்டது.
மரக்கட்டைகளின் அடிப்பாகத்தில் நெருப்பு வைக்கபட்டது. பிராமணர்கள் சடங்குகளை மேற்கொண்டனர். அச்சமயத்தில் உடன்கட்டை ஏற வேண்டிய அரசியின் தலைமுதல் பாதம் வரை நகை மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அரசியார் எரிந்து கொண்டிருக்கும் மன்னரின் உடலை சுற்றி வந்தாள்.
மன்னரின் உடைவாளை கையில் ஏந்திய அரசி அடுத்து பதவி ஏற்கவிருக்கும் இளவரசரை நோக்கி ” இந்த. வாள், நம் மன்னரின் எதிரிகளை அழித்து வெற்றிகளை குவிக்க பயன்படுத்தப்பட்டது, இந்த வாளை வேறு எந்த செயலுக்காகவும் பயன்படுத்த மாட்டேன் என உறுதியாயிரு, நம் உறவுகளின் இரத்தகரை இந்த வாளில் படாதவாறு பார்த்துக்கொள், இந்த மக்களை நீ ஓரு தந்தை ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள், நம் இறந்த மன்னரின் வழியை பின்பற்றி, ஒன்றுபட்டு இரு, என் நாயகன் இல்லாத இவ்வுலகில் நான் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை, அவரின் பாத சுவடுகளை பின்பற்றி அவர் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன்” என கூறி, புதிய மன்னரின் கையில் மன்னரின் வீர வாளை அளித்தாள். இதன் பிறகு மன்னரின் முதல் மனைவி தீயில் பாய்ந்தாள்.
( Madura manual 1868 – nelson page 245-246)jesuit letters ft martin-1713)

இறுதி சடங்கில் தொண்டைமான் மன்னர் கலந்து கொண்டிருந்தார். தொண்டைமான் மன்னருக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது. தன் தங்கையான காதலி நாச்சியாரை கட்டி அணைத்து துக்கத்தை வெளிபடுத்தினார். அரசி காதலி நாச்சியார் கண்கள் குளமாகி உணர்ச்சியற்றவாறு இருந்தாள்.
தான் அணிந்திருந்த ஆபரணங்களை அகற்றினாள். சுற்றியிருந்த கூட்டத்தினை நோக்கினாள். உடன்கட்டையை நோக்கினாள். உரக்கமாக எழுந்த அழுகையுடன், ஒ! சிவ சிவ என்றவாறு உடன்கட்டையில் பாய்ந்து கிழவன் சேதுபதியுடன் தீயில் ஐக்கியமானாள். கூடியிருந்த மக்களின் அழுகை சத்தம் விண்ணை பிளந்தது.
உடல்கள் முழுதாக எரிந்தபின் பிராமணர்கள் சடங்குகளை செய்தனர், எலும்பு மற்றும் சாம்பலை உயர்ந்த ரக துணிகளில் அள்ளி கட்டினர்.அவை ராமேஸ்வர தீவுக்கு எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. உடன்கட்டை ஏறிய இடத்தில் கோயில் எழுப்பபப்பட்டது.
( Madura manual 1868 – nelson page 245-246)jesuit letters ft martin-1713)
உடன்கட்டை ஏறிய புதுக்கோட்டை அரசி

புதுக்கோட்டை மன்னரான ரகுநாதராய தொண்டைமானின் சகோதரியான காதலி நாச்சியார் தனது கணவரோடு சேர்ந்து உயிர் விட்டதைக் கண்டோம். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடந்த மற்றொரு உடன்கட்டை ஏறும் நிகழ்வை காண்போம்
கிபி 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் மரணமடைந்தார். மன்னரின் பிரிவால் வாடிய ராணி ஆயி அம்மா ஆயி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
ராணி ஆயியார் மஞ்சளை பூசி குளித்து, உயர் ரக ஆடைகளையும் நகைகளையும் அணிந்துக் கொண்டு இசைக் கருவிகள் முழங்க குதிரையில் ஏறினார். குதிரையில் ஊர்வலமாக சென்ற ராணியார் மன்னரை எரியூட்டிய இடத்தை அடைந்தார்.
உடன் கட்டை ஏறும் இடத்தை அடைந்த ராணியார் எரிந்து கொண்டிருக்கும் மன்னரின் உடலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறி மூன்று முறை சுற்றி வந்தார். பிறகு கிழக்கு நோக்கி வானத்தை பார்த்து வணங்கினார்.

பிறகு தான் அணிந்திருந்த நகைகளை தனது உறவினர்களிடம் அளித்தார். உறவினர்கள் ஒரு குடுவையில் அளித்த எண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு கணவரின் உடல் மீண்டும் மூன்று முறை சுற்றி வந்தார். கிழக்கு நோக்கி வணங்கி விட்டு மேடையில் இருந்து கணவரின் எரியும் உடலில் மீது பாய்ந்தார். உறவினர்கள் அனைவரும் எண்ணெய், வெண்ணெய் மற்றும் காய்ந்த விறகு முதலியவற்றை தீயில் போட்டனர். கணவரின் உடலோடு ஆயி அம்மா ஆயியாரும் சாம்பலாக கரைந்தார்.( General history of pudukkottai state 1916 pg 337)

அவர் உடன்கட்டை ஏறிய இடம் ” மாலையீடு ” என அழைக்கப்படுகிறது. மாலையீட்டில் ஆயி அம்மாவின் நினைவாக , அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு அவரது சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.

காலப்போக்கில் கைவிடப்பட்ட கோயிலாக மாறிப்போனது கோயில் பராமரிப்பன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.கோயில் கதவுகள் மற்றும் சிலைகளை காணவில்லை.


கோயிலின் உள்ளே ஒரு பெட்டியில் ராணியார் உபயோகித்த உடைகள் ஒரு பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்த பெட்டியில் மிகவும் சிதலமடைந்த நிலையில் உடையின் மிச்சங்கள் காணப்படுகின்றது.



தமிழ் பெண்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் கற்புக்கரசிக்கு எழுப்பப்பட்ட கோயில் சிதிலமடைந்த நிலையில் கேட்பாரற்று கிடப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

புதுக்கோட்டை – திருமயம் வழித்தடத்தில் புதுக்கோட்டையில் இருந்து 4 கிமீ தொலைவில், மாலையீடு எனும் இடத்தில் காணப்படும் இக்கோயில், ஆயி அம்மன் கோயில் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
இதே போல கிபி 1825ல் ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் மரணமடைந்தார். மன்னரோடு சேர்ந்து ராணியும் உடன்கட்டை ஏற துணிந்தார். ஆனாலும் மன்னரின் தமையரான ரகுநாத தொண்டைமானின் முயற்சியால் இந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டது.( Manual of pudukkottai state vol 2 Part 1 pg 837)

சங்க காலம் முதல் கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகள் வரை போர்க்குடியில் உதித்த பழமையான அரச குடும்பத்தினர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கொண்டிருந்ததை கண்டோம்.
பாண்டியர்,சோழர் முதல் மூவேந்தர் வழிவந்த தேவர் சமுதாய அரச குடும்பங்களிலும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்துள்ளதை வரலாற்று சான்றுகள் உணர்த்துகின்றன.
உடன்கட்டை ஏறி தனது கணவருக்காக இன்னுயிரை மாய்த்துக் கொண்ட கற்புக்கரசிகளின் புகழை என்றும் போற்றுவோம்.
தொகுப்பு : www.sambattiyar.com
Total views 1,642 , Views today 1